மரக்காணம் கள்ளச்சாராய மரணம்: ரூ.10 லட்சம் நிவாரணத் தொகையை பெண்கள் என்ன செய்தனர்?

 மலர் ராஜமூர்த்தி
படக்குறிப்பு, அரசு கொடுத்த பத்து லட்சத்தின் உதவியுடன், தன் மகளுக்கு திருமணம் நடத்தியதாக கூறுகிறார் எக்கியார்குப்பத்தைச் சேர்ந்த மலர் ராஜமூர்த்தி
  • எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

கடந்த சில வாரங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலக்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்த 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இன்னும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடுகளுக்கு திரும்பினர்.

இறந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பாக நிவாரண தொகையாக ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது. கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டோருக்கு ரூ.50,000 நிவாரணம் அறிவிக்கப்பட்டது.

மேலும், சட்டப்பேரவைக் கூட்டத்தின் போது கள்ளச்சாராயம் குடித்து இறந்த நபர்களில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்குக் கூடுதல் நிவாரணமும் முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழக்கும் நபர்களுக்கு அரசு நிவாரணத் தொகை வழங்குவது குறித்துத் தமிழ்நாடு அரசின் கருத்தைத் தெரிவிக்கும்படிச் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதேபோல், கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச் சாராயத்தால் உயிரிழந்த குடும்பங்களுக்கும் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்ட நிலையில், இந்த இழப்பீட்டுத் தொகை அவர்களின் வாழ்க்கையில் எப்படிப் பயன்பட்டது என்று அறிய பிபிசி தமிழ் குழு மரக்காணம் அருகேயுள்ள எக்கியார்குப்பம் மீனவ கிராமத்திற்குச் சென்றது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய  இங்கே கிளிக் செய்யவும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

21 பேரை பலி வாங்கிய கள்ளச் சாராயம்

21 பேரை பலி வாங்கிய கள்ளச் சாராயம்

கடந்த ஆண்டு நடந்த கள்ளச்சாராய சம்பவத்தில், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகேயுள்ள எக்கியார் குப்பத்தில் 14 பேரும், செங்கல்பட்டில் உள்ள சித்தாமூருக்கு அருகில் இருக்கும் பெருக்கரணை, பேரம்பாக்கம் ஆகிய இரு கிராமங்களில் 8 பேரும் உயிரிழந்தனர்.

அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்களில் உயிரிழந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பாக ரூ.10 லட்சம் இழப்பீடு கடந்த ஆண்டு வழங்கப்பட்டது.

மரக்காணத்திலிருந்து, மீனவ கிராமமான எக்கியார்குப்பத்திற்கு பிபிசியின் குழு சென்றது. அங்கு கடல் அலையின் உப்புக்காற்று வாசத்தில் கருவாடு காய்ந்து கொண்டிருந்த தெரு வழியாக நம்மை அந்த ஊரைச் சேர்ந்த தினகரன் அழைத்துச் சென்றார்.

சென்ற வருடம் நடைபெற்ற சம்பவத்தையும் தினகரன் பிபிசி தமிழுடன் பகிர்ந்து கொண்டார். விழுப்புரம் மாவட்டம், எக்கியர்குப்பத்தைச் சேர்ந்த மீனவத் தொழிலாளர்கள், கடந்தாண்டு மே 13-ஆம் தேதி, அந்த கிராமத்தில் விற்கப்பட்ட மெத்தனால் கலந்த, 'பாக்கெட்' கள்ளச்சாராயத்தைக் குடித்து, உடல்நிலை பாதிக்கப்பட்டதில், 14 பேர் உயிரிழந்தனர்.

“இந்தச் சோக நிகழ்வு, மக்களின் மனதில் இருந்து நீங்கவே இல்லை. அரசாங்கம் ரூ.10 லட்சம் வழங்கி உதவி செய்தது என்றாலும் வாழ்நாள் முழுக்க அது போதுமா என்பது கேள்விக்குறிதான். ஆனாலும் இழப்பு ஏற்பட்ட குடும்பத்திற்கு அரசாங்கம் செய்தது மிகப்பெரிய உதவியாக இருந்தது,” என்றார்.

ராஜவேலின் மனைவி அஞ்சனா
படக்குறிப்பு, எக்கியார்குப்பம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த ராஜவேலின் மனைவி அஞ்சனா

‘பணத்தை வைத்து என்ன செய்தோம்?’

எக்கியார்குப்பம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த ராஜவேலின் வீட்டிற்கு முதலில் நாம் சென்றோம். பிபிசி தமிழிடம் பேசிய ராஜவேலின் மனைவி அஞ்சனா, “என் கணவர் இறந்த பிறகு அரசாங்கம் 10 லட்ச ரூபாய் கொடுத்தது. ஆனால் அந்தப் பணம் எவ்வளவு நாளைக்கு உதவும் என்று தெரியவில்லை. எனது குழந்தைகளின் படிப்புச் செலவுக்கு அது உதவியாக இருந்தாலும், எவ்வளவு நாள் இதை வைத்துக் குடும்பத்தைப் பராமரிக்க முடியும் என்று தெரியவில்லை,” என்றார்.

அஞ்சனாவின் வீட்டுக்குச் சில வீடுகள் தள்ளி குடியிருக்கும் சந்திரா நம்மை அழைத்துப் பேசினார்.

"கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு கொடுக்கும் நிவாரணம் எந்தப் பயனும் அளிக்காது. கள்ளச்சாராயம் இல்லாமல் இருந்திருந்தால், என்னுடைய கணவர் இன்று உயிருடன் இருந்திருப்பார். அதை செய்யத் தவறிய அரசு இழப்பீடு வழங்குவது நியாயம் தான்," என்று தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து பேசிய மாதவி சரத்குமார், “என் கணவருக்கு என்னைத் தவிர இன்னொரு மனைவியும் இருக்கிறார். அரசாங்கம் கொடுத்த 10 லட்ச லட்ச ரூபாயில் அவருக்கும் பாதி கொடுத்தேன். மீதியை என் கணவர் இறந்த செலவு, கடன் தொகை போக என் மகள்களுக்கு கொடுத்தேன். என் கணவர் இல்லாததால் படிக்க வேண்டிய வயதில் எனது மகன் கடலுக்கு மீன் பிடிக்க செல்கின்றான்,” என்றார்.

21 பேரை பலி வாங்கிய கள்ளச் சாராயம்
படக்குறிப்பு, மாதவி சரத்குமார்

‘மகள் திருமணத்திற்கு உதவியது’

அதே ஊரைச் சேர்ந்த மலர் ராஜமூர்த்தி பிபிசி-யிடம் பேசிய போது, அரசு வழங்கிய நிவாரணம் உதவியாக இருந்ததாகவும், அதைக் கொண்டு தனது மகளின் திருமணத்தை நடத்தியதாகவும் கூறினார்.

“அரசு கொடுத்த 10 லட்ச ரூபாயின் உதவியுடன், என் மகளுக்குத் திருமணம் நடத்தினேன். கணவரை இழந்த நிலையில் மகளின் வளைகாப்பு, பிரசவம் ஆகிய செலவுகளையும் கடன் ஏதுமில்லாமல் பார்த்துக் கொண்டேன்,” என்றார்.

எக்கியார்குப்பம் கிராமத்தில் கணவரை இழந்த 5 பெண்களை பிபிசி தமிழ் மீண்டும் சந்தித்த போது, அவர்களின் வீடு கடந்த வருடம் இருந்த அதேநிலையில் இருந்ததைப் பார்க்க முடிந்தது.

பிபிசி-யிடம் பேசிய அனைவரும், அரசின் கவனக்குறைவு தான் கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு காரணம் என்று தெரிவித்தனர்.

தமிழக அரசு 10 லட்சம் இழப்பீடு
படக்குறிப்பு, கள்ளச்சாராய மரணங்களுக்கு தமிழக அரசு 10 லட்சம் இழப்பீடு வழங்குவது பல்வேறு தரப்பினரால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

கண்டனமும் விமர்சனமும்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பாக அரசு நிர்வாகத்தின் தோல்வி என அரசியல் கட்சிகள் விமர்சிக்கும் நிலையில், சமூக ஊடகங்கள் வாயிலாக கள்ளச்சாராயம் குடித்து உயிரிந்த நபர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு ஏன் வழங்கப்படவேண்டும் என்று கேள்வி எழுப்பினர்.

மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டு பேசிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு அரசு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்குவது தீய முன்னுதாரணம் என்பதை உணர வேண்டும் என்று கூறினார்.

கள்ளச் சாராய மரணங்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான விமர்சனங்கள் குறித்து பேசிய செயற்பாட்டாளர் தேவநேயன், “கள்ளச்சாராயத்தை தடுப்பதற்குதான் மதுவிலக்கு அமலாக்கத் துறை உள்ளது. அந்தத் துறை சரியாக செயல்பட்டிருந்தால், காவல் துறை சரியாக இயங்கியிருந்தால், உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் கடமையைச் செய்திருந்தால் இந்தத் துன்பச் சம்பவம் நிகழ்ந்தே இருக்காது. இது முழுக்க முழுக்க அரசின் நிர்வாகத் தோல்வி. அதற்கு ஈடுகட்டி இழப்பீடு வழங்கவேண்டியது அரசின் கடமை,” என்று கூறினார்.

தமிழ்நாடு அரசு வழங்கிய நிவாரணத் தொகை அல்லாது, பாஜக சார்பாக உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஒரு லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.

மேலும் சில அரசியல் கட்சிகள் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் உள்ள நபர்களுக்கு அரசு வேலையும், நிவாரணமாக 25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளன.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
படக்குறிப்பு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அரசின் பதில் என்ன?

கள்ளச்சாராய குடித்து இறந்தவர்களுக்கு உதவித்தொகை வழங்குதற்கு விமர்சனம் எழுந்துவரும் நிலையில், இதுகுறித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் அனைவரும் தினசரி கூலித் தொழிலாளிகள். அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் அரசு வழங்கும் நிவாரண உதவியை அரசியலாக்கி விமர்சிப்பது சரியல்ல,” என்றார்.

மேலும், "உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்காக அரசு நிவாரணம் வழங்குவது அரசின் செயல்பாடு,” என்று கூறியுள்ளார்.

நீதிமன்றத்தில் வழக்கு

பட மூலாதாரம், Getty Images

நீதிமன்றத்தில் வழக்கு

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவத்தில் பலியானவர்களுக்கு எப்படி ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு, தமிழ்நாடு அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கிய அரசின் முடிவை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த முகமது கோஸ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், கள்ளச்சாராயம் குடிப்பது சட்டவிரோதச் செயல். கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களைப் பாதிக்கப்பட்டவர்களாக கருதக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தீ விபத்து உள்ளிட்ட விபத்துக்களில் பலியாவோருக்குக் குறைந்த இழப்பீடு வழங்கும் நிலையில், கள்ளச்சாராயம் குடித்துப் பலியானவர்களுக்கு எந்த அடிப்படையில் அதிகமான இழப்பீடு வழங்கப்படுகிறது என்பதை அரசு தெளிவுபடுத்தவில்லை எனவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, கள்ளச்சாராயம் குடித்து மரணமடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு என்பது அதிகம் எனவும், இவ்வளவு அதிகமான தொகையை எப்படி வழங்க முடியும் என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

மேலும், இந்தத் தொகையை மறுபரிசீலனை செய்வது குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்கும்படி உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)