ரசிகர்களின் அவமரியாதைக்கு ஆளான ஹர்திக் பாண்டியா மீண்டு வந்தது எப்படி?

ஹர்திக் பாண்டியா

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

2024 ஐ.பி.எல் சீசன். மும்பை வான்ஹடே மைதானத்தில் மும்பை இந்தியன் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவிடம் வர்ணனையாளர் சஞ்சய் மஞ்சரேக்கர் பேட்டி எடுத்தார். அப்போது மைதானத்துக்குள் நாய் ஒன்று நுழைந்து ஓடவே ரசிகர்கள் அனைவரும் ‘ஹர்திக் ஹர்திக்’ என்று கோஷமிட்டனர்.

இதைக் கேட்ட வர்ணனையாளர் மஞ்சரேக்கர் சற்று ஆவேசமாக “மும்பை ரசிகர்கள் மரியாதையாக நடக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்,” என்று மைக்கிலேயே கண்டித்தார்.

அணியின் கேப்டனாகியபின்பும், சொந்தமண்ணின் ரசிகர்களால் வஞ்சிக்கப்படுவது, கேலி, கிண்டல் செய்யப்படுவதைப் போன்று கொடுமையானது ஏதுமில்லை.

ஆனால் ஹர்திக் பாண்டியா டி20 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் கிளாசன் விக்கெட்டை வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்தியபின் அதே ரசிகர்கள் பாண்டியாவை சமூக வலைத்தளங்களில் கொண்டாடினர்.

மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பொறுப்பு ரோகித் சர்மாவிடம் இருந்து ஹர்திக் பாண்டியாவுக்கு மாறியதால் இருவருக்கும் இடையே மோதல் இருப்பதாகவும் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.

ஆனால் உலகக் கோப்பையை வென்றபின் அதே ஹர்திக் பாண்டியாவை கட்டியணைத்து அவரின் கன்னத்தில் ரோகித் சர்மா முத்தமிட்டார். எந்த ரசிகர்களால் கேலி, நய்யாண்டி வார்த்தைகளை கேட்டாரோ அதே ரசிகர்களை புகழவைத்த வித்தைக்காரர் ஹர்திக் பாண்டியா.

ஹர்திக் பாண்டியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சூப்பர்-8 சுற்றில் ஹர்திக்கின் பேட்டிங்கும், முக்கியமான நேரத்தில் எடுத்த விக்கெட்டுகளும் உலகளவில் சிறந்த ஆல்ரவுண்டராக அவரை உயர்த்தியது

சர்ச்சை நாயகன்

ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்பட்டபின், அவரின் பேட்டிங், பந்துவீச்சு எந்த அளவு பேசப்பட்டதோ அந்த அளவு அவரின் சர்ச்சைப் பேச்சுகளும், செயல்களும் செய்தியாகின. ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சு, அதிரடியான பேட்டிங், மேட்ச் வின்னிங் ஆட்டம் ஆகியவற்றைப் பார்த்து அடுத்த கபில்தேவ் உருவெடுத்துவிட்டார் என்று கிளப்பிவிடப்பட்டன. ஆனால், இந்த வார்த்தைகளை ஹர்திக் பாண்டியா நம்பவில்லை என்றாலும், அவரின் செயல்பாடுகள், பேச்சுகள் மனதில் லேசான அந்த எண்ணம், கர்வம் இருப்பதையே காட்டியது.

குறிப்பாக கரன்ஜோகர் 'காஃபி வித் கரண்' நிகழ்ச்சியில் ஹர்திக் பேசிய பல கருத்துகள் சர்ச்சையாகியதால், அவர் இந்திய அணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். திருமணத்துக்கு முன்பே குழந்தை பெற்றுக்கொள்ளுதல், ஏராளமான தோழிகள், உயர்குடி மக்கள் போன்ற ஆடம்பர வாழ்க்கை, ஐ.பி.எல் தொடருக்கு முக்கியத்துவத்தால் கிடைத்த பணம் என ஹர்திக் பாண்டியா கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

ஆனால், ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்த விமர்சனங்களைக் கடந்து, போராடி வென்றுதான் ஹர்திக் பாண்டியா தன்னை உயர்த்திக்கொண்டுள்ளார்.

ஹர்திக் பாண்டியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சிறுவயதிலிருந்தே மனதில் பட்டதை மறைக்கத் தெரியாமல் வெளிப்படையாக பேசும் பழக்கம் கொண்டவர் ஹர்திக் பாண்டியா

இளமைக் காலம்

ஹர்திக் பாண்டியா பெரிய வசதியான குடும்பத்தில் பிறந்தவர் அல்ல.1993-ஆம் ஆண்டு, அக்டோபர் 11-ஆம் தேதி குஜராத் மாநிலத்தின் சூரத்நகரில் சோர்யாசி பகுதியில் ஹர்திக் பிறந்தார். வாடகை வீட்டில், அடுக்குமாடி குடியிருப்பில்தான் ஹர்திக் பிறந்து வளர்ந்தார்.

ஹர்திக்கின் தந்தை ஹிமான்சு பாண்டியா, சூரத் நகரில் வாகனங்களுக்கான பைனான்ஸ் வழங்கும் சிறிய நிறுவனத்தை நடத்தி வந்தார். ஹர்திக்கிற்கும், அவரின் சகோதரர் குர்னல் பாண்டியாவுக்கும் சிறந்த கிரிக்கெட் பயிற்சி தேவை என்பதற்காக சூரத் நகரிலிருந்து வதோதரா நகருக்கு ஹிமான்சு குடிபெயர்ந்தார்.

வதோதராவில் உள்ள முன்னாள் விக்கெட் கீப்பர் கிரண் மோர் அகாடெமியில் ஹர்திக் பாண்டியா, குர்னல் பாண்டியா இருவரும் சேர்க்கப்பட்டனர். சிறுவயதிலிருந்தே ஹர்திக்றிக்கு படிப்பில் இருந்த கவனம், அக்கறையைவிட கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் இருந்தது.

'வெளிப்படையாகப் பேசி வாய்ப்பை இழந்தேன்'

கிளப் கிரிக்கெட்டில் ஆர்வத்துடன் விளையாடும் ஹர்திக், தனி ஒருவனாக களத்தில் இருந்து ஆட்டத்தைபலமுறை வென்று கொடுக்கும் அளவுக்குத் திறமையாக இருந்தார். சிறுவயதிலிருந்தே மனதில் பட்டதை மறைக்கத் தெரியாமல் வெளிப்படையாக பேசும் பழக்கம் கொண்டவர் ஹர்திக் பாண்டியா.

இதனால்தான் மாநில அளவிலான அணியில் இடம் கிடைக்கும்போது, ஹர்திக் பாண்டியா வெளிப்படையாக பேசிய பேச்சுகள் அவருக்கான இடத்தை பறிபோகவைத்தது. இந்தத் தகவலை ஹர்திக்பாண்டியா ஒருமுறை 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில் “ நான் எதையும் வெளிப்படையாகப் பேசுவேன். மறைக்கமாட்டேன். அவ்வாறு பேசியதுதான் எனக்கான மாநில அளவிலான அணியில் இடம் கிடைக்கவிடாமல் செய்துவிட்டது,” எனத் தெரிவித்தார்.

ஹர்திக் பாண்டியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2021-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கு இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா தேர்வாகினார்

லெக் ஸ்பின்னர் வேகப்பந்துவீச்சாளராக மாற்றம்

ஹர்திக் பாண்டியா சிறுவயதிலிருந்து கிரிக்கெட் பயிற்சி எடுத்தபோது, 18 வயது வரை அவர் லெக் ஸ்பின்னராகவே இருந்து வந்தார். ஆனால், அதன்பின், பரோடா பயிற்சியாளர் சனத் குமார், ஹர்திக் பாண்டியாவின் திறமையைப் பார்த்து அவரை வேகப்பந்துவீச்சுக்கு மாற்றினார்.

2013-ஆம் ஆண்டு பரோடா அணிக்காக களமிறங்கிய ஹர்திக் பாண்டியா 2013-14 சீசனில் பரோடா அணி சயத் முஸ்தாக் அலி கோப்பையை வெல்ல ஹர்திக் ஆட்டம் முக்கியக் காரணமாக அமைந்தது. 2016-ஆம் ஆண்டில் சயத் முஸ்தாக் அலிக் கோப்பைத் தொடரில் விதர்பா அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா 8சிக்ஸர்கள் விளாசி 86 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்து வெற்றிக்குத் துணை செய்தார்.

ஐ.பி.எல் தந்த புதுவாழ்க்கை

ஹர்திக் பாண்டியா பரோடா அணியில் விளையாடியதைக் கேள்விப்பட்ட மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம், ஐ.பி.எல் ஏலத்தில் 2015-ஆம் ஆண்டு விலைக்கு வாங்கியது. 2015-ஆம் ஆண்டிலிருந்து 2021-ஆம் ஆண்டுவரை ஹர்திக் பாண்டியா, மும்பை இந்தியன்ஸ் அணியின் செல்லப்பிள்ளை போலத்தான் இருந்தார்.

2015-ஆம் ஆண்டு ஐ.பி.எல் சீசனில் கொல்கத்தா அணிக்கு எதிராக ஹர்திக் அடித்த 31 பந்துகளில் 61 ரன்கள்தான் அனைவரின் கவனத்தையும் ஹர்திக் மீது குவித்தது. 2015, 2017, 2019 ஆகிய ஆண்டுகளில் மும்பை இந்தியன்ஸ் சாம்பியன் பட்டம் வென்றபோது ஹர்திக் பாண்டியாவின் பங்களிப்பு அளப்பறியது. 2019-ஆம் ஆண்டு சீசன்தான் ���ர்திக் பாண்டியாவை உச்சத்தில் அமரவைத்தது. 432 ரன்கள் சேர்த்த ஹர்திக் பாண்டியா, உலகளவில் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக மதிக்கப்பட்டு பட்டியலிடப்பட்டார்.

ஹர்திக் பாண்டியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒருநாள் போட்டிகளிலும் ஹர்திக் பாண்டியா சிறப்பாக ஆடி ஆல்ரவுண்டர் என்பதை நிரூபித்தார்

இந்திய அணிக்குள் வருகை

ஹர்திக் பாண்டியா ஐ.பி.எல் தொடரில் விளையாடியவிதம் இந்திய அணியின் தேர்வாளர்களை ஈர்த்தது. இதைத் தொடர்ந்து 2016-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியத் தொடருக்கு ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் டி20 போட்டியிலேயே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2 விக்கெட்டுகளை ஹர்திக் எடுத்தார்.

2016 ஆசியக் கோப்பைத் தொடரில் வங்கதேசத்துக்கு எதிராக ஹர்திக் 18 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்து இந்திய அணி பெரிய ஸ்கோர் வர காரணமாக அமைந்தார். பந்துவீச்சிலும் ஒருவிக்கெட்டை வீழ்த்தினார். 2016-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக 3 விக்கெட்டுகளை ஹர்திக் எடுத்தார்.

2021-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கு இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா தேர்வாகினார். ஆனால், எதிர்பார்த்ததைவிட மோசமாக செயல்பட்டு கடுமையாக விமர்சனத்துக்கு ஹர்திக் ஆளாகினார். இதனால் உலகக் கோப்பைத் தொடர் முடிந்தபின் டி20 அணியிலிருந்து ஹர்திக் பாண்டியா நீக்கப்பட்டார். பின்னர் 2022-ஆம் ஆண்டு, அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணிக்கு கேப்டனாக ஹர்திக் நியமிக்கப்பட்டார்.

அறிமுக ஆட்டத்திலேயே ஆட்டநாயகன்

2016-ஆம் ஆண்டு, அக்டோபர் 16-ஆம் தேதி நியூசிலாந்துக்கு எதிராக ஹர்திக் பாண்டியா இந்திய ஒருநாள் அணியில் அறிமுகமாகினார். முதல் போட்டியிலேயே ஆட்டநாயகன்விருதை ஹர்திக் வென்று சாதனை படைத்தார். அறிமுக ஆட்டத்திலேயே ஆட்டநாயகன் விருது வென்றவர்களில் சந்தீப் பாட்டில், மோகித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகியோருக்கு அடுத்தார்போல் ஹர்திக் இடம் பெற்றார்.

ஒருநாள் போட்டிகளிலும் ஹர்திக் பாண்டியா சிறப்பாக ஆடி ஆல்ரவுண்டர் என்பதை நிரூபித்தார். 2017-ஆம் சாம்பியன்ஸ் டிராபி, 2019-ஆம் உலகக் கோப்பை ஆகியவற்றில் ஹர்திக்கின் பந்துவீச்சும், பேட்டிங்கும் அனைவராலும் பாராட்டப்பட்டது.

டெஸ்ட் போட்டியிலும் 2016-ஆம் ஆண்டில் ஹர்திக் பாண்டியா இங்கிலாந்து அணிக்கு எதிராக அறிமுகமாகினார். ஆனால் காயத்தில் அவரால் விளையாடமுடியவில்லை. இதைத் தொடர்ந்து 2017-ஆம் ஜூலையில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஹர்திக் பாண்டியா அறிமுகமாகினார். இலங்கைக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் மதிய உணவு இடைவேளைக்கு முன்பே ஹர்திக் சதம் அடித்த முதல் இந்திய பேட்டர் என்ற சாதனை படைத்தார்.

ஹர்திக் பாண்டியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஐ.பி.எல் தொடரிலும் மும்பை அணியில் பேட்டராக இருந்த பாண்டியா குறிப்பிட்ட போட்டிகளில் மட்டும் பந்துவீசி அதை பயிற்சிக் களமாக மாற்றினார்

டி20, ஒருநாள் நாயகன்

டெஸ்ட் போட்டிகளில் குறைவாக ஆடிய ஹர்திக் பாண்டியா 11 டெஸ்ட்களில் 532 ரன்களும், 17 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ஆனால், ஒருநாள் போட்டிகளில் 86 ஆட்டங்களில் 1,769 ரன்களையும், டி20 போட்டிகளில் 100 போட்டிகளில் 1,492 ரன்களையும் ஹர்திக் சேர்த்துள்ளார்.

டி20 போட்டியில் 140-க்கும் மேலாக ஸ்ட்ரைக் ரேட் வைத்தும், ஒருநாள் போட்டியில் 110 ஸ்ட்ரைக் ரேட்டும் வைத்துள்ளார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தலா 84 விக்கெட்டுகளை ஹர்திக் வீழ்த்தியுள்ளார்.

அறுவை சிகிச்சை, காயங்கள்

ஹர்திக் பாண்டியா முதுகுப் பகுதியில் காயம் ஏற்படவே லண்டனில் முதுகு தண்டுவடத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்த அறுவை சிகிச்சைக்குப்பின் நீண்டகாலம் கிரிக்கெட் விளையாடாமல் ஒதுங்கி இருந்து, தீவிரமான பயிற்சிக்குப்பின மீண்டும் அணிக்கள் திரும்பினார்.

அது மட்டுமல்லாமல் அணியில் ஸ்பெஷலிஸ்ட் பேட்டராக மட்டுமே ஹர்திக் இருந்தார், அவர் பந்துவீசவில்லை. ஐ.பி.எல் தொடரிலும் மும்பை அணியில் பேட்டராக இருந்த பாண்டியா குறிப்பிட்ட போட்டிகளில் மட்டும் பந்துவீசி அதை பயிற்சிக் களமாக மாற்றினார்.

2023-ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா கனுக்காலில் காயமடைந்து பாதியிலேயே போட்டியிலிருந்து வெளியேறினார். ஏறக்குறைய 3 மாதங்களுக்குப்பின்புதான் ஹர்திக் அணிக்குள் திரும்பினார். ஹர்திக் பாண்டியாவுக்கு இருக்கும் உடற்தகுதிச் சிக்கல்கள், பிரச்சினைகள் அவரை பல நேரங்களில் பொறுப்புகளில் அமர்த்துவதை தடுத்தது.

குஜராத் அணியின் கேப்டன்

ஐபிஎல் தொடரில் 2015-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை மும்பை இந்தியன்ஸ் அணியிலேயே ஹர்திக் இருந்தார். ஆனால், 2021-ஆம் ஆண்டு ஹர்திக் பாண்டியாவை மும்பை நிர்வாகம் ரிலீஸ் செய்தவுடன் அவரை குஜராத் அணி விலைக்கு வாங்கி அவரை கேப்டனாக நியமித்தது.

ஹர்திக் பாண்டியா முதல்முறையாக ஒரு அணிக்கு தலைமை ஏற்று , தொடரை வழிநடத்தினார்.தனது முதல் கேப்டன்ஷிப்பிலேயே குஜராத் அணிக்கு சாம்பியன் பட்டத்தையும் பெற்றுக்கொடுத்து வியப்பில் ஆழ்த்தினார்.

ஹர்திக் பாண்டியா

பட மூலாதாரம், Getty Images

புயல்வீசிய காலம்

அதன்பின்புதான் ஹர்திக் பாண்டியா வாழ்க்கையில் புயல்வீசத் தொடங்கியது. குஜராத் அணியிலிருந்து பெரிய தொகைக்கு மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் ஹர்திக்கை விலைக்கு வாங்கியது. மும்பை அணிக்க ஏற்கெனவே கேப்டனாக ரோகித் சர்மா இருப்பதால், பாண்டியா ஒரு வீரராகத் தொடர்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாரா வகையில் மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை மும்பை நிர்வாகம் நியமித்து, ரோகித் சர்மாவை கீழே இறக்கியது.

மும்பை அணிக்கு கேப்டனாக மண்ணின் மைந்தன் ரோகித் சர்மாவை பார்த்துப் பழகிய ரசிகர்கள் ஹர்திக்கை ஏற்க முடியவில்லை. இதனால் கடந்த சீசன் முழுவதும் ஹர்திக் பாண்டியா சொந்த அணியின் ரசிகர்களால் மைதானத்துக்குள் அவமானப்படுத்தப்பட்டார், கேலி கிண்டல் பேச்சுகளுக்கு ஆளாகி, பெரிய மன உளைச்சலுக்கு ஆளாகினார்.

அதிலும் சமூக ஊடகங்களில் ஹர்திக் பாண்டியாவை கடுமையாக ரசிகர்கள் விமர்சித்தனர், தரக்குறைவான வார்த்தைகளால் ஏசினர். ஆனால், எதற்கும் ஹர்திக் பாண்டியா எதிர்வினையாற்றவில்லை.

இதற்கிடையே ஹர்திக் பாண்டியாவின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஏற்பட்ட பிரச்சினைகள், சிக்கல்கள் அவரை புரட்டிப்போட்டன. மும்பை அணியில் ரோகித் சர்மா சார்பாக சில வீரர்களும், ஹர்திக் சார்பாக சில வீரர்களும் தனித்தனி குழுவாக செயல்படுவதாகத் தகவல்கள் வெளியாகின.

ரோகித், ஹர்திக் இடையே களத்தைத் தவிர ஓய்வறையில் கூட இருவரும் பேசிக்கொள்ளவில்லை என்று செய்திகள் ஊடகங்களில் வெளியாகின. இதனால் ஹர்திக் பாண்டியா பெரிய மன உளைச்சலுக்கு ஆளாகினார்.

இந்த மன உளைச்சளோடு டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியோடு மேற்கந்தியத்தீவுகள் செல்ல முடியாது என்பதை உணர்ந்த ஹர்திக் பாண்டியா தனியாக லண்டன் சென்று அங்கு ஓய்வு எடுத்து தன்னைச் சரி செய்து கொண்டு பின்னர் மேற்கிந்தியத் தீவுகள் சென்றார்.

கடும் மன உளைச்சல்

இது குறித்து ஹர்திக் பயிற்சியாளர் கிரண் மோர் கூறுகையில் “ நான் டி20 உலகக் கோப்பைத் தொடர்பாக ஹர்திக்கிடம் பேசியபோது, நான் இந்திய அணியுடன் பயணிக்கவில்லை, மனது சரியில்லை. அதனால் லண்டன் சென்று சிறிது ஓய்வு எடுத்தபின் அணியுடன் நேரடியாக சேர்ந்து கொள்கிறேன் என்றார். இந்திய அணிக்காக கோப்பையை பெற்றுத்தர விளையாட வேண்டும் இதற்கு நான் தயாராக வேண்டும் என்றார். கடந்த சில மாதங்களாக பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து அதிலிருந்து புதிய ஹர்திக்கை உலகக் கோப்பையில் பார்த்தேன்.

சூப்பர்-8 சுற்றில் ஹர்திக்கின் பேட்டிங்கும், முக்கியமான நேரத்தில் எடுத்த விக்கெட்டுகளும் உலகளவில் சிறந்த ஆல்ரவுண்டராக அவரை உயர்த்தியது. 2011-ஆம் ஆண்டு ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் யுவராஜ் சிங் செய்த பணியை இந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஹர்திக் செய்தார்.

ஒரு வீரர் மனஉளைச்சலுடன் இருக்கும் போது அவரால் 100% சிறந்த பங்களிப்பை அளிக்க முடியாது. அதனால்தான் ஹர்திக் லண்டன் சென்று ஓய்வெடுத்து கரீபியன் திரும்பினார். சிறுவயதிலிருந்து ஹர்திக்கை தெரியும், கடினமான சூழலில் இருந்து வளர்ந்தவர் ஹர்திக்,” என்றார்.

ஹர்திக் பாண்டியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஹர்திக் லண்டன் சென்று ஓய்வெடுத்து கரீபியன் திரும்பினார்

இந்தியாவை சாம்பியனாக்கும் கனவு

பயிற்சியாளர் கிரண் மோர் கூறுகையில் "ஒவ்வொரு கடினமான காலகட்டத்திலும் அதிலிருந்து எளிதாக மேலே வந்துவிடுவார். கடந்த 6 மாதங்களாக அவர் சந்தித்த சிக்கல்கள், சவால்கள், கிண்டல்கள் ஏராளம். ஆனால் எது குறித்தும் ஹர்திக் இதுவரை எதிர்வினையாற்றவில்லை. உலகக் கோப்பையை வென்றபின்புதான் ஹர்திக் பாண்டியா மனம்திறந்து பேசியுள்ளார்.

"இந்திய அணிக்கு உலகக் கோப்பையை பெற்றுத் தர வேண்டும் என கடந்த ஓர் ஆண்டாக என்னிடம் ஹர்திக் தெரிவித்துவந்தார். அவரின் கனவு கடினமான உழைக்குப்பின் நிறைவேறியுள்ளது” எனத் தெரிவித்தார்

"எல்லாவற்றிற்கும் மேலாக, மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்கும். கடந்த சீசனிலிருந்து மும்பை ரசிக்களின் கருத்தை எப்படி பாண்டியாவுக்கு சாதகமாக மாற்றுவது என்பது அவர்களுக்கு பெரும் சவாலாக இருந்தது. மும்பை இந்தியன்ஸ் எனும் பிராண்டைப்(brand) பாதித்தது,” என்றார்.

டி20 உலகக் கோப்பை போன்ற மிகப்பெரிய மேடையில் தேசத்தின் அணிக்காக கோப்பையை வென்���ு கொடுத்ததுபோல் ரசிகர்களை வெல்வதற்கு வேறு கருவி எதுவும் இல்லை. தான் முதலில் இந்திய அணியின் ஒரு அங்கம், அதன்பின்புதான் மும்பை இந்தியன்ஸ் வீரர் என்பதை காட்டுவதன் மூலமும், பாண்டியா அனைத்து இந்தியர்களின் இதயங்களையும் வென்றுள்ளார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)