நாசாவின் 'மாதிரி' செவ்வாய்க் கிரகத்தில் ஒரு வருடம் வாழ்ந்த 4 பேர் - பூமியில் ஒரு விண்வெளி வாழ்க்கை

மாதிரி செவ்வாய்கிரகவாசம்

பட மூலாதாரம், NASA

படக்குறிப்பு, அமெரிக்காவில் அமைக்கப்பட்டிருந்த மாதிரி செவ்வாய்க் கிரகத்தில் நான்கு அமெரிக்கர்கள் வசித்து வந்தனர்.
  • எழுதியவர், நிக்கோலேய் வொரோனின்
  • பதவி, பிபிசி உலக சேவை

அரை நூற்றாண்டுக்கு முன்பு வரை, செவ்வாய்க் கிரகத்துக்குச் செல்வது அறிவியல் புனைவுப் படங்களின் கதைக்கருவாக இருந்தது. ஆனால், இன்று விஞ்ஞானிகள் இதுகுறித்து உண்மையாகவே தீவிரமாகச் சிந்தித்து வருகின்றனர்.

செவ்வாய்க் கிரகத்தில் குடிபெயரும் மனிதர்கள், நெடிய விண்வெளி பயணத்தை மேற்கொள்ளவும், அங்குள்ள அசாதாரண சூழல்களைக் கையாளவும் தேவையான திறன்கள் உள்ளனவா என்று சோதிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

விண்வெளியில் வாழ்வது எளிதானது அல்ல, விண்வெளி வீரர்கள் இதை எப்படி எதிர்கொள்வார்கள்?

இந்தக் கேள்விகளுக்குப் பதில் தேடுவதற்காகக் கடந்த ஆண்டு ஜூன் 25ஆம் தேதி, கெல்லி ஹாட்சன், ராஸ் ப்ராக்வெல், நேதன் ஜோன்ஸ், அன்கா செலாரியூ ஆகிய நான்கு அமெரிக்கர்கள் ஒரு“விண்வெளிப் பயணத்தை” மேற்கொண்டனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அவர்கள் செவ்வாய்க் கிரகத்துக்குப் புறப்பட்டுச் செல்லவில்லை. ஆனால், செவ்வாய்க் கிரகத்தைப் போல 3டி தொழில்நுட்பத்தால் அச்சிடப்பட்ட ஒரு 'மாதிரி செவ்வாய்க் கிரகத்தில்' வசிக்கப் புறப்பட்டனர். செவ்வாய்க் கிரகத்தில் என்ன மாதிரியான காலநிலைகள் இருக்குமோ அதைக் கிட்டத்தட்ட மறு உருவாக்கம் செய்யப்பட்ட இடமே இது.

செவ்வாய்க் கிரகத்துக்குச் செல்லும் மனிதர்கள் அங்கே என்ன மாதிரியான உடல், உளரீதியான சிக்கல்களை எதிர்கொள்வார்கள் என்று தெரிந்துகொள்வதே இத்திட்டத்தின் நோக்கம்.

செவ்வாய்க் கிரகத்தில் விண்வெளி வீரர்களும் அவர்களின் உபகரணங்களும் பாதுகாப்பாக இருக்கும் வகையிலான இடம் வடிவமைக்கப்பட்டது. அதில் ஓராண்டு காலம் நான்கு பேர் தங்கியிருந்தனர்.

மாதிரி செவ்வாய்கிரகவாசம்

பட மூலாதாரம், MARK FELIX/AFP /AFP via Getty Images

படக்குறிப்பு, செவ்வாய்க் கிரக நிலப்பரப்பில் பயன்படுத்துவதற்கான காலணிகள்.

இந்த 3டி வடிவம், டெக்சாஸ் ஹூஸ்டனில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்தில் அமைக்கப்பட்டிருந்தது. விண்வெளி வீரர்கள் தங்கள் பயணத்தை மேற்கொள்வதற்கு முன்பாக, விண்வெளி மாதிரிச் சூழல்களில் தங்க வைக்கப்படுவது வழக்கம். அது spaceflight simulation எனப்படும்.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட மாதிரி சோதனைகளில், தற்போது முடியும் ஓர் ஆண்டுகால ‘சிறைவாசம்’தான் மிக நீண்ட, முழுமையான சோதனை.

இந்தச் சோதனையில் பங்கேற்ற நான்கு பேரையும் விஞ்ஞானிகள் தொலைதூரத்தில் இருந்து கண்காணித்து வந்தனர். அவ்வபோது அவர்களுக்குப் பணிகளைக் கொடுத்து வந்தனர். அவர்களின் உடல் மற்றும் உள நலன் குறித்த தகவல்களைச் சேகரித்து வந்தனர்.

ஜூலை 6ஆம் தேதி இந்தச் சோதனைத் திட்டம் அதிகாரபூர்வமாக முடிவுக்கு வருகிறது. நெடு நாட்கள் ஒன்றாக வாழும்போது, எப்படி தங்களுக்குள் மோதல்கள் இல்லாமல், தங்கள் குடும்பங்களைப் பிரிந்து, மனநலனில் பாதிப்பு ஏற்படாமல் மனிதர்கள் சமாளிக்கிறார்கள் என்று ஆய்வு செய்யப்படும்.

10 ஆயிரம் பேரில் நான்கு பேர் தேர்வு

மாதிரி செவ்வாய்கிரகவாசம்

பட மூலாதாரம், NASA

படக்குறிப்பு, மாதிரி செவ்வாய்க் கிரகத்தில் 370 நாட்கள் தங்கியிருந்தனர்.

இந்தச் சோதனையில் பங்கேற்ற நான்கு பேர் கடைசியாக வானத்தைப் பார்த்து ஓராண்டு காலம் ஆகிறது. அவர்கள் 370 நாட்கள் முற்றிலும் தனிமையில் இருந்து இந்த நெடிய ‘செவ்வாய்க் கிரக’ வாசத்தைப் பூர்த்தி செய்கின்றனர்.

இத்திட்டதில் பங்கேற்க விண்ணப்பங்கள் குவிந்தன. நான்கு மார்ஷியன் ஆர்வலர்கள் தேவை என்று நாசா வெளியிட்ட அறிவிப்புக்கு 10 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.

செவ்வாய்க் கிரகத்துக்குச் செல்ல குறைந்தபட்சம் ஒன்பது மாதங்கள் ஆகும். இந்த நெடிய பயணத்தில் தனிமையில் இருக்கும்போது மனிதர்களுக்கு என்ன பாதிப்புகள் ஏற்படலாம் என்று கண்டறிய இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

மாதிரி செவ்வாய்கிரகவாசம்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, இத்திட்டத்தின் அறிவியல் கூறுகளை பேராசிரியர் பெல் உருவாக்கினார்.

செவ்வாய்க் கிரகத்தைப் போன்ற வசிப்பிட சூழல்கள் கொண்டு உருவாக்கப்பட்ட அந்த இடம், 1,722 சதுர அடி பரப்பளவு கொண்டது. இது 3டி தொழில்நுட்பம் மூலம் அச்சிடப்பட்டது.

செவ்வாய்க் கிரகம் பல லட்சம் கி.மீ. தொலைவில் இருப்பதால், பூமியிலிருந்து கட்டுமானப் பொருட்களை அங்கு கொண்டு செல்வது சாத்தியமற்றது. எனவே, செவ்வாய்க் கிரக வசிப்பிடங்கள் 3டி தொழில்நுட்பம் மூலம் கட்டுவதே சாத்தியமாக இருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

செவ்வாய்க் கிரகத்தில் ஏற்கெனவே உள்ள மணல் மற்றும் தூசியைக் கொண்டுதான் இந்த வசிப்பிடங்களை அங்கு செல்பவர்கள் கட்ட வேண்டும். இவை 3டியில் அச்சிடப்பட்ட விண்வெளி வசிப்பிடங்களின் முதல் படியாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

ஓராண்டு கால செவ்வாய்க் கிரக வாசம்

மாதிரி செவ்வாய்கிரகவாசம்

பட மூலாதாரம், NASA

படக்குறிப்பு, சோதனையில் பங்கேற்றவர்கள் ஓராண்டு காலம் பதப்படுத்தப்பட்ட உணவுகளையே சாப்பிட்டனர்.

செவ்வாய்க் கிரகத்தின் அசாதாரண சூழல்களை பூமியில் முழுவதுமாக மறுஉருவாக்கம் செய்வது சாத்தியமில்லை என்று ஜான்சன் விண்வெளி மையத்தில் உள்ள நாசாவின் நடத்தை ஆரோக்கியம் மற்றும் செயல்திறன் ஆய்வகத்தின் தலைவர் சுசேன் பெல் தெரிவிக்கிறார்.

"செவ்வாய்க் கிரகத்தில் சுவாசிக்க முடியாத காற்று, நுண்புவி ஈர்ப்பு, வலுவான கதிர்வீச்சு உள்ளது. எனினும், செவ்வாய்க் கிரகத்துக்கு உண்மையிலேயே மனிதர்கள் செல்லும்போது, அவர்கள் சந்திக்க வேண்டிய சில தவிர்க்க முடியாத சவால்களுக்கு எதிர்கால செவ்வாய்க் கிரக வசிப்பாளர்களைத் தயார் செய்ய இத்திட்டம் சிறந்த முயற்சி எடுத்து வருகிறது.

இந்தச் சோதனைக் காலம் முழுவதும், நீண்ட விண்வெளிப் பயணத்தில் சாப்பிடக்கூடிய பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் மார்ஷியன் கண்ணாடிக் கூண்டில் அவர்கள் உற்பத்தி செய்த உணவுகளையுமே நான்கு பேரும் சாப்பிட்டனர்.

உண்மையிலேயே செவ்வாய்க் கிரகத்துக்கு விண்வெளிக் குழுவினர் செல்லும்போது அவர்கள் சந்திக்கப் போகும் முக்கியப் பிரச்னை செவ்வாய்க் கிரகத்துக்கும் பூமிக்கும் இடையிலான தகவல் தொடர்பில் உள்ள நீண்ட தாமதவாதுதான்.

செவ்வாய்க் கிரகத்தில் உள்ள மனிதர்கள் பூமிக்கு தகவல் சொல்ல விரும்பினால், அது பூமியை வந்தடைய 22 நிமிடங்கள் ஆகும்.

பூமியிலிருந்து பதில் அனுப்பினால், அது மீண்டும் செவ்வாய்க் கிரகத்தைச் சென்றடைய மேலும் 22 நிமிடங்கள் ஆகும். எனவே ஒரு கேள்வியைக் கேட்டு, அதற்குப் பதில் கிடைக்க 44 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். இந்த சவால் தற்போது நடைபெற்ற சோதனைத் திட்டத்திலும் சேர்க்கப்பட்டிருந்தது," என்று விளக்கினார்.

மாதிரி செவ்வாய்கிரகவாசம்

பட மூலாதாரம், MARK FELIX/AFP /AFP via Getty Images

படக்குறிப்பு, செவ்வாய்க் கிரக வசிப்பிட மாதிரி.

விட்டுவிட்டு கேட்கும் ஒலி தொடர்புகள், திடீரெனப் பழுதாகும் சிறிய கருவி என எதிர்பாராத சிக்கல்கள், சங்கடம் தரும் சூழல்களை உள்ளடக்கியதாக இந்தச் சோதனை அமைந்திருந்தது.

அதாவது செவ்வாய்க் கிரகத்தில் தங்களுக்கு ஏதேனும் ஒரு அவசர நிலை ஏற்பட்டால், பூமியிலிருந்து கிடைக்கும் உதவிக்காக, குழுவினர் காத்திருக்க முடியாது. அவர்களே அதைத் தீர்த்துக்கொள்ள வேண்டும். இந்த சவால் தற்போது நடைபெற்ற சோதனைத் திட்டத்திலும் சேர்க்கப்பட்டிருந்தது.

இதுபோன்ற சவால்கள் இந்தச் சோதனையில் மிகவும் அவசியமானது என்கிறார் சுசேன் பெல். அப்போதுதான், தனிமையில் இருக்கும் நேரத்தில் ஒரு அழுத்தமான சூழல் ஏற்பட்டால், மனிதர்கள் அதை எப்படிக் கையாள்கிறார்கள் என்று சோதித்துப் பார்க்க முடியும் என்கிறார் அவர்.

இந்தச் சோதனைத் திட்டத்தில் பங்கேற்க விரும்புவோர், இயற்கை அறிவியலில் குறைந்தபட்சம் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் விமானம் ஓட்டும் பயிற்சி அல்லது ராணுவப் பயிற்சி முடித்திருக்க வேண்டும் என்று நிபந்தனைகள் இருந்தன.

சோதனையில் பங்கேற்ற கெல்லி ஹாஸ்டன், குருத்தணு (ஸ்டெம் செல்) சிகிச்சைகள் குறித்து ஆய்வு செய்யும் பயிற்சி பெற்ற மருத்துவர். ப்ராக்வெல் ஒரு வடிவமைப்புப் பொறியாளர். ஜோன்ஸ் ராணுவத்தில் ஆம்புலன்ஸ் சேவையில் மருத்துவராக இருந்தவர். செலாரியூ, அமெரிக்க கப்பல் படையில் அனுபவம் கொண்ட நுண் உயிரியலாளர்.

இந்தச் சோதனைத் திட்டத்துக்க்கு அவர்கள் தகுதியானவர்களா எனக் கண்டறிய விண்வெளி வீரர்களுக்கு நடத்தப்பட்டும் உடல் மற்றும் மனரீதியான சோதனைகள் நடத்தப்பட்டன.

இத்திட்டத்தின் மீதுள்ள விமர்சனங்கள் என்ன?

மாதிரி செவ்வாய்கிரகவாசம்

பட மூலாதாரம், NASA

செவ்வாய்க் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை ஆதரிப்பவர்கள், இந்தச் சோதனைத் திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறுகின்றனர். புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கவும், விண்வெளி வீரர்களுக்கான பயிற்சிகளை வழங்கவும், நெடிய விண்வெளிப் பயணத்தைப் பாதுகாப்பாக, திறன்கொண்டதாக மாற்றவும் இத்திட்டம் உதவும் என்று நம்புகின்றனர்.

ஆனால், சிலர் இத்திட்டம் தேவையற்றது என்று நினைக்கிறனர். மிகவும் ஆபத்து நிறைந்த, செலவு அதிகமான செவ்வாய்க் கிரக பயணத்தை மனிதர்கள் ஏன் மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

எதிர்கால செவ்வாய்க் கிரக வசிப்பாளர்களுக்கு இருக்கும் பெரும்பாலான பணிகளை மனித உயிருக்கு ஆபத்து இல்லாமலும் குறைந்த செலவிலும் ரோபோக்கள் செய்துவிடும்.

மேலும் இந்தத் திட்டத்தில் குறைந்தபட்ச ஆபத்து என்பதே மனித உயிருக்கு மிக ஆபத்தானதுதான். இந்த சோதனைத் திட்டம் செவ்வாய் கிரகத்துக்கு எப்படிப் பாதுகாப்பாக மனிதர்கள் அனுப்பப்படுவார்கள் என்ற கேள்விக்கு விடை தரவில்லை என்று விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இயக்குநரும் ரஷ்ய அறிவியில் அகாடெமியின் துணைத் தலைவருமான லெவ் செலனி கூறுகிறார்.

பூமியின் சுற்றுவட்டப் பாதைக்கு வெளியே வலுவான கதிர்வீச்சு, செவ்வாய்க் கிரகத்துக்குச் செல்லும் மனிதர்களுக்குப் பெரும் ஆபத்தாக அமையும்.

கதிர்வீச்சில் இருந்து மனிதர்களைப் பாதுகாக்கும் தொழில்நுட்பம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே இந்த செவ்வாய்க் கிரக சோதனைப் பயிற்சி குறித்து அவருக்கு சந்தேகங்கள் உள்ளன.

“அவர்கள் பயிற்சி செய்யட்டும்... பல் துலக்கட்டும், உடற்பயிற்சி செய்யட்டும்... அதனால் எந்தத் தீங்கும் இல்லை” என்கிறார் அவஅவர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)