மூளையை தின்னும் அமீபா: அறிகுறிகள் என்னென்ன? தற்காப்பது எப்படி?

மூளையைத் தின்னும் அமீபா

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், ஆ.நந்தகுமார்
  • பதவி, பிபிசி தமிழ்

வெள்ளிக்கிழமையன்று ’’Kerala brain-eating amoeba” என்ற தேடல் கூகுளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களால் தேடப்பட்டுள்ளது. கேரளாவில் மூளையைத் தின்னும் அமீபாவால் 3 பேர் உயிரிழந்துள்ளதுதான் இதற்கு முக்கியக் காரணம்.

கோழிக்கோட்டைச் சேர்ந்த 14 வயதான மிருதுல், கண்ணூரைச் சேர்ந்த 13 வயதான தக்‌ஷினா, மலப்புரத்தைச் சேர்ந்த 5 வயதான ஃபட்வா ஆகியோர் இந்த அமீபா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இந்தநிலையில் கோழிக்க���டு மாவட்டத்தின் பய்யோலியை சேர்ந்த 14 வயது சிறுவன் அமீபா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

இது கடந்த சில மாதங்களில் கேரளாவில் கண்டறியப்பட்ட 4வது பாதிப்பாகும். பாதிக்கப்பட்ட அனைவரும் சிறுவர்கள்.

இந்த சிறுவனுக்கு ஜூலை 6-ம் தேதி தொற்று கண்டறியப்பட்டதாகவும், அவரது உடல்நலன் தேறி வருவதாகவும் சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் கூறுவதாக தி ஹிந்து செய்தி கூறுகிறது.

தொற்று விரைவாகக் கண்டறியப்பட்டு உடனே சிகிச்சை அளிக்கத் தொடங்கியதாகவும், வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட மருந்துகள் கொடுக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மூளை திசுக்களை அழித்து மூளை வீக்கத்தை ஏற்படுத்தும் இந்த அமீபா தொற்று ஏற்பட்டவர்களில் 97%க்கும் அதிகமானோர் இறந்துபோவதாக அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மையம் (சிடிசி) கூறுகிறது.

மேலும் இந்த அமீபாவால் ஏற்படும் தொற்றுகள் மிகவும் அரிதானவை. எனவும், ஆனால் அது மரணத்தை ஏற்படுத்தக் கூடியவை எனவும் சிடிசி தெரிவித்துள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

என்ன நடந்தது?

கோழிக்கோட்டைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவர் மிருதுல் ஒரு குளத்தில் சென்று குளித்தபிறகு அவருக்குத் தலைவலி மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது.

முதலில் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் மேல் சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு நடந்த பரிசோதனையில் primary amoebic meningoencephalitis எனப்படும் மூளையைத் தின்னும் அமீபா தொற்றால் அவருக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது.

கடந்த ஜூன் 24 முதல் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், புதன்கிழமை உயிரிழந்தார் என பிடிஐ செய்தி முகமை கூறியுள்ளது.

"ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து, மேல் சிகிச்சைக்காக எங்கள் மருத்துமனையில் அந்தச் சிறுவன் அனுமதிக்கப்பட்டார். வரும்போதே அவர் உணர்வற்ற நிலையில் இருந்தார். நாங்கள் அவரை வென்டிலேட்டரில் வைத்து, சோதித்தபோது அவருக்கு மூளையைத் தின்னும் அமீபா தொற்று இருப்பதைக் கண்டுபிடித்தோம்.

இதற்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளான, ஆன்டிபயாடிக் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு மருந்துகளைக் கொடுத்தோம். ஆனால், அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை’’ என்கிறார் இந்தச் சிறுவனுக்கு சிகிச்சையளித்த கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையின் குழந்தை மருத்துவ சிகிச்சை நிபுணர் அப்துல் ராவுப்.

இதே போல கண்ணூரைச் சேர்ந்த 13 வயதான தாக்‌ஷினா, மூளையைத் தின்னும் அமீபா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த ஜூன் 12ஆம் தேதி உயிரிழந்தார்.

தாக்‌ஷினா மூணாறுக்கு பள்ளி சுற்றுலா சென்று, ​​அங்கு நீச்சல் குளத்தில் குளித்தபோது இந்த அமீபா தொற்று ஏற்பட்டது என தி ஹிந்து செய்தி கூறுகிறது.

இதற்கு முன்பு, மலப்புரத்தைச் சேர்ந்த 5 வயதான ஃபட்வா கடந்த மே 1ஆம் தேதி தனது வீட்டின் அருகே உள்ள கடலுண்டி ஆற்றில் உறவினர்களுடன் குளித்துள்ளார்.

மே 10ஆம் தேதி அவருக்கு வாந்தி மயக்கம் ஏற்படவே அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மூளையைத் தின்னும் அமீபா தொற்றால் பாதிக்கப்பட்ட அந்தக் குழந்தை, ஒரு வார மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்தது.

மூளையை தின்னும் அமீபா

பட மூலாதாரம், Getty Images

மூளையைத் தின்னும் அமீபா என்றால் என்ன?

Primary amebic meningoencephalitis எனப்படும் ஒரு தொற்று, மூளையை தின்னும் அமீபா எனப்படும் Naegleria fowleri-ஆல் ஏற்படுகிறது.

Naegleria fowleri அமீபா (ஒரு செல் உயிரினத்தின் வகை) வெப்பமான நன்னீர் ஏரிகள், ஆறுகளில் இருக்கக்கூடியவை என சிடிசி கூறுகிறது

’’உலகெங்கிலும் உள்ள ஏரி, ஆறு, நன்கு பராமரிக்கப்படாத நீச்சல் குளம் போன்ற இடங்களில் வாழும் ஒரு உயிரியை அமிபா என அழைக்கிறோம். இதுபோன்ற இடங்களில் மூழ்கிக் குளிக்கும்போது, அரிதாகச் சிலருக்கு மூக்கு வழியாக இந்த அமீபா உடலுக்குள் செல்கின்றன.'’

''அமீபா மூக்கிலிருந்து மூளைக்கு பயணித்து, மூளை திசுக்களை அழித்து வீக்கத்தை ஏற்படுத்துகிறது. பின்னர் இந்த தொற்று ஏற்பட்ட நபருக்குக் காய்ச்சல் ஏற்பட்டு மரணம் நிகழும்’’ என்கிறார் மருத்துவர் அப்துல் ராவுப்.

மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில், போதுமான குளோரின் கலக்கப்படாத பொழுதுபோக்கு நீர் பூங்காக்களிலும் இந்த அமீபா தொற்று ஏற்படும் என சிடிசி கூறுகிறது.

பொதுவாக அமெரிக்காவில் ஆண்டுக்கு 10 பேருக்கும் குறைவானவர்களே இந்த அமீபா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர் என்றும், பாதிக்கப்பட்டவர்களில் ���ெரும்பாலோனோர் இறந்துவிடுகின்றனர் என்றும் அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மையம் (சிடிசி) கூறுகிறது.

அறிகுறிகள் என்ன?

மூளையைத் தின்னும் அமீபாவின் ஆரம்ப அறிகுறிகளில் தலைவலி, காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை ஆகும்.

அமீபா வேகமாக வளரக்கூடியது என்பதால், இந்த அறிகுறி தொடங்கிய 1 முதல் 18 நாட்களுக்குள் பாதிக்கப்பட்டவர்கள் இறந்துவிடுகின்றனர். பொதுவாகத் தொற்று ஏற்பட்ட 5 நாட்களுக்குப் பிறகு கோமா மற்றும் மரணத்திற்கு வழிவகுக்கிறது என CDC கூறுகிறது.

உடலில் இந்த அமீபா வளரும்போது, கழுத்து இறுக்கமாவது, சுற்றுப்புறங்களில் கவனமின்மை, சமநிலை இழப்பு மற்றும் மாயத்தோற்றங்கள் ஆகியவையும் ஏற்படும் எனவும் அது தெரிவித்துள்ளது.

இந்த தொற்று மிகவும் அரிதானது என்பதால், சோதனை மூலம் இதனைக் கண்டறிவது கடினமான ஒன்றாக உள்ளது. பாதிக்கப்பட்ட நபர் இறந்தபிறகே, இந்த தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்படும் சூழல் உள்ளது.

மூளையை தின்னும் அமீபா

பட மூலாதாரம், Getty Images

ஏன் இந்தத் தொற்று சில இடங்களில் மட்டும் பரவுகிறது?

ஏரி, நதி மற்றும் நீச்சல் குளங்களில் உள்ள தண்ணீர் கோடைக் காலத்தில் நீண்ட நாட்கள் அதிக வெப்பநிலையில் இருக்கும்போது, இந்த அமீபா தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

நீர் நீண்ட காலமாக அதிக வெப்பநிலையில் இருப்பது, குறைந்த நீர்மட்டம் போன்றவை இந்த அமீபா தொற்றுக்கு அடிப்படைக் காரணம் என சிடிசி கூறுகிறது.

’’இதுபோன்ற காலங்களில் ஏரி, நதி மற்றும் நீரில் நீச்சல் குளங்களில் குதித்தோ அல்லது டைவிங் செய்தோ குளிக்கும்போது மூக்கு வழியாக மனிதர்களின் உடலுக்குள் இந்த அமீபா செல்கின்றது’’ என்கிறார் மருத்துவர் அப்துல் ராவுப்.

லோஅமீபா உள்ள தண்ணீரைக் குடிப்ப தொற்று ஏற்படாது எனவும், வேறு ஒருவரிடம் இருந்தோ இந்தத் தொற்று பரவாது எனவும் சிடிசி தெரிவித்துள்ளது.

எப்படி பாதுகாத்துக் கொள்வது?

மூளையைத் தின்னும் அமீபா

பட மூலாதாரம், Getty Images

குளத்திலும், நதியிலும் குளிக்க வேண்டும் எனப் பெரும்பாலோர் விரும்புவார்கள். சிலர் நீச்சல் குளத்திற்குச் செல்ல நினைப்பார்கள். இதுபோன்ற சூழ்நிலைகளில் என்ன செய்வது?

இந்த அமீபா தொற்று பாதிக்கப்படாமல் தற்காத்துக் கொள்ள சில வழிமுறைகளை மருத்துவர் அப்துல ராவுத் அறிவுறுத்துகிறார். அவை,

  • நன்கு பராமரிக்கப்படாத, தண்ணீர் குறைவாக உள்ள நீச்சல் குளங்களுக்குச் செல்லக்கூடாது.
  • குளோரின் எனும் கிருமி நாசினி மூலம் நீச்சல் குளங்கள் முறையாகச் சுத்தப்படுத்தப்படுகிறதா என்பதைச் சரிபார்த்துச் செல்ல வேண்டும்.
  • மாசடைந்த குளம் மற்றும் ஏரிகளில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
  • எங்கெல்லாம் சாத்தியம் உள்ளதோ அங்கெல்லாம் குளங்களில் குளோரின் கலக்க வேண்டும்.
  • இந்த அமீபா மூக்கு மூலமே உடலுக்கு செல்கின்றது என்பதால் குதித்து மூழ்குவது, டைவ் அடிப்பது போன்றவற்றைச் செய்யாமல் தலையை மேலே வைத்துக்கொள்ள வேண்டும்.

கேரள அரசு கூறுவது என்ன?

மூளையைத் தின்னும் அமீபாவால் ஏற்பட்ட மரணங்கள் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் வெள்ளிக்கிழமையன்று நடந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும், சில அறிவுறுத்தல்களையும் முதல்வர் பினராயி விஜயன் வழங்கியுள்ளார்.

  • தூய்மையற்ற நீர்நிலைகளில் குளிக்க வேண்டாம் எனவும், நீச்சல் குளங்களை நன்கு குளோரினேட் செய்ய வேண்டும் எனவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
  • இந்தத் தொற்றுக்கு குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்பதால் நீர்நிலைகளுக்குச் செல்லும்போது, தொற்று ஏற்படாமல் இருக்க 'ஸ்விம்மிங் நோஸ் கிளிப்'-ஐ பயன்��டுத்த வேண்டும்.
  • நீர்நிலைகளைச் சுத்தமாக வைத்திருக்க அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் எனவும் முதல்வர் கூறியுள்ளார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)