சமந்தா சொல்வதுபோல் ஹைட்ரஜன் பெராக்ஸைட் சுவாசித்தால் நோய்த்தொற்று குறையுமா? - கொந்தளிக்கும் மருத்துவர்கள்

சமந்தா சொல்வதுபோல் ஹைட்ரஜன் பெராக்ஸைட் சுவாசித்தால் நோய்த்தொற்று குறையுமா? - கொந்தளிக்கும் மருத்துவர்கள்

பட மூலாதாரம், Samantha Ruth Prabhu/Instagram

சுவாசக் குழாய் தொடர்பான நோய்த் தொற்றுகளில் இருந்து தப்பிக்க, "நடைமுறையில் உள்ள நவீன மருத்துவ சிகிச்சைகளுக்குப் பதிலாக மாற்று அணுகுமுறையைத் தேர்வு செய்யுங்கள்" என்று இன்ஸ்டாகிராம் ஸ்டோரி ஒன்றைப் பதிவு செய்து, நடிகை சமந்தா சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முக்கியமான நடிகையாக அறியப்படும் சமந்தா ரூத்பிரபு, ஜூலை 4ஆம் தேதியன்று, தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஸ்டோரியில், "சுவாசத் தொற்றுகளுக்கு நவீன மருந்துகளை எடுத்துக் கொள்வதற்குப் பதிலாக மாற்று அணுகுமுறையைத் தேர்வு செய்யுங்கள்" என்று பரிந்துரை செய்துள்ளார்.

அது மட்டுமின்றி, "உதாரணமாக ஹைட்ரஜன் பெரோக்ஸைடு மற்றும் காய்ச்சி வடிகட்டிய நீரை நெபுலைசரில் செலுத்திப் பயன்படுத்தலாம். எனக்கு இதுவொரு மாயாஜலம் போலச் செயல்படுகிறது. தேவையற்ற மருந்து பயன்பாட்டைத் தவிர்க்கவும்," எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த மாற்று சிகிச்சையைப் பரிந்துரைத்த மருத்துவர் மித்ரா பாசு சில்லாரையும் அந்தப் பதிவில் டேக் செய்திருந்தார்.

நடிகை சமந்தாவின் இந்தப் பதிவைத் தொடர்ந்து மருத்துவ நிபுணர்கள் பலரும் அதற்கு எதிர்வினையாற்றி வருகின்றனர். அவரது இந்தப் பரிந்துரையைக் கண்டித்தும் அதன்மூலம் ஏற்படும் விளைவுகளைக் குறிப்பிட்டும் வல்லுநர்கள் பதிவிட்டுள்ளனர்.

அதைத் தொடர்ந்து தனது பதிவுக்கு விளக்கமளித்துள்ள சமந்தா மாற்று மருத்துவத்தைத் தேடிக் கொண்டிருக்கும் ��பர்களுக்கு இதை மேலோட்டமாகப் பரிந்துரை மட்டுமே செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.

பிபிசி தமிழ் வாட்ஸ் ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

சமந்தாவின் இந்தப் பதிவு மருத்துவ நிபுணர்களை அதிருப்திக்கு ஆளாக்கியுள்ளது.

மருத்துவர் சிரியக் ஆபி பிலிப்ஸ், சமந்தாவின் இந்தப் பதிவுக்கு கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தார்.

டிவிட்டரில் பலராலும் 'தி லிவர் டாக்டர்' என அறியப்படும் அவர், "சுகாதாரம் மற்றும் அறிவியல் பற்றிப் போதுமான கல்வியறிவு இல்லாத இந்திய நடிகை சமந்தா, இன்ஸ்டாகிராமில் அவரைப் பின்தொடரும் லட்சக்கணக்கான மக்களை, வைரல் தொற்றுகளுக்கு ஹைட்ரஜன் பெரோக்ஸைடை சுவாசிக்க அறிவுறுத்துகிறார்," என்று குறிப்பிட்டு ஹைட்ரஜன் பெராக்ஸைட் வாயுவை சுவாசிப்பது மிகவும் ஆபத்தானது என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிப்பதாகவும் கூறியுள்ளார்.

சமந்தா சொல்வதுபோல் ஹைட்ரஜன் பெராக்ஸைட் சுவாசித்தால் நோய்த்தொற்று குறையுமா? கொந்தளிக்கும் மருத்துவர்கள்

பட மூலாதாரம், SCREEN GRAB/X

மேலும், "பகுத்தறிவு மற்றும் அறிவியல் ரீதியாக வளர்ந்த சமூகம் என்றால் பொது சுகாதாரத்திற்கு ஆபத்து விளைவுக்கும் வகையில் செயல்பட்ட இவர் மீது வழக்குப் பதிவு செய்து அபராதம் விதித்திருப்பார்கள் அல்லது சிறையில் அடைத்திருப்பார்கள்," என்றும் காட்டமாகப் பதிவிட்டிருந்த சிரியக், சமந்தாவுக்கு உதவியும், நல்ல ஆலோசகரும் தேவை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

"சமூக ஊடகங்களில் இதுபோன்று மருத்துவம் தொடர்பாகப் பதிவிட்டு மக்களின் சுகாதாரத்திற்குத் தீங்கு விளைவிக்கும் நபர்கள் மீது ஏதேனும் நடவடிக்கையை இந்திய சுகாதாரத்துறை மேற்கொள்ளுமா?" என்ற கேள்வியையும் சிரியக் எழுப்பினார்.

சமந்தாவின் பதில்

சமந்தா சொல்வதுபோல் ஹைட்ரஜன் பெராக்ஸைட் சுவாசித்தால் நோய்த்தொற்று குறையுமா? - கொந்தளிக்கும் மருத்துவர்கள்

பட மூலாதாரம், SCREEN GRAB/INSTAGRAM

படக்குறிப்பு, மருத்துவர் சிரியர்க்கின் பதிவைத் தொடர்ந்து மூன்று பக்கத்தில் சமந்தா தனது பதிவு குறித்து விளக்கமளித்துள்ளார்

மாற்று மருத்துவத்தில் முழுமையான நம்பிக்கை கொண்டிருப்பதாக சிரியக்கின் விமர்சனத்துக்குப் பதிலளித்த சமந்தா, கடந்த சில ஆண்டுகளாகப் பல்வேறு சிகிச்சை முறைகளை மேற்கொண்டு வருவதாகவும், அதிலிருந்து கற்றுக்கொண்டு அவருக்குப் பயனளிக்கும் சிகிச்சை முறைகளைப் பின்பற்றி வருவதாகவும் கூறினார்.

"நவீன மருத்துவ சிகிச்சைகளுக்கு ஆகும் செலவுகளைக் காட்டிலும் இத்தகைய மாற்று சிகிச்சைகளுக்குக் குறைவாகவே செலவாகிறது," என்றும் சமந்தா கூறியுள்ளார்.

இருப்பினும் இதுபோன்ற சிகிச்சை முறைகளுக்கு முழுமையான ஆதரவை அவர் அளிக்கவில்லை என்றும், மக்களுக்குப் பயனளிக்கலாம் என்ற நல்ல எண்ணத்தில் மட்டுமே இதை மேலோட்டமாகப் பரிந்துரை செய்ததாகவும் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

"ஹைட்ரஜன் பெரோக்ஸைடை சுவாசிக்கும் முறையை டி.ஆர்.டி.ஓ.வில் மருத்துவராக 25 ஆண்டுகள் பணியாற்றிய மித்ரா பாசு சில்லார்தான் பரிந்துரைத்தார். நவீன மருத்துவத்தைக் கற்றுக்கொண்ட அவரே, மாற்று சிகிச்சைகளைப் பரிந்துரைக்க ஆரம்பித்துவிட்டார்," என்றும் தன்னுடைய பதிலில் சமந்தா விளக்கம் அளித்துள்ளார்.

"சிகிச்சை தேவை இருக்கும் ஒரு நபராக இதைப் பதிவிட்டேனே தவிர, ஒரு பிரபல நடிகையாக அதைப் பதிவிடவில்லை. மேலும், இத்தகைய பதிவுகளுக்காக யாரிடம் இருந்தும் பணமும் பெறவில்லை. நவீன சிகிச்சைகள் பயனளிக்காமல் மாற்று மருத்துவத்தைத் தேடிக் கொண்டிருக்கும் நபர்களுக்காக அதை மேலோட்டமாகப் பரிந்துரை மட்டுமே செய்தேன்" என சமந்தா குறிப்பிட்டுள்ளார்.

ஹைட்ரஜன் பெரோக்ஸைட் என்றால் என்ன?

சமந்தா சொல்வதுபோல் ஹைட்ரஜன் பெராக்ஸைட் சுவாசித்தால் நோய்த்தொற்று குறையுமா? - கொந்தளிக்கும் மருத்துவர்கள்

பட மூலாதாரம், Getty Images

ஹைட்ரஜன் பெரோக்ஸைட் என்றால் என்ன? இதைச் சுவாசிப்பதால் ஏற்படும் பிரச்னைகள் என்ன?

ஹைட்ரஜன் பெரோக்ஸைட் என்ற ரசாயனப் பொருள் வீட்டைச் சுத்தம் செய்ய உபயோகிக்கும் கிருமி நாசினிகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில், பலர் தொற்றைக் குறைக்கும் பொருட்டு இந்த ரசாயானத்தை, காய்ச்சி வடிகட்டிய நீரில் கலந்து, நெபுலைசரில் செலுத்தி, சுவாசித்து வந்தனர். ஆனால் அது உடல் ஆரோக்கியத்திற்குக் கேடாய் முடியும் என கொரோனா தொற்றுக் காலத்தில் இருந்தே ஆஸ்துமா, அலர்ஜி பவுண்டேஷன் ஆஃப் அமெரிக்கா அறிவுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

நெபுலைசர் என்பது ஆஸ்துமா சிகிச்சையில் மருந்தைச் சுவாசிக்கப் பயன்படுத்தப்படும் ஒருவகை சுவாசக்கருவி. திரவ நிலையில் இருக்கும் மருந்தை வாயு நிலைக்கு மாற்றி சுவாசிக்க நெபுலைசர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

அமெரிக்காவின் நச்சுப் பொருட்கள் மற்றும் நோய் பதிவேட்டு முகமை (Agency for Toxic Substances and Disease Registry) வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஹைட்ரஜன் பெரோக்ஸைடை உட்கொள்ளுதல், சுவாசித்தல், தோல் அல்லது கண்களில் பயன்படுத்துதல் மோசமான பின்விளைவை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளது.

சமந்தா சொல்வதுபோல் ஹைட்ரஜன் பெராக்ஸைட் சுவாசித்தால் நோய்த்தொற்று குறையுமா? - கொந்தளிக்கும் மருத்துவர்கள்

பட மூலாதாரம், SCREEN GRAB/X

கிருமி நாசினிகளில் 3% செறிவைக் கொண்டுள்ள ஹைட்ரஜன் பெரோக்ஸைடை சுவாசித்தால் மூச்சுக்குழலில் எரிச்சல் உண்டாகும் என்றும், தொடர்ச்சியாக அந்தச் சூழலுக்கு மக்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளும் பட்சத்தில் கண்களில் மிதமான எரிச்சலுக்கு வாய்ப்புகள் உண்டு என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் 10%க்கும் மேல் செறிவைக் கொண்டுள்ள ரசாயனத்தை சுவாசிக்கும்போது நுரையீரலில் கடுமையான எரிச்சல் ஏற்படும் எனவும் அதில் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சமந்தாவின் பதிவு குறித்து விமர்சித்துள்ள மருத்துவர் ஜெய்சன் பிலிப், "இப்படி ஹைட்ரஜன் பெரோக்ஸைடை ஒருவர் சுவாசித்தால் மூச்சுக் குழாயில் அழற்சி, நுரையீரல் வீக்கம், வலிப்பு, மூளைச் சிதைவு போன்றவை ஏற்படலாம் என்றும், மரணம் ஏற்படவே வாய்ப்புகள் உள்ளதாகவும்" தெரிவித்தார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)