ஆன்லைன் செய்தியில் நம்பகத் தன்மை, வெளிப்படைத் தன்மையை வலுப்படுத்த பிபிசி எப்படி வேலை செய்கிறது தெரியுமா?

பிரிட்டனிலும், உலகம் முழுவதிலும் உள்ள நேயர்களால் நம்பகமான செய்தி வழங்கும் நிறுவனம் என்று பிபிசி அறியப்பட்டுள்ளது. எங்கள் தொலைக்காட்சி மற்றும் ரேடியோ சேவைகளைப் போலவே எங்கள் இணைய தளமும் துல்லியமான, பக்கச் சார்பற்ற, சுயேச்சையான, நியாயமான இதழியலை வழங்க பாடுபடுகிறது.

எங்கள் ஆசிரியர் குழு மதிப்பீடுகள் சொல்கின்றன: "எங்கள் உள்ளடக்கங்கள் அனைத்தின் மீதும் நேயர்கள் கொண்டுள்ள நம்பிக்கையே எங்கள் பணிகள் அனைத்துக்கும் அடித்தளம். நாங்கள் சுயேச்சையானவர்கள், பக்கச் சார்பற்றவர்கள், நேர்மையானவர்கள். துல்லியத்திலும், சுயேச்சையாக இருப்பதிலும் உயர் நேர்த்தியை அடையவும், எங்கள் நேயர்களுக்கு தெரிந்தே, தவறான தகவல்களை அளிப்பதை தவிர்க்கவும் நாங்கள் பாடுபடுவோம்.

"இந்த நம்பிக்கை உறவின் மையக் கருவாக இருப்பது பக்கச்சார்பின்மை மீதான எங்கள் உறுதிப்பாடு. நாங்கள் வெளியிடும் எல்லாவற்றிலும், ஒவ்வொரு பொருளையும் நாங்கள் பக்கச்சார்பற்ற முறையில் கையாள்வோம். அது பலதரப்பட்ட பார்வைகளை பிரதிபலிக்கும் வகையில் இருக்கும். தொடர்புடைய எல்லா உண்மைகளையும் நியாயமாகவும், திறந்த மனத்தோடும் நாங்கள் கருத்தில்கொள்வோம்."

இணையத்தில் நம்பகமான இதழியல் எது என்பதை அடையாளம் காண்பது குழப்பம் தரும் அனுபவமாக இருக்கும் என்பதை நாங்கள் அறிந்துள்ளோம்.

பிபிசி இதழியல் பணி எப்படி நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள நேயர்கள் விரும்புகிறார்கள் என்பதையும் நாங்கள் அறிவோம்.

அதனால்தான், எங்கள் இணைய தளத்தில் என்ன விதமான தகவல்களை நீங்கள் படிக்கிறீர்கள் அல்லது பார்க்கிறீர்கள், இந்த தகவல்கள் யாரிடம் இருந்து, எங்கிருந்து வருகிறது, ஒரு செய்தி எவ்வாறு அப்படி உருவாக்கப்படுகிறது என்பதை விளக்க பிபிசி நியூஸ் பெருமுயற்சி எடுத்துக்கொள்கிறது. இப்படிச் செய்வதன் மூலம் ஏன் பிபிசி செய்தியை நம்பலாம் என்பதை நீங்களே முடிவு செய்ய உங்களுக்கு நாங்கள் உதவ முடியும்.

நம்பகமான இதழியலுக்கான இந்தக் குறியீடுகளை 'இயந்திரம் படிக்கும்' தொழில்நுட்பத்துக்கு ஏற்ற வகையிலும் உருவாக்குகிறோம். இதன் பொருள், இவற்றை இணைய தேடு பொறிகளும், சமூக வலைத்தளங்களும் எடுத்தாள முடியும் என்பதும், நம்பகமான செய்தி மூல ஆதாரங்களை அடையாளம் காண அவற்றுக்கு உதவ முடியும் என்பதும் ஆகும்.

சிறந���த நடைமுறை

பிபிசிக்கு நீண்டகாலமாக சொந்த ஆசிரியர் குழு வழிகாட்டு நெறிமுறை இருக்கிறது. எங்கள் எல்லா உள்ளடக்கங்களுக்கும் இது பொருந்தும். எங்கள் இதழாளர்களிடம் எதிர்பார்க்கப்படும் தரநிலை என்ன என்பதை வகுத்துள்ளோம்.

பிபிசி நெறிமுறைகள் எங்கள் செய்தி அறையில் எப்படி பின்பற்றப்படுகிறது என்பதைப் பார்ப்பதை எளிதாக்கும் வகையில் உரிய பிரிவுகள் அனைத்தையும் இந்தப் பக்கத்தில் பட்டியலிட்டுள்ளோம்.

பணித்திட்ட அறிக்கை

தகவல் அளிக்கிற, கற்பிக்கிற, மகிழ்விக்கிற பக்கச்சார்பற்ற, உயர் தர, தனித்துவமான வெளியீடுகள் மற்றும் சேவைகளை எல்லா நேயர்களுக்கும் வழங்குவதன் மூலம் மக்கள் நலனுக்காக செயல்படுவது பிபிசியின் பணித்திட்டம் (mission). பிபிசி பட்டயத்தில் முழு விவரங்களும் உள்ளன.

உரிமைத்துவ கட்டமைப்பு, நிதி மற்றும் நல்கை

ஆசிரியர் குழுவின் நேர்மைத்தன்மையை பாதிக்கும் வாய்ப்புகள் உள்ள வெளியார் நோக்கங்கள், ஏற்பாடுகள் ஆகியவை எங்களைக் கட்டுப்படுத்துவதில்லை. வெளியார் நோக்கங்கள், அரசியல், வணிக அழுத்தங்கள் அல்லது பிற தனி நபர் ஆர்வங்கள் ஆகியவை எங்கள் முடிவுகளில் செல்வாக்கு செலுத்தவில்லை என்ற நம்பிக்கை எங்கள் நேயர்களுக்கு இருக்கவேண்டும். பிரிட்டனிலும், சர்வதேச அளவிலும் பிபிசி நியூஸ் எப்படி நிதி பெறுகிறது, என்பது குறித்து பிபிசி-யின் சுயேச்சைத்தன்மை குறித்த பிபிசி பட்டயத்தில் மேலதிகம் படியுங்கள்.

நிறுவன நாள்

1922 அக்டோபர் 18 அன்று பிபிசி நிறுவப்பட்டது. பிபிசி-யின் வரலாறு. குறித்து மேலதிகம் படியுங்கள்.

அறக்கோட்பாடு: ஆசிரியர் குழுவுக்கான விழுமியங்கள் பிபிசி ஆசிரியர் குழு நெறிமுறைகளிலேயே கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன. எங்கள் எல்லா வெளியீடுகளும் இதற்கு இணங்கவே அமையவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிற இணைப்புகள்

பன்முகத்தன்மை கொள்கை

பிபிசி நியூஸின் பன்முகத்தன்மைக்கான உறுதிப்பாடு பற்றி பிபிசி பட்டயத்தில் அறிந்துகொள்ளுங்கள்.

பணியாளர் தொகுப்பில் பன்முகத்தன்மை பற்றிய அறிக்கை

பன்முகத்தன்மையை மேம்படுத்த பிபிசி நியூஸ் எப்படிப் பாடுபடுகிறது என்பதை பிபிசி சமத்துவத் தகவல் அறிக்கையில் அறியலாம்.

பிழை திருத்தம்

உரிய அளவில் துல்லியத்தை எட்டுவதற்கு பிபிசி உறுதி கொண்டுள்ளது. பிழைகளை திருத்திக்கொள்ளுதல் தொடர்பான கொள்கைகளை ஆசிரியர் குழு நெறிமுறைகளில் உள்ள கீழ்க்கண்ட பிரிவுகளில் காணலாம்.

எங்கள் வெளியீடுகள் நல்ல மூல ஆதாரங்களில் இருந்து வந்தவையாக, நிரூபணங்களின் அடிப்படையில் அமைந்தவையாக, முழுமையாக சோதிக்கப்பட்டவையாக, கச்சிதமான மொழியில் வழங்கப்பட்டவையாக இருக்கவேண்டும். எங்களுக்கு என்ன தெரியாது என்பது பற்றி நாங்கள் நேர்மையாகவும், திறந்த மனத்தோடும் இருக்கவேண்டும். அடிப்படையற்ற ஊகங்களைத் தவிர்க்கவேண்டும்.

கூற்றுகள், குற்றச்சாட்டுகள், உறுதி செய்ய முடியாத பொருண்மையான தகவல்கள் மற்றும் பிற உள்ளடக்கங்கள் ஆகியவை பொதுவாக அவை யாரால் சொல்லப்பட்டன என்பதை இணைத்தே சொல்லப்படவேண்டும்.

பிழைகள் நடந்துவிட்டால் அவற்றை ஒப்புக்கொள்வதில் திறந்த மனத்தோடு இருக்கிறோம். பிழைகளில் இருந்து கற்றுக்கொள்கிற பண்பாட்டை நாங்கள் ஊக்குவிக்கிறோம்.

ஒரு செய்தி வெளியிடப்பட்ட பிறகு, அதில் தகவல் துல்லியமின்மை இருந்து அதனை சரி செய்ய நேர்ந்தால், பிழை திருத்தப்பட்டிருக்கிறது, மாற்றப்பட்டிருக்கிறது என்பதை வாசகருக்கு அறிவிக்கும் வகையில் செய்திப் பிரதியின் இறுதியில் அது பற்றிய ஒரு குறிப்பு சேர்க்கப்படும். திருத்திய தேதியும் அதில் இடம் பெறும். ஒரு செய்தியில் ஆசிரியர் குழுக் குழுவுக்கு பெரிதாகத் தோன்றாத சிறு பிழை, (எடுத்துக்காட்டாக ஒரு பெயரின் எழுத்துகள் போன்றவை) நேர்ந்துவிட்டால், குறிப்பு எதுவும் எழுதாமலே பிழை திருத்தப்படும்.

குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே தோன்றக்கூடிய வகையில் சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட உள்ளடக்கங்கள் தவிர, மற்றவை இணையத்தில் வெளியிடப்பட்டுவிட்டால் நிரந்தரமாக அணுகத்தக்க ஆவணத் தொகுப்பின் அங்கமாகிவிடும்; சாதாரணமாக அவை அகற்றப்படாது என்ற ஒரு கருத்து உள்ளது. சட்டக் காரணங்கள், தனிநபர் பாதுகாப்பு அச்சுறுத்தல் அல்லது ஆசிரியர் குழு தர மதிப்பீடுகள் மோசமாக மீறப்பட்டு, உள்ளடக்கத்தை நீக்குவதைத் தவிர வேறு வழியில் அதை சரி செய்யமுடியாத நிலை போன்றவை விதிவிலக்கான தருணங்கள்.

பிற இணைப்புகள்:

சரிபார்ப்பு/உண்மை பரிசோதிப்பு தர நிர்ணயம்

பிபிசி-யின் துல்லியம் மற்றும் சரிபார்ப்பு கொள்கையானது, துல்லியம் பற்றிய ஆசிரியர் குழு நெறிமுறையில் கோடிட்டுக்காட்டப்பட்டுள்ளது.

பெயர் வெளியிடாத மூல ஆதாரங்கள்

பெயர் வெளியிட விரும்பாத மூல ஆதாரங்களை மேற்கோள் காட்டுவது தொடர்பாக பிபிசியின் கொள்கை மற்றும் வழிகாட்டு நெறிமுறை ஆசிரியர் குழு நெறிமுறைகள் பகுதியில் விரிவாகத் தரப்பட்டுள்ளது.

பிற இணைப்புகள்:

நடவடிக்கை எடுக்கத்தக்க பின்னூட்டங்கள்

பிபிசியின் புகார் சட்டகத்தில், புகார் செய்வது தொடர்பான வழிமுறை கோடிட்டுக்காட்டப்பட்டுள்ளது.

தலைமை

செய்திப் பிரிவை இயக்கும் மூதுநிலை செயலதிகாரிகள் இதோ: பிபிசி நியூஸ் போர்டு.

இதழியல் வல்லமை

அசலான செய்திச் சேகரிப்பு அடிப்படையில் தயாரிக்கப்படும் பிபிசி நியூஸ் கட்டுரைகள் எழுதிய இதழாளரின் பெயருடன் வெளியிடப்படும். குறிப்பிட்ட துறையில் சிறப்பு ஆற்றல் பெற்ற இதழாளர்கள் எழுதிய செய்திகளிலும் பெயர்கள் இருக்கும்.

செய்தி முகமைகள், பிபிசி நியூஸ் கேதரிங், பிபிசி பிராட்காஸ்ட் அவுட்புட் போன்ற பல மூல ஆதாரங்களில் இருந்து தகவல்களைத் திரட்டி தயாரிக்கப்படும் பொதுவான செய்திக்கட்டுரைகள், ஒரு நாளில் பல ஊழியர்களால் தயாரிக்கப்படும் செய்திகள் ஆகியவற்றில் பெயர்கள் இருக்காது என்பது விதி.

பணிகளின் வகைகள்

தகவல் அடிப்படையிலான செய்தி சேகரிப்புக்கும், கருத்துக்களையும் பிபிசி நியூஸ் வேறுபடுத்திப் பார்க்கிறது. இயந்திரங்கள் படிக்கத்தக்க லேபிள்களை ஆறு முறைகளில் பயன்படுத்துகிறோம்.

  • செய்தி - செய்தியாளர் நேரடியாக கவனித்த, சரிபார்த்த அல்லது, செய்தியாக அளிக்கப்பட்ட, தகவல் அறிந்த மூலாதாரங்களில் சரிபார்க்கப்பட்ட தகவல்கள் அடிப்படையிலான இதழியல்.
  • பகுப்பாய்வு - சிக்கலான நடப்பு நிகழ்வுகள் அல்லது போக்குகளைப் பற்றி புரிந்துகொள்ள உதவும் வகையில் தயாரிக்கப்பட்ட, வல்லுநர் ஒருவரின் சிறப்பு அறிவின் அடிப்படையில் அமைந்த இதழியல் பணி. அந்த வல்லுநர் பிபிசி இதழாளராகவோ, வெளியாராகவோ இருக்கலாம்.
  • நேயரைக் கேளுங்கள்- முதன்மையாக நேயர்களின் நேரடி எதிர்வினையைக் கோரும் வகையில் உருவாக்கப்பட்ட உள்ளடக்கம்.
  • விளக்கச் செய்தி - செய்திக்குப் பின்னணியாக இருக்கிற சூழ்நிலைகள், காரணிகள் பற்றிய தெளிவான, தகவல் சார்ந்த விளக்கத்தை தருகிற உள்ளடக்கம்.
  • கருத்து - பிபிசி நியூஸ் தம்மளவில் பக்கச்சார்பற்றது, கருத்துக்கள் வெளியிடாதது. ஆனால், சில நேரங்களில் வெளிவட்ட வல்லுநர்களின் தனிப்பட்ட கருத்துகளை வெளியிடுகிறோம். தகவல்களையும், தரவுகளையும் கட்டுரையாசிரியர் தாம் புரிந்துகொள்ளும் விதத்தை அடிப்படையாகக்கொண்டு அவை கருத்துகளுக்காக வாதிடுவதாகவும், முடிவுகளை எட்டுவதாகவும் அமையலாம்.
  • விமர்சனம் - ஒரு நிகழ்வு, ஒரு கலைப்படைப்பு ஆகியவற்றை விமர்சனபூர்வமாக ஆராய்ந்து தயாரிக்கப்படும் முதல் நிலை உள்ளடக்கம்.

மேற்கோள்கள், பார்வைக் குறிப்புகள்

எங்கள் வெளியீடுகள், அவற்றின் பொருளுக்கும், இயல்புக்கும் பொருத்தமான வகையில், நல்ல மூல ஆதாரங்களில் இருந்து வந்தவையாக, நிரூபணங்களின் அடிப்படையில் அமைந்தவையாக, முழுமையாக சோதிக்கப்பட்டவையாக, கச்சிதமான மொழியில் வழங்கப்பட்டவையாக இருக்கவேண்டும். எங்களுக்கு என்ன தெரியாது என்பது பற்றி நாங்கள் நேர்மையாகவும், திறந்த மனத்தோடும் இருக்கவேண்டும். அடிப்படையற்ற ஊகங்களைத் தவிர்க்கவேண்டும்.

தமது செய்தி சேகரிப்பின் முக்கிய அம்சம் ஒன்றுக்கு ஒரே ஒரு மூல ஆதாரத்தை நம்பியிருக்க வேண்டிய நிலை பிபிசி நியூசுக்கு ஏற்படும் நிலையில், அந்த இடத்தில் சாத்தியமாக இருந்தால் அந்த மூல ஆதாரத்தின் பெயர் குறிப்பிட முயற்சிப்போம். நாங்கள் சாதாரணமாக அதிகாரபூர்வ அறிக்கைகள், புள்ளிவிவரங்கள், பிற தகவல் மூலாதாரங்கள் ஆகியவற்றின் இணைப்புகளை நாங்கள் தருவோம். அதன் மூலம் நாங்கள் வெளியிடுகிற செய்தியின் பின்புலமாக இருக்கும் தகவல்களை நீங்களே மதிப்பிடுவதற்கு உதவுவோம்.

உரிய தருணங்களில், கூடுதல் தகவல்கள், மூலாதாரத் தகவல்கள், அறிவார்ந்த விமர்சனங்கள் ஆகியவற்றை வழங்கும் பொருத்தமான மூன்றாம் தரப்பு இணைய தளங்களின் இணைப்புகளையும் தருவோம்.

முறையியல்

சிக்கலான புலனாய்வுகள், தரவுகளை அடிப்படையாகக் கொண்ட இதழியல் பணித் திட்டங்கள் போன்ற ஆழமான பணிகளில் அந்தப் பணிகளை நாங்கள் எப்படி மேற்கொண்டோம் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளும் வகையில் அதன் பின்புலமாக உள்ள தரவுகளைக் காட்டுவோம்; எச்சரிக்கை அறிவிப்புகள், அனுமானங்கள், ஆய்வுக்கு பயன்படுத்திய முறையியல் சார்ந்த கட்டமைப்புகள் ஏதேனும் இருந்தால் அவற்றையும் வெளியிடுவோம். எடுத்துக்காட்டாக, ஆய்வு வடிவம், மாதிரி அளவு, பிரதிநிதித்துவக்கூறு, பிழை ஏற்படுவதற்கான சாத்திய விகிதங்கள், தரவுகள் திரட்டப்பட்ட முறை, புவிசார் பொருத்தப்பாடு, காலகட்டம் ஆகியவற்றை குறிப்பிடுவோம்.