அபிஷேக் சர்மா: யுவராஜ் சிங் உருவாக்கிய வீரர் சிக்சர்களை பறக்கவிடும் ரகசியம்

அபிஷேக் சர்மா
  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

“ரோம் நகரம் ஓர் இரவில் எழுப்பப்பட்டது அல்ல. அபிஷேக் சர்மா அறிமுகப் போட்டியிலேயே டக் அவுட் ஆனது எனக்கு மகிழ்ச்சிதான். அதனால்தான் அவரால் 2-ஆவது ஆட்டத்தில் சதம் அடிக்க முடிந்தது. இந்த சதம் எனக்குப் பெருமையாக இருக்கிறது, இதைவிட சிறந்த இன்னிங்ஸ் காத்திருக்கிறது”

அபிஷேக் சர்மாவின் சதம் குறித்து இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் சிலாகித்துக் கூறியது இது.

அபிஷேக் சர்மா குறித்து பெருமையாக யுவராஜ் சிங் பேசுவதற்கு என்ன இருக்கிறது என்று கேட்கலாம். உண்மையில் அபிஷேக் சர்மாவை கடந்த சில ஆண்டுகளாக செதுக்கி, அவரின் பேட்டிங்கை முறைப்படுத்தி, ஆட்டத்தை செம்மைப்படுத்தி வழிகாட்டியாக இருந்தது யுவராஜ் சிங்தான்.

கொரோனா பரவல் காலத்திலிருந்து அபிஷேக் சர்மாவுக்கு துணையாக இருந்து பேட்டிங்கில் பயிற்சி அளித்து, அவரின் பேட்டிங்கை செம்மைப்படுத்தி, குடும்பத்தாரில் ஒருவராக யுவராஜ் இருந்து வருகிறார்.

அபிஷேக் சர்மாவுக்கு சிறுவயதில் இருந்து கிரிக்கெட் பயிற்சி அளித்தது அவரின் தந்தைதான் என்றாலும், ஒரு கட்டத்துக்கு மேல் அவரின் பேட்டிங்கை செதுக்கி, பவர் ஹிட்டராக மாற்றி, அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியது யுவராஜ் சிங்தான்.

வாட்ஸ்ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

டக் அவுட் அறிமுகம்

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியில் அறிமுகமாகிய அபிஷேக் சர்மா 4 பந்துகளைச் சந்தித்து டக் அவுட் ஆகினார். 2-ஆவது டி20 போட்டியில் தான்சந்தித்த முதல் பந்தை சிக்ஸருக்கு விளாசி தனது ஆட்டத்தின் பாணியை அறிமுகம் செய்தார்.

அபிஷேக் சர்மா முதல் 24 பந்துகளில் 28 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில் அடுத்த 23 பந்துகளில் 72 ரன்களைக் குவித்தார். 33 பந்துகளில் அரைசதம் அடித்த அபிஷேக் சர்மா அடுத்த 13 பந்துகளில் 50 ரன்களைக் குவித்து 46 பந்துகளில் அதிவேக அரைசதத்தை விளாசினார்.

தனது சதத்தில் 63 ரன்களை 28 பந்துகளில் சுழற்பந்துவீச்சில்தான் அபிஷேக் பெற்றார். 238 ஸ்ட்ரைட் ரேட்டில் ஆடிய அபிஷேக், 6 சிக்ஸர்களையும், 4பவுண்டரிகளையும் சுழற்பந்துவீச்சில் வெளுத்தார்.

இதற்கு முன் 2012ல் ஆமதாபாத்தில் பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 57 ரன்களை யுவராஜ் சிங் சேர்த்ததுதான் அதிகபட்சமாக இருந்தது. அபிஷேக் தனது அதிரடியால் தனது குருநாதர் யுவராஜ் சிங்கின் சாதனையை முறியடித்தார்.

அபிஷேக் சர்மா

பட மூலாதாரம், Getty Images

ஐபிஎல் தொடரிலும் அதிரடி

அபிஷேக் சர்மாவுக்கு இந்திய அணியில் 2-ஆவது போட்டியிலேயே ஆகச்சிறந்த அறிமுகம் கிடைத்துள்ளது. ஐபிஎல் டி20 தொடரிலும் 2018-ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணியால் ரூ.55 லட்சத்துக்கு அபிஷேக் வாங்கப்பட்டார். ஒரு போட்டியில் மட்டும் ஆடிய அபிஷேக் 19 பந்துகளில் 45 ரன்களை ஆர்சிபிக்கு எதிராக விளாசினார். அதன்பின் 2022ம் ஆண்டு ஏலத்தில் சன்ரைசர்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.

கடந்த ஐபிஎல் டி20 சீசனில் வெளுத்து வாங்கிய அபிஷேக் சர்மா 204 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடி 484 ரன்கள் குவித்தார், இதில் 237 பந்துகளில் 42 சிக்ஸர்கள், 78 பவுண்டரிகளை அபிஷேக் விளாசி இருந்தார்.

23 வயதான அபிஷேக் சர்மாவுக்கு இந்திய அணியிலும், ஐபிஎல் தொடரிலும் சிறந்த அறிமுகம் கிடைத்து, தனது இடத்தை தக்கவைத்துள்ளார்.

அபிஷேக் சர்மாவின் குடும்பம்

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் நகரில் 2000-ஆம் ஆண்டு செப்டம்பர் 4-ஆம் தேதி, இந்து குடும்பத்தில் பிறந்தவர் அபிஷேக் சர்மா. இவரின் தந்தை ராஜ் குமார் சர்மா முன்னாள் கிரிக்கெட் வீரர், வங்கி ஊழியராக இருந்தார். தாய் மஞ்சு சர்மா. அபிஷேக் சர்மாவுடன் பிறந்தவர்கள் இரு சகோதரிகள், 3வதாக அபிஷேக் சர்மா பிறந்தார்.

அபிஷேக் சர்மா தனது பள்ளிப்படிப்பை டெல்லியில் முடித்தார். தனது 12வயதிலிருந்தே சுப்மான் கில்லுடன் நட்பு ஏற்பட்டு, இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். பஞ்சாப் அணிக்காக 14 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் சுப்மான் கில், அபிஷேக் சர்மா தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கியுள்ளனர்.

யுவராஜ் சிங்

பட மூலாதாரம், Getty Images

அறிமுகப் போட்டியில் சதம்

16 வயதுக்குட்பட்டோருக்கான விஜய் மெர்சன்ட் கோப்பை 2015-16ம் ஆண்டு நடந்தது. இதில் அபிஷேக் சர்மா தனது முதல் போட்டியிலேயே சதம் அடித்து, அந்தத் தொடரில் 1,200 ரன்களைக் குவித்து, 109 சராசரி வைத்திருந்து அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்தார்.

2016-17ம் ஆண்டு வினு மன்கட் கோப்பைத் தொடரில் அபிஷேக் சர்மா பஞ்சாப் அணிக்காக 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் அறிமுகமாகினார். 2017ம் ஆண்டு ரஞ்சிக் கோப்பையில் பஞ்சாப் அணிக்காக முதல் முறையாக அபிஷேக் சர்மா அறிமுகமாகினார். ரஞ்சிக் கோப்பை அறிமுகப் போட்டியில் பஞ்சாப் அணியில் 8-வது வீரராக அபிஷேக் களமிறங்கி 94 ரன்களை விளாசி தனது பேட்டிங்கை நிரூபித்தார்.

2023ம் ஆண்டில் நடந்த சயத் முஷ்டாக் அலி கோப்பைத் தொடரில் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக இருந்த அபிஷேக் சர்மா சாம்பியன் பட்டத்தைப் பெற்றுக் கொடுத்தார். இந்தத் தொடரில் 10 இன்னிங்ஸில் அபிஷேக் 485 ரன்கள் குவித்தார். இதில் 3 சதங்கள், 2 அரைசதங்களை அபிஷேக் விளாசினார்.

அது மட்டுமல்லாமல் முதல்தரப் போட்டிகளில் பஞ்சாப் அணிக்காக 53 போட்டிகளில் அபிஷேக் சர்மா விளையாடியுள்ளார். இதில் 2021ம் ஆண்டு மத்தியப் பிரதேச அணிக்கு எதிராக 42 பந்துகளில் சதம் அடித்து அதிவேக சதத்தை அபிஷேக் பதிவு செய்தார். 2022ம் ஆண்டு முதல் தரப்போட்டியில் சண்டிகர் அணிக்கு எதிராக தனது முதல் சதத்தையும் அபிஷேக் பதிவு செய்தார்.

அது மட்டுமல்லாமல் 2016-இல் நடந்த ஆசியக் கோப்பையின்போது, இந்தியாவின் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்கு கேப்டனாகவும் அபிஷேக் செயல்பட்டு சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதித்தார். 2017ம் ஆண்டு உள்நாட்டில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும் அபிஷேக் தலைமையிலான இந்திய அணி 3-1 என்று கைப்பற்றியது. 2018ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற 19வயதுக்குட்பட்டோருக்கான அணியிலும் அபிஷேக் சர்மா இடம் பெற்றிருந்தார். காலிறுதி ஆட்டத்தில் வங்கதேசத்துக்கு எதிராக அரைசதம் அடித்தும், 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார்.

யுவராஜ் சிங் விராட் கோலி

பட மூலாதாரம், Getty Images

யுவராஜ் சிங்கின் பங்களிப்பு என்ன?

கொரோனா காலத்துக்கு முன்புவரை அபிஷேக் சர்மாவின் பேட்டிங் நடுவரிசை வீரராகவே அடையாளப்படுத்தும் விதத்தில் இருந்தது. ஆனால், கொரோனா காலத்தில் இருந்து யுவராஜ் சிங்கின் வழிகாட்டலில்தீவிரமாக அபிஷேக் சர்மா பயிற்சி எடுத்தார்.

இதன் விளைவாக டாப்-3 பேட்டராக அபிஷேக் சர்மா தன்னை உயர்த்தி, எதிரணியின் பந்துவீச்சை துவம்சம் செய்யும் வீரராக மாறினார். அபிஷேக் சர்மாவை கடந்த 4 ஆண்டுகளில் செதுக்கி, தேர்ந்த பேட்டராகவும், ஆல்ரவுண்டராகவும் ஒளிரச் செய்ததில் யுவராஜ் சிங்கிற்கும் பங்குண்டு.

“என்னுடைய பேட்டிங் திறமையை, சிக்ஸர் அடிக்கும் திறனை மேம்படுத்தியது யுவராஜ் சிங்தான். எனக்கு சிறுவயதிலிருந்து கிரிக்கெட் பயிற்சி அளித்த என் தந்தை என்னை சுதந்திரமாக விளையாடவே அனுமதித்தார். எனக்கு பயிற்சியாளராக இருந்த என் தந்தை பெரிய ஷாட்களை அடிக்க ஊக்கப்படுத்தினார், பொதுவாக பயிற்சியாளர்கள் பெரிய ஷாட்களை ஆட அறிவுறுத்தமாட்டார்கள் ஆனால், என் தந்தை வேறுபட்டு நின்று என்னை ஊக்கப்படுத்தினார். அதையே களத்திலும் பிரதிபலித்தேன். நான் அச்சமில்லாமல் அழுத்தமின்றி பேட் செய்ய என் தந்தையும், யுவராஜ் சிங்கும் முக்கியக் காரணம் ” என அபிஷேக் கூறியிருக்கிறார்.

அபிஷேக் சர்மா

பட மூலாதாரம், Getty Images

அபிஷேக் சர்மாவின் சதத்தின் ரகசியம்

அபிஷேக் சர்மா 2-ஆவது போட்டியில் சதம் அடித்தில் சுப்மான் கில்லின் பங்களிப்பும் இருக்கிறது. சுப்மான் கில் பேட்டை கடனாக பெற்று விளையாடித்தான் அபிஷேக் 2வது ஆட்டத்தில் களமிறங்கி ஜிம்பாப்வேவுக்கு எதிராக சதம் அடித்துள்ளார்.

சுப்மான் கில் பேட்டில் விளையாடியது குறித்து அபிஷேக் சர்மா தனது பேட்டியில் கூறுகையில் “ ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2வது டி20 ஆட்டத்தில் சுப்மான் கில்லின் பேட்டை கடனாக வாங்கித்தான் விளையாடினேன். எனக்கு எப்போதெல்லாம் நெருக்கடியான, அழுத்தமான சூழல் வருகிறதோ அப்போது கில் பேட்டை எடுத்து விளையாடுவேன். நான் இந்திய அணியில் தேர்வானதும் எனக்கு தொலைப்பேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தது சுப்மான் கில்தான்.”

“சுப்மான் கில் பேட்டை வாங்கி விளையாடுவது இப்போது வந்த பழக்கம் அல்ல. நான் 12வயதுக்குட்பட்டோருக்கான அணியில் ஆடும்போதிலிருந்து வந்தது. எப்போதெல்லாம் அழுத்தமான சூழல் வருகிறதோ அப்போது சுப்மான் கில் பேட்டை எடுத்து விளையாடுவேன். ஐபிஎல் தொடரிலும் இதுபோல்தான் நடந்துள்ளது, ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2வது டி20 போட்டியிலும் அப்படித்தான் சுப்மான் கில் பேட்டில் விளையாடினேன்” எனத் தெரிவித்தார்.

அழுத்தத்தை தாங்கி விளையாடும் போக்கு குறித்து அபிஷேக் கூறுகையில் “அழுத்தத்தை தாங்கி விளையாட எனக்குக் கற்றுக்கொடுத்தது ஐபிஎல் தொடர்தான். முதல் போட்டி என்றபோதிலும்கூட பெரிதாக அழுத்தத்தோடு விளையாடவில்லை. ஆனால், டக்அவுட் ஆகியது எனக்கு நெருக்கடியளித்தது. ஆனால் என் மனநிலை, பேட்டிங் ஆகியவை சரியான நிலையில்தான் இருந்தது.” என்றார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்  (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)