காஷ்மீர் பிரச்னை மற்றும் இந்தியாவுடனான வர்த்தகம் குறித்து பிரிட்டனின் புதிய பிரதமர் கூறியது என்ன?

 பிரிட்டனின் புதிய பிரதமர்

பட மூலாதாரம், Getty Images

பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கான தேர்தல் முடிவுகள் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 5) வெளியாகின. கடந்த 14 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கன்சர்வேட்டிவ் கட்சி தோல்வியடைந்துள்ளது.

இந்தத் தேர்தலில், 650 இடங்களைக் கொண்ட பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் தொழிலாளர் கட்சி 412 இடங்களைக் கைப்பற்றி, கட்சியின் தலைவர் கியர் ஸ்டாமர் இப்போது நாட்டின் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ளார்.

பிரிட்டனில் தொழிலாளர் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, எதிர்காலத்தில் இந்தியாவுடனான அதன் உறவுகள் குறித்து பல்வேறு ஊகங்கள் வெளியிடப்படுகின்றன. ஏனெனில் காஷ்மீர் மற்றும் அங்கு நிலவும் மனித உரிமை தொடர்பான சர்ச்சைகள், காலிஸ்தான் போன்ற பல பிரச்னைகளில் தொழிலாளர் கட்சியும், கன்சர்வேடிவ் கட்சியும் வெவ்வேறு கருத்துகளைக் கொண்டுள்ளன.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய  இங்கே கிளிக் செய்யவும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இந்தியாவுடனான பிரிட்டனின் கருத்து வேறுபாடு

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவுடனான பிரிட்டனின் கருத்து வேறுபாடு

கியர் ஸ்டாமர் பிரதமராக பதவியேற்ற பிறகு, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது.

இருநாடுகளுக்கு இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக ரிஷி சுனக் அரசாங்கத்துடன் இந்தியா தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த நிலையில், காஷ்மீர் பிரச்னையில் தலையிடவும் ரிஷி சுனக் மறுத்துவந்தார்.

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பாகிஸ்தானிய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலாளர் கட்சியின் தலைவர்கள் இதற்கு முன்னர் இந்த பிரச்னையை எழுப்பி வந்தனர். இந்த விவகாரத்தில் ரிஷி சுனக் தன் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டுமென அவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்தக் கேள்விகளுக்கு, காஷ்மீர் இருதரப்பு பிரச்னை என்றும், இந்த விஷயத்தில் தான் தலையிடுவது சரியல்ல என்றும் ரிஷி சுனக் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஆனால் இந்தியாவுடனான உறவுகள் மற்றும் பிரச்னைகளில் தொழிலாளர் கட்சியின் நிலைப்பாடு சில காலத்திற்கு முன்பு வரை வேறுபட்டிருந்தது. 1997-ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரமடைந்து 50-வது ஆண்டு விழாவைக் கொண்டாடியபோது நடந்தது இதற்கு ஒரு உதாரணம்.

அப்போது ராணி எலிசபெத் மற்றும் இளவரசர் பிலிப் ஆகியோர் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்தனர். பிரிட்டனில் அப்போது டோனி பிளேயர் தலைமையிலான தொழிலாளர் கட்சி ஆட்சியில் இருந்தது.

அப்போது இந்தியா வருவதற்கு முன், பாகிஸ்தான் சென்றிருந்த ராணி எலிசபெத், அங்குள்ள காஷ்மீர் பிரச்னை குறித்து அறிக்கை அளித்தார். இந்தப் பிரச்னையை இரு நாடுகளும் பரஸ்பர பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என்றார். அவருடன் வந்திருந்த வெளியுறவு அமைச்சர் ராபின் குக், மத்தியஸ்தம் செய்ய முன்வந்தார்.

இதற்கு இந்தியா கடுமையாக பதிலளித்தது, "பிரிட்டன் தனது ஏகாதிபத்திய வரலாற்றை மறக்கவில்லை போலும்," என்று கூறியது.

பின்னர் இது குறித்து பேசிய டோனி பிளேயர், "காஷ்மீர் தொடர்பான பிரிட்டனின் கொள்கையின் சாராம்சம் என்னவென்றால், இந்தப் பிரச்னை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்பதே," என்று கூறினார்.

காஷ்மீர் பிரச்னையில் தொழிலாளர் கட்சியின் நிலைப்பாடு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜெர்மி கார்பின்

காஷ்மீர் பிரச்னையில் தொழிலாளர் கட்சியின் நிலைப்பாடு

2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11-ஆம் தேதி, தொழிலாளர் கட்சித் தலைவர் ஜெர்மி கார்பின் ஒரு ட்வீட்டில், "காஷ்மீரின் நிலைமை சங்கடம் தருகிறது," என்று கூறியிருந்தார்.

அங்கு நடக்கும் மனித உரிமை மீறல்களை முடிவுக்குக் கொண்டு வரவும், ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களின்படி பிரச்னைக்குத் தீர்வு காணவும் இந்தியாவுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பின் 370-வது பிரிவை இந்தியா நீக்கியதை அடுத்து அவரது ட்வீட் வெளியானது. 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் இருந்து சட்டப்பிரிவு 370-ஐ இந்திய அரசு நீக்கியது.

கார்பினின் கருத்து காஷ்மீர் பிரச்னையில் தொழிலாளர் கட்சியின் நிலைப்பாட்டிற்கு ஏற்ப இருந்தது. அதாவது ஜம்மு காஷ்மீர் பிரச்னை ஐ.நா. தீர்மானத்தின் கீழ் தீர்க்கப்பட வேண்டும் என்பதே அந்த நிலைப்பாடு.

இதற்குப் பிறகு, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுமார் 100 பிரிட்டிஷ் குடிமக்கள் ஜெர்மி கார்பினுக்கு கடிதம் எழுதி இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதற்குப் பிறகு, தொழிலாளர் கட்சியின் வருடாந்திர மாநாட்டில், செப்டம்பர் 25 அன்று அவசர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதில், "காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன,” என்று கூறப்பட்டது. சர்வதேசப் பார்வையாளர்களுக்கு காஷ்மீர் செல்ல அனுமதி வழங்க வேண்டும் என்றும், அங்குள்ள மக்களுக்குச் சுயமாக முடிவெடுக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

கட்சியின் ஆண்டு மாநாட்டில் இந்த முன்மொழிவு நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்த விவகாரம் அங்கிருந்து நழுவத் தொடங்கியது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் குடிமக்கள் தொழிலாளர் கட்சியின் முன்மொழிவுக்கு எதிராக குரல் எழுப்பத் தொடங்கினர்.

அவர்கள் கார்பினுக்கு ஒரு கடிதம் எழுதி, தொழிலாளர் கட்சியின் அணுகுமுறை இந்தியாவுக்கு எதிரானது என்றும், அதனால் தாங்கள் கோபமாக இருப்பதாகவும் தெரிவித்தார்கள்.

நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட தொழிலாளர் கட்சி

பட மூலாதாரம், ANTHONY DEVLIN/BLOOMBERG VIA GETTY IMAGES

படக்குறிப்பு, தொழிலாளர் கட்சியின் தலைவர் இயன் லாவரி

நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட தொழிலாளர் கட்சி

தொழிலாளர் கட்சியின் ஆதரவாளர்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த எதிர்ப்பால் தொழிலாளர் கட்சியினர் மத்தியில் கவலை அதிகரிக்கத் தொடங்கியது.

தொழிலாளர் கட்சித் தலைவர் இயன் லாவரி இந்திய வம்சாவளி குடிமக்களுக்கு ஒரு கடிதம் எழுதினார், "எந்தவொரு நாட்டின் அரசியல் விவகாரங்களிலும் வெளிநாடுகள் தலையிடுவதை தொழிலாளர் கட்சி எதிர்க்கிறது," என்றார்.

அந்தக் கடிதத்தில், "காஷ்மீர் மக்களுக்கு அவர்களின் எதிர்காலம் குறித்து முடிவெடுக்க உரிமைகள் உள்ளன என்று நாங்கள் நம்புகிறோம். ஆனால் காஷ்மீர் என்பது ஒரு இருதரப்பு பிரச்னை. அதை இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்தே தீர்க்க வேண்டும்," என்று கூறினார்.

"காஷ்மீர் பிரச்னையில் தொழிலாளர் கட்சி இந்தியாவையோ அல்லது பாகிஸ்தானையோ ஆதரிக்கவில்லை,” என்று அவர் தெளிவுபடுத்தினார் .

இருப்பினும், 2019 சம்பவத்திற்குப் பிறகு தான், தொழிலாளர் கட்சியின் மீது 'இந்திய எதிர்ப்பு கட்சி' என்று முத்திரை விழுந்ததாக நம்பப்படுகிறது.

ஜெர்மி கார்பின் தலைமையில் காஷ்மீர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால், பிரிட்டனில் வசிக்கும் இந்திய மற்றும் பாகிஸ்தான் வம்சாவளி மக்களிடம் இருந்து தொழிலாளர் கட்சிக்கு அதிக ஆதரவைப் பெற முடியாமல், தேர்தலில் கட்சி 59 இடங்களை இழக்க நேரிட்டது.

2019 தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி 365 இடங்களையும், தொழிலாளர் கட்சி 203 இடங்களையும் பெற்றன. கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 47 இடங்கள் அதிகமாக கிடைத்தது. சில மாதங்களுக்குப் பிறகு, 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் 30-ஆம் தேதி, 'லேபர் பிரண்ட்ஸ் ஆஃப் இந்தியா' (Labour Friends of India) குழுவைச் சேர்ந்தவர்களை கியர் ஸ்டாமர் சந்தித்தார்.

இதைத் தொடர்ந்து அவர் பேசுகையில், "இந்தியா தொடர்பான அனைத்து அரசியலமைப்பு விவகாரங்களும் இந்திய நாடாளுமன்றத்தின் விவகாரமாகும். காஷ்மீர் என்பது இருதரப்புப் பிரச்னை, அதை இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து அமைதியான முறையில் தீர்க்க வேண்டும். தொழிலாளர் கட்சி ஒரு சர்வதேசக் கட்சி, மனித உரிமைகளைப் பாதுகாக்க எப்போதும் பாடுபடும், துணை நிற்கும்," என்றார்.

அப்போது, ​​தனது கட்சி ஆட்சிக்கு வந்தால், இந்தியாவுடன் வலுவான வர்த்தக உறவுகளை உருவாக்கி, பருவநிலை மாற்றம் போன்ற விவகாரங்களில் உலகளாவிய தளத்தில் இணைந்து செயல்படும் என்று அவர் கூறியிருந்தார்.

ஆனால், அந்த சர்ச்சை அத்தோடு நிற்கவில்லை. இந்த அறிக்கை தொடர்பாக பிரிட்டனின் முஸ்லிம் கவுன்சில் அவரிடம் விளக்கம் கேட்டது.

பதிலுக்கு கியர் ஸ்டாமர், "காஷ்மீர் குறித்த எங்கள் நிலைப்பாடு மாறவில்லை. காஷ்மீர் மக்களின் உரிமைகள் குறித்த முந்தைய ஐ.நா தீர்மானங்களை நாங்கள் ஆதரிக்கிறோம், அங்கீகரிக்கிறோம். ஆனால் இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவர நிரந்தரத் தீர்வு தேவை என்று நாங்கள் கூற விரும்புகிறோம். இந்தியா, பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் மக்கள் இணைந்து செயல்படும் போதுதான் தீர்வு காண முடியும்," என்று கூறினார்.

காலிஸ்தான் பிரச்னை

பட மூலாதாரம், GAGGAN SABHERWAL

படக்குறிப்பு, லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன் நடத்தப்பட்ட போராட்டம்

காலிஸ்தான் பிரச்னை

கடந்த ஆண்டு மார்ச் மாதம் லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கு முன்னால் ஒரு பெரிய குழு ஆர்ப்பாட்டம் நடத்தியபோது தான் காலிஸ்தான் பிரச்னை பிரிட்டனில் பெரிதாகப் பேசப்பட்டது. அந்த ஆர்ப்பாட்டக்காரர்களில் பிரிட்டனின் சீக்கியச் சமூகத்தைச் சேர்ந்த பலர் அடங்குவர்.

அப்போது பலர் காலிஸ்தானுக்கு ஆதரவாக கொடிகளை ஏந்திக் கொண்டு, 'வாரிஸ் பஞ்சாப் தே' (Waris Punjab De) அமைப்பின் தலைவரும் காலிஸ்தானின் ஆதரவாளருமான அம்ரித்பால் சிங் மீது எடுக்கப்படும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என்று கோரி வந்தனர்.

தொழிலாளர் கட்சியின் சில தலைவர்களும் காலிஸ்தானை ஆதரிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் இருந்து வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்ற பிரீத் கவுர் கில் காலிஸ்தானின் ஆதரவாளராக கருதப்படுகிறார். இந்த ஆண்டு மார்ச் மாதம், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் ராகவ் சத்தாவுடன் அவரது புகைப்படம் வெளியானது, இது பா.ஜ.க தலைவர் அமித் மாளவியாவால் ட்வீட் செய்யப்பட்டது.

இந்தியாவுடன் தொடர்பில் உள்ள உளவு முகவர்கள் இங்கிலாந்தில் உள்ள சீக்கியர்களை குறிவைப்பதாக இந்த ஆண்டு பிப்ரவரியில் ப்ரீத் கவுர் கில் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் (House of Commons) குற்றம் சாட்டியிருந்தார். இது குறித்து பதில் அளிக்குமாறு பாதுகாப்பு அமைச்சரிடம் அவர் கேட்டுக் கொண்டார்.

முன்னதாக அவர் பிரிட்டிஷ் குடிமகனான ஜக்தார் சிங் ஜோஹலை (ஜக்கி ஜோஹல்) விடுவிக்கக் கோரியிருந்தார். ஜோஹல், கொலை குற்றச்சாட்டுகளுக்காக டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மற்றொரு தொழிலாளர் கட்சி கவுன்சிலரான பர்பிந்தர் கவுர், காலிஸ்தானை ஆதரித்த பாபர் கல்சாவுக்கு சமூக ஊடகங்களில் அஞ்சலி செலுத்தினார், அதற்காக கட்சி அவருக்கு எதிராக விசாரணையைத் தொடங்கியது.

பாபர் கல்சா, 1985-ஆம் ஆண்டு ஏர் இந்தியா விமானத்தில் குண்டுவீசி 329 பேர் கொல்லப்பட்டதற்காக அறியப்பட்டவர்.

முன்னதாக 2022-ஆம் ஆண்டில், திலாவர் சிங் பாபர் என்ற காவல்துறை அதிகாரியை 'தியாகி' என்று அழைத்தார். பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியாந்த் சிங்கை, தற்கொலைப்படை தாக்குதல் மூலம் கொலை செய்தவர் தான் திலாவர் சிங் பாபர்.

அதே போல, ஸ்லோ நகரத்தின் தொழிலாளர் எம்.பி தன்மன்ஜித் சிங் தேசியும் "ஜம்மு காஷ்மீரில் இருந்து 370-வது பிரிவை நீக்குவதற்கான இந்திய அரசின் முடிவு தவறானது," என்று குறிப்பிட்டார். 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11-ஆம் தேதி அன்று ஜெர்மி கர்பினின் ட்வீட்டை அவர் தனது பக்கத்தில் பகிர்ந்தார். இந்தியாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பலமுறை குரல் எழுப்பியுள்ளார் தன்மன்ஜித் சிங் தேசி.

 சீக்கிய சமூகத்தினர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரிட்டனில் உள்ள சீக்கிய சமூகத்தினர்

அது மட்டும் அல்ல விஷயம். 2019-ஆம் ஆண்டு தேர்தல் தோல்விக்குப் பிறகு, தங்கள் செல்வாக்கு மோசமடைந்து வருவதைப் பற்றி தொழிலாளர் கட்சி கவலைப்பட்டது.

2021-ஆம் ஆண்டு இடைத்தேர்தலின் போது, ​​வடக்கு பிரிட்டனில் ஒரு துண்டுப் பிரசுரம் பயன்படுத்தப்பட்டது, அதில் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியுடன் கைகுலுக்கும் புகைப்படம் இருந்தது. அதில் "உங்கள் தரப்புக்கு ஆதரவு அளிக்காத ஒரு டோரி (கன்சர்வேட்டிவ் கட்சியினர் டோரி என அழைப்பார்கள்) தலைவரை நம்ப வேண்டாம்," என்ற வாசகம் இருந்தது.

இதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கன்சர்வேடிவ் கட்சித் தலைவரான ரிச்சர்ட் ஹோல்டன், "அப்படியென்றால் இந்தியப் பிரதமருடன் கியர் ஸ்டாமர் கைகுலுக்கிப் பேச மாட்டார் என்று அர்த்தமா?" எனக் கேட்டார்.

இந்தச் சம்பவங்கள் அனைத்திற்கும் பிறகு, 2024-இல் தேர்தலுக்கு முன்னர் தனது செல்வாக்கை உயர்த்துவதில் தொழிலாளர் கட்சி அதிக கவனம் செலுத்தியது. மேலும் இந்த ஆண்டு தேர்தலுக்கு முன்பாகவே, கட்சிக்குள் உள்ள இந்திய எதிர்ப்பு உணர்வை முற்றிலுமாக அகற்ற உறுதிபூண்டுள்ளதாகவும், கட்சி இந்தியாவுடன் வலுவான வர்த்தக உறவை உருவாக்கும் என்றும் தொழிலாளர் கட்சி கூறியது.

தேர்தலுக்கு முன் பிரிட்டனின் லண்டனில் நடந்த தெற்காசிய சமூகத்தின் நிகழ்வில் கலந்து கொண்ட தொழிலாளர் கட்சியின் தலைவர் அன்னெலிஸ் டோட்ஸ், "கியர் ஸ்டாமரின் தலைமையின் கீழ், அனைத்து கட்சி உறுப்பினர்களும் தீவிர சித்தாந்தத்திலிருந்து விலகி இருக்கிறார்கள் என்பதில் கட்சி உறுதியாக உள்ளது," என்று கூறினார்.

"கட்சிக்குள் இது (இந்திய எதிர்ப்பு உணர்வு) பற்றி ஏதேனும் ஆதாரம் கிடைத்தால், அது எந்தக் குழுவாக இருந்தாலும், நான் நடவடிக்கை எடுப்பேன்," என்று அவர் கூறினார்.

மேலும், எதிர்காலத்தில் தொழிலாளர் கட்சி தலைமையிலான அரசாங்கத்தின் போது இந்தியாவிற்கும் பிரிட்டனுக்கும் இடையிலான நெருங்கிய உறவுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு கட்சித் தலைவரைப் பற்றிய தகவலையும் தனக்கு வழங்குமாறு புலம்பெயர்ந்த சமூகத்திற்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான உறவு

பட மூலாதாரம், JEFF J MITCHELL/GETTY IMAGES

படக்குறிப்பு, தேர்தல் பிரச்சாரத்தின் போது கியர் ஸ்டாமர்

இந்தியா-பிரிட்டன் இடையிலான உறவு

ருச்சி கன்ஷியாம் நவம்பர் 2018 முதல் ஜூன் 2020 வரை பிரிட்டனுக்கான இந்தியத் தூதராக இருந்தார். அவர் பிபிசி நிருபர் முகமது ஷாஹித்திடம் பேசுகையில், "அந்த நேரத்தில் (2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்குப் பிறகு), பிரிட்டனில் போராட்டங்கள் நடந்தன. லண்டனில் மட்டுமல்ல, உலகின் வேறு சில நாடுகளிலும் இந்தியாவுக்கு எதிரான போராட்டங்கள் நடந்தன. தொழிலாளர் கட்சி ஆதரவாளர்களும் அதில் ஈடுபட்டிருந்தனர்," என்று கூறினார்.

"ஆனால் இப்போது தொழிலாளர் கட்சியே, தாங்கள் முன்பு இருந்த கட்சி அல்ல என்று கூறுகிறது. எந்தத் தீவிரவாத சித்தாந்தங்களும் இல்லாத ஒரு மையவாதத் தொழிலாளர் கட்சி என்பதை நாம் காணலாம்," என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "இந்தியாவுடன் நல்லுறவை விரும்புவதாகவும், தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்ல விரும்புவதாகவும் தேர்தல் பிரசாரத்தின் போது கியர் ஸ்டாமர் தெளிவாகக் கூறியுள்ளார். இந்தியா, பிரிட்டன் இடையேயான எதிர்கால உறவுகளில் எந்த வேறுபாடும், சிக்கலும் இருக்காது என நான் எண்ணுகிறேன்,” என்றார்.

"தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தைப் பொறுத்த வரையில், இது தொடர்பாக இரு தரப்பிலும் தற்போது நேர்மறையான அணுகுமுறை உள்ளது, எதிர்காலத்திலும் இது இப்படியே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த அரசு மற்ற பிரச்னைகளிலும் இந்தியாவுடன் இணைந்து செயல்படும்," என்றார்.

தொழிலாளர் கட்சியின் தேர்தல் அறிக்கை
படக்குறிப்���ு, தொழிலாளர் கட்சி அறிக்கையின் முதல் பக்கம்

தொழிலாளர் கட்சி தேர்தல் அறிக்கையில் இந்தியா பற்றி என்ன இருந்தது?

தொழிலாளர் கட்சி தனது 142-பக்க அறிக்கையில், "கட்சி அதன் நட்பு நாடுகள் மற்றும் பிராந்திய சக்திகளுடன் நவீன கூட்டாண்மைகளை உருவாக்கி, உறவுகளை பலப்படுத்தும்," என்று கூறியுள்ளது.

பக்கம் எண் 126-இல் இந்தியா குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், "இந்தியாவுடன் ஒரு புதிய மூலோபாயக் கூட்டாண்மையை உருவாக்க விரும்புகிறோம். அதில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் பாதுகாப்பு, கல்வி, தொழில்நுட்பம் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற துறைகளில் ஆழமான ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் உள்ளடங்கும்," என்று கூறப்பட்டுள்ளது.

"பிராந்திய பாதுகாப்பு, எரிசக்தி, வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகிய விஷயங்களில் வளைகுடா முழுவதும் உள்ள நட்பு நாடுகளுடன் எங்களது ஒத்துழைப்பை வலுப்படுத்துவோம்," என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருவநிலை மாற்றம் குறித்து பேசப்படும் பக்கத்தில் பாகிஸ்தான் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், "நாங்கள் எங்கள் சர்வதேச நட்பு நாடுகளுடன், குறிப்பாக பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் உள்ளிட்ட பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களை எதிர்கொள்ளும் நாடுகளுடன் இணைந்து செயல்படுவோம்," என்று கூறப்பட்டுள்ளது.

சீனாவைப் பொறுத்தவரை, கடந்த 14 ஆண்டுகளில் கன்சர்வேடிவ் கட்சியுடனான முரண்பாடுகள் காரணமாக, சீனாவுடனான உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது. இதை நிர்வகிப்பதற்கு, தொழிலாளர் கட்சி நீண்டகால நோக்கிலான மற்றும் மூலோபாய அணுகுமுறையை கொண்டு வரும் என்றும் கூறுகிறது.

'இயன்றவரை ஒத்துழைப்போம், தேவையான இடங்களில் போட்டியிடுவோம், தேவைப்படும் இடங்களில் சவால் விடுவோம்' என தேர்தல் அறிக்கை கூறுகிறது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)