இலங்கை ஜனாதிபதி பதவிக்காலம் 5 ஆண்டுகளா, 6 ஆண்டுகளா? தேர்தல் நடத்துவதில் குழப்பம் ஏன்?

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதில் அரசியலமைப்பில் குழப்பமா? திங்கட்கிழமை உயர்நீதிமன்றத்தில் விசாரணை ஆரம்பம்

பட மூலாதாரம், PMD Sri Lanka

படக்குறிப்பு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
  • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

இலங்கையில் இந்த ஆண்டு தேர்தலுக்கான ஆண்டு என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், தேர்தலை நடத்துவது குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலை நடத்தும் காலப் பகுதி தொடர்பாக இதுவரை அரசாங்கம் அறிவிக்கவில்லை.

இந்த நிலையில், ஜனாதிபதித் தேர்தல் நடாத்தப்படும் சரியான காலப் பகுதி குறித்து உயர்நீதிமன்றம் தெளிவூட்டல்களை வழங்கும் வரை, தேர்தல் நடத்தப்படுவதை இடைநிறுத்தும் வகையில் இடைக்காலத் தடையுத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை எதிர்வரும் திங்கட்கிழமை (ஜூலை 8) விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

எனினும், ஜனாதிபதித் தேர்தல் நடத்துவதை இடைநிறுத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாது தள்ளுபடி செய்யுமாறு கோரி பல மனுக்கள் உயர்நீதிமன்றத்தில�� நேற்று (ஜூலை 5) தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதில் அரசியலமைப்பில் குழப்பமா? திங்கட்கிழமை உயர்நீதிமன்றத்தில் விசாரணை ஆரம்பம்

பட மூலாதாரம், PMD Sri Lanka

ஜனாதிபதியின் பதவிக் காலத்தில் குழப்பம்

ஜனாதிபதித் தேர்தல் நடாத்தப்படும் சரியான காலப் பகுதி குறித்து உயர்நீதிமன்றம் தெளிவூட்டல்களை வழங்கும் வரை, ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுவதை இடைநிறுத்தும் வகையில் இடைகால தடையுத்தரவை பிறப்பிக்குமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மொறட்டுவை பகுதியைச் சேர்ந்த வர்த்தகரான சி.டி.லெனவவினால் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவின் பிரதிவாதிகளான தேர்தல் ஆணைக்குழு, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், சட்ட மாஅதிபர் உள்ளிட்டோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

அரசியலமைப்பின் 19-வது திருத்தத்தில் ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் ஏற்படுத்தப்பட்ட திருத்தம் காரணமாக, ஜனாதிபதியின் பதவிக் காலம் முடிவடையும் கால எல்லை குறித்து தெளிவின்மை காணப்படுவதாக மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

"1978-ஆம் ஆண்டு அரசியலமைப்பின் பிரகாரம், ஜனாதிபதியின் பதவிக் காலம் 6 ஆண்டுகள் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், அரசியலமைப்பின் 19-வது திருத்தத்தின் 3-வது சரத்துக்கு அமைய அரசியலமைப்பின் 30 (2)-ஆவது பிரிவு திருத்தப்பட்டாலும், அதனூடாகக் குறிப்பிடப்பட்டுள்ள ஜனாதிபதியின் பதவிக் காலம் நிறைவடைவது 5 வருடங்களா அல்லது 6 வருடங்களாக என்பதில் குளறுபடி நிலவுகின்றது. அரசியலமைப்பின் 19-வது திருத்தத்தின் கீழ் அதிகாரத்திலுள்ள ஜனாதிபதியின் பதவிக் காலம் 5 வருடங்கள் வரை குறைப்பதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றாலும், அது நடத்தப்படவில்லை.

"இதன்படி, அரசியலமைப்பின் 30 (2) சரத்தானது, சரியான முறையில் நிறைவேற்றப்படவில்லை என்பது தெளிவாகின்றது. அதனால், ஜனாதிபதியின் பதவிக் காலம் 5 வருடங்களா அல்லது 6 வருடங்களா என்ற குளறுபடி நிலவுகின்றது," என மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலை இடைநிறுத்தக் கோரி மனு

இதனால், உயர்நீதிமன்றம் சரியான தெளிவூட்டலை வழங்கும் வரை ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுவதற்கு இடைகால தடை விதிக்கப்பட வேண்டும் என மனுதாரர் மேலும் கோரியுள்ளார்.

அத்துடன், 2019-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தலின் ஊடாகத் தெரிவு செய்யப்பட்ட கோட்டாபய ராஜபக்ஸ, அந்தப் பதவியிலிருந்து ராஜினாமா செய்ததை அடுத்து, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இடைக்கால ஜனாதிபதியாக நாடாளுமன்றத்தினால் தெரிவு செய்யப்பட்டார். இதன்படி, தற்போதைய ஜனாதிபதியின் பதவிக் காலம் முடிவடைந்து ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் தேதி குறித்து அரசியலமைப்பில் குழப்பநிலைமை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான குழப்ப நிலை காணப்படும் சந்தர்ப்பத்தில், அது குறித்துத் தெளிவூட்டும் அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கு காணப்படுகின்றது," என மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து, தற்போதைய ஜனாதிபதியின் பதவிக் காலம் முடிவடையும் திகதி தொடர்பில் நீதிமன்றம் தெளிவூட்டலை வழங்கும் வரை, ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுவதை இடைநிறுத்தும் வகையில் தடையுத்தரவொன்றை பிறப்பிக்குமாறு மனுதாரர் உயர்நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதில் அரசியலமைப்பில் குழப்பமா? திங்கட்கிழமை உயர்நீதிமன்றத்தில் விசாரணை ஆரம்பம்

பட மூலாதாரம், PMD Sri Lanka

ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம்

ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் சரியான காலப் பகுதி குறித்து உயர்நீதிமன்றம் தெளிவூட்டல்களை வழங்கும் வரை, ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுவதை இடைநிறுத்தும் வகையில் இடைக்கால தடையுத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இந்த மனு மீதான விசாரணைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (ஜூலை 8) ஆரம்பிக்கப்படவுள்ளதாக உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த மனுவை விசாரணை செய்வதற்காக ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாத்தை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய நியமித்துள்ளார்.

இதன்படி, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையில், நீதியரசர்கான விஜித் மலல்கொட, முதர் பெர்ணான்��ோ, பிரித்தீ பத்மன் சூரசேன மற்றும் எஸ்.துரைராஜா ஆகிய ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த மனுவை விசாரணை செய்யவுள்ளனர்.

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதில் அரசியலமைப்பில் குழப்பமா? திங்கட்கிழமை உயர்நீதிமன்றத்தில் விசாரணை ஆரம்பம்

பட மூலாதாரம், PMD Sri Lanka

மனுவை தள்ளுபடி செய்யுமாறு கோரிக்கை

ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் சரியான காலப் பகுதி குறித்து உயர்நீதிமன்றம் தெளிவூட்டல்களை வழங்கும் வரை, ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுவதை இடைநிறுத்தும் வகையில் இடைக்காலத் தடையுத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல், தள்ளுபடி செய்யுமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் இடை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்ஜித் மத்தும பண்டார, தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான வஜித்த ஹேரத், கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் சோசலிஷ இளைஞர் சங்கத்தின் பிரதிநிதி எரங்க குணசேகர ஆகியோரினால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவினாலும் இடை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 19-வது திருத்தத்தின் படி 6 வருடங்களாகக் காணப்பட்ட ஜனாதிபதியின் பதவிக் காலம் 5 வருடங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது என இந்த இடை மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அரசியலமைப்பின் பிரகாரம், தற்போதைய ஜனாதிபதியின் பதவிக் காலம் இந்த ஆண்டுடன் நிறைவடைகின்றமையினால், இந்த ஆண்டில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதில் அரசியலமைப்பில் குழப்பமா? திங்கட்கிழமை உயர்நீதிமன்றத்தில் விசாரணை ஆரம்பம்

பட மூலாதாரம், PMD Sri Lanka

ஜனாதிபதியின் நிலைப்பாடு

2024-ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி சமிந்திர தயான் லெனவ என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இந்த மனுவைத் தாக்கல் செய்வதன் மூலம், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் பிரிவு 12(1), 82(6), 3, 4, 118 மற்றும் 125 ஆகிய பிரிவுடன் வாசிக்கப்பட வேண்டிய 126-இன் படி அரசியலமைப்பின் 19-ஆவது திருத்தத்தின் 3-ஆம் பிரிவின் ஊடாகத் திருத்தப்பட்ட பிரிவு 30(2)-ஐ வியாக்கியானம் செய்யக்கூடாது என, இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஜனாதிபதியின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் என்பதைக் கருத்தில் கொண்டு தேர்தல் ஆணைக்குழு அடுத்த ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும் என்பதால் உயர் நீதிமன்றத்தினால் இது குறித்த இறுதித் தீர்ப்பு அறிவிக்கப்படும் வரையில், 2024-ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான மேலதிகப் பணிகள் முன்னெடுக்கப்படுவதைத் தடுப்பதற்குத் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பு குறித்த மனுவில் கோரியுள்ளது.

இந்த மனுவை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்னர் மனுதாரர் தன்னிடமோ அல்லது தனது சட்டத்தரணிகளுடன் கலந்தாலோசிக்கவோ ஆலோசனை பெறவோ இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் என்பதோடு, 2024-ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்திருப்பது சரியானது என்பதே தனது உறுதியான நிலைப்பாடாகும் என்பதையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் ஜனாதிபதி பதவி காலத்தில் குழப்பம் - திருத்த நடவடிக்கை

அரசியலமைப்பின் 19-வது திருத்தத்தில் காணப்படும் குழப்பங்களை திருத்தம் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அமைச்சரவைக்கு யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவிக்கின்றார்.

மதவாச்சி பகுதியில் நேற்று (ஜூலை 5) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்படி, 19-வது திருத்தச் சட்டத்தில் ஜனாதிபதியின் பதவிக்காலம் ஒரு இடத்தில் 5 வருடங்கள் எனவும், மற்றொரு இடத்தில் 6 வருடங்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு ஏற்பட்ட குழப்ப நிலைமையை நிவர்த்தி செய்வதற்கான யோசனையை ஜனாதிபதி க��ந்த திங்கட்கிழமை அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சட்டமூலம் எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவிக்கின்றார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)