யுக்ரேனில் டார்ச் லைட் வெளிச்சத்தில் அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் - என்ன காரணம்?

யுக்ரேனில் டார்ச் லைட் வெளிச்சத்தில் அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் - என்ன காரணம்?

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், விடாலி ஷிவ்சென்கோ
  • பதவி, பிபிசி மானிட்டரிங்

யுக்ரேன் முழுவதும் உள்ள எரிசக்திக் கட்டமைப்புகள் மீது ரஷ்யா தொடர் தாக்குதலை நிகழ்த்திவருவதால், அந்நாட்டின் அனைத்து அரசு அனல்மின் நிலையங்களும் அழிக்கப்பட்டு விட்டன. யுக்ரேனின் அனைத்து நீர்மின் நிலையங்களும் ரஷ்ய ஏவுகணைகள் அல்லது ட்ரோன்களால் சேதத்திற்கு உள்ளாகியுள்ளன. இதனால் மின் பற்றாக்குறை ஏற்பட்டு, யுக்ரேனியர்கள் நீண்ட நேர மின்வெட்டுடன் வாழக் கற்றுக்கொண்டுள்ளனர். இது சிலருக்கு வாழ்வா-சாவா என்ற கேள்வி.

டெட்டியானாவின் மகனுக்கு மின்சாரம் என்பது வாழ்வா-சாவா என்ற கேள்வி.

குறைபாடுகளுடன் பிறந்த டெட்டியானாவின் மகன் சுவாசிக்கவும் உணவளிக்கவும் மருந்துகளைப் பெறவும் மின்சாரத்தால் இயங்கும் மருத்துவ உபகரணம் தேவை.

“நாங்கள் மின்சாரத்தை அதிகம் சார்ந்திருக்கிறோம். இந்தக் கொடூரமான போர் இல்லையென்றாலும் வாழ்க்கை மோசமாக இருந்திருக்கும், ஆனால், எங்களால் சமாளித்திருக்க முடியும்,” என டெட்டியானா பிபிசி-யிடம் தெரிவித்தார்.

யுக்ரேன் முழுவதும் உள்ள எரிசக்திக் க���்டமைப்புகள் மீது ரஷ்யா தொடர் தாக்குதலை நிகழ்த்திவருவதால், யுக்ரேனியர்கள் நீண்ட நேர மின்வெட்டுடன் வாழக் கற்றுக்கொண்டுள்ளனர்.

ரஷ்யாவின் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல் காரணமாக, முன்பு பாதிக்கப்படாத கட்டமைப்புகளிலும், நாள்தோறும் பல மணிநேரம் மின்சாரம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

தெற்குத் துறைமுக நகரமான ஒடேசாவில் வாழும் டெட்டியானா, நீடித்த மின் வெட்டு வாழ்க்கையை மிகவும் கடினமாக்கியுள்ளதாகவும், மின்சார விநியோகம் தொடர்ந்து இருப்பதை தான் உறுதிப்படுத்த வேண்டிய தேவை உள்ளதாகவும் கூறுகிறார்.

வாட்ஸ் ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

யுக்ரேனில் டார்ச் லைட் வெளிச்சத்தில் அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் - என்ன காரணம்?

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, யுக்ரேனின் மின் கட்டமைப்புகளை ரஷ்யா தாக்கி வருவதால், நீண்ட நேர மின்வெட்டுகள் பரவலாக ஏற்படுகின்றன.

12 மணிநேரத்திற்கும் மேலான மின்வெட்டு

பெட்ரோல் மூலம் இயங்கும் ஜெனரேட்டரை வைத்துள்ள டெட்டியானா, அதில் எப்போதும் எரிசக்தியை நிரப்ப வேண்டியுள்ளது, ஆனாலும் ஒவ்வொரு ஆறு மணிநேரத்திற்கும் ஜெனரேட்டரைக் குளிர்விக்க அதனை நிறுத்த வேண்டியுள்ளது.

மின்வெட்டு காரணமாக மொபைல் போன் தொடர்பு எல்லையும் பாதிக்கப்பட்டுள்ளதால், தன் மகனுக்காக ஆம்புலன்ஸ் சேவையை அழைப்பதும் அவருக்குக் கடினமாகியுள்ளது.

“சில சமயங்களில் அரை மணிநேரம் எடுக்கும், சில சமயங்களில் ஆம்புலன்ஸ் வருவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பு, என் குழந்தைக்கு வலிப்பு ஏற்பட்டு மூர்ச்சையாகிவிடுவான்,” என்கிறார் அவர். “ஆக்சிஜன் கிடைக்காவிட்டால் என் மகன் இறந்துவிடுவான். என்ன சொல்வதென்றே தெரியவில்லை,” என்கிறார்.

டெட்டியானா வசிக்கும் இடத்திற்கு அருகிலுள்ள பகுதிகளில் சமீபத்தில் 12 மணிநேரத்திற்கும் அதிகமாக மின்வெட்டு ஏற்பட்டது.

யுக்ரேனில் டார்ச் லைட் வெளிச்சத்தில் அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் - என்ன காரணம்?

பட மூலாதாரம், Tetiana

படக்குறிப்பு, டெட்டியானாவின் மகன் மூச்சுவிடுவதற்கும் உணவு மற்றும் மருந்துகளை பெறுவதற்கும் மின்சாரத்தால் இயங்கும் கருவி தேவை.

மின் உற்பத்தி பற்றாக்குறை

மின்சாரம் இல்லாததால் பல லட்சக்கணக்கான யுக்ரேனியர்கள் தண்ணீர், ஏ.சி., லிஃப்ட், உயிர்காக்கும் கருவிகள் உள்ளிட்டவற்றை உபயோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த மூன்று மாதங்களில் மட்டும் யுக்ரேன் 9 ஜிகாவாட் மின் உற்பத்தித் திறனை இழந்துள்ளதாக, அந்நாட்டின் தேசிய எரிசக்தி நிறுவனமான யுக்ரேனெர்கோ தெரிவித்துள்ளது. இது, 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்புக்கு முன்னதாக யுக்ரேனின் உற்பத்தித் திறனின் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமாகும். இது, மின் பயன்பாடு அதிகமாக இருக்கும் காலகட்டத்தில் ஒட்டுமொத்த நெதர்லாந்து அல்லது ஸ்லொவாக்கியா, லாவ்டியா, லிதுவானியா மற்றும் எஸ்தோனியா ஆகிய நாடுகளின் மின் தேவையைத் தீர்க்கப் போதுமான அளவாகும் என யுக்ரேனெர்கோ தெரிவித்துள்ளது.

“அனைத்து அரசு அனல்மின் நிலையங்களும் அழிக்கப்பட்டு விட்டன. நாட்டில் உள்ள அனைத்து நீர்மின் நிலையங்களும் ரஷ்ய ஏவுகணைகள் அல்லது ட்ரோன்களால் சேதத்திற்கு உள்ளாகியுள்ளன,” என யுக்ரேனெர்கோ செய்தித் தொடர்பாளர் மரியா ட்சாடுரியன் பிபிசி-யிடம் தெரிவித்தார்.

கோடையில் வெப்பம் அதிகரிப்பதால் அதிக மின் ஆற்றல் தேவைப்படும். ஏ.சி. பயன்பாடு காரணமாக, மின் உற்பத்தி பற்றாக்குறை மிகவும் மோசமாகியுள்ளது.

இந்தப் பற்றாக்குறையைச் சமாளிக்க, யுக்ரேனெர்கோ நாடு முழுவதும் பரவலாக தினமும் பல மணிநேரம் மின்வெட்டுக்களை அமல்படுத்தியது.

இதன் விளைவாக பல லட்சக்கணக்கான யுக்ரேனியர்கள் எரிபொருளால் இயங்கும் ஜெனரேட்டர்கள் அல்லது பெரிய பவர் பேங்க்குகளை அதிகம் சார்ந்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

யுக்ரேனில் டார்ச் லைட் வெளிச்சத்தில் அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் - என்ன காரணம்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, யுக்ரேனில் ஜெனரேட்டர்களை பரவலாக காண முடிகிறது.

மருத்துவர்களின் கவலை

யுக்ரேனிய தலைநகரமான கீயவ், நீண்ட நேர மின்வெட்டுகளை அனுபவித்து வருகிறது.

24 அடுக்குமாடிக் கட்டடத்தில் அடிப்படைத் தேவைகளுக்கு உதவுவதற்காக ரோக்சோலன் குடியிருப்பாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மின்வெட்டு காரணமாக மேல்தளங்களில் தண்ணீர் ஏறாது என்பதால், இத்தகைய அடுக்குமாடி கட்டடங்களில் வசிப்பது எளிதல்ல என அவர் கூறுகிறார்.

“இங்குள்ள லிஃப்டுகளும் வேலை செய்யவில்லை, அதனால் குழந்தைகளுடன் உள்ள தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் காத்திருக்க நேரிடுகிறது. மின்சாரம் எப்போது இருக்கும் என்பதைப் பொறுத்து அவர்கள் வெளியே செல்வதற்கு திட்டமிட வேண்டும்,” என்றும் அவர் கூறுகிறார். “இதனால் அவர்கள் ஆறு மணிநேரத்திற்கும் மேல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்க நேரிடுகிறது, பிரெட் வாங்குவதற்குக் கூட வயதான பெண்களால் கடைகளுக்கு செல்ல முடிவதில்லை,” என்கிறார்.

இத்தகைய உயரமான கட்டடங்களில் வசிக்கும் குடியிருப்பாளர்கள், ஏ.சி. வேலை செய்யாததால் தங்களின் புழுக்கமான வீடுகளுக்குள்ளேயே மாட்டிக்கொண்டுள்ளனர்.

இதனால் அவர்கள் ரஷ்ய வான்வழி தாக்குதலுக்கும் ஆளாகிறார்கள், ஏனெனில் வெடிகுண்டு தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்கான பாதுகாப்பு இடங்கள், நிலத்தடியில் இருப்பதால் அவர்களால் அங்கு செல்ல முடியவில்லை.

மின் தடை காரணமாக, நோயாளிகளைச் சந்திப்பதைக் கடைசி நேரத்தில் மாற்றியமைக்க வேண்டியுள்ளதாகவும் சிக்கலான அறுவை சிகிச்சையின்போது கூட மின்வெட்டு நிகழ்ந்திருப்பதாகவும் ஸப்போரீஸியா-வை சேர்ந்த பல் மருத்துவர் வொலாடிமிர் ஸ்டெஃபானிவ் கூறுகிறார்.

“அப்படி நடக்கும்போது அறுவை சிகிச்சையை ஜெனரேட்டரின் உதவியுடன் முடிப்போம். வேறு வழியில்லை — நாளை வாருங்கள் என நோயாளிகளிடம் எங்களால் சொல்ல முடியாது,” என்கிறார் அவர். “கடந்த இரு வாரங்களுக்கு முன் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டது. அதனால், மிகவும் இடையூறு ஏற்பட்டது,” என்கிறார்.

யுக்ரேனில் டார்ச் லைட் வெளிச்சத்தில் அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் - என்ன காரணம்?

பட மூலாதாரம், Volodymyr Stefaniv

படக்குறிப்பு, பல் மருத்துவர் வொலாடிமிர் ஸ்டெஃபானிவ் அறுவை சிகிச்சைகளின் போது மின்வெட்டுகளை சமாளிக்க வேண்டியுள்ளது.

மின்சாரத்தைக் குறிவைப்பது ஏன்?

மருத்துவர் வொலாடிமிர் ஸ்டெஃபானிவ் அவசரமான அல்லது சிக்கல் குறைந்த அறுவை சிகிச்சைகளை மின்வெட்டு நேரத்தில் மேற்கொள்ளும்போதும் அவர் நெற்றியில் பொருத்திக்கொள்ளும் டார்ச்னைட் உதவியுட்யன் தான் செய்கிறார். இந்தத் திறனைப் போர்க்களத்தில் வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது கிடைத்த அனுபவத்தால் அவர் பெற்றார். அவருடைய மருத்துவ மையம், யுக்ரேன் ராணுவத்தை சேர்ந்தவர்களுக்கு இலவசமாகவோ அல்லது அதிகமான தள்ளுபடி விலையிலோ சேவை வழங்குகிறது.

“பல் வலி அல்லது வீக்கத்திற்கு மின்சாரம் இல்லாமல் என்னால் சிகிச்சை அளிக்க முடியும். மின்சாரம் இன்றி அறுவை சிகிச்சை செய்வதற்கு நாங்கள் கற்றுக்கொண்டுள்ளோம்,” என்கிறார் அவர்.

அடிக்கடி நீண்ட நேரத்திற்கு மின் தடை செய்வதால் தங்கள் நிறுவனத்தின் மீது பலரும் கோபம் கொண்டுள்ளதை யுக்ரேனெர்கோவின் மரியா ட்சாடுரியன் அறிந்துள்ளார். ஆனால், தங்களுக்கு வேறு வழியில்லை என அவர் கூறுகிறார்.

“நாங்கள் ஒரு போரை எதிர்கொண்டுள்ளோம். ரஷ்ய பயங்கரவாதிகளுக்கு எரிசக்தித் துறையும் ஓர் இலக்கு. நம் எல்லோருடைய வாழ்க்கையும் நாகரிகமும் மின்சாரத்தின் மீது கட்டமைக்கப்பட்டது என்பது நன்கு அறிந்ததே. எதிரியின் ஆற்றல் வளத்தை அழித்தால், அவர்களிடம் பொருளாதாரம் இருக்காது, வாழ்க்கையும் இருக்காது,” என்கிறார் அவர்.

“சுதந்திரத்திற்கு நாங்கள் கொடுக்கும் விலை இதுதான்,” ,” என்கிறார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)