புதிய 'சீர்திருத்தவாதி' அதிபர் இரானை உலக நாடுகளுக்கு அருகில் கொண்டு வருவாரா?

மசூத் பெசெஷ்கியன்

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், கெய்வன் ஹொசைனி
  • பதவி, பிபிசி பாரசீகம்

50 நாட்களில் இரானில் எல்லாமே மாறிவிட்டது.

ஒரு கடுமையான, மேற்கத்திய எதிர்ப்பு ஆட்சி மாறி, ஒரு சீர்திருத்தவாதியின் ஆட்சி அமையப்போகிறது.

இப்படி நடக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

சனிக்கிழமையன்று இரானின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மசூத் பெசெஷ்கியன் 19 ஆண்டுகளுக்கு முன்பு இரானின் கடைசி சீர்திருத்தவாத அதிபரின் ஆட்சியின் போது சுகாதார அமைச்சராக இருந்தார்.

அப்போதிருந்து, சீர்திருத்தவாதிகள் அதிபர் தேர்தல் போட்டிகளில் கட்டுப்பாடுகளை எதிர்கொண்டனர். அவர்களது செல்வாக்கை ஒப்பிடுகையில் பெசெஷ்கியன் போன்ற சீர்திருத்தவாதி சிறந்த வேட்பாளர் இல்லை என்றாலும், அவரைக் கட்டுப்படுத்த முயன்றனர்.

இருப்பினும், இம்முறை தங்களுக்கு மெலிதான வாய்ப்பு இருப்பதை உணர்ந்த பெசெஷ்கியன், தன் முழு பலத்தை வெளிப்படுத்தி ஆட்சியைக் கைப்பற்றினர்.

இரான் அரசியல் களத்தை புரட்டி போட்ட சீர்திருத்தவாதியின் வெற்றி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தீவிர பழமைவாதியான சயீத் ஜலிலி

இரான் தேர்தல் முடிவுகள் அதிர்ச்சி அளிப்பது ஏன்?

இரானிய அரசியலமைப்பின் படி, அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் சக்திவாய்ந்த 'கார்டியன்’ கவுன்சிலால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். 1997 முதல் 2005 வரை அரசை நடத்திய சீர்திருத்தவாதிகளுக்கு எதிராக இந்த கார்டியன் கவுன்சில் இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.

கடந்த மூன்று தேர்தல்களில், சீர்திருத்தவாதிகள் தங்கள் உயர்மட்ட வேட்பாளர்கள் அனைவரும் இந்தக் கவுன்சிலால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாகப் புகார் தெரிவித்தனர். மேலும் அவர்களது குழுவில் இருந்து அதிகம் அறியப்படாத நபர்கள் மட்டுமே வேட்பாளர்களாகத் தேர்தலில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. எனவே, ஒரு சமமற்ற களத்தில், பழமைவாதப் போட்டியாளர்களுக்கு எதிராக சீர்திருத்தவாதிகளால் தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை.

இந்த ஆண்டு மே 19-ஆம் தேதி முன்னாள் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த போது, ​​பலர் அதே கட்சியைச் சேர்ந்த அதிபர் வரலாம் என எதிர்பார்த்தனர்.

ஜூன் 9 அன்று கார்டியன் கவுன்சில் ரகசிய ஆய்வு முடிவுகளை அறிவித்த பிறகும், சீர்திருத்தவாதிகளின் குழு தேர்தலில் சிறப்பாகச் செயல்படுவார்கள் என்று யாரும் பெரிதாக நம்பவில்லை.

மற்ற கட்சியின் அரசியல் நிலைப்பாட்டுடன் ஒத்துப் போகாத சீர்த்திருத்தவாதிகள் ஆறு பேரில் மசூத் பெசெஷ்கியன் மட்டுமே அதிபர் தேர்தலின் வேட்பாளர் ஆனார்.

கொள்கைவாதிகள், சீர்திருத்தவாதிகளுடன் ஒப்பிடும்போது மிகவும் பழமைவாதச் சிந்தனைகளைக் கொண்டுள்ளனர். ஆட்சியின் இஸ்லாமியச் சித்தாந்தத்தின் தீவிரமான பதிப்பைக் கொள்கைவாதிகள் ஆதரிக்கின்றனர். இரானின் உச்சத் தலைவரான அலி கமேனி அந்தப் பிரிவிலிருந்து வந்தவர். எனவே தான் இஸ்லாமியப் புரட்சிகரக் காவலர் படை (IRGC) சீர்திருத்தவாதிகளை விடக் கொள்கைவாதிகளுடன் மிகவும் நெருக்கமாக உள்ளது.

சமீப ஆண்டுகளில் கொள்கைவாதிகள் எப்படிச் சீர்திருத்தவாதிகளை அதிகாரத்தில் இருந்து வெளியேற்றினார்கள் என்பதை நாடு பார்த்தது. ஊடகங்களின் கூற்றுபடி, 'ஒத்திசைவு' எனப்படும் ஒருங்கிணைக்கப்பட்டச் செயல்பாட்டின் வாயிலாகக் கமேனிக்கு ஆதரவாக இல்லாத எவரும் அவரது சகப் பழமைவாதிகளால் அதிகாரத்தில் இருந்து விலக்கி வைக்கப்படுகிறார்கள்.

பெண்கள் மீதான கட்டுப்பாடு, வெடித்த போராட்டம்

இது பலத்தரப்பில் இருந்தும் குறிப்பிடத்தக்க எதிர்ப்பைத் தூண்டியது, குறிப்பாக 2009-இல் சீர்திருத்தவாதிகள் அதிபர் தேர்தலில் மோசடி நடந்ததாகக் கூறி, மில்லியன் கணக்கானவர்கள் எதிர்ப்பிற்கு வழிவகுத்தது. இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (ஐ.ஆர்.ஜி.சி) இந்த எதிர்ப்புகளை வன்முறை என்று கூறி மிருகத்தனமான முறையில் கட்டுப்படுத்தி முற்றுப்புள்ளி வைத்தது.

2021-இல் அதிபர் தேர்தலில் இப்ராஹிம் ரைசி வெற்றி பெற்றபோது, ​​சில ஆய்வாளர்கள் 'எல்லாமே முடிந்தது' என்று அறிவித்தனர். இரானின் 'இஸ்லாமியக் குடியரசின்' ஒவ்வொரு பிரிவும் உச்ச தலைவரோடு ஒத்த எண்ணம் கொண்ட பழமைவாதிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது, அவர்கள் தங்களை 'புரட்சி முன்னணி அமைப்பு’ (Revolution Front) என்று சொல்லி கொள்கின்றனர்.

முன்னாள் அதிபர் ரைசி, உச்சத் தலைவர் கமேனியைப் போன்று ஒரே மாதிரியான தோற்றத்தைக் கொண்டிருந்தது மட்டுமல்லாமல், அவரது கொள்கைகளுடனும் ஒத்துப் போனார். ரைசியின் செயல்பாடுகள் கமேனி செய்வதை போலவே இருந்தன: தற்சார்பு பொருளாதாரத்திற்காகப் பாடுபடுதல், சீனா மற்றும் ரஷ்யாவுடன் மிகவும் நெருக்கமான உறவுகளைக் குறிக்கும் 'கிழக்கைப் பார்' என்ற முழக்கத்தை கொண்டிருந்தது, வெளியுறவுக் கொள்கை கோட்பாடுகள் என அனைத்தும் கமேனியைப் போலவே இருந்தன.

சமூகத்தின் மீதான 'இஸ்லாமியக்' கட்டுப்பாடுகள் அவர்களின் கொள்கைகளின் முக்கியத் தூணாக இருந்தன. பெண்களைக் கடுமையாக நடத்துவதும் இதில் அடக்கம். 2022-ஆம் ஆண்டு செப்டம்பரில் காவலில் வைக்கப்பட்டிருந்த இளம் பெண் ஒருவரின் மரணம் மற்றும் இரானில் முழு 'இஸ்லாமியக் குடியரசு' ஆட்சி ஆகியவற்றுக்கு எதிராக மிகப்பெரிய எதிர்ப்பு அலை வீசத் தொடங்கியது.

ஆளும் மதகுருமார்களின் எதிர்வினை 2009-இல் நிகழ்ந்ததை விட அதிக ஆக்கிரோஷமாக இருந்தது. சுமார் ஆறு மாத காலம் நடந்த போராட்டங்களின் போது, ​​60-க்கும் மேற்பட்ட சிறார்கள் உட்பட 500-க்கும் மேற்பட்ட நபர்கள் தங்கள் உயிர்களை இழந்ததாக மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன. அதிகரித்த இணைய கட்டுப்பாடு, பெரும் எண்ணிக்கையிலான கைதுகள், இளம் எதிர்பாளர்களுக்கான சோதனைகள் மற்றும் அவர்களில் நான்கு பேரின் மரணதண்டனை ஆகிய அரசின் நடவடிக்கைகளால் 2022-2023 ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடந்தன.

இப்ராஹிம் ரைசி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இப்ராஹிம் ரைசி

இவ்வாறான அரசியல் அடக்குமுறைகளின் விளைவாக போராட்டங்கள் நிறுத்தப்பட்டன.

கடுமையான அடக்குமுறையின் மீதான கோபம், பொருளாதார நெருக்கடி ஆகியவற்றால் மக்கள் அதிருப்தியில் இருந்தனர். அச்சமயத்தில் தான் ரைசியின் இறப்புச் செய்தி ஆளும் அரசின்மீது பேரிடியாய் விழுந்தது. மேலும் புதிதாக ​​அதிபர் தேர்தல் நடத்துவது என்பது சிம்மசொப்பனமாகத் தோன்றியது.

நோபல் பரிசு பெற்ற நர்கீஸ் முகமதி உட்படப் போராட்டத்தின் பல முக்கியப் பிரமுகர்கள் இப்போது சிறையில் உள்ள நிலையில், மக்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த முடியாத நிலையில் இருந்தனர். அவர்களின் எதிர்ப்பை வெளிப்படுத்த நிலையில் தேர்தலில் வாக்களிப்பதைப் புறக்கணிக்க பலர் முடிவு செய்தனர். தங்கள் ஆட்சேபனைகளை வெளிப்படுத்தத் தேர்தல் ஒரு அமைதியான இடமாக மக்களுக்குத் தோன்றியது.

பெசெஷ்கியன் கொடுத்த வாக்குறுதிகள் என்ன?

பெசெஷ்கியன் கொடுத்த முக்கிய தேர்தல் வாக்குறுதியானது பழமைவாதிகளின் மேற்கத்திய எதிர்ப்பு வெளியுறவுக் கொள்கையைத் தாக்குவதாகும்.

சீர்திருத்தவாத அரசியல்வாதிகளின் ஒரு சிக்கலான குழுவுடன், நாட்டின் வெளியுறவு மந்திரி முகமது ஜாவத் ஜரீப்பையும் பெசெஷ்கியன் நியமித்திருக்கிறார்.

ஜாவத் ஜரீப், 2015-இல் அணுசக்திப் பேச்சுவார்த்தைகளை ஆதரிப்பதற்கான ஒரு வரலாற்று ஒப்பந்தத்தைக் முன்னெடுத்தவர் ஆவார்.

ஜரீப் ஒரு சீர்திருத்தவாதியாக இல்லாவிட்டாலும், அவர் கல்வித்துறையில் தனது அமைதியான வாழ்வில் இருந்து வெளியேறி பெசெஷ்கியனுக்காகப் பெரிதும் பிரசாரம் செய்தார். அவரது தேர்தல் அறிக்கையில், பெசெஷ்கியன் ஜரீப் உடன் இணைந்து அவரது வெளியுறவுக் கொள்கைகள் "மேற்குக்கு எதிரானது அல்ல, கிழக்குக்கு எதிரானது அல்ல," என்று அறிவித்தார்.

நாட்டை ரஷ்யா மற்றும் சீனாவுடன் நெருக்கமாக வழிநடத்திச் செல்லும் ரைசியின் கொள்கைகளை இருவரும் விமர்சித்தனர், மேலும் மேற்கு நாடுகளுடன் பேச்சுவார்த்தை மூலம் நாட்டின் அணுசக்தி முட்டுக்கட்டைக்கு ஒரு தீர்வை எட்டுவதற்கும் பொருளாதாரத் தடைகளை எளிதாக்குவதற்கும் வழிவகை செய்யப்படும் என்றனர். பொருளாதார நெருக்கடியை தீர்க்கக்கூடிய ஒரே குழு தாங்கள் மட்டுமே இருக்கிறோம் என்று இருவரும் வாக்குறுதி அளித்தனர்.

மற்ற வேட்பாளர்கள் மற்றும் உச்ச தலைவர் கமேனி ஆகியோர் இந்த வாக்குறுதிகளை விமர்சித்தனர்.

முகமது ஜாவத் ஜரீப்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முகமது ஜாவத் ஜரீப்

அமெரிக்காவுடனான நட்புறவு மூலம் பொருளாதாரம் செழிப்படையும் என்பதில் நம்பிக்கை கொண்டவர்கள் ‘ஏமாந்தவர்கள்’ என்று கமேனி குறிப்பிட்டார். இரானுடன் இணக்கம் இருந்தபோதிலும் அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தத்தை விலக்கிக் கொண்டது என்பதைச் சுட்டிக்காட்டி கமேனி விமர்சித்தார்.

கமேனியின் அரசியலமைப்பு அதிகாரம், மற்றும் சர்வதேச உறவுகளில் தனிப்பட்ட ஆர்வம் காரணமாக வெளியுறவுக் கொள்கை குறித்த அவரது கருத்துக்கள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

பெசெஷ்கியன் மற்றும் அவரது பிரசாரம் பல்வேறு எதிர்புகளைச் சந்தித்தது. அவருக்கு எதிராகத் தேர்தல் புறக்கணிப்புப் பிரசாரங்கள் நடந்தன.

மேலும், இரானின் அரசியல் கட்டமைப்பில் அதிபருக்கு வெளியுறவுக் கொள்கையை மறுசீரமைக்க அதிகாரம் இல்லை என்று கமேனி வலியுறுத்தினார். அதற்கு அவர் தரப்பில் வலுவான ஆதாரங்கள் இருந்தன.

இரானின் கொள்கைகளின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றான குட்ஸ் படை (Quds Force) இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் (IRGC) ஐந்து வெளிப்புறப் பிரிவுகளில் ஒன்றாகும். இதனை அதிபரால் நேரடியாகக் கட்டுப்படுத்த முடியாது. அவர்கள் என்ன செய்ய வேண்டும் அல்லது செய்யக்கூடாது என்பதை உச்சத் தலைவர் மட்டுமே தீர்மானிக்க முடியும். கமேனி மீண்டும் மீண்டும் இதனைக் குறிப்பிட்டார். குத்ஸ் படையின் செயல்பாடு நாட்டின் பாதுகாப்புக் கோட்பாட்டிற்கு இன்றியமையாதது என்று அவர் கூறினார்.

கடந்த வருடன் அக்டோபர் 7-ஆம் தேதி, இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பிறகான மத்தியக் கிழக்கின் சூழ்நிலையால், இரானிய ஆட்சியின் செயல்பாடுகள் மற்றும் லெபனான், சிரியா, இராக் போன்ற நாடுகளில் இரானியப் படைகளின் செயல்பாடுகள் தொடர்பான மாற்றங்கள் இன்னும் சவாலானதாக மாறிவிட்டன.

கமேனிக்கு எதிராகச் செல்வாரா?

கடந்த எட்டு மாதங்களில், இரான் ஹமாஸின் முக்கிய ஆதரவாளராக இருந்தது. மேலும் ஏமனில் உள்ள ஹூதிகள் போன்ற அதன் கூட்டாளிகள், இஸ்ரேலிய மற்றும் மேற்கத்திய நலன்களைச் சேதப்படுத்த, செங்கடலின் வர்த்தக பாதையைச் சீர்குலைக்க முயன்றனர். இரு நாடுகளுக்கும் இடையே முன்னெப்போதும் இல்லாத அளவிலான மோதலின் போது இஸ்லாமியப் புரட்சிகரக் காவலர் படை நேரடியாக இஸ்ரேலைத் தாக்கியது. இனி வரும் காலங்களில் நாட்டின் அதிபர் ஒரு திசையிலும், வெளியுறவு அமைச்சகம் மற்றொரு திசையிலும் பயணித்தால் சூழல் கடுமையாகி விடும்.

ஆயினும்கூட அதிபர் பதவி என்பது மிக உயர்ந்த இரானிய ராஜதந்திரிக்கான பதவியாகும். அதிபரின் அலுவலகம் மட்டுமல்ல, அவரின் கொள்கைகளைச் செயல்படுத்துவதற்கும் அவற்றை வடிவமைப்பதற்கும் வெளியுறவு அமைச்சகம் குறிப்பிடத்தக்கப் பங்கைக் கொண்டுள்ளது.

2015-இல் அப்போதைய நடுநிலையான அதிபர் ஹசன் ருஹானி, கமேனி உட்பட கடும்போக்கு அதிகாரிகளை ஒரு ஒப்பந்தத்தை ஏற்கும்படி சமாதானப்படுத்தினார். அதேபோல் மறைவான அரசியல் பரப்புரையின் மூலம் கமேனி உள்ளிட்டவர்களுக்கு பெசெஷ்கியன் அழுத்தம் கொடுக்க வாய்ப்பு உள்ளது.

மேலும், இரானின் புதிய நிர்வாகம் மக்களின் விருப்பத்தை கருத்தில் கொண்டு ஆட்சியை முன்னெடுக்கலாம். கமேனியின் நிலைப்பாட்டுடன் 100% ஒத்துப்போகாத கொள்கைகளை ஊக்குவிக்கலாம். இத்தகைய நுணுக்கங்களால் சீர்திருத்தவாதிகள் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவும், பெசெஷ்கியன் கூறியது போல் நாட்டைச் சுற்றி கொள்கைவாதிகளால் எழுப்பப்பட்டச் சுவர்களை உடைத்தெறியவும் வாய்ப்புகள் உருவாகும்.

இரான் அரசியல் களத்தை புரட்டி போட்ட சீர்திருத்தவாதியின் வெற்றி

பட மூலாதாரம், Getty Images

ஆனால் இந்த முறை, முந்தைய காலக்கட்டத்தில் சீர்திருத்த நிர்வாகத்தைம் அளித்ததுபோலச் சுதந்திரமான, ஜனநாயகத் தன்மைமிக்கச் சமூகத்திற்கான வாக்குறுதிகள் எதுவும் அளிக்கப்படவில்லை. காரணம், சீர்திருத்தவாதிகள் கடுமையான அரசியல் ஒடுக்குமுறைகளை எதிர்கொண்டுள்ளனர். முக்கியமான சிந்தனையாளர்களைக் கடும்போக்காளர்கள் படுகொலை செய்தல், செய்தித்தாள் அலுவலங்களை மூடுதல் ஆகியவை இதில் அடங்கும்.

மேலும், உச்சத்தலைவர் அலுவலகம், கார்டியன் கவுன்சில் மற்றும் உச்ச தேசிய பாதுகாப்புக் கவுன்சில் போன்ற முக்கியமான அதிகார மையங்களில் அதிபருக்குச் செல்வாக்கு இல்லை.

பெசெஷ்கியன் ஆட்சி அமைப்பால், சுதந்திரமான தேர்தல்களை நடத்தவோ, தணிக்கைச் சட்டங்களை மாற்றவோ, அறநெறிக் காவல்துறையைக் கட்டுப்படுத்தவோ முடியாது.

மிக முக்கியமாக, பெசெஷ்கியன் 6.2 கோடி வாக்காளர்களில் தோராயமாக 1.6 கோடி வாக்குகளை மட்டுமே பெற்று வெற்றி பெற்றார். இதற்கு மாறாக 27 ஆண்டுகளுக்கு முன்பு கிட்டத்தட்ட 2 கோடி (3.5 கோடியில்) வாக்குகளைப் பெற்று சீர்த்திருத்தவாதிகள் குழு வெற்றி பெற்றது.

1.3 கோடிக்கும் அதிகமானோர் அவரது போட்டியாளரான சயீத் ஜலிலிக்கு வாக்களித்துள்ளனர். இரான் தனது நலன்களைப் பாதுகாக்க மேற்கத்திய நாடுகளை எதிர்க்கும் மனநிலையை கொண்டிருக்க வேண்டும் என்று ஜலிலி கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)