கடவுளை நம்பாதவர்கள் பிரார்த்தனை செய்தால் என்ன கிடைக்கும்? விஞ்ஞானிகள் கூறுவது என்ன?

பிரார்த்தனை செய்யும் போது அவரது மூளைக்குள் என்ன நடக்கிறது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒருவர் பிரார்த்தனை செய்யும் போது அவரது மூளைக்குள் என்ன நடக்கிறது என்பது குறித்து பல ஆய்வுகள் நடத்தப்பட்டன.
  • எழுதியவர், ரேடாக்சியான்
  • பதவி, பிபிசி நியூஸ் முண்டோ

நார்னியாவின் இலக்கியப் பிரபஞ்சத்தை உருவாக்கிய, புகழ்பெற்ற பிரிட்டிஷ் எழுத்தாளர் சி.எஸ். லூயி, 'பிரார்த்தனை என்றால் என்ன’ என்பதை நன்கு விவரிக்கும் ஒரு சொற்றொடரையும் உருவாக்கியதாக சொல்லப்படுகிறது.

“எனக்கு வேறு வழி இல்லாததால் நான் பிரார்த்தனை செய்கிறேன். என் இதயம் நொறுங்கியிருப்பதால், நான் பிரார்த்தனை செய்கிறேன். நான் விழித்திருந்தாலும் அல்லது தூங்கினாலும், அவ்வாறு செய்ய வேண்டிய அவசிய உணர்வு என்னிடமிருந்து பாய்வதால் நான் பிரார்த்தனை செய்கிறேன். அது (பிரார்த்தனை) கடவுளை எந்த வகையிலும் மாற்றாது. ஆனால் என்னை மாற்றுகிறது," என்று அவர் ஒரு முறை கூறினார்.

பிபிசியின் அறிவியல் நிகழ்ச்சியான Crowdscience-இன் ரசிகையான ஹிலரி, பிரார்த்தனை செய்யும்போதும் நடைப்பயிற்சிக்குச் செல்லும்போதும் இதேபோன்ற ஒன்றை உணர்வதாகக் கூறுகிறார். "நான் பிரார்த்தனை செய்யும்போது, கடவுளுடன் ஒரு தொடர்பை உணர்கிறேன். ஆனால் பிரார்த்தனையில் பல வகைகள் உள்ளன. அது ஒரு கணத்தின் அமைதியில் நிகழலாம், அது வார்த்தைகளற்றதாக இருக்கலாம். சில சமயங்களில் அது தேவாலயத்தில் ஒரு குழு பிரார்த்தனையாக இருக்கலாம்,” என்று அவர் தெரிவித்தார்.

ஆனால் சமீபகாலமாக அவர் பிரார்த்தனை செய்ய உட்காரும்போது ஒரு கேள்வி அவர் மனதில் எழுகிறது: “பிரார்த்தனை, மூளை மற்றும் மனநலம் மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது?”

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய  இங்கே கிளிக் செய்யவும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பிரார்த்தனை செய்பவர்களின் மூளையில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள நிபுணர்களுடன் ஆலோசனை செய்யும் பணியை க்ரவுட்சயின்ஸ் குழு மேற்கொண்டது. இந்த வழிமுறை மத நம்பிக்கைகளுடன் தொடர்புடையதா அல்லது ஒருவேளை அது தியானம் செய்பவர்களிடமோ அல்லது ஆக்கப்பூர்வமான வாழ்க்கையை நடத்துபவர்களிடமோ உள்ளதா என்பதை கண்டறியவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

பிரார்த்தனையின் போது மூளையில் நடப்பது என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒரு செயலில் ஆழ்ந்த கவனம் செலுத்தும்போது மூளையின் முன் மடல் செயல்பட முனைகிறது

பிரார்த்தனையின் போது மூளையில் நடப்பது என்ன?

நாம் பிரார்த்தனை செய்யத் தொடங்கும்போது மூளையின் முன்மடல் (ஃப்ரண்டல் லோப்) ஒளிர்கிறது. ஆனால் ஆழ்ந்த பிரார்த்தனையில் அதன் செயல்பாடு மீண்டும் குறைகிறது.

நரம்பியல் விஞ்ஞானி ஆண்ட்ரூ நியூபெர்க், அமெரிக்காவில் உள்ள தாமஸ் ஜெஃபர்சன் பல்கலைக்கழகத்தில் உள்ள மார்கஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டகிரேடிவ் மெடிசனின் ஆராய்ச்சி இயக்குநர் ஆவார். தனது நோயாளிகளின் மனநலனில், பிரார்த்தனை மற்றும் பிற மத நடைமுறைகளின் விளைவுகளை ஆய்வு செய்வதில் அவர் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார்.

பிரார்த்தனை செய்யும் நபரின் மூளையின் பகுதிகள் செயல்பட துவங்குவதை எம்ஆர்ஐ மூலம் அவரது குழுவால் பார்க்க முடிந்தது.

"பிரார்த்தனை செய்வதற்கான ஒரு பொதுவான வழி ஒரு நபர் ஒரு குறிப்பிட்ட ஜெப வரிகளை மீண்டும் மீண்டும் சொல்வதாகும். மேலும் இதுபோன்ற செயலை ஒருவர் மேற்கொள்ளும்போது மூளையின் முன்பகுதி அதாவது ஃப்ரண்டல் லோப் செயல்பட ஆரம்பிக்கிறது," என்று ஆண்ட்ரூ நியூபெர்க் பிபிசியிடம் விளக்கினார்.

இது ஆச்சரியமான விஷயம் அல்ல. ஏனென்றால் நாம் ஒரு செயலில் ஆழ்ந்த கவனம் செலுத்தும்போது மூளையின் முன் மடல் செயல்பட முனைகிறது. மக்கள் 'ஆழமான பிரார்த்தனை' என்று உணரும்போது என்ன நடக்கிறது என்பதே நியூபெர்க்கை ஆச்சரியப்படுத்தும் விஷயம்.

"பிரார்த்தனையின் ஆழம் அதிகரிப்பதாக ஒரு நபர் உணரும்போது முன் மடலின் செயல்பாடு உண்மையில் குறைகிறது. இந்த அனுபவத்தை தாங்கள் உருவாக்கவில்லை, வெளியில் இருந்து இந்த அனுபவம் தங்களுக்குள் நிகழ்கிறது என்று தனிநபர்கள் உணரும்போது இது ஏற்படுகிறது,” என்று ஆராய்ச்சியாளர் கூறினார்.

ஆழ்ந்த பிரார்த்தனை, மூளையின் பின்பகுதியில் உள்ள பரைட்டல் லோபில் செயல்பாடு குறைவதற்கு வழிவகுக்கிறது என்று நியூபெர்க் கண்டறிந்துள்ளார். இந்த பகுதி உடலில் இருந்து உணர்ச்சித் தகவலைப் பெறுகிறது மற்றும் அதன் காட்சி பிரதிநிதித்துவத்தை உருவாக்குகிறது.

பரைட்டல் லோபில் செயல்பாடு குறைவது, ஆழ்ந்த பிரார்த்தனை செய்பவர்களால் வெளிப்படுத்தப்படும் 'ஆழ்நிலை உணர்வுகளை’ விளக்குகிறது என்கிறார் நியூபெர்க்.

"இந்த பகுதியில் செயல்பாடு குறையும்போது, நாம் தனிப்பட்ட சுய உணர்வை இழக்கிறோம். மேலும் அந்த ஒற்றுமை, இணைப்பு உணர்வைப் பெறுகிறோம்" என்று அவர் குறிப்பிட்டார்.

'மத நம்பிக்கை'

'கடவுளுடனான உறவு'

பட மூலாதாரம், Getty Images

பிரார்த்தனை செய்யும்போது தங்களைத் தாண்டிய ஏதோ ஒன்றின் அங்கமாக தாங்கள் இருப்பதாக பலரும் உணர்கிறார்கள். தியானம் செய்பவர்களும் இதையே உணர்கின்றனர்.

ஹிலரிக்கு நியூபெர்க் அளிக்கும் விளக்கம் அர்த்தமுள்ளதாக இருக்கிறது. தான் பிரார்த்தனை செய்யும்போது என்ன உணர்வுகள் ஏற்படுகின்றன என்பதுடன் அவர் அதை தொடர்புபடுத்துகிறார்.

”நான் ஆழமான பிரார்த்தனையில் இருக்கும்போது, தனிப்பட்ட சுய உணர்வை இழப்பதுஅல்லது அந்த உணர்வை, கடவுளுடனான தொடர்பு என்று நான் கருதுகிறேன்,” என்று அவர் விளக்கினார்.

ஆனால் பிரார்த்தனை என்பது ஒரு தனிப்பட்ட அனுபவம். ஹிலரிக்கு அது ஏதேனும் அமைதியான இடத்தில் உட்காரும்போது அல்லது இயற்கை சூழலில் நடக்கும்போது அது ஏற்படுமானால், மற்றவர்களுக்கு அது கடவுளுடன் உரத்த உரையாடலாக இருக்கலாம். முழுமையான மௌனம் அல்லது ஜெப வரிகளை மீண்டும் மீண்டும் சொல்வதால் இது நிகழலாம்.

எந்த மத அடிப்படையும் இல்லாமல் செய்யப்படும் பிரார்த்தனை போன்ற நடைமுறைகள், ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்கள் உணரும் அதே விளைவுகளை ஏற்படுத்த முடியுமா?

நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்களுடன் பணிபுரிந்துள்ள, தியானம் மற்றும் ஒருமுகப்படுத்தல் நடைமுறைகளில் நிபுணரான டெஸ்ஸா வாட், ’நிகழ்காலம் மற்றும் நாம் அனுபவிக்கும் உணர்வுகளில் கவனம் செலுத்துவதன் மூலம் இந்த நிலையை அடைய முடியும்’ என்று குறிப்பிடுகிறார்.

'கடவுளுடனான உறவு'

பட மூலாதாரம், Getty Images

"பிரார்த்தனை மற்றும் ஒருமுகப்படுத்தல் ஆகிய இரண்டும் ஒரு நபரை அமைதிப்படுத்த உதவுகின்றன என்று நான் நினைக்கிறேன். இதன் காரணமாக அவர்களுக்கு தங்களுக்கென அதிக நேரம் கிடைக்கும் மற்றும் பாராசிம்பேடிக் நரம்பு மண்டலத்தையும் அவர்கள் செயல்படுத்துகிறார்கள்" என்று வாட் விளக்குகிறார்.

நரம்பு மண்டலம் இரண்டு தனித்துவமான தன்னியக்க அமைப்புகளால் ஆனது. அவை உடலின் பெரும்பாலான தானியங்கி பதில்வினைகளை கட்டுப்படுத்துகின்றன.

ஓர் அச்சுறுத்தலை எதிர்கொள்ள உடலில் இருந்து விரைவான எதிர்வினைகள் தேவைப்படுகின்றன. அதை ஓர் அமைப்பு கட்டுப்படுத்துகிறது. மறுபுறம், உடலின் 'ஓய்வு மற்றும் செரிமானம்' தொடர்பான பணிகள் பாராசிம்பேடிக் அமைப்பால் மேற்கொள்ளப்படுகின்றன.

"இதன் பொருள் என்னவென்றால், ஆழ்ந்து பயிற்சி செய்வதன் மூலம் பதில் வினைகளை அமைதிப்படுத்த நீங்கள் கற்றுக்கொள்கிறீர்கள். உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் மிகவும் திறமையுள்ளவர்களாக ஆகிறீர்கள்" என்று வாட் தெரிவித்தார்.

'கடவுளுடனான உறவு'

பட மூலாதாரம், Getty Images

'கடவுளுடனான உறவு'

நமது பராமரிப்பாளர்களுடனான உறவு, கடவுளுடன் நாம் வைத்திருக்கும் (அல்லது இல்லாத) உறவுகள் உட்பட பிற உறவுகளை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சில வல்லுநர்கள் கூறுகின்றனர்.

வலுவான மதச் சூழலில் வளரும் சிலருக்கு கடவுளுடனான உறவு, அவர்களைச் சுற்றியுள்ள மற்றவர்களுடன் அவர்கள் வைத்திருக்கும் உணர்ச்சிபூர்வமான உறவுகளைப் பிரதிபலிக்கும் என்று கலிஃபோர்னியாவில் உள்ள வெஸ்ட்மாண்ட் கல்லூரியின் சமூகவியலாளர் பிளேக் விக்டர் கென்ட் பிபிசியிடம் கூறினார்.

"பிரார்த்தனை பலனளிக்கும். ஆனால் நீங்கள் வெவ்வேறு காரணிகளை குறிப்பாக நீங்கள் உணர்ச்சிப்பூர்வமாக கடவுளுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறீர்கள் போன்றவற்றை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்." என்கிறார்.

பிளேக் முன்பு ஒரு போதகராக இருந்தார். மக்களின் வாழ்க்கையில் மதம் ஏற்படுத்தும் தாக்கத்தை இப்போது அவர் ஆய்வு செய்து வருகிறார்.

"மற்றவர்களை நம்புவதில் சிரமம் உள்ள சூழலில் இருந்து நீங்கள் வந்திருந்தால் பிரார்த்தனை செய்வது உங்களுக்கு கடினமாக இருக்கும்," என்று அவர் குறிப்பிட்டார்.

பிளேக் என்ன சொல்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள, உளவியலில் உள்ள இணைப்புக் கோட்பாட்டைப் பற்றி நாம் பேச வேண்டும்: மனிதர்கள் தங்கள் ஆரம்பகால பராமரிப்பாளர்களுடன் (பெற்றோர் உள்பட) வைத்திருக்கும் உறவு எதிர்காலத்தில் அவர்கள் கொண்டிருக்கும் உறவுகளின் வகையை வரையறுக்கிறது.

நீங்கள் ஒரு குழந்தையாக இருக்கும் போது நம்பகமான, நல்ல கவனிப்பை அளிக்கும் பராமரிப்பாளர் இருந்திருந்தால், நீங்கள் வயது வந்தவராக ஆகும்போது 'உறுதியான' உறவுப் பிணைப்புகளை உருவாக்க வாய்ப்புள்ளது. அ��ே நேரத்தில் சீரற்ற முறையிலான பராமரிப்பாளர் இருந்திருந்தால், நீங்கள் வளரும்போது நம்பிக்கையை வளர்ப்பது கடினம்.

நம்பிக்கை என்பது நிச்சயமாக மதநம்பிக்கைக்கு முக்கியமானது. எனவே கடவுளுடன் நெருக்கமான உறவை உருவாக்குவது சிலருக்கு மிகவும் கடினமாக இருக்கும். மேலும் அவர்கள் மிகவும் அதிகமான மதச்சூழலில் வாழ்ந்திருந்தால், அதை வளர்த்துக் கொள்ள முடியாத குற்ற உணர்ச்சியை அவர்கள் உணரலாம்.

'கடவுளுடனான உறவு'

பட மூலாதாரம், Getty Images

"என்னைப் பொறுத்தவரை பிரார்த்தனை என்பது வெறுமையாகவும், ஆபத்தானதாகவும், நிச்சயமற்றதாகவும் இருப்பதாக உணர்கிறேன்" என்று பிளேக் கூறுகிறார்.

பிளேக் தன்னை 'கவலையுடன் கூடிய உறவுகளை’ ஏற்படுத்திக்கொண்ட நபராக விவரிக்கிறார். தான் பிரார்த்தனை செய்யும் போது ஏதோ சரியாகச் செய்யவில்லை என்ற உணர்வு போதகராக இருந்தபோது அவருக்கு ஏற்பட்டது.

"மதச்சபைகளில் உள்ள பலருக்கு இது நடக்கும் என்று நான் நினைக்கிறேன். அது அவர்கள் ஏதோ தவறு செய்கிறார்கள் அல்லது கடவுள் அவர்கள் மீது வருத்தமாக இருப்பதாக உணர வைக்கிறது. அவர்கள் பிரார்த்தனை செய்யும்போது அவர்களைச் சுற்றி உள்ளவர்களுக்கு கிடைக்கும் பலன்கள் தங்களுக்கு கிடைக்கவில்லை என்று அவர்கள் வருத்தமடைகிறார்கள்.” என்கிறார் பிளேக்.

கடவுளுடன் உறுதியற்ற உறவை வைத்திருப்பது தீங்கு விளைவிக்கும் என்றாலும் அந்த பாதுகாப்பின்மை எங்கிருந்து வருகிறது என்பதைப் புரிந்துகொள்வது அதை கடந்துவர உதவும் என்று பிளேக் கூறுகிறார்.

கூடுதலாக உளவியல் சிகிச்சை மூலம் உறவுகளின் நிலையை மாற்றியமைக்க முடியும். இது ஒட்டுமொத்த மன ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

'படைப்பாற்றல், பலருக்கு ஆழ்ந்த ஆன்மீக பயிற்சியாக இருக்கலாம்'

படைப்பாற்றல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இசையானது மூளையின் முன் மடலில் செயல்பாட்டைக் குறைக்கிறது என்பதை சில ஆய்வுகள் காட்டுகின்றன.

இசையானது மூளையின் முன் மடலில் செயல்பாட்டைக் குறைக்கிறது என்பதை சில ஆய்வுகள் காட்டுகின்றன.

ஆழமான பிரார்த்தனையைப் போலவே நம்பமுடியாத அளவிற்கு ஒத்ததாக இருக்கும் வேறு வகையான தருணங்கள் இருப்பதை எம்ஆர்ஐ ஸ்கேன்களில் உள்ள மூளையின் படங்கள் வெளிப்படுத்தியதாக நரம்பியல் விஞ்ஞானி ஆண்ட்ரூ நியூபெர்க் பிபிசியிடம் கூறினார்.

"மிகவும் பயிற்சி பெற்ற இசைக்கலைஞர்கள் இசையின் ஆழத்திற்குள் செல்லும்போது தங்கள் மூளையின் முன் மடல்களின் செயல்பாட்டை மெதுவாக்குகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டும் மிகவும் சுவாரசியமான ஆய்வுகள் உள்ளன. மேலும் சிலர் கடவுள் தன்னிடம் வருகிறார் என்று நினைக்கும் அதே வழியில் இசை அவர்களிடம் வருகிறது,” என்றார் அவர்.

"தெய்வ நம்பிக்கை உள்ள வாழ்க்கை இருந்தாலும் இல்லாவிட்டாலும், படைப்பாற்றல் என்பது பலருக்கு ஆழ்ந்த ஆன்மீக பயிற்சியாக இருக்கலாம். மேலும் அவை தொடர்புடையவை என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் மூளையில் மதத்திற்காக மட்டுமே நியமிக்கப்பட்ட பகுதி இல்லை.” என்றும் அவர் கூறுகிறார்.

கடவுளுடன் பேசுவது அல்லது பீத்தோவனின் ஒன்பதாவது சிம்ஃபனியைக் கேட்பது போன்ற ஆழ்நிலை அனுபவங்கள் மூலம் நமது மூளையின் உணர்ச்சி மையங்கள் தூண்டப்படுகின்றன என்று நியூபெர்க் விளக்குகிறார்.

"மத மற்றும் ஆன்மீக நடைமுறைகளுடன் இது உண்மை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் காலம் காலமாக அவற்றை பின்பற்றுவதையும், அரசியல் மாற்றங்கள் அல்லது கலாச்சார மரபுகளுக்கு அப்பால் அவை எவ்வாறு தொடர்கின்றன என்பதையும் நீங்கள் கருத்தில் கொண்டால் இதை புரிந்துகொள்ள முடியும்.”

தனது அனுபவங்களையும், அவை ஒன்றுக்கொன்று எவ்வாறு தொடர்புள்ளதாக இருக்கிறது என்பதையும் நிபுணர்களின் கருத்துக்களைக் கேட்டபின் தன்னால் நன்றாக புரிந்துகொள்ள முடிகிறது என்று ஹிலரி பிபிசியிடம் தெரிவித்தார்.

"இந்த வெவ்வேறு செயல்பாடுகள் மூலம் எனக்கு ஒரே மாதிரியான ஆனால் வித்தியாசமான அனுபவம் இருப்பதை என்னால் அடையாளம் காண முடிகிறது. நான் பிரார்த்தனை செய்யும்போது எனக்கு கடவுளுடன் தொடர்பு இருக்கிறது. ஆனால் நான் பாடுகையில் அதே போன்ற உணர்வை அனுபவிக்கும்போது அது இசையுடனான தொடர்பு என்பதை புரிந்துகொண்டேன்.”

"நான் கடவுளிடம் பேசும்போதும், குழுவாகச் சேர்ந்து பாடும்போதும் அது ஒரு ஆன்மீக உணர்வாக இருக்கிறது என்று என்னால் சொல்ல முடியும்," என்கிறார் ஹிலரி.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)