அயோத்தி: பல கோடி செலவில் நடந்த கட்டுமானப் பணிகள் முதல் மழைக்கே சேதமடைந்ததன் பின்னணி

அயோத்தி: கோடிக்கணக்கில் செலவிட்டு  நடந்த கட்டுமானப் பணிகள் முதல் மழைக்கு சேதமடைந்த பின்னணி

பட மூலாதாரம், GAURAV GULMOHAR/BBC

படக்குறிப்பு, அயோத்தி
  • எழுதியவர், கவுரவ் குல்மோஹர்
  • பதவி, பிபிசி ஹிந்திக்காக

காலை ஏழு மணி… வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டது. லேசான தூறல் விழுந்து கொண்டிருந்தது. சமீபத்தில் முடிக்கப்பட்ட, அகலமான ராம்பாத் தார் சாலை வெறிச்சோடி இருந்தது.

ஒரு சில வாகனங்கள் மட்டும் அந்த சாலையில் ஊர்ந்து சென்றன. நகரின் பிரபலமான சிவில் லைன்ஸ் பேருந்து நிலையத்தில் இ-ரிக்‌ஷா ஓட்டுநர்கள் காலை தேநீர் அருந்திக் கொண்டிருந்தார்கள், அவர்களுக்குள் அயோத்தியில் மூழ்கும் சாலைகள் பற்றிய விவாதம் ஓடியது.

இ-ரிக்‌ஷா ஓட்டுநர் பப்லுவை சந்தித்தோம். 13 கிலோமீட்டர் நீளமுள்ள ராம்பாத் சாலையை நோக்கி சுட்டிக்காட்டி, "ஐயா, இது சாலையே இல்லை. இங்கு உருவாகும் பள்ளங்களுக்கு ராமர் கோவில் திறப்பு விழாவே காரணம்" என்றார்.

``ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோவில் திறப்பு விழாவின் பிரமாண்ட நிகழ்ச்சிக்காக அவசர அவசரமாக கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டன. இந்த கட்டுமானப் பணிகளின் தரம் என்ன, எந்தப் பொருள் பயன்படுத்தப்பட்டது என்று யாருக்குத் தெரியும்?” என்றார்.

இந்த சாலை அமைப்பதற்காக, எங்கள் வீடுகள் இடிக்கப்பட்டன, எங்களுக்கு இன்னும் அதற்கான முழு இழப்பீடுகூடக் கிடைக்கவில்லை, இதுவே இங்கு பாஜக தோல்வி அடையக் காரணம்'' என்றார்.

ஜூன் 22 அன்று பெய்த மழையைத் தொடர்ந்து, அயோத்தியில் உள்ள ராம்பாத் சாலையின் சஹாதத்கஞ்ச் முதல் நயா காட் வரையிலான சுமார் பத்து இடங்கள், இடிந்து விழுந்தது, சாலையின் நடுவில் ஏராளமான ஆழமான, சுரங்கப்பாதை போன்ற துளைகள் ஏற்பட்டன.

பல கோடி செலவில் அமைக்கப்பட்ட சாலை

அயோத்தி: கோடிக்கணக்கில் செலவிட்டு  நடந்த கட்டுமானப் பணிகள் முதல் மழைக்கு சேதமடைந்த பின்னணி

பட மூலாதாரம், GAURAV GULMOHAR/BBC

படக்குறிப்பு, ராமர் கோவில் நுழைவு வாயில்

இந்த ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோவில் திறப்பு விழா நடைபெறுவதற்கு முன்னதாகவே ராம்பாத் சாலை வசதி உருவாக்கப்பட்டது.

அரசு புள்ளி விவரங்களின்படி, சுமார் 624 கோடி ரூபாய் செலவில் இந்தச் சாலை கட்டப்பட்டுள்ளது.

மேலும் ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு முன், அயோத்தியின் வளர்ச்சிப் பணிகளுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், தண்ணீர் தேங்கி, மூழ்கும் சாலைகள் அனைவரின் மனதிலும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

ராமர் கோவில் திறப்பு விழாவுக்காக விரைவாக வளர்ச்சிப் பணிகள் முடிக்கப்பட்டதால் சாலைகள் தரமானதாக அமைக்கப்படவில்லை என்று பல குடியிருப்பாளர்கள் கூறுகின்றனர்.

அயோத்தியின் வளர்ச்சி மாதிரி பற்றிய கேள்விகள்

அயோத்தி: கோடிக்கணக்கில் செலவிட்டு  நடந்த கட்டுமானப் பணிகள் முதல் மழைக்கு சேதமடைந்த பின்னணி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அயோத்தி

மத்திய அரசின் ஸ்வதேஷ் தர்ஷன் (Swadesh Darshan) திட்டத்தின் கீழ் அயோத்தியில் மேற்கொள்ளப்பட்ட பிரமாண்டமான-தெய்வீக மேம்பாடு மற்றும் அழகுபடுத்துதல் பணிகள், நீண்ட கால மற்றும் நிலையான வளர்ச்சி மாதிரியாகத் தகுதி பெறுமா என்பது முக்கியக் கேள்வி.

அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு முன்பு, துளையிடும் இயந்திரங்கள் மற்றும் புல்டோசர்களின் சத்தம் நகரம் முழுவதும் எதிரொலித்த நிலையில், ராமர் கோவில் திறப்பு விழாவுக்குப் பிறகு பெய்த முதல் மழையில், வீடுகளில் தேங்கிய நீரை அகற்றுவதற்காக சாலையோரங்களில் பம்ப் செட்டுகள் பொருத்தப்பட்டிருந்தன. அயோத்தியை சுற்றியுள்ள பகுதிகள் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தன.

ஜூன் 23 முதல் 28 வரை பெய்த மழைக்குப் பிறகு, அயோத்தியில் உள்ள ராமர் கோவிலின் பிரதான வாயிலில் தண்ணீர் தேங்கியது.

இதுதவிர, ஜல்வான்பூர், தொழிற்சாலை பகுதியான கடோப்பூர், கர்சேவக்புரம் மற்றும் சிவில் லைன்களிலும் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின. மக்கள் வசிக்கும் குடியிருப்புகள் மட்டுமின்றி பல அரசு அலுவலகங்களிலும் வெள்ளம் புகுந்தது.

இருப்பினும், அயோத்தி மற்றும் பைசாபாத் நகரவாசிகள், சரயு நதிக்கரையில் அமைந்துள்ள பகுதிகளைத் தவிர, இதற்கு முன்பு இவ்வளவு பெரிய அளவில் நீர் தேங்கியதில்லை என்று கூறுகின்றனர்.

ராமர் கோவில் பூசாரி சொல்வது என்ன?

அயோத்தி: கோடிக்கணக்கில் செலவிட்டு  நடந்த கட்டுமானப் பணிகள் முதல் மழைக்கு சேதமடைந்த பின்னணி

பட மூலாதாரம், GAURAV GULMOHAR/BBC

படக்குறிப்பு, அயோத்தியில் குடியிருப்புப் பகுதிகளிலும் தண்ணீர் நிரம்பியுள்ளது

ஜூன் 22, 2024 அன்று ஒரு சாதாரண மழைக்குப் பிறகுதான், ராமர் கோவில் தலைமை அர்ச்சகர் சத்யேந்திர தாஸ், கோவில் கருவறையின் மேற்கூரையிலிருந்து தண்ணீர் சொட்டுவதாகச் சொன்னதாக செய்திகள் வெளியாகின.

சத்யேந்திர தாஸை அவரது கோகுல் மந்திர் இல்லத்தில் சந்தித்தபோது, ​​“இதைப் பற்றி பேசுவதற்கு நான் ஏற்ற நபர் அல்ல. இங்கு பேசுவதற்கு ஏற்ற சூழல் தற்போது இல்லை. வளர்ச்சி பற்றி நான் என்ன சொல்ல முடியும்? முதல் மழைக்கே சாலை சிதிலமடைந்தது” என்றார்.

இருப்பினும், ராமர் கோவில் கட்டுமானப் பணிகளை மேற்பார்வையிடும் அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய், ராமர் கோவில் சன்னதியில் தண்ணீர் கசிவு என்ற கூற்றை சமூக ஊடகங்களில் மறுத்துள்ளார்.

``ராம்லாலா வீற்றிருக்கும் கருவறையில், மேற்கூரையிலிருந்து ஒரு சொட்டு நீர்கூட சொட்டவில்லை, எந்த இடத்திலிருந்தும் கருவறைக்குள் தண்ணீர் நுழையவில்லை” என்றார்.

ஆனால் பல இடங்களில் புதிதாக அமைக்கப்பட்ட சாலைகள் தண்ணிரில் மூழ்கும் நிலையில் இருந்தன. அயோத்தி மாவட்ட உள்ளூர் நிர்வாகமும் சாலைகளில் அதிகளவில் பள்ளங்கள் உருவாகிவிட்டதாக நம்புகிறது.

மாநிலத்தின் ஆளும் பாரதிய ஜனதா கட்சியுடன் தொடர்புடைய நகரத்தின் மேயர், மஹந்த் கிரிஷ்பதி திரிபாதி பிபிசியிடம் கூறுகையில், "அயோத்தியில் ராம்பாத் கட்டுமானம் ஒரு சாதனை என்பதில் சந்தேகமில்லை. பல்வேறு பொறியியல் சிக்கல்களின் விளைவாக இந்த சாலையில் பள்ளங்கள் உருவாகியுள்ளன, ஆனால் அவை இருக்கக்கூடாது என்பது என் கருத்து. கட்டுமானத்தில் சில தொழில்நுட்பப் பிழைகள் காரணமாக பள்ளங்கள் உருவாகியிருக்க வேண்டும்" என்றார்.

அயோத்தி: கோடிக்கணக்கில் செலவிட்டு  நடந்த கட்டுமானப் பணிகள் முதல் மழைக்கு சேதமடைந்த பின்னணி

பட மூலாதாரம், GAURAV GULMOHAR/BBC

படக்குறிப்பு, நகர மேயர் மஹந்த் கிரிஷ்பதி திரிபாதி சில பொறியியல் சிக்கல்கள் இருப்பதாக ஒப்புக்கொண்டார்.

மேலும் பேசிய அவர், "ஜனவரி 22ஆம் தேதி நடக்கும் நிகழ்ச்சியை ஒட்டி, உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் இங்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஒட்டுமொத்த உலகத்தின் பார்வையும் அயோத்தியை நோக்கி இருந்தது. அதிநவீன சாலைகளின் தேவை ஏற்பட்டது” என்றார்.

“அவசரமான கட்டுமானத்தால் சில தொழில்நுட்பக் குறைபாடுகள் இருந்திருக்கலாம், இதன் காரணமாக மழையில் பள்ளங்கள் உருவாகி இருக்கும். ஆனால் யோகி அரசாங்கத்தில் அந்தக் குறைபாடுகளை நாங்கள் சரி செய்வோம் என்று நம்புகிறோம். வரும் நாட்களில் கடுமையான மழையைச் சமாளிக்க அயோத்தி முனிசிபல் கார்ப்பரேஷன் தயாராக உள்ளது,” என்று விளக்கினார்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை கூடுதல் பொறியாளர் ஓம் பிரகாஷ் வர்மா செய்தியாளர்களிடம் கூறுகையில், "ராம் பாதை குறைபாடு பொறுப்புக் காலத்தில் (defect liability period) உள்ளது. இந்தக் காலகட்டத்தில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், கட்டுமானப் பணிகளை செய்யும் ஏஜென்சி மூலமாகவே சரிசெய்யும் பணிகள் ம��ற்கொள்ளப்படும். வரும் மழைக்காலத்தில், பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்தால் தொடர்ச்சியான கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். கட்டுமானங்கள் பராமரிக்கப்படும்," என்றார்.

கவலையில் உள்ள நகரவாசிகள்

அயோத்தி: கோடிக்கணக்கில் செலவிட்டு  நடந்த கட்டுமானப் பணிகள் முதல் மழைக்கு சேதமடைந்த பின்னணி

பட மூலாதாரம், GAURAV GULMOHAR/BBC

படக்குறிப்பு, தனது கடையில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக ரஜ்னீஷ் குமார் தெரிவித்துள��ளார்.

அயோத்தி தாம் ஸ்டேஷன் ரோட்டில், ஆன்லைன் வங்கி சேவை செய்யும் ரஜ்னீஷ் குமார் என்பவரின் வீட்டின் முன் கட்டப்பட்டு வரும் கழிவுநீர் கால்வாய் ஒரு மாதமாக முடிக்கப்படாமல் உள்ளது. மழைநீர் தேங்கியதால், ரஜ்னிஷின் கடை மற்றும் குடியிருப்பில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

பம்ப் செட் மூலமாக தண்ணீரை பம்ப் செய்யும் பணிகள் நடந்தபோது, ​​அவர் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது. பருவமழை இன்னும் தீவிரமாகt தொடங்காததால், அவரது குடும்பத்தினர் அச்சத்தில் உள்ளனர்.

அயோத்தி ஸ்டேஷன் ரோட்டில் கட்டடப் பொருள்கள் கடை நடத்தி வரும் பிரிஜ் கிஷோர் கூறுகையில், ''ஒரு மாதமாக இங்கு வடிகால் தோண்டப்பட்டு முழுமையடையாமல் கிடப்பதால் கடையின் முன் தண்ணீர் நிரம்பி கடையின் மண் அரிப்பு ஏற்பட்டு தண்ணீர் உள்ளே செல்கிறது," என்றார்.

"கடை எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம். முதல்வர் புகார் தளத்தில் புகார் அளித்தும், விசாரணை நடக்கவில்லை. முன்பு இங்கு தண்ணீர் தேங்கவில்லை, ஆனால் தற்போது இரண்டு மணிநேரம் மழை பெய்ததற்கே நிலைமை பரிதாபமாக உள்ளது" என்று விவரித்தார்.

அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் குஃப்ரான் சித்திக் கூறுகையில், "பழைய கட்டடக்கலை மற்றும் பாரம்பரிய வளர்ச்சியின் மாதிரியை இன்றும் காணக்கூடிய அவாத்தின் தலைநகராக பைசாபாத் நகரம் இருந்தது."

“எனக்கு நினைவு தெரிந்ததில் இருந்து அயோத்தியிலும், பைசாபாத் நகரிலும் சாதாரண மழையின்போது இந்தளவுக்கு தண்ணீர் தேங்கும் பிரச்னை இருந்ததில்லை. இப்படி நடப்பது இதுவே முதல் முறை. இவை அனைத்திற்கும் ஊடகங்கள் இந்த இடத்துக்குக் கொடுத்த கவர்ச்சியும் பிரமாண்டமும்தான் காரணம். இல்லாவிட்டால், மூன்று மாதங்களுக்கு முன் முடிந்த கட்டுமானப் பணிகளில், ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ஐந்து குழிகள் ஏற்பட்டிருப்பது எப்படி?” என்றார்.

மாநகராட்சி அலுவலகத்திற்குள் புகுந்த மழைநீர்

அயோத்தி: கோடிக்கணக்கில் செலவிட்டு  நடந்த கட்டுமானப் பணிகள் முதல் மழைக்கு சேதமடைந்த பின்னணி

பட மூலாதாரம், GAURAV GULMOHAR/BBC

படக்குறிப்பு, நகராட்சி அலுவலகம்

சாலைகளில் பெரிய பள்ளங்கள் மட்டுமின்றி, ராமர் கோவில் வளாகத்தின் பிரதான வாயிலிலும் வெள்ளம் புகுந்தது. அயோத்தி முனிசிபல் கார்ப்பரேஷன் தலைமையகம், அருகிலுள்ள கடைகள் மற்றும் கோவிலை ஒட்டிய குடியிருப்புகள் ஆகியவற்றில் மக்கள் வெள்ளத்தில் சிக்கித் தவிப்பதைக் காண முடிந்தது.

அயோத்தி முனிசிபல் கார்ப்பரேஷனின் ஊழியர் கமலேஷ் குமார் அலுவலகத்தில் இருந்து தண்ணீரை வெளியேற்றிக் கொண்டிருந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், "மழையின்போது மாநகராட்சி அலுவலகத்தில் இதற்கு முன்னர் தண்ணீர் தேங்கியதில்லை” என்றார்.

இதுகுறித்து அவர் பிபிசியிடம் கூறுகையில், "சாலை அமைக்கும் பணிகளை மேற்கொண்ட ஆர்என்சி நிறுவனம் பழைய சாக்கடையை மண் போட்டு அடைத்தது. புதிய ராம்பாத் சாலையின் நடுவே வடிகால் அமைக்கப்பட்டது. ஆனால் அலுவலக வடிகால் அதனுடன் இணைக்கப்படவில்லை. இதனால், சிறிய மழைக்கே தண்ணீர் தேங்கியது" என்றார்.

அலுவலக வடிகால் பிரதான வாய்க்காலுடன் இணைக்க வேண்டும் எனத் தொடர்ந்து கூறி வந்தோம். ஆனால், யாருடைய அறிவுரையையும் கேட்காமல், தன்னிச்சையாக அவர்கள் பணிகளில் ஈடுபட்டனர்.

ராமர் கோவிலில் இருந்து நூறு மீட்டர் தொலைவில் உள்ள ஜல்வான்பூர் பகுதியில் மக்கள் இதற்கு முன்பு மழைக் காலங்களில் கடினமான நாட்களை எதிர்கொண்டுள்ளனர். ஆனால் முதல் மழையிலேயே தண்ணீர் தேங்கும் பிரச்னையை அவர்கள் எதிர் கொண்டதில்லை. இம்முறை அது நடந்துவிட்டது.

அயோத்தி: கோடிக்கணக்கில் செலவிட்டு  நடந்த கட்டுமானப் பணிகள் முதல் மழைக்கு சேதமடைந்த பின்னணி

பட மூலாதாரம், GAURAV GULMOHAR/BBC

ஜல்வான்பூர் வாடகை வீட்டில், கிரண் கடை நடத்தி வருகிறார். அவருடைய கடையிலும் தண்ணீர் புகுந்துவிட்டது.

முன்பு ராமர் கோயிலுக்கு அடுத்த ராமபாத் சாலையில் தான் தேநீர் கடை இருந்ததாகவும், ஆனால் சாலை விரிவாக்கத்தின் போது 60 அடி நீளமும் 13 அடி அகலமும் கொண்ட கடை இடிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

கிரண் கூறுகையில், ​​"ஊர் முழுவதும் தண்ணீரில் மூழ்கிக் கிடக்கிறது. எனது கடையில் ஒரு அடி வரை தண்ணீர் நிரம்பியுள்ளது. எப்படி உணவு சமைப்பது, மளிகை சாமான்களை வாங்குவது? என்ன செய்வதென்று தெரியவில்லை. நிர்வாகத்தினர் யாரும் உதவவில்லை" என்றார்.

பத்மாவதி ஜல்வான்பூர் இரண்ட���வது தெருவில் உள்ள தனது மூன்று மாடி கொண்ட வீட்டில் தர்மசாலை நடத்தி வருகிறார். பத்மாவதி வாசலில் நின்று பயணிகளுக்காகக் காத்திருக்கிறார்.

அசுத்தமான கறுப்பு நிற சாக்கடை நீர் நிரம்பிய தெருவில் நான் வருவதைப் பார்த்த பத்மாவதி, ஒருவேளை நான் ஒரு யாத்ரீகராக இருக்கலாம் என்றும் வாடகைக்கு ஒரு அறையைத் தேடுகிறேன் என்றும் நினைத்தார். ஆனால் நான் யாத்ரீகர் அல்ல என்று தெரிந்ததும் அவர் ஏமாற்றமடைந்தார்.

பத்மாவதி கூறுகையில், "இந்த ஆண்டு இரண்டு முறை மழை பெய்தது. இரண்டு முறையும் வீடுகளில் வெள்ளம் நுழைந்தது. திறப்பு விழாவின்போது தர்மசாலைக்கு வந்த பயணிகள் சென்றுவிட்டனர். அதன்பிறகு வேறு பயணிகள் யாரும் வரவில்லை. எங்கள் தர்மசாலை முழுவதும் காலியாக உள்ளது" என்றார்.

ராமர் கோவில் கட்டியதில் மகிழ்ச்சியா என்று கேட்டதற்கு, பத்மாவதி, "ராமர் கோவில் நம்பிக்கையின் அடிப்படை, ஆனால் கோவிலின் பெயரில், அனைவரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். ஆனால் மக்களாகிய எங்களுக்கு என்ன வேண்டும்? எங்கள் வாய்க்கால்களில் இருந்து தண்ணீர் வெளியேறுவது நடந்தால் போதும்" என்றார்.

அயோத்தியின் தற்போதைய நிலை மழையின் விளைவா அல்லது முழு நகரத்தின் உருவாக்கத்தில் தீவிரமான தொழில்நுட்பக் கோளாறு உள்ளதா என்பதைத் தற்போது யாராலும் தீர்மானிக்க முடியாது.

மழையைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பத்தை எதிர்க்கட்சிகள் கடுமையான பிழை என்று முத்திரை குத்துகின்றன. அதே நேரத்தில் ஆளும் கட்சி அதை தற்காலிக பிரச்னையாகக் கருதுகிறது.

கேள்விகளை எழுப்பிய சிஏஜி

அயோத்தி: கோடிக்கணக்கில் செலவிட்டு  நடந்த கட்டுமானப் பணிகள் முதல் மழைக்கு சேதமடைந்த பின்னணி

பட மூலாதாரம், GAURAV GULMOHAR/BBC

சமாஜ்வாதி கட்சியின் மாவட்டத் தலைவர் பரஸ்நாத் யாதவ் பிபிசியிடம் கூறுகையில், "முழுமையற்ற எந்தக் கோவிலிலும் கடவுள் சிலையை நிறுவக்கூடாது என்று இந்து மதத்தில் எழுதப்பட்டுள்ளது. ஆனால் மக்களவைத் தேர்தலுக்கு முன் அரசியல் ஆதாயம் பெறுவதற்காக, சிலையை நிறுவி, திறப்பு விழா நடத்தப்பட்டது" என்றார்.

"எல்லாமே தரக்குறைவாக நிறுவப்பட்டது. எல்லைச் சுவர்கள் இடிந்து விழுகின்றன, சாக்கடைகள் நிரம்பி வழிகின்றன, சாலைகள் விரிசல் அடைகின்றன. அதுதான் இங்குள்ள அனைத்திற்கும் காரணம்" என்று கூறுகிறார்.

யுஅயோத்தியை சேர்ந்த பேராசிரியர் அனில் குமார் சிங், தண்ணீர் தேங்குவதையும், சாலை இடிந்து போவதையும் முதன்மையாகச் சரிசெய்ய வேதையும்ள்ளது மற்றும் இது குறையான பொறியியலின் விளைவு என்று கருதுகிறார்.

பேராசிரியர் அனில் குமார் சிங் கூறுகையில், "இது அனைத்தும் நிபுணர்களின் ஆலோசனையின்றி முடிக்கப்பட்ட அவசர வேலைகளின் விளைவு. ஜனவரி 22 அன்று கோவிலைத் திறக்கத் திட்டமிடப்பட்டதில் இருந்து பல பணிகள் தாறுமாறாக முடிக்கப்பட்டுள்ளன" என்றார்.

கடந்த ஆண்டு மழைக்கால கூட்டத்தொடரில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட தலைமை கணக்கு தணிக்கையாளர் (சிஏஜி) அறிக்கையில், அயோத்தியில் தொடங்கப்பட்டுள்ள பல திட்டங்கள் குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது குறிப்பிடத்தக்ககுறிப்பிடத்தக்கது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)