ஆதிகாலக் கல்லறையிலிருந்து திருடப்பட்டு, சாகசமாக மீட்கப்பட்ட வானவியல் பொக்கிஷத்தின் கதை

உலகின் மிகப் பழமையான `நெப்ரா செலஸ்டியல் டிஸ்க்’ கொள்ளையர்களிடம் இருந்து  மீட்டெடுக்கப்பட்ட கதை

பட மூலாதாரம், SCIENCE PHOTO LIBRARY

படக்குறிப்பு, அற்புதமான நெப்ரா செலஸ்டியல் டிஸ்க்
  • எழுதியவர், பிபிசி முண்டோ
  • பதவி, பிபிசி நியூஸ்

3,000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான ஒரு புதையலில் இருந்த, வானத்தின் வரைபடத்தைக் கொண்ட ஒரு வட்டு, கொள்ளையடிக்கப்பட்டு, அதனை ஒரு ஆராய்ச்சியாளர் துணிச்சலாக மீட்டு, உலகத்துக்கு அளித்த சுவாரஸ்யமான கதை.

"வான வட்டுக்காக இறக்கும் சூழல் ஏற்பட்டால், என்னை பொருத்தவரை அது மதிப்புக்குரிய மரணம்," என்கிறார் தொல்பொருள் பேராசிரியரான ஹரால்ட் மெல்லர்.

ஜெர்மனியின் சாக்��னி-அன்ஹால்ட்டின் மாநில தொல்பொருள் ஆராய்ச்சியாளரும், அருங்காட்சியக இயக்குநரும், ஜெர்மனியின் ஹாலே அன் டெர் சாலேவில் உள்ள தொல்பொருள் பேராசிரியருமான ஹரால்ட் மெல்லர் பிபிசியிடம் இதனைத் தெரிவித்தார்.

அவர் கூறுவது போன்று அவர் தனது உயிரைப் பணயம் வைக்கிறார் என்பதை  கற்பனை செய்வது கூட கடினம்.

இருப்பினும், அவர்தான் இந்தக் கதையின் கதாநாயகன். இந்தக் கதை ஒரு கல்லறைத் திருட்டில் இருந்து தொடங்குகிறது. ஒரு ரகசிய நடவடிக்கை மற்றும் உலகளாவிய போலீஸ் விசாரணையும் இதில் அடக்கம்.

கல்லறையில் தொடங்கும் கதை

ஐரோப்பாவின் மிகப்பழமையான மனிதக் குடியிருப்புகளைக் கொண்ட கிழக்கு ஜெர்மனியில் உள்ள ஒரு காட்டில் கதை தொடங்குகிறது.

மெல்லரின் கூற்றுப்படி, கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனியைப் பிரிந்த பெர்லின் சுவர் 1989-ஆம் ஆண்டு வீழ்ந்த பிறகு,  மேற்கில் இருந்து கருப்புச் சந்தை வியாபாரிகள் வந்து, மெட்டல் டிடெக்டர்களை கொண்டு பண்டைய மக்களின் சடலங்களைக் கொண்ட புதைகுழிகளைத் தேடத் துவங்கினர்.

இரண்டு கல்லறைக் கொள்ளையர்கள் 1999-இல் புதிய கற்கால கிராமங்களுக்குப் பெயர் பெற்ற நகரமான நெப்ராவுக்கு அருகிலுள்ள காட்டைச் சுற்றி வந்தனர்.

அப்போது அவர்களின் டிடெக்டர்கள் திடீரென்று உயிர் பெற்று அப்பகுதியில் ஏதோ இருப்பதைத் தெரியப்படுத்தியன.

அவர்கள் பூமியைத் தோண்டி, 3,000 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த ஒரு புதையலைக் கண்டுபிடித்தனர்.

இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான தொல்பொருள் கண்டுபிடிப்புகளில் ஒன்றை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர் என்பது அப்போது அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் கண்டுபிடித்த புதையல், மனித வரலாற்றின் மிக முக்கியமான காலகட்டங்களில் ஒன்றைப் பற்றிய நமது கருத்தை மாற்றியமைக்கும் என்பதும் அவர்களுக்கு தெரியாது.

உலகின் மிகப் பழமையான `நெப்ரா செலஸ்டியல் டிஸ்க்’ கொள்ளையர்களிடம் இருந்து  மீட்டெடுக்கப்பட்ட கதை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கல்வட்டம் (ஸ்டோன்ஹெஞ்ச்)

வெண்கல யுக சமூகத்தை பற்றிய பிம்பம்

சுமார் 4,500 ஆண்டுகளுக்கு முன்பு, வெண்கல யுகம் தொடங்கியது.  அப்போது தான் மனித நாகரிகத்தின் உண்மையான சின்னங்கள் தோன்றின.

மனிதகுலம் ஒரு மாபெரும் முன்னேற்றத்தை கண்டது. சில கலாசாரங்கள் பிரமாண்டமான கட்டிடங்கள் மற்றும் நன்கு வடிவமைக்கப்பட்ட குடியிருப்புகளுடன் மேம்பட்ட நகர்ப்புற நாகரிகங்களை உருவாக்கியன.

அதனுடன், வானியல் மற்றும் தத்துவம் அறிமுகமானது. அறிவு, கருத்துக்கள், மற்றும் தார்மீகக் கொள்கைகளைப் பாதுகாக்கும் வழிமுறையாக எழுத்து வெளிப்பட்டது.

ஆனால், இவை அனைத்தும் அருகிலுள்ள மத்தியக் கிழக்கு, வட ஆப்பிரிக்கா மற்றும் கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதிகளில் நிகழ்ந்தது.

வடக்கு ஐரோப்பாவின் வரலாறு இதற்கு முற்றிலும் வேறுபட்டதாகத் தோன்றியது.

பெரிய நகரங்கள் இல்லை, எழுத்தின் ஆரம்ப வடிவங்கள் இல்லை, தத்துவத்தின் அடையாளங்கள் இல்லை. நினைவுச்சின்னக் கட்டிடங்கள் மர்மமாக இருந்தன. ஏனென்றால் அவை செயல்பட்டது பற்றிய தகவல்கள் இல்லை.

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தங்கள் வசம் மிகவும் பழமையான சமூகத்தின் ஆதாரங்களைக் கொண்டிருந்தனர்.

எஞ்சியவற்றில் ஈட்டிகள் மற்றும் கோடாரிகள், மற்றும் குறிப்பாக வாள்கள் இருந்தன. அவை அந்த நேரத்தில் மத்திய மற்றும் வடமேற்கு ஐரோப்பாவைக் கிட்டத்தட்டக் காட்டுமிராண்டித்தனமான இடமாகக் காட்டின. இது எகிப்து மற்றும் கிரீஸின் அதிநவீன நாகரிகங்களில் இருந்து மிகவும் வேறுபட்டது என்பதைப் பிரதிபலித்தது.

'நெப்ரா வான வட்டு’ (celestial disc) பற்றி அறியப்படும் வரை வெண்கல யுகச் சமூகத்தை பற்றிய இந்த அடையாளம் தான் இருந்தது.

வானத்தின் ஆரம்பகால சித்தரிப்பைக் கொண்ட 'வான வட்டு’

உலகின் மிகப் பழமையான `நெப்ரா செலஸ்டியல் டிஸ்க்’ கொள்ளையர்களிடம் இருந்து  மீட்டெடுக்கப்பட்ட கதை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, புதையலில் வான வட்டுடன் வாள்கள், கோடாரிகள், உளி மற்றும் சுழல் ஆகியவை இருந்தன.

2001-ஆம் ஆண்டு மே மாதம், ஹரால்ட் மெல்லர் ஐரோப்பாவின் அருங்காட்சியகங்களில் ஒன்றான கிழக்கு ஜெர்மனியில் உள்ள ஹாலே அருங்காட்சியகத்தின் தலைமை தொல்பொருள் ஆய்வாளராக நியமிக்கப்பட்டார். இது ஐரோப்பாவின் முக்கிய வெண்கல யுகத்தின் கலைப்பொருள்களை கொண்ட அருங்காட்சியகத்தில் ஒன்றாகும்.

ஒரு நாள் காலை, சக ஊழியர் ஒருவர் அவருடைய வாழ்க்கையை மாற்றும் சில புகைப்படங்களை ஹரால்ட் மெல்லரிடம் காட்டினார்.

ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு அவரது அருங்காட்சியகத்திற்கு அருகிலுள்ள காட்டில் உள்ள கல்லறையைக் கொள்ளையடித்த கும்பலால் அது படம்பிடிக்கப்பட்டது.

அவர்கள் வெண்கலக் காலத்தின் பொக்கிஷமாகக் கருதப்பட்ட நகைகள், கருவிகள் மற்றும் வாள்களுக்கு மத்தியில், நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட ஒரு வட்டையும் காட்சிப்படுத்திப் புகைப்படம் எடுத்திருந்தனர்.

"இதுபோன்ற ஒன்றை அதற்கு முன்னர் நான் பார்த்ததே இல்லை. வானம் மட்டும் அல்ல, வேறு சில முக்கியத்துவம் கொண்ட ஒரு தனித்துவமான வடிவங்களும் வட்டில் (disk) இருந்தது. அது அசலான தொல்பொருள் எனில், கண்டிப்பாக ஒரு அற்புதமான கண்டுபிடிப்பாக இருக்கும் என்று நான் நினைத்தேன்," என்று அவர் பிபிசி அவுட்லுக்கிடம் கூறினார்.

"நான் அதை பார்த்து பரவசமடைந்தேன்," என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர் தொடர்ந்து பேசினார்.

"அவை உண்மையானவை என்று நான் உறுதியாக நம்பினேன். பொய் சொல்பவர்கள் இதுவரை கண்டிராத விஷயங்களை உருவாக்கமாட்டார்கள். ஏனென்றால் அதற்கு உங்களுக்கு அதீத கற்பனை தேவை, எனவே நான் கண்ட பொக்கிஷம் உண்மையானது என்று நம்பினேன்,” என்றார்.

"எதிர்பாராத கண்டுபிடிப்புகள் ஒருபோதும் பொய்யாகாது என்பது என் அனுபவம்," என்கிறார்.

நெப்ராவின் வான வட்டு அந்த விதிக்கு பொருந்துகிறது. இது வானத்தின் ஆரம்பகால சித்தரிப்பாகத் தெரிகிறது.

மெல்லருக்கு ஒரு வினோதமான யோசனை தோன்றியது. அந்தக் கொள்ளையர்களைக் கண்டுபிடித்து அறிவியல் பொக்கிஷமான அந்த வட்டை மீட்டெடுக்க அவர் தனிப்பட்ட முறையில் எல்லாவற்றையும் செய்யப் போகிறார்.

அதைத் தோண்டி எடுத்தவர்கள் அதைக் கறுப்புச் சந்தையில் விற்றனர், அங்கு அது பல்வேறு சந்தைகளுக்கு இடையில் கை மாறியது.

இதன் ஆரம்ப விலை சுமார் 3,00,000 அமெரிக்க டாலர்கள் என வதந்தி பரவியது.

ஜெர்மன் காவல்துறையின் உதவியுடன், மெல்லர் ஒரு வருடத்திற்கும் மேலாக அந்தக் கொள்ளையர்களைத் தேடினார். ஆனால், எந்தப் பயனும் இல்லை. கொள்ளையர்கள் தனது கதையை ஒரு பத்திரிகைக்கு விற்க விரும்புகிறார்கள் என்பதை அவர் அறிந்தார்.

அவர்களின் தொடர்புத் தகவல் கொடுக்கப்படவில்லை, ஆனால் "இறுதியில், வட்டு தேடும் பணியில் மத்தியஸ்தராக இருந்த ஒரு பெண்ணிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது,” என்கிறார்

பல உரையாடல்களுக்குப் பிறகு, "ரகசிய முகவராகச் செயல்பட்ட அருங்காட்சியகத்தைச் சேர்ந்த ஒரு சக ஊழியர், ஒரு உணவகத்தில் அவரைச் சந்திக்கும்படி அந்தப் பெண்ணை வற்புறுத்தினார்,” என்கிறார்.

தொல்பொருள் ஆய்வாளர் இப்போது ஒரு ரகசிய போலீஸ் நடவடிக்கையின் தலைவராக மாறினார்.

"நாங்கள் அந்தப் பெண்ணுடனும் அவருடைய வழக்கறிஞருடனும் இரவு உணவு சாப்பிட்டோம், நான் அவரிடம் அந்தத் தொல்பொருளை எனக்கு விற்கும்படி சமாதானப்படுத்த முயற்சித்தேன், அல்லது குறைந்தபட்சம் அதனை கண்களால் பார்க்க அனுமதி கேட்டேன்,” என்கிறார்.

ஐரோப்பாவின் சட்டவிரோதச் சந்தையின் மையமான சுவிட்சர்லாந்தின் பாசெல் என்னும் பகுதியில் அடுத்த சந்திப்பை ஏற்பாடு செய்வது தான் அவருக்கு கிடைத்த அடுத்த தொடர்பு.

உலகின் மிகப் பழமையான `நெப்ரா செலஸ்டியல் டிஸ்க்’ கொள்ளையர்களிடம் இருந்து  மீட்டெடுக்கப்பட்ட கதை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கிழக்கு ஜெர்மனியில் வட்டு கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு அருகில் கட்டப்பட்ட தொல்பொருள் மையமான "ஆர்ச் நெப்ரா" முன் ஹரால்ட் மெல்லர் நிற்கும் காட்சி.

கொள்ளைக் கும்பலிடம் இருந்து மீட்கும் முயற்சி

பாசல் பகுதியில் உள்ள ஒரு பிரபலமான ஹோட்டலில் சந்திப்பு நடைபெற்றது, கொள்ளையர்களை பிடிக்கும் நடவடிக்கையில், மெல்லர் தூண்டிலாகச் செயல்பட்டார்.

சுவிஸ் போலீஸார் ஒவ்வொரு அடியிலும் அவரைப் பின்தொடரப் போகிறார்கள், ஆனால் அவர்கள் அவருடைய பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிப்பார்களா என்பது சந்தேகம் தான்.

"கலைபொருட்களைத் திருடும் கொள்ளையர்களுக்கு மாஃபியா மற்றும் தொழில்முறை குற்றவாளிகளுடன் தொடர்பிருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்," என்று அவர்கள் என்னை எச்சரித்தனர்.

"பொதுவாக இந்தக் குழுக்களால் நீங்கள் ஒரு ஹோட்டலுக்கு அழைக்கப்படுவீர்கள். பின்னர் நீங்கள் காரில் ஏறி ஒருபோதும் அவர்களுடன் செல்ல வேண்டாம்,” என்றனர்.

"ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்திற்கு இடையே உள்ள பகுதி தான் பாசல். எனவே நீங்கள் எல்லைகளைக் கடக்கிறீர்கள். நாங்கள் உங்களை ரைன் நதியில் சந்திப்போம்,” என்று போலீஸார் கூறினர்.

அவர்கள் அவரை ஹோட்டலுக்கு அருகில் இறக்கிவிட்டனர். அவர் அங்கு நடந்தே சென்றார். அங்கு, அவர் ஒரு பெண்ணையும் தலைநரைத்த முதிய மனிதனையும் சந்திக்க ஒரு அடித்தள ஹோட்டலுக்கு அழைத்துச் செல��லப்பட்டார்.

"அந்த மனிதர் உயரமாக இருந்தார். அவருக்கு 60 முதல் 70 வயது வரை இருக்கும். அவர் பார்க்க நட்பான ஆள் போன்று இல்லை. அந்தப் பெண் கொஞ்சம் நட்பான நபர் போன்று இருந்தார். நான் சுற்றிலும் பார்த்தேன். ஆனால் போலீஸார் யாரையும் காணவில்லை. சுமார் 15 வயது மதிக்கத்தக்க பெண், ஒரு மாற்றுத்திறனாளி ஆண், மற்றும் எங்களுக்கு காபி கொண்டு வந்த வெயிட்டர் மட்டுமே இருந்தனர்,” என்கிறார்.

மெல்லர் அமைதியாக இருக்க விரும்பினார்.

"ஒரு தவறான எதிர்வினை, ஒரு தவறான கேள்வி -- அவ்வளவு தான் எங்கள் முயற்சி எல்லாம் தோல்வியடையும்.”

"வட்டின் நம்பகத்தன்மையைச் சரிபார்க்க வேண்டும் என்று நான் சொன்னேன். அந்த நபர் எதுவும் சொல்லவில்லை. ஆனால், அவர் தனது பையில் இருந்து ஒரு வாளை எடுத்து ஆய்வு செய்ய என்னிடம் கொடுத்தார்."

மெல்லர் ஒரு நிபுணத்துவ வேதியியலாளரால் அவருக்கு வழங்கப்பட்ட இரண்டு ரசாயனங்களைப் பயன்படுத்தினார். இறுதியில் அது போலி இல்லை என்பதை உறுதிப்படுத்தினார்.

மெல்லர் வட்டு பற்றியே யோசித்துக் கொண்டிருந்தார்.

"அந்த வட்டை எங்கே வைத்திருப்பார்கள் என்று எனக்குத் தெரியவில்லை, வட்டு பையில் வைத்திருக்க முடியாத அளவுக்கு பெரிதாக இருக்கும்”

"கடைசியாக, அந்த நபர் தனது கோட்டைத் திறந்து, சட்டையில்  இருந்து ஒரு டவலில் சுற்றப்பட்ட ஒன்றை வெளியே எடுத்தார், அவர் அதை என்னிடம் கொடுத்தார்,” என்கிறார்.

 உலகின் மிகப் பழமையான `நெப்ரா செலஸ்டியல் டிஸ்க்’ கொள்ளையர்களிடம் இருந்து  மீட்டெடுக்கப்பட்ட கதை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மிட்டல்பெர்க் மலையில் நெப்ரா ஸ்டார் டிஸ்க் கண்டுபிடிக்கப்பட்ட இடம் ஒரு பெரிய கண்ணாடியால் குறிக்கப்பட்டுள்ளது, இது அதன் படைப்பாளிகள் பார்த்த வானத்தை பிரதிபலிக்கிறது

'ஒருவழியாக பொக்கிஷம் என் கையில் கிடைத்தது'

"அதைப் பார்த்ததும் எனது முதல் எதிர்வினை என்னவென்றால், 'ஆஹா, இது எவ்வளவு கனமானது, மிகப்பெரியது, ஏனென்றால் புகைப்படங்களில் பார்த்தபோது, அது ஒரு மெல்லிய உலோகத் தாள் போல் இருந்தது.”

"அடுத்ததாக என்னை ஈர்த்தது அதன் அழகு. மின்னும் தங்கம், அடர் பச்சை.”

"மேலும், ஒரு நிபுணராக, இது என்னை வெண்கல யுகத்துடன் நேரடியாக இணைத்த ஒரு கலைப்பொருள் என்பதை நான் நன்கு அறிந்திருந்தேன். அது நம்பமுடியாததாகவும் உற்சாகத்தையும் கொடுத்தது,” என்கிறார்.

வெண்கல யுகத்தில் இருந்து, நிகழ்காலத்தின் யதார்த்தத்துக்கு அவரின் நினைவுகள் திரும்பியது. அதை மீட்க வேண்டிய அவசரத்தை உணர்ந்தார்.

"திருடப்பட்டப் பல கலைப் பொருட்கள் வழக்கமாக மறைந்துவிடும். இது போதைப்பொருள் வியாபாரிகளால் நாணயமாகவோ அல்லது வேறு ஏதோவொன்றாகவோ மாற்றப்பட்டுப் பயன்படுத்தப்படுகிறது. போலீசார் அதை என்னிடம் விளக்கினர்,” என்கிறார்.

"எனவே, நான் அந்தப் பொக்கிஷமான வட்டை என் கைகளில் வைத்திருந்தபோது, 'அதை எடுத்துக் கொண்டு ஓடு, இந்த ஆபத்தான நபர்களிடமிருந்து அதனைக் காப்பாற்று' என்று என் மனம் சொன்னது. ஆனால் நான் அதைச் செய்ய முடியாது என்று போலீசார் என்னை எச்சரித்தனர்,” என்கிறார்.

அந்தக் கொள்ளையர்கள் அவரிடம் வாக்குறுதியளிக்கப்பட்ட பணத்தைக் கேட்டனர், அது அவரிடம் இல்லை, மேலும் அவரை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு கோரினர்.

"அவர்கள் என்னிடம் 'பணத்தை எங்களிடம் காட்டுங்கள். இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுங்கள்' என்றனர். நான் காவல்துறையை அழைக்கத் திட்டமிட்டிருந்தேன்,” என்கிறார்.

"நான் கழிவறையைப் பயன்படுத்த வேண்டும் என்று அவர்களிடம் கேட்டு கொண்டேன், நிலத்தடி கழிப்பறையில்,  தொலைபேசி சிக்னல் இல்லை,” என்கிறார்.

"நான் குளியலறையைச் சுற்றி வந்தேன், ஒரு வழியாக போலீஸிடம் தகவல் சொல்லிவிட்டேன். அவர்களைப் பிடியுங்கள் என்று சொன்னேன். எங்கிருந்தோ வந்த காவல் அதிகாரிகள் அவர்களை சுற்றி வளைத்தனர்,” என்கிறார்.

"பின்னர் தான் எனக்கு உண்மை புரிந்தது. ஆரம்பத்தில் நான் பார்த்த 15 வயது பெண், ஒரு மாற்றுத்திறனாளி நபர், ஒரு வெயிட்டர். இவர்கள் அனைவரும் போலீஸார்,” என்கிறார்.

"நான் ஒரு உளவாளி அல்ல, ஒரு தொழில்முறை முகவர் அல்ல, எனவே இந்தப் பணியை முடிப்பது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது," என்று அவர் ஒப்புக்கொண்டார்.

நீங்கள் ஏன் இவ்வளவு பெரிய ஆபத்தை எதிர்கொள்ளத் தயாராக இருந்தீர்கள்?

"ஏனெனில், மனிதர்களாகிய நமக்கு, நாம் எங்கிருந்து வருகிறோம் என்பதைப் புரிந்து கொள்வது முக்கியமானது. அந்தக் கலைப்பொருள் நம் பண்டைய காலத்தைச் சொல்லும்," என்று அவர் வலியுறுத்தினார்.

"வழக்கமாக, நாம் நூறு, இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டுகள் மட்டுமே பின்னோக்கிச் சென்று, நாம் மிகவும் புத்திசாலியாக இருப்பதாக உணர்கிறோம். நாம் சிறந்தவர்கள் என்று நினைக்கிறோம். ஆனால் வெண்கல யுகத்தின் மக்கள் முட்டாள்கள் அல்ல; அவர்களும் நம்மைப் போலவே புத்திசாலிகள் தான்,” என்கிறார்.

"அதனால்தான் வட்டை மீட்க நான் ஆவலாக இருந்தேன். புதையல் அல்லது கலை என்பதால் மட்டும் அல்ல, இது நம் இனத்தின் வரலாற்றில் ஒரு முக்கிய கண்டுபிடிப்பு என்று நான் உறுதியாக நம்புகிறேன், எனவே அதைப் பெறுவதற்கு எல்லா ஆபத்தையும் சந்திக்க தயாராக இருந்தேன்,” என்கிறார்.

"சட்டவிரோதத் தரகர்கள் கைதான பிறகு, முதன்முறையாக அந்தக் கலைப்பொருட்களை நிம்மதியாக ரசிக்க முடிந்தது. அந்தக் கலைப்பொருள் வட்ட வடிவில், தங்கம் பதிக்கப்பட்ட, சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்களுடன் கூடிய வானத்தின் அற்புதமானச் சித்தரிப்பைக் கொண்டிருந்தது,” என்கிறார்.

"அதுவரை அது போல் ஒரு கலைப்பொருளை நான் பார்த்தது இல்லை,” என்கிறார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, வட்ட��டன் கிடைத்த மீதமுள்ள புதையலை போலீசார் மீட்டனர். அது எங்கே எடுக்கப்பட்டது என்பது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.

 உலகின் மிகப் பழமையான `நெப்ரா செலஸ்டியல் டிஸ்க்’ கொள்ளையர்களிடம் இருந்து  மீட்டெடுக்கப்பட்ட கதை

பட மூலாதாரம், © STATE OFFICE FOR HERITAGE MANAGEMENT AND ARCHAEOLOGY OF SAXONY-ANHALT

படக்குறிப்பு, கரோல் ஷாவரால் விளக்கப்பட்ட வான வட்டின் அண்டம், மேலே பிறை நிலவு மற்றும் முழு நிலவு அல்லது சூரியன்

அது மீட்கப்பட்டதிலிருந்து பல ஆய்வுகள்அதைப்பற்றியப் பல்வேறு ஆச்சரியமான அம்சங்களை வெளிப்படுத்தியுள்ளன.

மிக முக்கியமாக, அதன் வயது மற்றும் அதில் நட்சத்திரங்களின் படம் இருப்பதும் ஆய்வாளர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.

இது உலோகம் என்பதால், கார்பன் டேட்டிங், அது எந்த காலக்கட்டத்தில் இருந்து வந்தது என்பதை அறிய மிகத் துல்லியமான நுட்பத்தைப் பயன்படுத்த முடியவில்லை.

ஆனால் அதே இடத்தில் கண்டெடுக்கப்பட்ட வாள்களைப் பயன்படுத்தி துணை டேட்டிங் பயன்படுத்தப்பட்டது, மேலும் அவை கிமு 1600 க்கு முந்தையவை என்று கண்டுப்பிடிக்கப்பட்டது.

ப்ளீயட்ஸ் விண்மீன் கூட்டத்தின் (Pleiades constellation) ஆரம்பகால ஓவியங்களும், அந்த நட்சத்திரம் போன்ற புள்ளிகளின் தொகுப்போடு சரியாகப் பொருந்துகின்றன என்பதைக் கருத்தில் கொண்டு, இது சுவாரஸ்யமாக இருக்கிறது.

நட்சத்திரங்களை மேப்பிங் செய்வது மனிதகுலத்தின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாகும், மேலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் கல்வியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் தீவிர முயற்சிகள் நிறைந்த பணியாகும்.

அறியப்பட்ட வரையில், எகிப்தில் கி.மு.1400 வரை நட்சத்திரங்களின் யதார்த்தமான படங்கள் எந்த கலைப் பொருட்களிலும் தோன்றவில்லை, மேலும் இவை எப்போதும் பழமையானதாகக் கருதப்பட்டன.

நெப்ரா வான வட்டு (Nebra sky disk ) 200 ஆண்டுகள் பழமையானது. பல அம்சங்களில், வடக்கு ஐரோப்பாவின் வெண்கல வயது மக்கள் கிழக்கு மற்றும் எகிப்திய நாகரிகங்களைப் போலவே முன்னேறியவர்கள் என்று தோன்றுகிறது.

மெல்லரைப் பொறுத்தவரை, "அற்புதமான விஷயம் என்னவென்றால், நெப்ராவின் வான வட்டு அனைவருக்கும் சொந்தமானது."

"நம் முந்தைய சித்தாந்தங்களைப் பொருட்படுத்தாமல், உலகளாவிய நினைவகம் மற்றும் பாரம்பரியத்தால் நாங்கள் இணைக்கப்பட்டுள்ளோம். ஸ்டோன்ஹெஞ்ச், பிரமிடுகள் மற்றும் நெப்ரா டிஸ்க் ஆகியவை நம்மைக் கவர்ந்து, கலை மற்றும் அற்புதமான கட்டமைப்புகளுடன் நம்மை இணைக்கின்றன என்பது நம்பிக்கைக்குரியது மற்றும் அவசியமானது,” என்கிறார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)