நீட் : ஆயிரக்கணக்கான இந்திய மருத்துவ மாணவர்கள் வெளிநாடுகளை நாடுவது ஏன்?

நீட் பிரச்னை : ஆயிரக்கணக்கான இந்திய மருத்துவ மாணவர்கள் வெளிநாடுகளை நாடுவது ஏன்?

பட மூலாதாரம், GETTY IMAGES

  • எழுதியவர், ஜுகல் ஆர் புரோஹித்
  • பதவி, புது தில்லி, பிபிசி

"இந்த ஆண்டு மருத்துவ நுழைவுத் தேர்வில் நடந்தது போலவே மீண்டும் நடந்தால் பல இளைஞர்கள் மருத்துவர் ஆகும் ஆசையை கைவிடும் சூழலுக்கு தள்ளப்படுவர்."

ரஷ்யாவில் படிக்கும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவி சோயாமி லோககரேவுடன் வீடியோ அழைப்பில் பேசினேன். அவர் பயிலும் கல்வி நிறுவனமான `வடக்கு மாநில பல்கலைக்கழகம்’ ரஷ்யாவின் ஆர்க்டிக் பகுதியில் மாஸ்கோவிற்கு வடக்கே 1,000 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. வெளிநாட்டில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையை அவர் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

2022 ஆம் ஆண்டில் 7,50,365 மாணவர்கள் கல்விக்காக இந்தியாவை விட்டு வெளியேறி வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். முந்தைய ஆண்டை விட இது 69 சதவீதம் அதிகம் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த போக்கு குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோதி பிப்ரவரி 2022 இல், “குறிப்பாக மருத்துவ மாணவர்கள் படிப்பிற்காக சிறிய நாடுகளுக்குச் செல்கிறார்கள். அங்கு மொழிப் பிரச்னைகள் இருந்த போதிலும் அவர்கள் செல்கிறார்கள். இதனால் நம் நாடு வருமானத்தை இழந்து வருகிறது. கல்வித் துறையில் இந்தியாவில் தனியார் துறை பெரிய அளவில் களத்தில் இறங்கலாம். மாநிலங்கள் நல்ல கொள்கைகளை உருவாக்கி கல்லூரிகளுக்கு நிலம் வழங்கலாம்” என்றார்.

வாட்ஸ் ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

வெளிநாடுகளில் இந்திய மாணவர்கள் பெறும் மருத்துவக் கல்வியின் தரம் குறித்து கவலை தெரிவித்த இந்திய நாடாளுமன்றம் சமீபத்தில் மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தடுப்பதற்கான ஆலோசனைகளைக் கோரியது.

தேசிய கல்விக் கொள்கையின் (2020) ஒரு பகுதியாக இந்தியாவை உலகளாவிய கல்வி இடமாக மேம்படுத்த அதிகாரிகள் முயற்சித்து வரும் நிலையில் மாணவர்கள் வெளிநாடுகளுக்கு செல்வது அதிகரித்துள்ளது. மலிவு விலையில் உயர்தர கல்வியை வழங்குவது இந்த கொள்கையின் குறிக்கோள்களில் ஒன்றாகும்.

நீங்கள் ஏன் வெளிநாடு செல்ல விரும்பினீர்கள்? என்று நான் சோயாமியிடம் கேட்டேன்.

“எனது நீட் மதிப்பெண் அரசு கல்லூரிகளில் எனக்கு சீட் கிடைக்க வாய்பளிக்கவில்லை. எனவே நான் இந்தியாவில் தனியார் கல்லூரிகளைத் தேட வேண்டியிருந்தது. அப்போதுதான் நாங்கள் ஒரு தனியார் கல்லூரி அதிகாரியைச் சந்தித்தோம், அவர் எனக்கான மருத்துவப் படிப்பிற்கான சீட்டை முன்பதிவு செய்ய ரூ. 1.20 கோடி டெபாசிட் செய்யச் சொன்னார். அவர் எங்களிடம் கூடுதல் கட்டணங்கள் இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.”

"அந்த தொகை எங்களுக்கு மிகவும் அதிகமாக தெரிந்தது” என்று அவர் விவரித்தார்.

"எனவே, ஒப்பீட்டளவில் கட்டணம் குறைவாக இருப்பதால், வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை மேற்கொள்ள முடிவு செய்தேன்".

அவர் அப்பா போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிவதாகவும், அம்மா வீட்டைக் கவனித்துக் கொள்வதாகவும் சொன்னார்.

"தனியார் மருத்துவக் கல்லூரி 'லாபி'

நீட் பிரச்னை : ஆயிரக்கணக்கான இந்திய மருத்துவ மாணவர்கள் வெளிநாடுகளை நாடுவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் தனியார் மருத்துவக் கல்விக்கான மொத்தச் செலவு நான்கு மடங்காக அதிகரித்துள்ளது - 2008 இல் சுமார் ரூ. 30 லட்சமாக இருந்தது. இன்று ரூ. 1.20 கோடிக்கு மேல் தாண்டிவிட்டது. இந்தியாவில் உள்ள அனைத்து இடங்களிலும் தனியார் கல்லூரிகள் 48 சதவீத இடங்களைக் கொண்டுள்ளன. அரசுக் கல்லூரிகள் மீதமுள்ள இடங்களை வைத்துக்கொண்டு மானியக் கல்வியை வழங்கி, ரூ.2.5 லட்சம் வரை கட்டணமாக வசூலிக்கின்றன.

“இங்குள்ள தனியார் மருத்துவக் கல்லூரி `லாபி’ மிகவும் வலுவானது. தனியார் கல்லூரிகளில் ஒரே மாதிரியான கட்டணக் கட்டமைப்பை அமல்படுத்தவும், கட்டணத்தை உச்சவரம்புக்கு உட்படுத்தவும் நாங்கள் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளோம், ” என்று மருத்துவர் அவிரல் மாத்தூர் கூறினார். அவர் இந்திய ரெசிடென்ட் டாக்டர்கள் சங்கத்தின் (FORDA) தலைவராக உள்ளார்.

834 குடிமக்களுக்கு ஒரு மருத்துவர் இருப்பதாக இந்தியா கூறுகிறது, இது உலக சுகாதார மையம் நிர்ணயித்த தரமான 1:1000 ஐ விட சிறந்தது.

இருப்பினும், கடந்த ஆண்டு சுகாதார அமைச்சகத்தின் அறிக்கை நாட்டின் கிராமப்புற சுகாதார உள்கட்டமைப்பில் இடைவெளிகள் இருப்பதை வெளிப்படுத்தியது. மாவட்ட மற்றும் துணை மாவட்ட மருத்துவமனைகளில் நிபுணர்களுக்கான பற்றாக்குறை குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது.

தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி), தனியார் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களில் கட்டணக் கட்டமைப்பை மாற்ற வழிவகுக்க முடியும்.

தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் இந்தியாவின் சுகாதார அமைச்சகம் பிபிசியின் கேள்விகளுக்கு பதிலளிக்காததால், இதுகுறித்து தெளிவாகத் தெரியவில்லை.

மேலும் மருத்துவப் படிப்பிற்கான இடங்களுக்கான தேவைக்கும் சேர்க்கைக்கும் இடையே பொருந்தாத தன்மை உள்ளது. கடந்த ஆண்டு நீட் யுஜி (NEET UG) நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 11 இந்திய மாணவர்களுக்கு ஒரு இடம் என்ற கணக்கில் மட்டுமே இடஒதுக்கீடு இருந்தது.

நீட் பிரச்னை : ஆயிரக்கணக்கான இந்திய மருத்துவ மாணவர்கள் வெளிநாடுகளை நாடுவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

ஆசிரியர்களின் பற்றாக்குறை

“10 லட்சத்துக்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ் படிக்கும் ஆசையுள்ள மாணவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அங்கு மொத்த கட்டணம் ரூ. 1.5 கோடி வரை இருக்கும். அப்படி இல்லையெனில் குறைந்த கட்டணத்தில் சீனா, யுக்ரேன் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளில் தங்களுடைய மருத்துவக் கனவைத் தொடரலாம் என்ற முடிவெடுக்கின்றனர்” என்று இந்திய நாடாளுமன்றம் சமீபத்திய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மருத்துவர் துருவ் சௌஹான் டெல்லியில் உள்ள ஒரு பொது மருத்துவமனையில் பணிபுரிகிறார், "மாணவர்கள் மற்றும் மருத்துவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை" தீர்க்க உதவி செய்யும் ஆர்வலர் என்று தன்னை அறிமுகப்படுத்தி கொண்டார்.

ஒரு காலியான வார்டுக்குள் அமர்ந்து நம்முடன் பேசிய அவர், “வெளியூர் செல்லும் மாணவர்கள் நீட் தேர்வில் மோசமாக தேர்ச்சி பெறுபவர்கள் என்று பொதுவாக கருதப்படுகிறது. ஆனால் அவர்களில் பலர் நன்றாக மதிப்பெண் எடுத்தாலும் அரசுக் கல்லூரிகளில் சீட் கிடைக்கவில்லை. அ���னால், அந்த கல்லூரிகளில் வசதி படைத்தவர்கள் மட்டுமே சேர்கின்றனர். மீதமுள்ளவர்கள் வெளிநாடு செல்கின்றனர்” என்றார்.

அரசுக் கல்லூரிகளில் சேர்க்கையின் என்ணிக்கையை அதிகரிக்க அரசு முயற்சிக்கிறது.

பிப்ரவரி 2024 இல், அப்போதைய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, “இந்தியாவில் முன்பு 350 மருத்துவக் கல்லூரிகள் இருந்தது. இன்று 707 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. பத்து ஆண்டுகளில், அதை இரு மடங்காக உயர்த்தியுள்ளோம், தற்போது கூடுதல் மருத்துவக் கல்லூரிகள் தேவைப்படும் இடங்களில் பரிந்துரை செய்யும் குழு அமைக்கப்படும் என்று பிரதமர் மோதி கூறியுள்ளார்.” என்றார்.

மருத்துவக் கல்லூரிகளின் விரிவாக்கம் தொடரும் என்று அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ள நிலையில், சட்டவல்லுனர்கள் இந்த செயல்பாட்டின் தரம் குறித்து கவலைகளை எழுப்பியுள்ளனர்.

இந்தியாவின் சட்டவல்லுனர்கள் கூற்றுபடி சமீபத்திய ஆய்வில் கல்லூரிகளில் ஆசிரியர்களின் பற்றாக்குறை ஏற்படுவதற்கான ஆபத்தை அதிகரிப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். அவர்கள் 246 மருத்துவக் கல்லூரிகளில் சமீபத்தில் மேற்கோள்ளப்பட்ட ஆய்வை சுட்டிக்காட்டியுள்ளனர். அதன் படி, ஒரு கல்லூரியில் கூட போதிய விரிவுரையாளர் அல்லது சீனியர் ரெசிடண்ட்ஸ் ( senior residents) இல்லை என்று கூறுகின்றனர்.

சுகாதாரம் மற்றும் ஆராய்ச்சிக்கான செலவினங்களை அதிகரிக்க அரசாங்கத்திற்கு மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுக்கப்படுகிறது.

நீட் பிரச்னை : ஆயிரக்கணக்கான இந்திய மருத்துவ மாணவர்கள் வெளிநாடுகளை நாடுவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

"இடைவெளி நீடிப்பது உண்மை"

இந்தியாவின் தேசிய சுகாதாரக் கொள்கையானது, ‘2025-க்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவீதமாக அரசாங்கத்தின் சுகாதாரச் செலவை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அரசாங்கம் தனது இலக்கை நோக்கி படிப்படியாக நகர்வதாகக் கூறுகிறது.

இந்த ஆண்டு பிப்ரவரியில், ‘சுகாதாரம் மற்றும் ஆராய்ச்சிக்கான செலவினங்களுக்கான ஒதுக்கீடு உயர்த்தி இருப்பது போதுமானதாக இல்லை’ என்று மற்றொரு அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மதிப்பாய்வுகளுடன் உடன்படும் மருத்துவர் மாத்தூர் இடைவெளி நீடிப்பது உண்மை என்றார்.

“ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் அறிவிப்புக்குப் பிறகு நாங்கள் மிகவும் ஏமாற்றமடைந்து வருகிறோம். அரசாங்கம் அதிக வளங்களை கல்விக்கு ஒதுக்கினால் மட்டுமே நிலைமை மேம்படும்” என்றார்.

சொந்த நாட்டில் படிக்க முடியாமல் இந்திய மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு கரிமா பாஜ்பாய் சிறந்த உதாரணம். மூன்றாம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவி, தான் வசிக்கும்/படிக்கும் போரினால் பாதிக்கப்பட்ட யுக்ரேனில் உள்ள தனது குடியிருப்பில் இருந்து என்னிடம் பேசினார்.

“வான்வழி தாக்குதல், சைரன்கள் தொடர்ந்து ஒலிக்கும் சத்தம் கேட்கும் இரவுகளை கடக்கிறேன். மின்வெட்டு, தண்ணீர் தட்டுப்பாடும் உள்ளது. இந்த சூழ்நிலையில் படிப்பது மிகவும் கடினம்” என்று சொன்னார்.

நீட் பிரச்னை : ஆயிரக்கணக்கான இந்திய மருத்துவ மாணவர்கள் வெளிநாடுகளை நாடுவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் அரசுக் கல்லூரியில் சேர்வதற்குத் த���வையான நீட் மதிப்பெண் பெறத் தவறியதால், குறைந்த கட்டணத்தில் தனியார் கல்லூரியைக் கண்டுபிடிக்க முடியாமல் கரிமா 2021-ல் யுக்ரேனுக்குப் புறப்பட்டார்.

“இங்கு படிப்பதும் அவ்வளவு மலிவானது அல்ல; உங்களுக்கு சுமார் ரூ. 50 லட்சம் வரைத் தேவைப்படும். ஆனால் இது இந்தியாவில் உள்ள தனியார் கல்லூரிகளை விட மலிவானது. என் பெற்றோர் எனக்காக நிறைய தியாகம் செய்கிறார்கள். எனக்கு இது வருத்தமளிக்கிறது. ஆனால் என்னால் முடிந்தவரை அதனை ஈடுசெய்ய முயற்சி செய்கிறேன்”என்று அவர் கூறினார்.

அத்தகைய மாணவர்கள் வெளிநாட்டில் படிப்பு முடித்துவிட்டு, இந்தியாவில் பயிற்சி செய்ய விரும்பினால், அவர்கள் அரசாங்கத்தின் வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளுக்கான தேர்வில் (FMGE) தேர்ச்சி பெற வேண்டும்.

சமீபத்தில் சீனாவில் எம்பிபிஎஸ் முடித்த முஸாமிலை டெல்லியில் சந்தித்தேன்.

காஷ்மீரில் வசிக்கும் முஸாமில், அவர் FMGE தேர்வுக்கு தயாராகி வருகிறார், மேலும் எப்போதும் ஒரு கவலையான மனநிலையில் அவர் இருக்கிறார்.

கடந்த ஆண்டு, FMGE தேர்வில் 61,616 பேரில் 10,261 பேர் மட்டுமே தேர்ச்சி பெற முடிந்தது. (16.65 சதவீதம்)

பலர் மற்றொரு பிரச்னையை சுட்டிக்காட்டினர் - இந்தியக் கல்லூரிகளில் பட்டம் பெற்ற பிறகு மருத்துவர்கள் வெளிநாடுகளுக்கு குடிபெயர்கின்றனர்.

தரவுகள் என்ன சொல்கின்றன?

நீட் பிரச்னை : ஆயிரக்கணக்கான இந்திய மருத்துவ மாணவர்கள் வெளிநாடுகளை நாடுவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

மருத்துவர் மாத்தூர் கூறுகையில், “எனது எம்பிபிஎஸ் பேட்சில் 180 மாணவர்கள் இருந்தனர். இன்று, அவர்களில் 40 பேர் அமெரிக்காவில் உள்ளனர். அது மிக மிக பெரிய எண்ணிக்கை. மேலும் இது காலப்போக்கில் அதிகரித்துள்ளது."

அமெரிக்க மருத்துவ சங்கம் (AMA) தரவுகள் கடந்த ஆண்டு வரை இந்தியாவில் இருந்து பட்டம் பெற்ற 49,961 மருத்துவர்கள் இப்போது அமெரிக்காவில் பணிபுரிவதாகக் காட்டுகின்றன.

இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச எண்ணிக்கை ஆகும். கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட மற்றொரு ஆய்வு, ``அமெரிக்காவில் உள்ள 2,62,000 புலம்பெயர்ந்த மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்களில், இந்தியர்கள் 21 சதவீத பங்கைக் கொண்ட மிகப்பெரிய குழுவாக உள்ளனர்’’ என்கிறது.

பிரிட்டனில் 2014 முதல் இந்தியாவைச் சேர்ந்த மருத்துவர்கள் மிகப்பெரிய குழுவை உருவாக்கியுள்ளனர். சமீபத்திய அறிக்கை, (2022) அவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதை காட்டுகிறது (2,402 மருத்துவர்கள்).

இந்திய அரசு இந்த போக்கை எதிர்க்கவில்லை என்பது உறுதி. முந்தைய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, "இந்திய மருத்துவர்களுக்கு உலகம் முழுவதும் தேவை உள்ளது. அவர்கள் இந்தியாவில் பணியாற்ற வேண்டும் என்பது உண்மை தான், ஆனால் அவர்கள் உலகிற்கும் சேவை செய்ய வேண்டும்.” என்றார்.

ஆனால் இது இந்தியாவை பாதிக்கக் கூடும். உலக சுகாதார அமைப்பின் (WHO) தரவுகள், ஒவ்வொரு 10,000 பேருக்கும் இந்தியா 1991 இல் இருந்ததை விட இப்போது குறைவான மருத்துவர்களை கொண்டுள்ளது என்று காட்டுகிறது.

தளத்தில் புதுப்பிக்கப்பட்ட தரவு (2020) இந்தியா ஒவ்வொரு 10,000 பேருக்கும் 7.26 மருத்துவர்களை வழங்குகிறது என்கிறது.

1991 இல், அந்த எண்ணிக்கை 12.24 மருத்துவர்களாக இருந்தது, மக்கள்தொகையின் வளர்ச்சி நாட்டில் மருத்துவர்களின் இருப்பை விட அதிகமாக உள்ளது என்பதைக் குறிக்கிறது.

நீட் பிரச்னை : ஆயிரக்கணக்கான இந்திய மருத்துவ மாணவர்கள் வெளிநாடுகளை நாடுவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

ஒப்பீட்டளவில் அமெரிக்கா (2021) 10,000 பேருக்கு 36 க்கும் மேற்பட்ட மருத்துவர்களைக் கொண்டுள்ளது, பிரிட்டனில் 31.74 மருத்துவர்கள் (2022) மற்றும் ஸ்வீடனில் 71.5 மருத்துவர்கள் (2021) என்ற சதவீதத்தில் உள்ளது.

சுகாதார அமைச்சகம் இதை சரிசெய்ய முயற்சிக்கிறதா என்பதை அறிய பிபிசி அவர்களிடம் பேச முயன்றது ஆனால் எந்த பதிலும் இல்லை.

இந்தியாவில் உள்ள மருத்துவர்களின் பணி நிலைமைகள் - ஊதிய விகிதம் மற்றும் வன்முறை அச்சுறுத்தல் உட்பட பல பிரச்னைகள் இருப்பதை மருத்துவர் செளகான் சுட்டிக்சாட்டினார்.

"நிபுணர்கள் உட்பட எங்களின் சிறந்த மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்" என்று அவர் எச்சரித்தார்.

ரஷ்யாவில் இருக்கும் சோயாமி ஆச்சரியப்பட்டார், “மருத்துவர் ஆவதற்கு நிறைய பணம் தேவை. அதனைத் தாண்டி தான் எங்களை போன்றோர் பாதுகாப்பைப் பற்றி யோசிக்கிறோம். இந்த நிலையில் நாங்கள் இருக்கிறோம், இந்தியாவுக்குச் செல்வது மதிப்புக்குரியதா என்று நான் ஆச்சரியப்படுகிறேன்?” என்கிறார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)