ஆப்கானில் தாக்குதல் நடத்தப்போவதாகக் கூறிய பாகிஸ்தான் - தாலிபன்களின் பதில் என்ன?

பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானில் ராணுவ நடவடிக்கை எடுக்க முடிவு :  விளைவு என்னவாக இருக்கும்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் சையத் அசிம் முனீர்
  • எழுதியவர், ஆஸம் கான்
  • பதவி, பிபிசி உருது

பாகிஸ்தான் அரசாங்கம் சமீபத்தில் ஆப்கானிஸ்தானுக்குள் எல்லை தாண்டிய தாக்குதல்களை மேற்கொள்வது குறித்து சூசகமாகக் கூறியதை அடுத்து, ஒருபுறம் ஆப்கானிஸ்தானின் தாலிபன் அரசாங்கம் இது ஒரு விவேகமற்ற நடவடிக்கை என்று கூறியது. மறுபுறம் பாகிஸ்தான் அரசாங்கம் சொந்த நாட்டுக்குள் எதிர்ப்பைச் சந்தித்து வருகிறது.

தடை செய்யப்பட்ட அமைப்பான தெஹ்ரீக்-இ-தாலிபன் பாகிஸ்தான் (TTP), ஆப்கானிஸ்தான் மண்ணைப் பயன்படுத்தியதே தீவிரவாத நடவடிக்கைகள் அதிகரிப்பதற்குக் காரணம் என்றும், அந்த அமைப்பைக் கட்டுப்படுத்த ஆப்கானிஸ்தான் அரசு தவறிவிட்டது என்றும் பாகிஸ்தான் கருது���ிறது. மேலும் தீவிரவாதிகள் எல்லைக்கு அப்பால் இருந்து பாதுகாப்பு படையினர், சீன மற்றும் பாகிஸ்தான் குடிமக்கள் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்று பாகிஸ்தான் கருதுகிறது.

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கூற்றுப்படி, பாகிஸ்தான் தரப்பு ஆப்கானிஸ்தானிடம் அந்த தீவிரவாதக் குழுக்களைப் பற்றி பலமுறை தெரிவித்து ஆதாரங்களையும் வழங்கினர், ஆனால் தாலிபன் அரசாங்கத்தால் பாகிஸ்தானின் அச்சத்தைப் போக்க முடியவில்லை, மேலும் இந்தக் குழுக்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதல்களை சுதந்திரமாக திட்டமிடுகின்றன.

இதற்கு முன்னதாக, ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இந்த ஆண்டு மார்ச் மாதம், ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பாக்டிகா மற்றும் கோஸ்ட் பகுதிகளில் பாகிஸ்தான் கப்பல்கள் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியதாக ஆப்கானிஸ்தான் கூறியது, அதன்பிறகு இந்த நடவடிக்கையில் ஹபீஸ் குல் பகதூர் குழுவைச் சேர்ந்த தீவிரவாதிகள் குறிவைக்கப்பட்டதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் கூறியது.

பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானில் ராணுவ நடவடிக்கை எடுக்க முடிவு :  விளைவு என்னவாக இருக்கும்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப்

பாகிஸ்தானின் நிலைப்பாடு என்ன?

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் அரசு ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளும் திட்டத்தை பற்றி சுட்டிக் காட்டியதற்கான காரணம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.

பாகிஸ்தானின் நிலைப்பாடு என்ன? ஆப்கானிஸ்தானில் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டால் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை நிபுணர்களிடம் பேசி தெரிந்துகொள்ள பிபிசி உருது முயற்சித்தது.

முதலில் ஆப்கானிஸ்தான் குறித்து பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் தனது அறிக்கையில் கூறியிருப்பதைப் பார்ப்போம்.

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தனது அறிக்கையில், "அஸ்ம்-இ-இஸ்தேகாம் நடவடிக்கையின் கீழ், தேவை ஏற்பட்டால் ஆப்கானிஸ்தானில் உள்ள 'தெஹ்ரீக்-இ-தாலிபன் பாகிஸ்தான்’ அமைப்பின் தளங்களை குறிவைக்கலாம்," என்று கூறியுள்ளார். கடந்த காலங்களில் இடம்பெற்ற இவ்வாறான செயற்பாடுகளையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் பிபிசி-க்கு பேட்டியளித்த கவாஜா ஆசிப், ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபன்களுக்கு எதிராக பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடவடிக்கை எடுக்கும் என்று குறிப்பிட்டார்.

"நாங்கள் அவர்களின் (ஆப்கானிஸ்தான்) எல்லைக்குள் தாக்குதல் நடவடிக்கை எடுத்தது உண்மைதான். ஏனெனில் அவர்களின் நிலத்தைச் சேர்ந்த மக்கள் இங்கு வந்து பாகிஸ்தானுக்குள் தாக்குதல் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அவர்களுக்கு பதிலடி கொடுக்காமல் நட்பு பாராட்டி கேக் ஊட்ட வேண்டுமா என்ன?” என்றார்.

பாகிஸ்தான் நிலத்தில் தாக்குதல் நடத்தியவர்களின் மறைவிடங்கள் குறிவைக்கப்பட்டுள்ளன என்றும், இந்தப் பணி எதிர்காலத்திலும் தொடரும் என்றும் அவர் கூறினார்.

தாலிபன் அரசின் பதில் என்ன?

கடந்த மார்ச் மாதம் நடந்த தாக்குதல் குறித்து, ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் ஒரு அறிக்கையில், பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஐந்து பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகள் உயிரிழந்ததாகக் கூறினார்.

சர்வதேச எல்லைச் சட்டத்தின்படி இதுபோன்ற நடவடிக்கைகள் எடுப்பதற்கு முன் ஆப்கானிஸ்தான் அரசிடம் பாகிஸ்தான் முன்னதாக அறிவித்ததா என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய போது, "நாங்கள் வருகிறோம் என்று அவர்களிடம் முன்னரே சொல்லிவிட்டால், அவர்களை ஆச்சர்யப்படுத்த முடியாது அல்லவா, எனவே சொல்லிவிட்டு தாக்க மாட்டோம். ஆனால் நீங்கள் தயாராக இருங்கள்," என்று கூறினார்.

ஆப்கான் தாலிபன் தரப்பு பதில்: “ஆப்கானிஸ்தானை சேதப்படுத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.”

ஆப்கானிஸ்தானுக்குள் நடவடிக்கை எடுக்கப் போவதாகப் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியதற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபன் அரசாங்கம், இது விவேகமற்றது என்று பதிலளித்துள்ளது.

சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "ஆப்கானிஸ்தானின் தேசிய இறையாண்மை மீறப்பட்டதாக பாகிஸ்தான் அமைச்சர் கூறுவது ஒரு முட்டாள்தனமான கருத்தாகும். இது அவநம்பிக்கையை விதைக்கலாம் மற்றும் யாருடைய நலன்களுக்கும் உதவாது,” என்று ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், முக்கியமான விஷயங்களில் இதுபோன்ற சாரமற்ற அறிக்கைகளை வெளியிட பாகிஸ்தான் தலைமை அனுமதிக்கக் கூடாது என்று ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மறுபுறம், தோஹாவில் உள்ள ஆப்கானிஸ்தான் தாலிபன் அரசியல் அலுவலகத்தின் தலைவர் சோஹைல் ஷாஹீன், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் சமீபத்திய அறிக்கைக்கு பதிலளிக்கையில், ஆப்கானிஸ்தானுக்குத் தீங்கு விளைவிக்க யாரையும் அனுமதிக்க மாட்டோம் என்று கூறினார்.

டோலோ நியூஸ் (TOLOnews) செய்தி நிறுவனத்துடன் பேசிய சோஹைல் ஷாஹீன், ஆப்கானிஸ்தான் மண்ணில் பிற நாட்டுக்கு எதிரான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவது ஆப்கானிய கொள்கையின் ஒரு பகுதி அல்ல என்றும் கூறினார்.

"நாங்கள் யாருக்கும் தீங்கு விளைவிப்பதில்லை. எங்கள் மன்ணில் யாருக்கும் தீங்கு செய்வதையும் அனுமதிக்க மாட்டோம். நாங்கள் யாருடைய உள் விவகாரங்களிலும் தலையிடுவதில்லை," என்று குறிப்பிட்டார்.

தாக்குதல் நடத்த விரும்புவோர் கடந்த காலத் தாக்குதல்களின் வரலாற்றை முழுமையாக ஆய்வு செய்து, அத்தகைய தாக்குதலின் சாத்தியமான விளைவுகளை கருத்தில் கொள்ள வேண்டும் என்று சோஹைல் ஷாஹீன் கூறினார்.

சொந்த நாட்டிலேயே எதிர்ப்பை சந்திக்கும் பாகிஸ்தான் அரசாங்கம்

பாகிஸ்தானுக்குள் கவாஜா ஆசிப்பின் கருத்து கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.

'ஜமியத் உலமா-இ-இஸ்லாம்’ அமைப்பின் மௌலானா ஃபஸ்லுர் ரஹ்மான் மற்றும் 'பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப்’ (PTI) இயக்கம் இந்த அறிக்கையை பொறுப்பற்ற அறிக்கை என்று கூறியுள்ளனர்.

பெஷாவரில் நடந்த பழங்குடியினர் நிகழ்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மௌலானா ஃபஸ்லுர் ரஹ்மான், இஸ்லாமாபாத் காபூல் தொடர்பான தனது முடிவை கோபத்தாலும் உணர்ச்சியாலும் எடுக்கிறது என்று கூறினார்.

இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்னைகளை அவசரமாகவோ அல்லது அச்சுறுத்தல் மூலமாகவோ தீர்க்க முடியாது, ஏனெனில் அவ்வாறு செய்வது இருதரப்பு உறவுகளில் மேலும் மோசமடைய வழிவகுக்கும் என்று அவர் கூறினார்.

பி.டி.ஐ கட்சியின் தேசிய சட்டமன்ற உறுப்பினர் சர்தாஜ் குல், நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியாவுக்குப் பதிலாக ஆப்கானிஸ்தான் எதிரியாக கருதப்படுகிறது. அண்டை நாடான 'பரதார்' உடன் பாகிஸ்தானை மோதலுக்கு தள்ளக் கூடாது என்றார்.

இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட பி.டி.ஐ செய்தித் தொடர்பாளர், இரான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட எந்த அண்டை நாடுகளுடனும் உள்நாட்டில் தெளிவற்ற நோக்கங்களுடன் எந்த ராணுவ நடவடிக்கையையும் அல்லது ஆயுத மோதலையும் தனது கட்சி ஒருபோதும் அனுமதிக்காது என்றார்.

அவர் மேலும் கூறுகையில், அமைதி, மரியாதை மற்றும் வலுவான பரஸ்பர உறவுகள் மூலம் அண்டை நாடுகளுடன் பிரச்னையை தீர்க்க பிடிஐ பரிந்துரைக்கிறது.

பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானில் ராணுவ நடவடிக்கை எடுக்க முடிவு :  விளைவு என்னவாக இருக்கும்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜமியத் உலமா-இ-இஸ்லாம் மற்றும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) அமைப்பின் மௌலானா ஃபஸ்லுர் ரஹ்மான் இந்த அறிக்கையை பொறுப்பற்றது என்று கூறியுள்ளனர்

'பாகிஸ்தானின் கருத்து உண்மைக்குப் புறம்பானது'

ஆப்கானிஸ்தான் தொடர்பான பாகிஸ்தானின் குற்றச்சாட்டு யதார்த்தமற்றது என்று காபூல் பல்கலைக்கழகத்தின் அரசியல் துறையைச் சேர்ந்த ஃபைஸ் ஜலாண்டி பிபிசியிடம் தெரிவித்தார்.

"தாலிபன்கள் உட்பட எந்த ஆப்கானிஸ்தான் அரசாங்கமும் சர்வதேச எல்லையாக ஏற்றுக்கொள்ளாத டுராண்ட் லைன் பிரச்னையை மனதில் வைத்து பாகிஸ்தான் இவ்வாறு நடந்து கொள்கிறதா அல்லது ஆப்கானிஸ்தான் எதிர்கொள்ளும் நெருக்கடியைப் பாகிஸ்தானால் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லையா என்று தெரியவில்லை,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவரைப் பொறுத்தவரை, ஆப்கானிஸ்தானைத் தாக்கும் திட்டத்துக்கு முன் பாகிஸ்தான் தனது சொந்த மண்ணைப் பற்றி கருத்தில் கொள்ள வேண்டும். அதன் சொந்த மண்ணிலேயே அதன் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்கள் இருக்கிறது. அதன் மீது முதலில் கவனம் செலுத்தி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

ஃபைஸ் ஜலாண்டியின் கூற்றுப்படி, பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானை தாக்குவதையும், அவர்களின் நியாயத்தை கேள்விக்குள்ளாக்குவதையும் ஆப்கானிஸ்தான் தாலிபன்கள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள்.

ஆப்கானிஸ்தான் ஆய்வாளரின் கூற்றுப்படி, "தாலிபன் அரசாங்கத்திற்கு 'தெஹ்ரீக்-இ-தாலிபன் பாகிஸ்தான்’ அமைப்பைக் கட்டுப்படுத்தும் போதுமான அதிகாரம் இல்லை, அவர்களை சரணடையச் செய்ய முடியாத சூழலில் தாலிபன் அரசாங்கம் உள்ளது. பாகிஸ்தான் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்."

"மேலும், கடந்த காலங்களில் ஆப்கானிஸ்தான் தாலிபன்கள் சரணடைய வேண்டும் என்று பாகிஸ்தானிடம் அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தியது. பாகிஸ்தானுக்கு அந்தச் 'செல்வாக்கு’ இருந்தபோதிலும், பாகிஸ்தானால் இதைச் செய்ய முடியவில்லை. ஆப்கானிஸ்தானால் மட்டும் எப்படி முடியும்?”

மறுபுறம், பாதுகாப்பு ஆய்வாளர், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி முகமது சாத் பிபிசி-யிடம், பாகிஸ்தானின் பாதுகாப்பு அதன் சொந்தப் பொறுப்பு என்று கூறினார்.

"இப்போது இதுபோன்ற சூழ்நிலையில் பாகிஸ்தான் வேறு எந்த நாட்டையும் சார்ந்திருக்கக் கூடாது,” என்றார்.

பாகிஸ்தானின் மிக முக்கியமான பிரச்னை

ஒரு கேள்விக்கு பதிலளித்த அவர், பாகிஸ்தானின் மிக முக்கியமான பிரச்னை, தன்னைத் தற்காத்துக் கொள்வதா, அல்லது மற்றவர்களின் உணர்வுகளைக் கருத்தில் கொள்வதா என்பதுதான் என்றார்.

"முந்தைய சகாப்தத்தில், தெளிவான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் இல்லாமல், பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்கு கொண்டு வரப்பட்டது மட்டுமல்லாமல், சிறைகளின் பூட்டுகளும் திறக்கப்பட்டு பலர் விடுவிக்கப்பட்டனர்,” என்றார்.

அவர் தொடர்ந்து பேசுகையில், "தீவிரவாதிகளுடன் ஒருபோதும் பேச்சுவார்த்தை நடத்தப்படாது என்பது தீர்க்கமான கொள்கை," என்றார்.

அவரது கருத்துப்படி, ஒருவேளை பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றால், முதலில் விதிக்கப்பட வேண்டிய நிபந்தனை, அத்தகைய தீவிரவாத கும்பல்கள் தங்கள் நடவடிக்கைகளை கைவிடுவதற்கான முடிவை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.

அமெரிக்கச் சிந்தனைக் குழுவான 'தி வில்சன் சென்டரின்' தெற்காசியா நிறுவனத்தின் இயக்குநர் மைக்கேல் குகல்மேன் பிபிசி உருதுவிடம் பேசுகையில், பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப்பின் அறிக்கையை பாகிஸ்தான் அறிவித்திருக்கும் புதிய பயங்கரவாத எதிர்ப்புத் திட்டத்தோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்று கூறினார்.

அவரைப் பொறுத்தவரை, “இந்தப் புதிய திட்டம் உளவுத்துறை நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டாலும், ஆப்கானிஸ்தான் எல்லையில் நடவடிக்கை எடுப்பதும் அதன் ஒரு பகுதியாக இருக்கலாம்."

பயங்கரவாதத்திற்கு எதிரான தனது போரை ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு செல்ல பாகிஸ்தான் விரும்புகிறது என்று பாதுகாப்பு அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

"ஒருவேளை இந்த அறிக்கை தெஹ்ரீக்-இ-தாலிபன் பாகிஸ்தான் இயக்கத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தாலிபன் அரசை நிர்பந்திக்கும் என்று பாகிஸ்தான் நம்புகிறது, இது எல்லை தாண்டிய நடவடிக்கையின் யோசனையையும் மாற்றக்கூடும். வேறு எந்த நாடும் தன் மண்ணில் நடவடிக்கை எடுப்பதை தாலிபான் அரசு விரும்பவில்லை,” என்கிறார் குகல்மேன்.

மைக்கேல் குகல்மேனின் கூற்றுப்படி, சமீப மாதங்களில் ஆப்கானிஸ்தானுக்குள் பாகிஸ்தான் நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் பிரச்னை தீர்க்கப்படாமல் உள்ளது. மேலும் இந்த இரண்டு முன்னேற்றங்களும் பாகிஸ்தானைத் திருப்திப்படுத்தும் வகையில் தெஹ்ரீக்-இ-தாலிபன் பாகிஸ்தான் இயக்கத்துக்கு எதிராகச் செயல்பட தாலிபன்களைக் கட்டாயப்படுத்த முடியவில்லை என்று கூறுகிறார்.

அவர் மேலும் பேசுகையில், "எல்லை தாண்டிய நடவடிக்கைகளின் போது பாகிஸ்தானுக்குக் கடுமையான ஆபத்துகள் உள்ளன, அவற்றில் ஒன்று ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் சில காலம் தொடர்ந்து செயல்பட்டால், ஆப்கானிஸ்தான் தாலிபன்கள் பாகிஸ்தானுக்கு எதிராக தாக்குதல்களை நடத்த ஆரம்பிக்கும்,” என்றார்.

தாலிபன்கள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

மூத்த பத்திரிக்கையாளரும் ஆய்வாளருமான அர்ஷத் யூசுப்சாய் பிபிசி-யிடம் பேசுகையில், "பாகிஸ்தான் ராணுவம் டி.டி.பி (தெஹ்ரீக்-இ-தாலிபன் பாகிஸ்தான்) உடன் நேரடியாகப் பேசி இந்தப் பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என்று ஆப்கான் தாலிபன் விரும்புகிறது," என்று கூறினார்.

அவர் கூறுகையில், “பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் தீவிரம் காட்டவில்லை என்றும், பேச்சுவார்த்தை அமைதியை நோக்கி நகரும் போது, பாகிஸ்தான் நிர்வாகம் பின்வாங்கி, வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை என்றும் ஆப்கன் அரசின் மூத்த தலைவர்கள் கூறுகின்றனர்,” என்றார்.

தீவிரவாத அமைப்புகளான தௌலத்-இ-இஸ்லாமியா (இஸ்லாமிய அரசு அல்லது ஐ.எஸ்) மற்றும் வடக்கு கூட்டணியின் அச்சுறுத்தலை சரியாகச் சமாளிக்க ஆப்கானிஸ்தான் அரசும் அமைதியான தீர்வை விரும்புகிறது என்று அர்ஷாத் கூறுகிறார்.

அவரைப் பொறுத்தவரை, டி.டி.பி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால், இந்தக் குழு 'ஐ.எஸ்' உடன் கைகோர்க்கக்கூடும் என்றும், அத்தகையச் சூழ்நிலையில், ஆப்கானிஸ்தான் முழுவதிலும் உள்ள தாலிபன் அரசாங்கத்திற்கு மற்றொரு சிக்கல் உருவாகும் என்றும் தாலிபன் தலைவர்கள் கருதுகிறார்கள்.

அர்ஷத் யூசுப்சாய் கூறுகையில், சீனா தொடர்பான ஆப்கானிஸ்தான் தாலிபன் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவரைப் பொறுத்தவரை, சீனாவின் கோரிக்கைகளை ஏற்று, ஆப்கானிஸ்தான் தாலிபன்கள் சீனாவுக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படும் 'கிழக்கு துர்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம்' (ETIM) குழுவை நிராயுதபாணியாக்க ஒரு பகுதியைக் கட்டுப்படுத்தியுள்ளனர்.

ஆனால் ஆப்கானிய ஆய்வாளர் ஃபைஸ் ஜலாண்டியின் கூற்றுப்படி, “சர்வதேச 'கிழக்கு துர்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம்' (ETIM) என்பது ஒரு சிறிய குழுவாகும், இது தனிமைப்படுத்தப்பட்ட அமைப்பாக கருதப்படுகிறது மற்றும் தொலைதூர மலைப்பகுதிகளில் இயங்குகிறது."

அதே நேரத்தில், "தெஹ்ரீக்-இ-தாலிபன் பாகிஸ்தான் இயக்கம் ஆப்கானிஸ்தான் தாலிபன்களைப் போலவே மொழி, கலாச்சாரம் மற்றும் புவியியல் இருப்பிடத்தைக் கொண்டுள்ளது. ஆனால் இந்த இயக்கம் தனிமைப்படுத்த படாமல் நகர்ப்புறங்களில் இயங்கி வருகிறது," என்றார்.

பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானில் ராணுவ நடவடிக்கை எடுக்க முடிவு :  விளைவு என்னவாக இருக்கும்?

பட மூலாதாரம், Getty Images

பாகிஸ்தானின் திட்டம் என்ன?

மைக்கேல் குகல்மேனின் கூற்றுப்படி, “பாகிஸ்தானில் டி.டி.பி-யின் இருப்பு மற்றும் செல்வாக்கை நீக்கப் பாகிஸ்தான் முயற்சிகளை மேற்கொள்ளும். இந்த நடவடிக்கையின் மூலம், பாகிஸ்தானுக்குள் வரையறுக்கப்பட்ட குழுக்களுடன் டி.டி.பி இயக்கம் தாக்குதல்களை நடத்துவது கடினமாகிவிடும்."

“இந்த நடவடிக்கை மூலம், வேறு எந்த நாட்டின் உதவியும் இல்லாமல், பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பாகிஸ்தான் தனித்து போராடுகிறது என்பது ஒருபுறம் இருக்க, பாகிஸ்தான் தற்போது ஆப்கானிஸ்தானில் அதிகரித்து வரும் பயங்கரவாத அச்சுறுத்தல் சூழலை பயன்படுத்தி அமெரிக்கா உட்பட அனைத்து முக்கிய நட்பு நாடுகளிடமிருந்து அதிக ராணுவ உதவியைப் பெறுகிறது,” என்றார்.

குகல்மேனின் கூற்றுப்படி, பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் தற்போது மிகவும் பதட்டமாக உள்ளது.

"எவ்வாறாயினும், முந்தைய காலங்களில் கூட, இந்த நாடுகளுக்கு இடையேயான உறவுகள் பலவீனமாகத் தான் இருந்தது. பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்த பிறகு ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையை சர்வதேச எல்லையாகத் தாலிபன் உட்பட எந்த அரசும் ஏற்றுக்கொண்டதில்லை. ஆனால் இப்போது எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் சூழ்நிலை காரணமாக இந்த உறவுகளில் மேலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

மைக்கேல் குகல்மேனின் கூற்றுப்படி, இப்போது மீண்டும் சர்வதேச பயங்கரவாதிகளின் புகலிடமாக ஆப்கானிஸ்தான் மாறிவருகிறதோ என்ற அச்சம் சர்வதேச அளவில் உள்ளது என்பதும் உண்மைதான்.

அவரைப் பொறுத்தவரை, இந்த அச்சத்திற்குக் காரணம் டி.டி.பி இயக்கம் காரணம் இல்லை. ஆனால் 'ஐ.எஸ்' அமைப்பு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆக இருக்கும்.

"இந்தக் குழு மிகப் பெரிய அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் திறனைப் பெற்று வருகிறது, மேலும் இது உலகிற்கும் குறிப்பாக அமெரிக்கா மற்றும் அதன் நேட்டோ நட்பு நாடுகளுக்கும் கவலை அளிக்கிறது," என்றார்.

"இந்தக் குழுவிற்கு எதிராக தாலிபன்கள் பயனுள்ள நடவடிக்கை எடுப்பதாக வாஷிங்டன் நம்புகிறது. இருப்பினும், அந்த நடவடிக்கைகளின் நோக்கம், ஆப்கானிஸ்தானுக்குள் ஐ,எஸ் கோரசான் (IS Khorasan) பிரிவால் முன்வைக்கப்படும் அச்சுறுத்தலை அகற்றுவதே தவிர, முழு உலகத்திலிருந்தும் இந்த அச்சுறுத்தலை வேரறுப்பதற்காக அல்ல," என்றார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)