பாகிஸ்தான்: மூடப்பட்ட முதல் தாய்ப்பால் வங்கி - மதகுருக்கள் அனுமதி மறுப்பதன் முழு பின்னணி

 ரஹும் மற்றும் பஷிரா

பட மூலாதாரம், Rahim Shah

படக்குறிப்பு, தங்களது குழந்தையுடன் ரஹும் மற்றும் பஷிரா
  • எழுதியவர், ரியாஸ் சோஹல்
  • பதவி, பிபிசி உருது

பாகிஸ்தானின் முதல் தாய்ப்பால் வங்கியை தொடங்குவதற்கான ஒரு லட்சிய திட்டம், கராச்சியில் உள்ள இஸ்லாமிய மதபோதனைக் கூடத்தின் ஆட்சேபனை காரணமாகச் செயலிழந்தது.

இஸ்லாமிய மதகுருக்கள் முதலில் சில நிபந்தனைகளுடன் இதற்கு ஒப்புதல் வழங்கிய போதிலும், இந்தத் தாய்ப்பால் வங்கி மையம் தொடங்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு அதைத் திரும்பப் பெற்றனர்.

உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் ஐந்தாவது இடத்தில் உள்ளது. யுனிசெஃப் கூற்றுப்படி, தெற்காசியாவிலேயே அதிக குழந்தை இறப்பு விகிதம் இங்கு உள்ளது.

தாய்ப்பால் வங்கி வாழ்வுக்கும், இறப்புக்கும் இடையில் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தக்கூடியவை. ஏனெனில் அவை நோய்வாய்ப்பட்ட மற்றும் குறைமாத குழந்தைகளுக்கு அவர்களின் சொந்தத் தாயிடம் இருந்து பால் கிடைக்காதபோது சிறந்த மாற்றாகக் காணப்படுகின்றன.

whatsapp

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

வாழ்வுக்கான போராட்டம்

பஷிரா, கராச்சிக்கு இடம் பெயர்வதற்கு முன்பு கிராமத்தில் வசித்தபோது, தனது முதல் ஆண் குழந்தையைப் பிறந்தவுடன் இழந்தார்.

கடந்த ஆண்டு கராச்சியில் பஷிராவும் அவரது கணவர் ரஹீமும் இரண்டாவது பெண் குழந்தையைப் பெற்றெடுத்தபோது, ​​இந்தக் குழந்தையையும் இழந்துவிடுவோமோ என்ற பயம் அவர்களைச் சூழ்ந்தது.

"எனது குழந்தை குறைப் பிரசவத்தில் பிறந்தது, அவளுக்குத் தாய்ப்பால் கொடுக்கும்படி மருத்துவர்கள் எங்களுக்கு அறிவுறுத்தினர்," என்று பஷிரா பிபிசியிடம் கூறினார்.

"ஆனால், எனக்குப் போதிய பால் சுரக்காததால் என்னால் அவளுக்குப் பாலூட்ட முடியவில்லை.’’

தாய்ப்பால் வங்கி

பட மூலாதாரம், Getty Images

பஷிராவும் அவரது கணவரும் உதவியற்றவர்களாக உணர்ந்தனர்.

‘’என் மகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் இன்குபேட்டரில் இருந்தாள். அவள் ஏழாவது மாதத்திலேயே பிறந்துவிட்டாள். என் மனைவிக்குத் தாய்ப்பால் வரவில்லை. ஃபார்முலா பால் கொடுக்க முடியவில்லை. என் மகளின் உயிரைக் காப்பாற்ற என்னால் முடிந்தவரை முயன்றேன்," என்கிறார் பஷிராவின் கணவர் ரஹீம் ஷா.

துக்கத்திலிருந்த இன்னொரு தாய் இவர்களது மகளைக் காப்பாற்றினார்.

"நாங்கள் தாய்ப்பால் தேடி ஒவ்வொரு மருத்துவமனையாகச் சென்றோம். இறுதியாக பிரசவத்தின்போது தனது குழந்தையை இழந்த ஒரு பெண்ணைக் கண்டுபிடித்தோம். என் குழந்தைக்கு உணவளிக்கும்படி நாங்கள் அவரிடம் கோரிக்கை வைத்தோம், அவர் மனதார ஒப்புக்கொண்டார்,” என்று பஷிரா நினைவு கூர்ந்தார்.

அந்தப் பெண்ணின் உதவி இல்லாமல், தங்களது மகள் உயிர் பிழைத்திருக்க மாட்டாள் என ரஹீம் கூறுகிறார். "குழந்தையின் நோய் எதிர்ப்புச் சக்திக்குத் தாய்ப்பால் மிகவும் தேவைப்பட்டது," என்று அவர் கூறுகிறார்.

தாய்ப்பால் வங்கி

பஷிராவின் குழந்தைக்கு ஒரு பெண் நேரடியாகவே பாலூட்டினார்.

தாய்ப்பால் வங்கியில், தானம் செய்பவரின் உடலிலிருந்து தாய்ப்பால் பெறப்பட்டு, சோதனை செய்யப்பட்டு, உறையூட்டியில் சேமிக்கப்படுகிறது. பின்னர் அது தாய்ப்பால் தேவைப்படும் குழந்தைகளுக்கு வழங்கப்படும்.

மலேசியா, இரான் உள்ளிட்ட முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள சில நாடுகளில் தாய்ப்பால் வங்கி வசதிகள் உள்ளன.

இந்த முறையில், தாய்ப்பாலை சேமித்து வைத்துக் கொடுப்பது, இஸ்லாமிய சட்டத்திற்கு எதிரானதாக உள்ளதாகச் சில மதகுருக்கள் வாதிடுகின்றனர்.

இஸ்லாத்தில், உயிரியல் ரீதியாகத் தொடர்பில்லாத ஒரு குழந்தைக்கு ஒரு பெண் தாய்ப்பால் கொடுக்கும்போது, அந்தக் குழந்தையுடன் 'தாய்மை உறவை’ அப்பெண் வளர்த்துக் கொள்வதாக நம்பப்படுகிறது. ஆகையால், அந்தக் குழந்தைக்கு அதே தாயால் பாலூட்டப்படும் பிற குழந்தைகள் உடன்பிறந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள்.

தாய்ப்பால்

பட மூலாதாரம், Sindh Institute Of Child Health and Neonatology

இஸ்லாமிய சட்டத்திற்கு இணங்கிய அனைத்துமே 'ஹலால்' என்றும், அதற்கு நேர்மாறானது 'ஹராம்' என்றும் அழைக்கப்படுகிறது.

பாகிஸ்தானில் தாய்ப்பால் வங்கியை நிறுவுவது, இஸ்லாமிய சட்டப்படி ஹராம் என்று சில மதகுருக்கள் கூறுகின்றனர்.

ஆனால் தாய்ப்பால் வங்கியை இஸ்லாமிய சட்டத்திற்கு உட்பட்டதாக மாற்ற அதிகாரிகள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

''இஸ்லாமிய சட்டங்களின்படி பெண்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்க முடியும்'' என இஸ்லாமிய கருத்தியல் கவுன்சிலுக்கு கடிதம் அனுப்பியதாக பிபிசியிடம் மாகாண சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அஸ்ரா பெச்சுஹோ தெரிவித்தார்.

''தாய்ப்பாலை தானம் செய்யும் பெண்களின் விவரங்கள் பதிவு செய்யப்படும். இது இந்த குழந்தைகளின் பெற்றோருடன் பகிர்ந்து கொள்ளப்படும். இந்தt தரவுகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும்,” என்று டாக்டர் பெச்சுஹோ உறுதியளிக்கிறார்.

ஒரே தாயிடம் இருந்து தாய்ப்பால் குடித்தவர்கள் திருமணம் செய்துகொள்வது இஸ்லாமிய சட்டப்படி சட்டவிரோதமானது என்பதால், இந்தக் கவலையைப் போக்க தாய்ப்பால் தானம் வழங்கிய அனைவரின் விவரங்களும் சேகரிக்கப்பட்டுப் பகிரப்படும் என பெச்சுஹோ கூறுகிறார்.

ஆண் குழந்தைகளின் தாய்மார்கள், ஆண் குழந்தைகளுக்கு மட்டும் பால் வழங்குவதையும், பெண் குழந்தைகளின் தாய்மார்கள், பெண் குழந்தைகளுக்கு மட்டும் பால் வழங்குவதையும் உறுதிப்படுத்துவதன் மூலம், தற்போதுள்ள முட்டுக்கட்டை நிலையை நிவர்த்தி செய்ய முடியும் எனவும் அவர் நம்புகிறார்.

கடந்த 2012ஆம் ஆண்டு, துருக்கியில் இஸ்லாமிய மதகுருக்கள் இதுபோன்ற ஒரு அணுகுமுறையை மேற்கொண்டனர்.

ஃபத்துவா ஏற்படுத்திய தாக்கம்

கராச்சி தாய்ப்பால் வங்கி, முதலில் 25 டிசம்பர் 2023 அன்று சம்பந்தப்பட்ட இஸ்லாமிய அமைப்பிடமிருந்து சில நிபந்தனைகளுடன் ஒப்புதலைப் பெற்றது.

தானம் அளிப்பவர் பெயர்களை, பெறுநர்களுடன் அதிகாரிகள் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஒரு முஸ்லிம் குழந்தைக்கு ஒரு முஸ்லிம் தாயிடமிருந்து மட்டுமே பால் கொடுக்கப்பட வேண்டும். பணம் வசூலிக்கக்கூடாது. கர்ப்ப காலத்தில் 34 வாரங்களுக்குள் பிறந்த குழந்தைகளுக்குப் பால் கொடுக்கலாம் ஆனால், அவர்களின் தாய்மார்களால் போதுமான பால் உற்பத்தி செய்ய முடியவில்லை என்றால் மட்டுமே வழங்க வேண்டும் போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

பாகிஸ்தானின் அனைத்து அரசுத் துறைகளும் ஷரியா சட்டம் அல்லது இஸ்லாமிய சட்டத்திற்கு இணங்க வேண்டும் என அந்நாட்டின் அரசமைப்புச் சட்டம் கூறுகிறது.

அதிகாரிகள் இந்த நிபந்தனைகளை நிறைவேற்றுவதில் நம்பிக்கையுடன் உள்ள நிலையில், ​​கராச்சியில் உள்ள ஒரு இஸ்லாமிய மதபோதனைக் கூடம் சந்தேகத்தை எழுப்பியது.

இஸ்லாமிய சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படும் அனைத்து வழிகாட்டுதல்களையும் செயல்படுத்துவது தாய்ப்பால் வங்கிக்கு மிகக் கடினமாக இருக்கும் என 16 ஜூன் 2024 அன்று வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட ஃபத்துவா கூறுகிறது.

தாருல் உலூம் க��ாச்சி எனும் இஸ்லாமிய மதபோதனைக் கூடத்தில் இருந்து தங்களுக்கு ஃபத்துவா வந்ததால், தாய்ப்பால் வங்கியை நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று சிந்து இன்ஸ்டிடியூட் ஆஃப் சைல்டு ஹெல்த் அண்ட் நியோனாட்டாலஜி ((SICHN)) கூறுகிறது.

"அடுத்தகட்டமாக, ​​தாருல் உலூம் கராச்சி, இஸ்லாமிய சித்தாந்த கவுன்சில் ஆகியோரிடம் இருந்து மேலும் வழிகாட்டுதலைப் பெறுவோம்" என்று மருத்துவமனை கூறுகிறது.

தாய்ப்பாலின் முக்கியத்துவம்

தாய்ப்பாலின் முக்கியத்துவம்

பட மூலாதாரம், Unicef

யுனிசெஃப் கருத்துப்படி, பாகிஸ்தானில் புதிதாகப் பிறந்த 1,000 குழந்தைகளில் 54 குழந்தைகள் இறக்கின்றனர். 2030ஆம் ஆண்டுக்குள் அதை 12 ஆகக் குறைக்க அந்நாடு இலக்கு வைத்துள்ளது.

தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வளர்ச்சிக்கான ஊட்டச்சத்துகள் கிடைக்கும். "0-23 மாதங்களில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் சிறந்த முறையில் தாய்ப்பால் கொடுத்தால், ஒவ்வோர் ஆண்டும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 820000க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிர்களைக் காப்பாற்ற முடியும்" என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

இந்தத் திட்டத்தை ஆதரித்த யுனிசெஃப், தற்போது கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

உலகளாவிய விதிமுறைகள் இல்லை

’’தாய்ப்பால் வங்கிகள் 60 நாடுகளில் செயல்படுகின்றன. ஆனால் இதற்கு மத எதிர்ப்பு வலுவாக உள்ளது. 2019ஆம் ஆண்டு வங்கதேசத்தில் நிறுவப்பட்ட ஒரு தாய்பால் வங்கி மதக் கட்சிகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து ஒரு மாதத்திற்குள் மூடப்பட்டது’’ என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

"மேற்கத்திய நாடுகளில் உள்ள முஸ்லிம் குடும்பங்கள் தானம் அளிப்பவரின் பெயர் தெரியாததால் தாய்ப்பால் வங்கியில் இருந்து பாலை வாங்கத் தயங்குகின்றன" என அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸின் ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்ப்பால் வங்கியை அமைப்பதற்கான நிலையான வழிகாட்டுதல்கள் எதுவும் இதுவரை இல்லை. உலக சுகாதார நிறுவனம் இப்போதுதான் இதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளது. பாகிஸ்தானின் முதல் தாய்பால் வங்கியை அமைப்பதற்கான முயற்சி என்னவாகும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

கராச்சியில், பஷிராவின் குழந்தை இப்போது ஆரோக்கியமாக இருக்கிறார். தானம் அளித்தவரின் விவரங்ளை வழங்கி ஒரு மருத்துவமனை செய்த ஒரு முறைசாரா முயற்சியால் இது சாத்தியமானது. மற்ற தாய்மார்களுக்கு உதவ பஷிரா இப்போது காத்திருக்கிறார்.

"நான் அந்தப் பெண்ணுக்கு என்றென்றும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். எதிர்காலத்தில் ஒரு உயிரைக் காப்பாற்றும் வாய்ப்பு கிடைத்தால், எந்தக் குழந்தைக்கும் இதைச் செய்வேன்," என்று பஷிரா கூறுகிறார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)