மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா மூலம் கள்ளச் சாராயத்தை முழுமுற்றாக ஒழிக்க முடியுமா? சவால்கள் என்ன?

மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா: வெறும் கண்துடைப்பு என அரசியல் கட்சிகள் விமர்சிப்பது ஏன்?
படக்குறிப்பு, கோப்புப் படம்
  • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
  • பதவி, பிபிசி தமிழ்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிர்பலியை அடுத்து, அதைத் தடுக்கும் வகையில் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு எதிரான தண்டனைகளைக் கடுமையாக்கும் வகையில் சட்டத்திருத்த மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைக்கு, 'இது தாமதமான நடவடிக்கை, கண் துடைப்பு' எனும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. சட்டத்தைக் கடுமையாக்குவதன் மூலம் இத்தகைய குற்றங்களைத் தடுக்க முடியுமா? விமர்சனங்களைச் சமாளிக்கும் விதமாகத்தான் இந்த நடவடிக்கையை அரசு எடுத்துள்ளதா?

கள்ளக்குறிச்சியில் சமீபத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாரயத்தை உட்கொண்டதால் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கள்ளச்சாராயத்தைக் குடித்த சிலர் நிகழ்விடத்திலேயே துடிதுடித்து இறந்த நிலையில், பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தனர். கடந்த ஆண்டும் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் இதேபோன்று மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தைக் குடித்து சுமார் 14 பேர் உயிரிழந்தனர்.

இத்தகைய தொடர் சம்பவங்களால் கள்ளச்சாராய ஒழிப்பு, மெத்தனால் தயாரிப்பு மற்றும் அதன் விநியோகத்தைக் கண்காணித்தல் குறித்த கோரிக்கைகள் எழுந்தன.

வாட்ஸ் ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா நிறைவேற்றம்

மேலும், அதிமுக, பாமக போன்ற எதிர்க்கட்சிகள் தமிழ்நாடு அரசை விமர்சித்தன. சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதங்களின் போது அதிமுக வெளிநடப்பும் செய்தது.

அதேவேளை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இடதுசாரிக் கட்சிகள் போன்ற திமுக-வின் கூட்டணிக் கட்சிகளே அரசுக்கு கண்டனத்தைப் பதிவு செய்தன. கள்ளச்சாராய வணிகத்தின் பின்னால் உள்ள முக்கியப் புள்ளிகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது குறித்தும் கூட்டணிக் கட்சிகள் கேள்விகளை எழுப்பின.

இந்நிலையில், கள்ளச்சாராயம், போதைப் பொருட்கள் விற்பனையைத் தடுக்கும் வகையிலும், அவற்றை விற்பனை செய்பவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கும் வகையிலும், 'தமிழ்நாடு மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா 2024' சனிக்கிழமை (ஜூன் 29) தமிழக சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதாவை மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் முத்துசாமி தாக்கல் செய்தார். பின்னர், குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது.

என்னென்ன திருத்தங்கள்?

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள்
படக்குறிப்பு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிர் பிழைத்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்

  • கள்ளச்சாராயத்தைத் தயாரித்து விற்பவர்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம் மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • கள்ளச்சாராய குற்றங்களுக்குப் பயன்படுத்தப்படும் அசையும் சொ��்துகள் பறிமுதல் செய்யப்படும்.
  • பிணைமுறிவை நிறைவேற்ற நிர்வாகத் துறையின் நடுவருக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் 1937இல் இந்தத் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

கள்ளச்சாராயத்தால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டு, அதனால் அரசுக்கு 'அவப்பெயர்' ஏற்பட்ட பின்னரே இந்த சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாக, எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், சட்டத்தைக் கடுமையாக்குவது இத்தகைய குற்றங்களைக் குறைப்பதில் பெரிய பலனளிக்காது எனக் கூறும் சட்ட நிபுணர்கள் சமூக ரீதியான மாற்றங்களே இதில் முக்கியம் என்கின்றனர்.

'பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது'

எடப்பாடி பழனிசாமி

பட மூலாதாரம், X/@EPSTAMILNADU

படக்குறிப்பு, கள்ளக்குறிச்சி விவகாரத்தையொட்டி, சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த அதிமுகவினர்.

“இது வெறும் கண் துடைப்பு நடவடிக்கை, இதுவொரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது” என்கிறார், அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் கோவை சத்யன்.

அவர் பேசுகையில், “கள்ளச்சாராயத்தைத் தடுக்க ஏற்கெனவே சட்டங்கள் இருந்தும் இந்தக் கொடூரம் நிகழ்ந்திருக்கிறது. இப்போது தண்டனையைக் கடுமையாக்குவது நல்ல நடவடிக்கையாக இருந்தாலும், இதன் கீழ் எத்தனை பேர் தண்டனை பெறுவார்கள்?” எனக் கேள்வி எழுப்புகிறார்.

மெத்தனாலை தயாரிப்பதற்குத் தேவையான மூலப்பொருட்கள் எங்கிருந்து வருகின்றன, அதைத் தடுப்பது எப்படி, மெத்தனால் தயாரிப்பவர்களுக்கு என்ன தண்டனை என்பதற்கான வலுவான பிரிவு இந்த மசோதாவில் இல்லை என, கோவை சத்யன் கூறுகிறார்.

மேலும், எத்தனை பேர் மீது வழக்குப்பதிவு செய்தாலும் கள்ளச்சாராய விவகாரத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை கிடைப்பது மிகவும் அரிதாகவே உள்ளது எனத் தெரிவித்தார்.

தாமதமான நடவடிக்கையா?

மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம், FACEBOOK

படக்குறிப்பு, கள்ளச்சாராய ஒழிப்பை சமூக இயக்கமாக முன்னெடுக்க வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்தார்.

கள்ளச்சாராயத்தைத் தடுப்பதில் தமிழ்நாடு அரசு மிகத் தாமதமாக விழித்துக் கொண்டதாக எழும் விமர்சனங்கள் குறித்துப் பேசிய திமுக செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், “இதுதொடர்பாக ஏற்கெனவே உள்ள சட்டங்களில் உள்ள தண்டனைகள் போதுமானவையாக இல்லை. 1937இல் உள்ள சட்டம் அது. 2002ஆம் ஆண்டில் அதிமுக ஒரு சிறிய மாற்றத்தையே கொண்டு வந்தது. எனவேதான் இப்போது திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

குற்றங்கள் மிகக் கொடூரமாக மாறும்போது அதற்கேற்ப தண்டனைகளுடன் கூடிய திருத்தங்கள் தேவைப்படுகின்றன. அதைத்தான் அரசு செய்துள்ளது. அதை காலமும் குற்றத்தின் தாக்கமும்தான் முடிவு செய்கிறது,” என்றார்.

அதிமுக ஆட்சியில் இத்தகைய மரணங்கள் நிகழும்போது ஏன் நடவடிக்கையோ அல்லது சட்டத்தைக் கடுமையாக்கவோ இல்லை என கான்ஸ்டன்டைன் கேள்வியெழுப்புகிறார்.

தமிழ்நாட்டில் 11 ஆலைகள்தான் மெத்தனால் தயாரிப்பதாகக் கூறும் அவர், ஒவ்வொரு மாதமும் எத்தனை ஆயிரம் லிட்டர்கள் தயாரி��்கப்பட்டது என்பது குறித்து அந்த ஆலைகள் அறிக்கை வழங்க வேண்டும் என்று கூறுகிறார். அதில், மெத்தனாலை யாருக்கு சப்ளை செய்துள்ளனர், அந்த சப்ளையர்கள் எதற்காக அதைப் பயன்படுத்தியுள்ளனர், மெத்தனால் மீதம் உள்ளதா, தேவையில்லாமல் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பன போன்ற விவரங்கள் அடங்கியிருக்கும்.

“தமிழ்நாட்டிலிருந்து மெத்தனாலை பயன்படுத்தி கள்ளச்சாராயம் தயாரிக்கப்படவில்லை. இந்தச் சம்பவத்திலும் புதுச்சேரியிலிருந்துதான் வாங்கி வந்துள்ளனர்,” என்கிறார் அவர்.

இரு மாநிலங்களுக்கு இடையிலான மெத்தனால் நடமாட்டத்தைத் தடுப்பதில் மத்திய உள்துறை அமைச்சகம்தான் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

கள்ளச்சாராயத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இனி எங்காவது கள்ளச்சாராய உயிர்பலி நிகழுமானால் அதற்கு அந்த மாவட்ட காவல்துறை அதிகாரியும் எல்லைக்கு உட்பட்ட காவல்துறை அதிகாரியும்தான் பொறுப்பேற்க வேண்டும்,” எனத் தெரிவித்தார்.

போதைப்பொருள் நடமாட்டம் குறித்தும் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், அதுதொடர்பான குற்றங்களில் கைது செய்யப்பட்டவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன எனக் கூறினார். 18 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான 46 சொத்துகள் பறிமுதல் செய��யப்பட்டுள்ளன, வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார்.

இதுதொடர்பான விழிப்புணர்வுப் பிரசாரங்கள், குடிநோயாளிகளை மீட்பது ஆகியவற்றை ஓர் இயக்கமாக முன்னெடுக்க வேண்டும், அமைச்சர்கள் இத்தகைய பணிகளில் ஈடுபட வேண்டும், என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

கடும் சட்டத்தைவிட முக்கியமானது என்ன?

மெத்தனால்

பட மூலாதாரம், Getty Images

சட்டங்களைக் கடுமையாக்கினால் குற்றங்கள் குறையும் என்பதற்கு எவ்வித அறிவியல்பூர்வ ஆதாரங்களும் இல்லை என்கிறார், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வெற்றிச்செல்வன்.

“ஆனாலும், இந்த விஷயத்தில் அரசு ஒன்றும் செய்யவில்லை எனும் தோற்றம் இருக்கையில் இத்தகைய நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது. ஆனாலும், இதைவிட முக்கியமாக அரசு மதுபானங்களை விற்கும்போது அதைவிடுத்து ஏன் கள்ளச்சாராயத்தை நோக்கிச் செல்கிறார்கள் என்பதற்கான காரணங்களை அரசு ஆராய வேண்டும்,” எனக் கூறுகிறார் வழக்கறிஞர் வெற்றிச்செல்வன்.

மது அருந்துதல் என்பது தமிழ்நாட்டில் சமூக வழக்கமாக இருக்கும்போது, மதுபானங்களின் தரத்தைக் கண்காணிப்பதும் அவசியமாகிறது, என்கிறார் அவர்.

கள்ளக்குறிச்சி சம்பவத்தைத் தொடர்ந்து இத்தகைய சம்பவங்களால் உடல் உழைப்பு சார்ந்த தொழில்களில் ஈடுபடும், சமூகப் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களே அதிகம் பாதிக்கப்படுவதாகப் பரவலான கருத்து நிலவுகிறது.

உழைப்பின் களைப்பை நீக்க அவர்கள் தினமும் சந்தை விலையைவிட மலிவான கள்ளச்சாராயத்தை நோக்கிச் செல்வதாக உள்ளூரில் செயல்படும் சமூக ஆர்வலர்கள் பலர் கூறுகின்றனர்.

“அப்படியிருக்கும்போது, அந்தத் தொழிலாளர்கள் மீதான உழைப்புச் சுரண்டலை அரசு கண்டுகொண்டு, அதிலிருந்து அவர்களை வெளியே கொண்டு வரவேண்டும். அவர்களிடம் மதுவிலக்கு பிரசாரம் செய்தால் பலன் இருக்காது,” என்கிறார் வழக்கறிஞர் வெற்றிச்செல்வன்.

'இயக்கமாக முன்னெடுக்க வேண்டும்'

வழக்கறிஞர் வெற்றிச்செல்வன்
படக்குறிப்பு, வழக்கறிஞர் வெற்றிச்செல்வன்

திண்டிவனத்தைச் சேர்ந்த வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான பூபால் கூறுகையில், “இது தாமதமான நடவடிக்கைதான், இருந்தாலும் இப்போதாவது அரசு விழித்துக்கொண்டுள்ளது. எனினும், சட்டத்தை நிறைவேற்றினால் மட்டும் போதாது. அதை மக்களிடம் கொண்டு சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினால்தான் நீண்ட கால விளைவாக பலன் ஏற்படும்,” என்றார்.

கள்ளச்சாராய ஒழிப்பு நடவடிக்கையில் காவல்துறையின் பங்கு குறித்து பல கேள்விகளும் சந்தேகங்களும் எழுவதாகக் கூறும் பூபால், கள்ளச்சாராய ஒழிப்புக்காக ஒழுங்குபடுத்தப்பட்டு, அர்ப்பணிக்கப்பட்ட தனிப்பிரிவு அமைத்து இந்தச் சட்டத்தை நிறைவேற்றுவது, தொடர்ச்சியாகக் கண்காணிப்பது போன்ற நடவடிக்கைகளில் அரசு ஈடுபட வேண்டும் என வலியுறுத்துகிறார்.

அதுதவிர, பொதுநல அமைப்புகள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பிரதிநிதிகள், பெண்கள் அமைப்புகள், சுய உதவிக் குழுக்களை ஒருங்கிணைத்து, குழு ஏற்படுத்தி இயக்கமாக இதை முன்னெடுக்க வேண்டும் என பூபால் போன்ற சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

“மிக முக்கியமாக கிராமந்தோறும் இத்தகைய குழுக்களை அமைத்து கள்ளச்சாராய நடமாட்டம் குறித்துத் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்,” என்கிறார் அவர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)