இந்தியா vs ஜிம்பாப்வே: டக் அவுட் ஆன மைதானத்தில் அதிரடிக்கு மாறிய தருணம் பற்றி அபிஷேக் சர்மா கூறியது என்ன?

இந்தியா vs ஜிம்பாப்வே

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

அறிமுக போட்டியில் 4 பந்துகளில் டக்அவுட் ஆனார். 2-ஆவது ஆட்டத்தில் முதல் 20 பந்துகளில் 8 டாட் பந்துகளை விட்டார். ஆனால் இறுதியில் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து அற்புதமான முதல் சதத்தை நிறைவு செய்து விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் அபிஷேக் சர்மா.

டி20 சாம்பியன் பட்டம் வென்றபின், அடுத்த தலைமுறைக்கான இந்திய அணி முதல் டி20 ஆட்டத்தில் சனிக்கிழமை ஆடி மோசமான தோல்வியைச் சந்தித்தது. 2-ஆவது டி20 போட்டியில் ஜிம்பாப்வேவை வீழ்த்தி திரும்பிப்பார்க்க வைத்துள்ளது.

அதிலும் இளம் வீரர் அபிஷேக் சர்மா ஐபிஎல் தொடரில் கலக்கிய நிலையில் தனது 2-ஆவது ஆட்டத்திலேயே 46 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாகியுள்ளார்.

ஹராரே மைதானத்தில் நேற்று நடந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் சேர்த்தது.

235 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி, 18.4 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆட்டமிழந்து100 ரன்களில் தோல்வி அடைந்தது.

இந்த வெற்றி மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று 1-1 என்ற சமநிலையில் உள்ளன.

வாட்ஸ்ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஆட்டநாயகன் அபிஷேக்

இந்திய அணியின் வெற்றிக்கு முத்தாய்ப்பாக அமைந்தது அபிஷேக் ஷர்மாவின் சதமாகும். அறிமுகப் போட்டியில் டக்அவுட்டாகி, அடுத்த போட்டியிலேயே அபிஷேக் ஷர்மா 33பந்துகளில் அரைசதமும் அடுத்த 13 பந்துகளில் 50 ரன்கள் என 46 பந்துகளில் சதம் அடித்து ஆட்டநாயகன் விருது வென்றார்.

இந்திய அணி இமாலய ரன் குவிப்புக்கு முக்கியக் காரணம் அபிஷேக் ஷர்மாவின் அதிரடி ஆட்டமும், ரிங்கு சிங் (22பந்துகளில் 48) கேமியோவும், கெய்க்வாட் (77) நிதான ஆட்டமும் காரணமாகும். இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் குவித்த 2-ஆவது அதிகபட்ச ஸ்கோராக இது மாறியது.

10-ஓவர்களுக்குப்பின் விஸ்வரூபம்

நிதானமாகத் தொடங்கிய இந்திய அணி பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் கில் விக்கெட்டை இழந்து 36 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. 7 ஓவர்கள் முதல் 10 ஓவர்கள் வரை விக்கெட் இழப்பின்றி 34 ரன்களை இந்திய அணி சேர்த்தது.

ஆனால், அபிஷேக் ஷர்மா அதிரடிக்கு மாறி, ரிங்கு சிங் களத்துக்கு வந்தபின் கடைசி 10 ஓவர்களில் மட்டும் 161 ரன்கள் குவித்தது, ஒரு விக்கெட்டை மட்டும் இழந்தது. இந்த 10 ஓவர்களில் மட்டும் 12 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகள் அடிக்கப்பட்டன. கடைசி 30 பந்துகளில் மட்டும் 82 ரன்களை இந்திய பேட்டர்கள் குவித்தனர்.

ஹராரே மைதானத்தில் சேர்க்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுதான். இதற்கு முன் ஆஸ்திரேலிய அணி 229 ரன்கள் சேர்த்திருந்தது.

இந்தியா vs ஜிம்பாப்வே

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய அணி கடைசி 10 ஓவர்களில் மட்டும் 161 ரன்கள் குவித்தது, ஒரு விக்கெட்டை மட்டும் இழந்தது

அபிஷேக் சர்மா கூறியது என்ன?

ஆட்டநாயகன் விருது வென்ற அபிஷேக் சர்மா கூறுகையில் “ தோல்விக்குப்பின் இது மிகச்சிறந்த ஆட்டமாக உணர்கிறேன். எங்களை நாங்கள் இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கு அதிக அவகாசம் இல்லை. என்னைப் பொருத்தவரை டி20 ஆட்டம் என்பது தருணங்களை அடிப்படையாகக் கொண்டது. இன்று என்னுடைய நாள். அடுத்தது யாருடையதோ. பயிற்சியாளர், கேப்டனுக்கு நன்றி. எனக்கு கேட்சை நழுவவிட்டபின் என்னுடைய நாள் என உணர்ந்து அதன்பின் அதிரடிக்கு மாறினேன். எனக்கு ஸ்ட்ரைக்கை வழங்குவதில் ருது நன்கு உதவி செய்தார். என்னுடைய பவர் ஹிட்டிங் திறமை மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

3-ஆவது அதிவேக சதம்

ஐபிஎல் டி20 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்ற அபிஷேக் சர்மா 204 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடி கடந்த சீசனில் 484 ரன்கள் குவித்தார், இதில் 237 பந்துகளில் 42 சிக்ஸர்கள், 78 பவுண்டரிகளை அபிஷேக் விளாசி இருந்தார்.

இதே ஃபார்ம் இந்திய அணிக்குள் வந்ததும் தொடரும் என எதிர்பார்க்கப்பட்டநிலையில் முதல் ஆட்டத்தில் டக்அவுட் அனைவருக்கும் அதிர்ச்சியளித்தது. ஆனால், 2-ஆவது ஆட்டத்தில் அபிஷேக் தனது ஆட்டத்தை நிரூபித்துள்ளார். கடந்த முதல் ஆட்டத்தில் பென்னட் சுழற்பந்து வீச்சில்தான் அபிஷேக் ஆட்டமிழந்ததால் 2-ஆவது ஆட்டத்திலும் பெனட் முதல் ஓவரை வீசினார்.

ஆனால், இந்த முறை அபிஷேக் தகுந்த பதிலடி கொடுத்து, தான் சந்தித்த முதல் பந்தை சிக்ஸருக்கு விளாசி தன்னுடைய ஆட்டத்தின் போக்கை அறிமுகம் செய்தார். 33 பந்துகளில் அரைசதம் அடித்த அபிஷேக் ஷர்மா அடுத்த 13 பந்துகளில் 50 ரன்களைக் குவித்து 46 பந்துகளில் 2வது அதிவேக அரைசதத்தை விளாசியுள்ளார்.

அபிஷேக் ஷர்மா முதல் 24 பந்துகளில் 28 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தார். இதில் 3 பவுண்டரிகள் மட்டுமே அடங்கும். ஆனால், அடுத்த 23 பந்துகளில் மட்டும்72 ரன்களைக் அபிஷேக் குவித்தார்.

இதற்கு முன் ரோஹித் சர்மா 35 பந்துகளிலும், சூர்ய குமார் யாதவ் 45 பந்துகளிலும், கே.எல்.ராகுல் 46 பந்துகளிலும் சதம் அடித்திருந்தனர். அவர்கள் வரிசையில் அபிஷேக்கும் இணைந்தார்.

அதிலும் சதம் அடித்தபோது, அபிஷேக் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து சதம் அடித்த முதல் இந்திய பேட்டர் எனும் பெருமையை அபிஷேக் பெற்றார். 2023ம் ஆண்டில் நியூசிலாந்துக்கு எதிராக சுப்மான் கில் இரட்டை சதம் அடித்தபோது இதுபோன்று தொடர்ந்து 2 சிக்ஸர்களை விளாசி சதம் கண்டார்.

இந்தியா vs ஜிம்பாப்வே

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அபிஷேக் சர்மா ஐபிஎல் தொடரில் கலக்கிய நிலையில் தனது 2-ஆவது ஆட்டத்திலேயே 46 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாகியுள்ளார்.

சுழற்பந்துவீச்சை துவம்சம் செய்த இந்திய வீரர்கள்

ஜிம்பாப்வே சுழற்பந்துவீச்சில் முதல் ஆட்டத்தில் ஆட்டமிழந்த அபிஷேக், நேற்று சுழற��பந்துவீச்சை வெளுத்துவிட்டார். தனது சதத்தில் 63 ரன்களை 28 பந்துகளில் சுழற்பந்துவீச்சில்தான் அபிஷேக் பெற்றார். 238 ஸ்ட்ரைட் ரேட்டில் ஆடிய அபிஷேக், 6 சிக்ஸர்களையும், 4பவுண்டரிகளையும் சுழற்பந்துவீச்சில் அடித்தார்.

இதற்கு முன் 2012ல் ஆமதாபாத்தில் பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 57 ரன்களை யுவராஜ் சிங் சேர்த்ததுதான் அதிகபட்சமாக இருந்தது அதை அபிஷேக் முறியடித்தார்.

பவர்ப்ளேயில் கட்டுப்பாடு

இந்திய அணியை முதல் போட்டியில் சுருட்டியிருந்ததால் மிகுந்த நம்பிக்கையுடன்தான் ஜிம்பாப்பே பந்துவீச்சாளர்கள் பந்துவீசினர். இதனால் பவர்ப்ளே ஓவருக்குள் சுப்மான் கில் விக்கெட்டை எடுத்ததால், இந்திய அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. அபிஷேக் ஷர்மாவும், கெய்க்வாட்டும் நிதானமாக பேட் செய்து ரன்களைச் சேர்த்தனர். அபிஷேக்23 பந்துகளில் 27 ரன்கள் என பொறுமையாக பேட் செய்தார்.

11ஆவது ஓவரிலிருந்து ருத்ரதாண்டவம்

10 ஓவர்கள்வரை இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் என்று இயல்பான ஸ்கோரை நோக்கித்தான் சென்றது. ஆனால், மேயர்ஸ் வீசிய 11-ஆவது ஓவரிலிருந்து இந்திய அணியின் ரன்ரேட் ராக்கெட் வேகத்தில் பறந்தது. அபிஷேக் ஷர்மா ருத்ரதாண்டவத்தை வெளிப்படுத்து பவுண்டரி, சிக்ஸர்கள் என பறக்கவிட்டார்.

மேயர்ஸ் வீசிய 11-ஆவது ஓவரில் மட்டும் அபிஷேக் 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்களும், சிக்கந்தர் வீசிய 13-ஆவது ஓவரில் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரி என 16 ரன்களைக் குவித்தார். மஸகட்சா வீசிய 14-ஆவது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர் விளாசி சதம் அடித்து அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் மட்டும் 7 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் அடங்கும்.

இந்தியா vs ஜிம்பாப்வே

பட மூலாதாரம், Getty Images

ரிங்குசிங் அதிரடி ஆட்டம்

அடுத்துவந்த ரிங்கு சிங், தான் சந்தித்த 2-ஆவது பந்திலேயே சிக்ஸர் விளாசி அதிரடியாகத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் இந்திய பேட்டர்களுக்கு எப்படி பந்துவீசுவது என்று ஜிம்பாப்வே பந்துவீச்சாளர்கள் திணறினர். ஓவருக்கு 15 ரன்களுக்கு குறையாமல் சென்றதால், பந்துவீச்சை மாற்றியும் ரன்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. 7 பந்து வீச்சாளர்கள் பந்துவீசியும் இந்திய பேட்டர்களின் விக்கெட்டை எடுக்க முடியவில்லை.

டி20 உலகக் கோப்பைத் தொடரில் சாதிக்க முடியாத வேட்கையை இந்த ஆட்டத்தில் வெளிப்படுத்திய ரிங்கு சிங், அதிரடியாக பேட் செய்தார். சதாரா வீசிய 18-ஆவது ஓவரில் கெய்க்வாட் 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸரை விளாசினார்.முசாபர்பானி வீசிய 19வது ஓவரில் ரிங்கு சிங் 2 சிக்ஸர்களையும், ஜாங்வி வீசிய கடைசி ஓவரில் ரிங்கு சிங் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியையும், கெய்க்வாட் ஒரு பவுண்டரியையும் விளாசினர்.

கெய்க்வாட் 77 ரன்களிலும், ரிங்கு 48 ரன்களிலும் (2பவுண்டரி, 5சிக்ஸர்) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஜிம்பாப்வே தரப்பில் முசாரபர்பானி தவிர மற்ற அனைத்து பந்துவீச்சாளர்களும் சராசரியாக 15 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினர்.

விக்கெட் சரிவு

234 ரன்களை சேஸ் செய்வது என்பது கடின இலக்கு என்பது ஜிம்பாப்வே அணிக்குத் தெரியும் இருப்பினும் போராடிப் பார்த்தது. ஜிம்பாப்வே பேட்டர் பெனட் அதிரடியாகத் தொடங்கி, சிக்ஸர், பவுண்டரி அடித்தார். ஆனால், முகேஷ் குமார் ஓவரில் க்ளீன் போல்டாகி 26ரன்களில் பென்னட் ஆட்டமிழந்தார். பவர்ப்ளே ஓவருக்குள் ஜிம்பாப்வே 4 விக்கெட்டுகளை இழந்தது, 58 ரன்கள் சேர்த்தது.

ஜிம்பாப்வே அணியில் தொடக்க ஆட்டக்காரர் மதவரே(43), டெய்லண்டர் லூக் ஜாங்வி(33) ரன்கள் சேர்த்ததுதான் அதிகபட்சமாகும். நடுவரிசை பேட்டர்கள், கீழ் வரிசை பேட்டர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் சீரான இடைவெளியில் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.

ஆவேஷ்கான், முகேஷ் குமார் தலா 3 விக்கெட்டுகளையும், ரவி பிஸ்னோய் 2 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இந்தியா vs ஜிம்பாப்வே

பட மூலாதாரம், Getty Images

பீல்டிங் மோசம்

இந்த ஆட்டத்தில் இரு அணிகளின் பீல்டிங்கும், கேட்ச் பிடிக்கும் திறனும் படுமோசமாக இருந்தது. அதிலும் ஆவேஷ் கான் நேற்று ஒரு கேட்ச், சில பவுண்டரிகளையும் கோட்டைவிட்டார். அதேபோல கெய்க்வாட்டுக்கு ஒரு கேட்சையும், அபிஷேக்கிற்கு இரு கேட்சுகளையும் ஜிம்பாப்வே வீரர்கள் தவறவிட்டு அதற்கான விலையையும் கொடுத்தனர்.

தோல்வி அடைந்த ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா கூறுகையில் “உலக சாம்பியன் உலக சாம்பியன் போல் விளையாடினர். எங்களின் பீல்டிங் மிக மோசமாக இருந்தது என்று நான் நினைக்கிறேன், 4 முக்கியமான கேட்சுகளை நாங்கள் தவறவிட்டோம். 200 ரன்களுக்குள் சுருட்டிவிடலாம் என நினைத்தேன், ஆனால் 20 ரன்கள் கூடுதலாக சென்றது. ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதமானது என்பதால், இலக்கை விரட்டுவோம் என்று நினைத்தேன் ஆனால், பேட்டர்கள் எதிர்பார்த்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. எங்களின் டாப்ஆர்டர் பேட்டர்கள் ரன்கள் குவிக்கவில்லை. அதிகமான அனுபவமின்மைதான் எங்களுக்கு தோல்வியைக் கொடுத்தது. அடுத்தடுத்த போட்டிகளில் மீண்டுவருவோம்” எனத் தெரிவித்தார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)