விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: இதுவரை நடந்தது என்ன?- 8 முக்கியத் தகவல்கள்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்

பட மூலாதாரம், X- NaamTamilarOrg/Udhaystalin

படக்குறிப்பு, பாமக வேட்பாளர் அன்புமணி, திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நாளை மறுநாள் (ஜூன் 10) நடைபெற உள்ளது. இதற்காகத் தீவிரமாக நடைபெற்று வரும் பிரசாரம் இன்று (ஜூலை 8) மாலையுடன் முடிகிறது.

அ.தி.மு.க-வின் தேர்தல் புறக்கணிப்பு, அக்கட்சியின் வாக்குகளைப் பெறப் பா.ம.க - நாம் தமிழர் கட்சி இடையே நிலவும் போட்டி, தேர்தல் சமயத்தில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம், முதலமைச்சர் ஸ்டாலின் நேரடியாகப் பிரசாரம் செய்யாதது, அ.தி.மு.க இல்லாமல் மும்முனைப் போட்டி என பல விஷயங்கள் நடந்துள்ளன.

எத்தனை வாக்காளர்கள்?

கடந்த 2021-ஆம் ஆண்டு தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட தகவலின் படி விக்கிரவாண்டி தொகுதியில் 2,33,901 வாக்காளர்கள் உள்ளனர்.

இவர்களில் ஆண் வாக்காளர்கள் 1,15,608 பேரும், பெண் வாக்காளர்கள் 1,18,268 பேரும் மூன்றாம் பாலினத்தவர் 25 பேரும் உள்ளனர். கடந்த 2007-ஆம் ஆண்டு கண்டமங்கலம் (தனி) தொகுதி கலைக்கப்பட்டு, தொகுதி மறு சீரமைப்பில் விக்கிரவாண்டி தொகுதி புதிதாக உருவானது.

whatsapp

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இரண்டு எம்.எல்.ஏ-க்களை இழந்த விக்கிரவாண்டி

கடந்த 2011 தேர்தலே இத்தொகுதிக்கு முதல் தேர்தலாகும். 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ராமமூர்த்தி (51.71% வாக்குகள்) அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க-வின் ராதாமணியை (41.93% வாக்குகள்) 14,897 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட ராதாமணி 6,912 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த ராதாமணி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

அப்போது நடைபெற்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வம், தி.மு.க வேட்பாளர் புகழேந்தியை விட 44,924 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். அதன் பின்னர் கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் திமுக சார்பில் புகழேந்தி போட்டியிட்டார்.

இம்முறை அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட முத்தமிழ்ச் செல்வனை விட 9,573 வாக்குகள் அதிகம் பெற்று திமுகவைச் சேர்ந்த புகழேந்தி வெற்றி பெற்றார்.

விக்கிரவாண்டி

பட மூலாதாரம், Udhaystalin

இடைத்தேர்தல் ஏன் நடைபெறுகிறது?

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபைத் தொகுதியில் கடந்த 2021-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற புகழேந்தி, 2024 நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரை நேரத்தில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.

சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புகழேந்தி, குணமடைந்து வீடு திரும்பிய பிறகு, கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி விக்கிரவாண்டி அருகே முதல்வர் ஸ்டாலினின் தி.மு.க பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி திடீரென மயங்கி விழுந்தார்.

இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி மரணமடைந்தார். புகழேந்தியின் மறைவைத் தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், வரும் 10-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

தி.மு.க, பா.ம.க, நாம் தமிழர் வேட்பாளர்கள் யார்?

விக்கிரவாண்டி

பட மூலாதாரம், X/NaamTamilarOrg

இந்தத் தேர்தலில் தி.மு.க சார்பில் அக்கட்சியின் விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளராக இருக்கும் அன்னியூர் சிவா வேட்பாளராக போட்டியிடுகிறார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ம.க சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி போட்டியிடுகிறார்.

மக்களவைத் தேர்தலில் 8 சதவீதத்திற்கு அதிகமான வாக்குகளைப் பெற்று மாநிலக் கட்சி அந்தஸ்துக்கான தகுதி பெற்றிருக்கும் நாம் தமிழர் கட்சியும் ஓமியோபதி மருத்துவர் அபிநயாவை களமிறக்கியுள்ளது.

அ.தி.மு.க இடைத்தேர்தலைப் புறக்கணிப்பது ஏன்?

தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க இந்தத் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்தது.

இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில், “தி.மு.க-வினர் ஆட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதோடு, [...] மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விடமாட்டார்கள் என்பதாலும், தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது என்பதாலும், 10.7.2024 அன்று நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புறக்கணிக்கிறது,” என்று தெரிவித்தார்.

இந்த தேர்தல் தி.மு.க-வுக்கு ஏன் முக்கியம்?

தி.மு.க-பா.ம.க-நாம் தமிழர் கட்சி என்று மும்முனைப் போட்டியாக மாறியுள்ளது விக்கிரவாண்டி தேர்தல் களம்.

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதிக்குள் வருகிறது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்த சட்டமன்றத் தொகுதிக்குள் தி.மு.க. கூட்டணியைச் சேர்ந்த வி.சி.கவின் வேட்பாளர் து. ரவிக்குமார் அதிகபட்சமாக 72,188 வாக்குகளைப் பெற்றார்.

இதற்கு அடுத்தபடியாக, அ.தி.மு.க. வேட்பாளர் பாக்கியராஜ் 65,365 வாக்குகளைப் பெற்றார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரான 8,352 வாக்குகளைப் பெற்றார். தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பா.ம.க. 32,198 வாக்குகளைப் பெற்றது.

அதிமுக வாக்குகளை பாமகவால் ஈர்க்க முடிந்தால் அது நிச்சயம் திமுகவுக்கு சவாலாக மாறும்.

ஆளும் தி.மு.க அரசின் நலத்திடங்களுக்கு மக்கள் என்ன மதிப்பெண் வழக்குவார்கள் என்பதை இந்த தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்த��ம் என அரசியலை உற்று நோக்குபவர்கள் கூறுகின்றனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் ஆளும் திமுக அரசுக்கு எதிரான வலுவான அஸ்திரமாக எதிர்க்கட்சிகளுக்கு மாறியுள்ளது.

"கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய விவகாரம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கண்டிப்பாக எதிரொலிக்கும். ஆனால் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் வகையில் அமையாது," என்கிறார் மூத்த பத்திரிகையாளர் மாலன்.

விக்ரவாண்டி

பட மூலாதாரம், X/draramadoss

அ.தி.மு.க வாக்குகள் யாருக்கு?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க வாக்குகளை ஈர்க்க, பா.ம.க, நாம் தமிழர் கட்சி மட்டுமல்லாமல், ஆளும் கட்சியான திமுக கூட முயற்சிகளை மேற்கொண்டது மிகவும் சுவாரஸ்யமான விஷயம்.

தேர்தல் பிரசாரத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "அ.தி.மு.க மற்றும் தே.மு.தி.க-வில் இருக்கும் அன்பு உறவுகளே, நம் பொது எதிரி தி.மு.க தான். எத்தனையோ முறை கூட்டணியில் இல்லாவிட்டாலும் உங்களை ஆதரித்துள்ளேன். எனவே இம்முறை என்னை ஆதரியுங்கள்," என்று பேசினார்.

விக்கிரவாண்டியில் நடந்த பா.ம.க-வின் தேர்தல் பிரசார கூட்ட மேடையில் வைக்கப்பட்டிருந்த பேனரில் மோதியுடன் ஜெயலலிதா புகைப்படம் இடம்பெற்றிருந்ததும் சர்சையைக் கிளப்பியது.

அதேபோல விக்கிரவாண்டியின் சாணிமேடு கிராமத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ், "அதிமுகவினருக்கு ஒரு வேண்டுகோள். நம் பொது எதிரி திமுக. எனவே நீங்கள் பாமகவுக்கு வாக்களிக்க வேண்டும்" எனக் கூறினார்.

விக்கிரவாண்டியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, "அ.தி.மு.க-வின் நிறுவனரான மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் திமுகவில் பொருளாளராக பதவி வகித்தவர். திமுக சார்பாக நின்று இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். நாங்கள் பாமக போல சாதியவாத, மதவாத கட்சி அல்ல. எனவே திராவிட சித்தாந்தத்தைப் பின்பற்றும் அ.தி.மு.க தொண்டர்களின் பெரும்பான்மையான வாக்குகள் எங்களுக்குத் தான் கிடைக்கும்," எனக் கூறினார்.

இவ்வாறு தேர்தல் களத்தில் இருக்கும் மூன்று முதன்மை கட்சிகளும் அ.தி.மு.க-வின் வாக்குகளைக் கைப்பற்றுவதில் குறியாக உள்ளன.

விக்கிரவாண்டி

பட மூலாதாரம், EDAPPADI PALANISWAMI/FACEBOOK

பிரசாரத்தில் பங்கேற்காத பிரதான கட்சி தலைவர்கள்

இந்த இடைத்தேர்தலில் போட்டியிடாததால் அ.தி.மு.க பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் செய்யவில்லை. அதேபோல தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினும் நேரடியாக எவ்வித பிரசாரமும் செய்யவில்லை. அதற்குப் பதிலாக, தி.மு.க வேட்பாளரை ஆதரித்து வீடியோ வெளியிட்டு மட்டுமே ஆதரவு திரட்டினார்.

தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் இரு திராவிட கட்சிகளின் தலைவர்களுமே நேரடியாக பிரசாரம் செய்யாத தேர்தலாக விக்கிரவாண்டி இடைத்தேர்தல் உள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)