ஜிம்பாப்வே அசத்தல் வெற்றி: ஐபிஎல்-இல் கலக்கிவிட்டு சர்வதேச ஆட்டத்தில் சொதப்பிய இந்திய பேட்டர்கள்

IND vS ZIM 2024

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

டி20 உலகக்கோப்பையை வென்ற பிறகு சந்தித்த முதல் போட்டி இவ்வளவு மோசமான முடிவாக இருக்கும் என இளம் இந்திய அணி எதிர்பார்த்திருக்காது.

அடுத்த தலைமுறைக்கான இந்திய அணி என்று மார்தட்டி சுப்மன் கில் தலைமையில் ஜிம்பாப்வே சென்ற அணி, 116 ரன்களை சேஸ் செய்ய முடியாமல் சுருண்டு மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது.

ஹராரே மைதானத்தில் நேற்று நடந்த முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி தோற்கடித்தது.

முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 9 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் சேர்த்தது. 116 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 19.5 ஓவர்களில் 102 ரன்களுக்கு ஆட்டமிழந்து 13 ரன்களில் ஜிம்பாப்வே அணியிடம் தோல்வி அடைந்தது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

8 ஆண்டுகளுக்குப் பிறகு தோல்வி

ஏறக்குறைய 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியை இதே மைதானத்தில் வைத்து ஜிம்பாப்வே மீண்டும் வீழ்த்தியுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணியை ஜிம்பாப்வே தோற்கடித்திருந்தது.

டி20 உலக சாம்பியன் பட்டம் வென்றபின், சந்தித்த முதல் ஆட்டத்தில் தோற்ற 2வது அணியாக இந்திய அணி மாறியுள்ளது. இதற்கு முன் 2022ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றபின், 2023 மார்ச் மாதம் நடந்த முதல் டி20 ஆட்டத்தில் வங்கதேசத்திடம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

ஹராரே மைதானத்தைப் பொறுத்தவரை, 116 ரன்கள் என்பதுதான் இதுவரை சேர்க்கப்பட்ட குறைந்தபட்ச ஸ்கோர். ஐசிசியில் முழு உறுப்பினராக இருக்கும் இந்திய அணியால், அதைக்கூட சேஸ் செய்ய முடியாமல் போனது. இதற்கு முன்பு, 2016 டி20 உலகக்கோப்பைத் தொடரில் நியூசிலாந்துக்கு எதிராக 127 ரன்களை சேஸ் செய்ய முடியாமல் இந்திய அணி தோற்றது.

தொடர் வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி

IND vS ZIM 2024

பட மூலாதாரம், Getty Images

இந்திய அணி இந்தத் தோல்விக்கு முன் அனைத்துவிதமான போட்டிகளிலும் சேர்த்து தொடர்ந்து 12 வெற்றிகளைப் பெற்றிருந்தது. கடைசியாக இங்கிலாந்துக்கு எதிராக ஹைதராபாத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோற்றிருந்தது. அதன் பிறகு தோற்கவில்லை.

அதேபோல இந்திய அணி 12 டி20 போட்டிகளாக எந்தத் தோல்வியையும் சந்திக்காமல் வந்தது. 2023, டிசம்பரில் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக கடைசியாக டி20 ஆட்டத்தில் இந்திய அணி தோற்றிருந்தது. இப்போது 6 மாதங்களுக்குப் பின் இந்திய அணி தோற்றுள்ளது.

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இந்திய அணி ஆட்டமிழந்த 102 ரன்கள் என்பது சேஸிங்கில் சேர்க்கப்பட்ட 2வது குறைந்தபட்ச ஸ்கோர். இதற்கு முன் 2016 உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணி நிர்ணயித்த 127 ரன்கள் இலக்கைத் துரத்திய இந்திய அணி 76 ரன்களில் ஆட்டமிழந்தது. அதன் பிறகு 102 ரன்களில் இப்போது சுருண்டுள்ளது.

கோலிக்கு போட்டியாக சிக்கந்தர் ராசா

இந்திய அணியைத் தனது பந்துவீச்சு, பேட்டிங்கால் ஆட்டம் காண வைத்த கேப்டன் சிக்கந்தர் ராசா ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இது, டி20 போட்டிகளில் சிக்கந்தர் ராசா வாங்கிய 15வது ஆட்டநாயகன் விருது. இதற்கு முன் சூர்யகுமார் யாதவ் 15, கோலி 16 விருதுகளை வென்றுள்ளனர்.

சிக்கந்தர் ராசா வாங்கிய 6 ஆட்டநாயகன் விருதுகள், ஜிம்பாப்வே அணியை 20 ஆட்டங்களில் தலைமை ஏற்று நடத்தியபோது கிடைத்த விருதுகளாகும்.

ஏழு பேட்டர்கள் டக்-அவுட்

IND vS ZIM 2024

பட மூலாதாரம், Getty Images

இந்த ஆட்டத்தில் மட்டும் இரு அணிகளிலும் சேர்த்து 7 பேட்டர்கள் டக்-அவுட் ஆயினர். இந்திய அணி தரப்பில் 3 பேட்டர்களும், ஜிம்பாப்வே அணியில் 4 பேட்டர்களும் ரன் ஏதும் சேர்க்காமல் ஆட்டமிழந்தனர்.

உலகளவில் ஐசிசி முழுநேர உறுப்பு நாடுகளின் அணிகளில் அதிகபட்ச டக்-அவுட் ஆனது இது 2வது முறை. 2010ஆம் ஆண்டு போர்ட் ஆஃப் ஸ்பெயின் நகரில் நடந்த நியூசிலாந்து - மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான ஆட்டத்தில் 8 டக்-அவுட்கள் வந்திருந்தன.

ஜிம்பாப்வே வெற்றிக்கு என்ன காரணம்?

ஜிம்பாப்பே அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் அந்த அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா மற்றும் வேகப்பந்துவீச்சாளர் சதாராதான். இருவரும் சேர்ந்து 8 ஓவர்கள் வீசி 41 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதுதவிர பிரெயின் பெனட் ஒரு ஓவரை மெய்டனாக வீசி ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். ஆடுகளத்தைச் சரியாகக் கணித்துப் பயன்படுத்தி ஜிம்பாப்வே அணி பந்து வீசியதுதான் வெற்றிக்கு முக்கியக் காரணம்.

அதிலும் ஜிம்பாப்வே வீரர்களுக்கு ஹராரே பழக்கப்பட்ட மைதானம் என்பதால், சரியான லைன் லென்த் நன்கு தெரிந்திருந்தது. இந்த லென்த்தில் இருந்து தவறி பந்துவீசாமல் துல்லியமாகப் பந்து வீசியதால், இந்திய அணியின் அனுபவற்ற பேட்டர்களால் தரமான பந்துவீச்சை எதிர்கொண்டு பேட் செய்ய முடியவில்லை.

சுழற்பந்துவீச்சிலும் சிக்கந்தர் ராசா கட்டுக்கோப்புடன் பந்துவீசி���ார். குறிப்பாக பவர்ப்ளே ஓவரிலேயே பெனட், மசகாட்சா என இரு சுழற்பந்துவீச்சாளர்களைக் களமிறக்கி கேப்டன் சிக்கந்தர் இந்திய அணியைத் திணறவிட்டார். அதற்கு ஏற்றார்போல் பெனட் வீசிய முதல் ஓவரிலேயே அபிஷேக் எட்ஜ் எடுத்து கேட்சாகி ஆட்டமிழந்தார்.

IND vS ZIM 2024

பட மூலாதாரம், Getty Images

வேகப்பந்துவீச்சாளர் சதாரா வீசிய லென்த் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ரியான் பராக் மிட்ஆஃப் திசையில் கேட்ச் கொடுத்தார், அடுத்த இரு பந்துகளில் ரிங்கு சிங் பவுன்ஸரை சமாளிக்க முடியாமல் ஃபைன் லெக்கில் எளிதாக கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

சதாரா வீசிய 5வது ஓவரில் இரு விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தது. பவர்ப்ளே ஓவருக்குள் 4 விக்கெட்டுகளை இந்திய அணி பறிகொடுத்தது. பவர்ப்ளேவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 28 ரன்கள் சேர்த்திருந்தது.

விக்கெட்டுகள் சரிந்த நிலையில் அணியைச் சரிவிலிருந்து மீட்கும் பணியை துருவ் ஜூரெலுடன் சேர்ந்து கேப்டன் கில் ஈடுபட்டார். ஆனால், இந்திய அணி பேட்டர்களை நிலைத்து ஆடவிடாமல் ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் பந்துவீச்சைத் தொடர்ந்து மாற்றி வீசச் செய்து ரன் சேர்க்கவிடாமல் நெருக்கடியளித்து சிறப்பாகச் செயல்பட்டார்.

ஆறாவது ஓவரிலிருந்து 10வது ஓவர் வரை இந்திய அணி 2 பவுண்டரிகள் மட்டுமே அடிக்க முடிந்தது. அது மட்டுமல்லாமல் 10வது ஓவரில் ஜூரெல் 14 பந்துகளைச் சந்தித்து 6 ரன்னில் ஜாங்வீ வீசிய ஸ்லோவர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.

கேப்டன் சிக்கந்தர் 11வது ஓவரை வீசினார். சாதாரண சுழற்பந்துவீச்சாளர் போல் இல்லாமல் தனது பந்துவீச்சில் பல்வேறு வேரியேஷன்களை சிக்கந்தர் வெளிப்படுத்தி இந்திய பேட்டர்களை திணறடித்தார். கேரம் பால், ஸ்லோவர் பால், கூக்ளி என வித்தியாசங்களை சிக்கந்தர் தனது பந்துவீச்சில் வெளிப்படுத்தினார்.

சிக்கந்தர் பந்துவீச்சுக்குத் திணறிய கில் 31 ரன்னில் கேரம் பாலில் க்ளீன் போல்டாகினார். 10.2 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 47 ரன்கள் சேர்த்து தோல்வியின் பிடியில் சிக்கியது. 13வது ஓவரில் 7வது விக்கெட்டையும் இழந்து 67 ரன்கள் சேர்த்தது இந்திய அணி. வாஷிங்டன் சுந்தர், ஆவேஷ் கான் கடைசி நேரத்தில் அதிரடியாக பேட் செய்தாலும், ஜிம்பாப்வே வீரர்களின் தரமான பந்துவீச்சை எதிர்த்து பேட் செய்வது கடினமாக இருந்தது.

கடைசி 2 ஓவர்களில் இந்திய அணி வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது. கலீல் அகமது, சுந்தர் இருவரும் களத்தில் இருந்தனர். முசாபர்பானி வீசிய கட்டுக்கோப்பான ஓவரில் ரன் சேர்க்கத் திணறிய சுந்தர், 2 ரன்கள் மட்டுமே சேர்த்தார். கடைசி ஓவரில் இந்திய அணி வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. சதாராவின் சுழற்பந்துவீச்சிலும் ரன் சேர்க்க முடியாமல் சுந்தர் 2 ரன்கள் மட்டுமே சேர்த்து, 5வது பந்தில் விக்கெட்டை இழக்கவே இந்திய அணி தோல்வி அடைந்தது.

கடந்த மாதத்தில் உலகின் டி20 சாம்பியனாக உருவெடுத்த இந்திய அணியை, 116 ரன்கள் சேர்க்கவிடாமல் 102 ரன்களில் சுருட்டி டிபெண்ட் செய்தது ஜிம்பாப்வே அணியின் கட்டுக்கோப்பான பந்துவீச்சைக் காட்டுகிறது.

'பேட்டிங்கில் மோசமாக செயல்பட்டோம்' - சுப்மன் கிகில்

IND vS ZIM 2024

பட மூலாதாரம், Getty Images

தோல்விக்குப் பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், “நாங்கள் சிறப்பாகப் பந்துவீசினோம், ஆனால் பேட்டிங்கில் மோசமாகச் செயல்பட்டோம். பேட்டிங்கை ரசித்துச் செய்வதற்கு எங்களுக்குச் சிறிது அவகாசம் தேவையாக இருந்தது, ஆனால் அதற்கு வழியில்லை.

முதல் 10 ஓவர்களிலேயே 5 விக்கெட்டுகளை இழந்தது பெரிய பின்னடைவாக இருந்தது. கடைசி வரை நான் பேட் செய்திருந்தால், சாதகமான முடிவு கிடைத்திருக்கும்.

பேட்டர்கள் ஆட்டமிழந்தவிதம் வேதனையாக இருந்தது. வாஷிங்டன் சிறப்பாக பேட் செய்தார், பந்துவீசினார். 115 ரன்களை சேஸ் செய்யும்போது, 10வது இடத்தில் இறங்கி பேட் செய்யும்போது, அணியை வெல்ல வைக்க முயல்வது சாத்தியமில்லை” எனத் தெரிவித்தார்.

இந்திய அணியின் தோல்விக்கு என்ன காரணம்?

இந்திய அணியில் ப்ளெயிங் லெவனில் இருந்த பெரும்பாலான வீரர்கள் சர்வதேச அனுபவம் இல்லாதவர்கள், இதில் அனுபவம் இருக்கும் வீரர் வாஷிங்டன் சுந்தர் மட்டுமே. ஜிம்பாப்வே அணியின் துல்லியமான பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் பவர்ப்ளே ஓவருக்குள் 4 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தபோதே தோல்வி அடைந்துவிட்டது.

ஜிம்பாப்வே அணியில்கூட ஓரளவுக்கு பேட்டர்கள் பாட்ர்னர்ஷிப் அமைத்து பேட் செய்தனர். குறிப்பாக 2வது விக்கெட்டுக்கு பெனெட்-வெஸ்லி 34 ரன்களும், கடைசி விக்கெட்டுக்கு சதாரா, மந்தான்டே இருவரும் 25 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதுபோன்ற எந்தப் பெரிய பார்ட்னர்ஷிப்பும் இந்திய அணி பேட்டர்களிடம் இருந்து வரவில்லை.

ஐபிஎல் டி20 தொடரில் பேட்டிங்கில் வலுவான அணிகளில் இடம் பெற்று கலக்கிய அபிஷேக் சர்மா(0), சிஎஸ்கே அணியின் கேப்டன் கெய்க்வாட்(7), ரியான் பராக்(2), ரிங்கு சிங்(0) ஆகிய 4 பேட்டர்களுமே பவர்பளே ஓவருக்குள் விக்கெட்டுகளை இழந்தனர்.

அதிலும் சதாரா வீசிய 5வது ஓவரில் ரியான் பராக், ரிங்கு இருவருமே பெவிலியின் திரும்பினர். இந்திய அணியில் 3 பேட்டர்கள் டக்-அவுட்டிலும், 4 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

IND vs ZIM: ஐபிஎல்-இல் கலக்கிய இந்திய பேட்டர்கள் சர்வதேச ஆட்டத்தில் சொதப்பியது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடிய பலரும் இந்திய அணியில் வாய்ப்பு பெற்றுள்ளனர். ஐபிஎல் நடத்தப் பயன்படும் இந்திய ஆடுகளங்கள் பேட்டர்களுக்கு சாதகமாக மாற்றப்பட்டதால் இந்த பேட்டர்களின் பேட்டிங்கும், ஸ்கோர் செய்வதும் பெரிதாகப் பேசப்பட்டது.

ஆனால், இதுபோன்ற சவாலான ஆடுகளங்களில்தான் இந்த பேட்டர்களின் உண்மையான திறமை வெளிப்படும். அந்த வகையில் ஐபிஎல் தொடரில் சாதித்த பேட்டர்கள் சர்வதேச களத்துக்கு வந்தபோது சொதப்பிவிட்டதாக விமர்சனங்கள் எழுகின்றன.

இந்திய அணியில் சுந்தர், கில் இருவரைத் தவிர வேறு எந்த பேட்டர்களும் களத்தில் 10 நிமிடங்கள்கூட தொடர்ந்து பேட் செய்யவில்லை. அதிகபட்சமாக கேப்டன் சுப்மன் கில்(31), வாஷிங்டன் சுந்தர்(27), டெய்லண்டர் பேட்டர் ஆவேஷ்கான்(16) ரன்கள் சேர்த்தனர். மற்ற எந்த பேட்டர்களும் பெரிதாக ரன்களை சேர்க்காமல் பொறுப்பற்ற முறையில் ஆட்டமிழந்தனர்.

ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சையும், இந்திய அணியின் விக்கெட்டுகளையும் பார்த்த உள்நாட்டு ரசிகர்கள் ஏகோபித்த ஆதரவை வழங்கி அந்த அணியை உற்சாகப்படுத்தினர்.

இந்திய அணியின் பந்துவீச்சில் ரவி பிஸ்னோய் 4 ஓவர்கள் வீசி 2 மெய்டன்கள் எடுத்து 13 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வாஷிங்டன் சுந்தர் 4 ஓவர்கள் வீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். மற்ற வகையில் கலீல் அகமது, ஆவேஷ் கான் இருவரும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

சிக்கந்தர் ராசாவை மாற்றிய சுனில் நரேன்

IND vS ZIM 2024

பட மூலாதாரம், Getty Images

கடந்த 2016ஆம் ஆண்டு தோனி தலைமையில் இந்திய அணி ஜிம்பாப்வே வந்திருந்தபோது, இதேபோன்ற அதிர்ச்சித் தோல்வியைச் சந்தித்தது. அப்போதேய ஜிம்பாப்வே அணியில் சிக்கந்தர் வீரராக இடம் பெற்றிருந்தார், இப்போது கேப்டனாக வழிநடத்துகிறார்.

இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் சிக்கந்தர் தன்னைச் சாதாரண சுழற்பந்துவீச்சாளராக மட்டுமே வெளிப்படுத்தியிருந்தார். ஆனால், கரீபியன் லீக் டி20 தொடரில் விளையாடத் தொடங்கிய பிறகு சிக்கந்தரின் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் ஏராளமான மாற்றங்களும், முன்னேற்றங்களும் வந்தன.

கரீபியன் லீக் தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்ற சிக்கந்தர் ராசாவை செதுக்கி, அவரைச் சிறந்த சுழற்பந்துவீச்சாளராக மாற்றியது மேற்கிந்தியத் தீவுகள் வீரர் சுனில் நரைன்தான். சிக்கந்தரின் பந்துவீச்சில் கேரம்பால், ஸ்லோவர் பால், ரிஸ்ட் பால், கூக்ளி, லெக் ஸ்பின் எனப் பல்வேறு வேரியேஷன்களை புகுத்தி அவரின் பந்துவீச்சை ஒழுங்குபடுத்திய பெருமை நரேனுக்கே உரியது.

உகாண்டாவிடம் தோல்வி அடைந்ததால், 2024 ஆண்டு டி20 உலகக்கோப்பைத் தொடருக்கு தகுதி பெறும் சுற்றில் ஜிம்பாப்வே வாய்ப்பை இழந்தது. ஆனால், மனம் தளராமல் போராடிய ஜிம்பாப்வே அணி உலக சாம்பயின் இந்திய அணியை முதல் ஆட்டத்திலேயே தோற்கடித்துள்ளது.

உலகக்கோப்பைக்குத் தகுதி பெற முடியாத நிலையில் பயிற்சியாளர் பதவியிலிருந்து டேவ் காட்டன் விலகிய நிலையில், தென் ஆப்ரிக்காவின் ஜஸ்டின் சாமன்ஸ் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார், டியான் இப்ராஹிம் துணை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சாமன்ஸ் தனது முதல் தொடரிலேயே இந்திய அணியை வெல்ல வைத்து ஜிம்பாப்வே அணியை திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)