மருத்துவர்களின் அலட்சியத்தால் 15 ஆண்டுகள் கோமாவில் இருந்த பாகிஸ்தான் பெண்ணின் கதை

ஃபக்ரா அகமது: 'மருத்துவர்களின் அலட்சியத்தால்' 15 ஆண்டுகள் கோமாவில் இருந்த பெண்ணின் கதை

பட மூலாதாரம், FAKHRA AHMAD'S FAMILY

படக்குறிப்பு, ஃபக்ரா அகமது
  • எழுதியவர், முகமது ஸுபைர்
  • பதவி, பிபிசி உருது

கடந்த 2009-ஆம் ஆண்டு, பாகிஸ்தானைச் சேர்ந்த ஃபக்ரா அகமதுவுக்கு, பிரசவத்தின் போது அலட்சியமாக அதிகளவில் மயக்க மருந்து செலுத்தப்பட்டது. இதனால் அவர் கோமா நிலைக்குச் சென்றார். உடல் செயலிழந்து, கண்களை மட்டுமே அசைக்க முடிந்த அந்த நிலையில், 15 வருடங்கள் படுக்கையிலேயே கழித்தார் அந்த இளம்பெண். அவர் கடந்த மாதம் உயிரிழந்தார். அவரது கதை இது.

“நான் காலையில் அவளிடம் சென்று, அவளுடைய முகம் மற்றும் கண்களைப் பார்த்தேன். அவள் என்னைப் பார்ப்பதாக நினைத்தேன். அவளை நெருங்கி பார்த்தபோது, அவள் மகிழ்ச்சியாக இருப்பதை உணர்ந்தேன். ஃபக்ராவுக்கு கோமா ஏற்பட்டபோது அவள் யாருக்காகவோ காத்திருந்தாள். அவளுடைய மகள் இறந்தது கூட அவளுக்குத் தெரியாது. அவள் என்ன நினைக்கிறாள் என்பது கூட தெரியவில்லை.”

ஃபௌசியா ஆஸிம் தாஹிர், 15 ஆண்டுகளாக கோமாவில் இருந்த தன்னுடைய மகள் ஃபக்ரா அகமது குறித்து பிபிசி-யிடம் பேசினார்.

இந்தாண்டு, ஜூன் 28 அன்று ஃபக்ரா வாழ்வுக்கும் இறப்புக்குமான போரில் தோல்வியடைந்தார்.

கடந்த 2009-ஆம் ஆண்டு ஃபக்ரா அகமது பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு கோமா ஏற்பட்டது. இரண்டு நாட்கள் கழித்து, அவருடைய குழந்தை மருத்துவமனையிலேயே இறந்தது.

பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி இஃப்திகார் முகமது சௌத்ரி இதுகுறித்து தாமாக முன்வந்து வழக்கை எடுத்து விசாரித்தபோது, தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் அலட்சியமே ஃபக்ரா அகமதுவின் நிலைக்குக் காரணம் என தெரியவந்தது.

ஃபக்ரா அகமதுவின் தந்தை காஸி இஸ்மாயில் தாஹிர், “கடந்த 15 ஆண்டுகளாக நாங்கள் அனுபவித்த கஷ்டங்களையும் வலியையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது,” என்கிறார்.

ஃபக்ரா அகமது: 'மருத்துவர்களின் அலட்சியத்தால்' 15 ஆண்டுகள் கோமாவில் இருந்த பெண்ணின் கதை

பட மூலாதாரம், FAMILY OF FAKHRA AHMAD

படக்குறிப்பு, ஃபக்ரா அகமது வங்கியாளர்கள் சங்கத்தின் நிகழ்ச்சியில் முதல் ரேங்க் பெற்றபோது.

திறமையான மாணவி மற்றும் வங்கியாளர்

ஃபக்ரா அகமது வங்கியில் பணிபுரிந்துவந்தார். மேலும் பல ஆய்வுக்கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார்.

பிரசவத்திற்காகத் தங்கள் வீட்டுக்கு வந்தபோது கூட ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதிக்கொண்டிருந்ததாகவும், அதனைத் தபாலில் அனுப்புமாறு தன் மகள் கூறியதாகவும் காஸி இஸ்மாயில் கூறுகிறார்.

மூத்த மகளான ஃபக்ராவுடன் பிறந்தவர்கள் மூன்று பேர். ஃபக்ரா சிறுவயதிலேயே அறிவார்ந்தவராக இருந்துள்ளார். வங்கியில் பணிபுரியும் போது ஃபக்ரா உயர் கல்வி படித்துவந்தார். மேலும், வங்கியில் பணிபுரிய விரும்புபவர்களுக்காகப் பயிற்சியும் அளித்து வந்தார்.

ஃபக்ராவின் இரு தங்கைகள் மற்றும் தம்பி ஆகியோர் மருத்துவர்கள். அவருடைய தம்பி ரோஷன் அகமது தன் அக்கா குறித்து கூறுகையில், “பிரசவத்திற்காக ஃபக்ரா எங்கள் வீட்டுக்கு வந்தது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அப்போது நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்,” என்கிறார்.

ரோஷன் கூறுகையில், “எனக்குத் தேர்வுகள் வந்தபோது எனக்குப் பாடம் சொல்லித் தந்ததுடன் செய்முறைத் தேர்வுகளுக்கு நான் முழுவதும் தயாராகியிருக்கிறேனா என்று கூட அவர் சோதித்தது எனக்கு நினைவு இருக்கிறது. ஃபக்ராவினால் தான் நான் இன்றைக்கு மருத்துவர் ஆகியிருக்கிறேன்,” என்கிறார்.

வாட்ஸ் ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அவர் எங்களுடன் 'நட்பாக’ இருந்தார்

நிஷ்தார் பயிற்சி மருத்துவமனையின் செவிலியராக இருக்கும் ஸுபைதா, ஐசியூ வார்டில் 12 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஃபக்ரா அகமது அவருடைய கண்காணிப்பில் தான் அச்சமயத்தில் இருந்தார். தானும் மருத்துவமனையின் மற்ற பணியாளர்களும் ஃபக்ராவுடன் ‘நட்புறவு’ பேணியதாக ஸுபைதா கூறுகிறார்.

ஸுபைதா கூறுகையில், “ஃபக்ராவால் கண்களைத் திறக்க முடியும். ஆனால், அவரால் கண்களை அசைக்க முடியாது. சில விஷயங்களை மிக லேசாகப் புரிந்துகொள்ள முடியும். சில சமயங்களில் நாங்கள் வார்டில் இருக்கும்போது அவர் கண்களை உருட்டி எங்களைப் பார்ப்பார்,” என்றார்.

கோமாவால் பாதிக்கப்பட்ட நபரால் பதிலளிக்க முடியாது. ஆனால், ஃபக்ராவை கவனித்துக் கொண்ட மருத்துவப் பணியாளர்கள், ‘சில சமயங்களில் நீண்ட நேரத்திற்கு ஒருபுறமாக அவர் படுத்துக்கொண்டிருந்தால் அவருடைய முக பாவனைகள் மாறும்’ என்றனர்.

ஸுபைதா ஃபக்ராவுடன் கூடுமான வரை நேரம் செலவழிப்பார். “அவருடைய தாய் மற்றும் குடும்பத்தினர் இதனால் பல கஷ்டங்களை சந்தித்தனர்,” என்கிறார் அவர்.

இந்த 15 ஆண்டுகளில் தன்னுடைய மகளுக்காக ஃபக்ராவின் தாய் அதிக நேரத்தை செலவிடுவதற்கும் அவரை ஆசுவாசப்படுத்துவதற்கும் தன்னால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டதாக ஸுபைதா கூறுகிறார்.

“அவர்கள் ஃபக்ராவின் தினசரி தேவைகளை பூர்த்தி செய்தனர்,” என்கிறார் ஸுபைதா.

ஃபக்ரா அகமது: 'மருத்துவர்களின் அலட்சியத்தால்' 15 ஆண்டுகள் கோமாவில் இருந்த பெண்ணின் கதை

பட மூலாதாரம், QAZI ISMAIL TAHIR

படக்குறிப்பு, ஊதா நிற உடையில் உள்ள ஃபக்ரா அகமது சிறுவயது முதலே நன்றாக படிப்பார்.

அளவுக்கு அதிகமான ம���க்க மருந்து

ஃபக்ராவின் தந்தை காஸி இஸ்மாயில் தாஹிர் கூறுகையில், “பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், பாகிஸ்தான் மருத்துவம் மற்றும் பல் மருத்துவச் சங்கம் மற்றும் பஞ்சாப் அரசாங்கத்தின் விசாரணைகள் மூலம், ஃபக்ராவின் நிலைமைக்கு தனியார் மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களின் அலட்சியமே காரணம் என நிரூபணமாகியுள்ளது. ஆனால், அவர்களில் யாரும் இன்று வரை விசாரிக்கப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை,” என்றார்.

ஃபக்ராவுக்கு சுகப்பிரசவம் நடக்கும் சூழல் இருந்ததாகவும், ஆனால் அவருக்கு ‘மயக்க ஊசி’ செலுத்தப்பட்டதாகவும் அவர் கூறுகிறார். மேலும், ஃபக்ராவிடமோ அல்லது தங்களிடமோ அதற்காக அனுமதி வாங்கவில்லை என்பது ஆவணங்களில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “என் மகளுக்கு மயக்கவியல் மருத்துவரின் முன்னிலையில் மயக்க ஊசி செலுத்தப்படவில்லை. அங்கிருந்த பேறுகால உதவியாளர் மூலம்தான் செலுத்தப்பட்டது. தன் மகளுக்கு செலுத்தப்பட்ட மயக்க ஊசியின் டோஸ் மிகவும் அதிகம் என விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது,” என்றார்.

அவர் மேலும் கூறுகையில், “ஃபக்ராவின் ரத்த அழுத்தத்தைக் கண்காணிப்பதற்கான அமைப்பு கூட அங்கு இருக்கவில்லை என்பது விசாரணை அறிக்கையின் வாயிலாக நிரூபணமாகியுள்ளது. என் மகள் கோமாவுக்குச் சென்றது வெகுநேரமாகியும் கூட அவர்களுக்குத் தெரியவில்லை,” என்றார்.

“அந்தத் தனியார் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வசதி கூட இல்லை. வெளியிலிருந்து தான் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது,” என்றார்.

தாஹிர் மேலும் கூறுகையில், “வெகுநேரம் சென்றபின் தான் ஒரு கட்டத்தில் 'ஃபக்ராவை அங்கு நீண்ட நேரத்திற்கு வைத்திருக்க முடியாது' என நிஷ்தார் மருத்துவமனை நிர்வாகம் எங்களிடம் தெரிவித்தது. பின்னர் நாங்கள் நீதிமன்றத்த்தை நாடினோம்,” என்கிறார்.

விசாரணை அறிக்கை சொல்வது என்ன?

2009-ஆம் ஆண்டு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் மாவட்டச் சுகாதார செயல் அலுவலர் மருத்துவர் இஃப்திகார் ஹுசைன் குரேஷி தலைமையில் மூன்று நபர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.

அந்தக் குழு அளித்த அறிக்கையில், “மயக்கவியல் மருத்துவர் அறுவை சிகிச்சை அரங்கத்தில் ‘சோதனை அளவாக’ மயக்க ஊசி டோஸைச் செலுத்திவிட்டுச் சென்றதிலிருந்து இப்பிரச்னை ஆரம்பமாகிறது. பின்னர், அங்கிருந்த பேறுகால உதவியாளர் மயக்க ஊசி செலுத்துவதில் முன்னனுபவம் இல்லாத ஒருவரைச் செலுத்துமாறு கூறியுள்ளார். மயக்க ஊசி செலுத்திய பின்னர் ஃபக்ராவின் நிலைமை மிகவும் மோசமானது. அங்கிருந்த மகப்பேறு மருத்துவர் பயத்தின் காரணமாக, உரிய சி.பி.ஆர் சிகிச்சையை அவருக்கு வழங்கவில்லை,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், “மற்றொரு மருத்துவரை அழைப்பதில் நிறைய நேரத்தை மகப்பேறு மருத்துவர் வீணடித்துவிட்டார். செயற்கை சுவாசத்தைப் பொருத்துவதிலும் கால தாமதம் ஏற்பட்டதால் ஃபக்ராவுக்கு தீவிர மூளை பாதிப்பு ஏற்பட்டது,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “பிரசவத்தின் போது மயக்கவியல் மருத்துவர் உடனிருப்பது மருத்துவமனையின் கடமை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபக்ராவின் நிலைக்கு முல்தானில் உள்ள அந்தத் தனியார் மருத்துவமனைதான் காரணம் என அந்த அறிக்கை குற்றம்சாட்டியது. இந்தச் சம்பவத்தில் மருத்துவரும் அலட்சியமாகச் செயல்பட்டதாக அதில் கூறப்பட்டது.

ஃபக்ரா அகமது: 'மருத்துவர்களின் அலட்சியத்தால்' 15 ஆண்டுகள் கோமாவில் இருந்த பெண்ணின் கதை

பட மூலாதாரம், FAKHRA AHMAD'S FAMILY

சீனாவிலும் ஏற்பட்ட ஏமாற்றம்

இந்தப் போராட்டத்தில் ஃபக்ராவின் தந்தை காஸி இஸ்மாயிலுடன் அறிவுலகச் சமூகம் துணை நின்றது. ஃபக்ராவின் காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்குமாறு நீதிமன்றம் வங்கி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது.

ஃபக்ராவுக்கு, காப்பீட்டு நிறுவனம் ரூ.23 லட்சத்தை வழங்கியது. பின்னர், சீனாவில் உள்ள முக்கியமான மருத்துவமனைக்கு ஃபக்ரா அழைத்துச் செல்லப்பட்டார். சீனாவில் மேம்பட்டத் தொழில்நுட்பம் வாயிலாக அவருக்குச் சிகிச்சை வழங்கப்படும் என அவருடைய குடும்பத்தினர் நம்பினர். ஆனால், அங்கும் அவருடைய குடும்பத்தினருக்கு அதிருப்தி ஏற்பட்டது.

ஃபக்ராவின் தந்தை, “என் மகள் குணமாகவில்லை. அதன்பின் நாங்கள் முல்தானுக்குத் திரும்பிவிட்டோம்,” என்கிறார்.

அதன்பின், ஃபக்ரா மீண்டும் முல்தான் நிஷ்தார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காஸி இஸ்மாயில் கூறுகையில், “எங்களுடைய வீடு மருத்துவமனையிலிருந்து தொலைவில் உள்ளதால், அதைவிடுத்து நாங்கள் மருத்துவமனைக்கு அருகிலேயே ஒரு வீடு பார்த்துக்கொண்டு அங்கு சென்றுவிட்டோம்,” என்றார்.

ஃபக்ராவின் தாய் எப்போதும் தன் மகளுடனே அந்த மருத்துவமனையில் இருப்பார்.

“கடந்த 15 ஆண்டுகளில் ஒருமுறைதான் இந்த நகரத்திற்கு வெளியே சென்றிருக்கிறேன், அதுவும் என்னுடைய அம்மாவின் இறப்புக்கு செல்வதற்காக” என்கிறார் அவர்.

ஃபக்ராவுக்கு உடைகள் மாற்றுவது, நாள் முழுவதும் அவரை கவனித்துக் கொள்வது என எல்லாவற்றையும் குறை கூறாமல் செய்துவந்த அவருடைய தாய், மருத்துவமனை படுக்கையிலேயே உறங்கிக்கொள்வார்.

காஸி இஸ்மாயில் தாஹிர் கூறுகையில், ஃபக்ராவின் தாய் காலையிலேயே மருத்துவமனைக்கு சென்று, நீண்ட நேரம் அங்கேயே இருந்துவிட்டு மதியம் சிறிதுநேரத்திற்குதான் வீட்டுக்கு வருவார் என்றார்.

தாஹிர் கூறுகையில், “மாலையில் மீண்டும் ���வர் மருத்துவமனைக்கு செல்வார். இரவில் ஃபக்ராவின் உடைகளை சுத்தம் செய்வார், அவருக்குத் தேவையானவற்றை தயார் செய்வார். அந்த சமயங்களில், எங்கள் வீட்டில் ஒருமுறை தான் உணவு சமைக்கப்படும். சில சமயங்களில் சமைக்கவே மாட்டோம்” என்றார்.

தாயாகும் எண்ணத்தில் ஃபக்ரா

ஃபக்ராவின் திருமணம், நிச்சயிக்கப்பட்ட திருமணம். திருமணத்திற்கு பின்னரும் அவர் வேலைக்குச் சென்றார். பிரசவத்திற்கு முன்னர் அவருடைய பெற்றோர் வீட்டுக்கு ஃபக்ரா சென்றார்.

ஃபக்ராவின் தாய் கூறுகையில், “ஃபக்ரா என்னிடம் அவளுடைய குழந்தை குறித்து அடிக்கடி பேசுவாள். தன் குழந்தையைச் சிறப்பான பள்ளியில் சேர்ப்பேன் என்று என்னிடம் கூறுவாள். தன் வயிற்றில் வளரும் குழந்தையை வெற்றியாளராக வளர்க்க வேண்டும் என்பதே அவளுடைய கனவு. குடும்பத்திலுள்ள அனைவரும் பெருமைப்படும் அளவுக்கு குழந்த்கையை வளர்க்க வேண்டும் என விரும்பினாள். குழந்தை பிறந்த பின்னரும் பணிக்குச் செல்வேன் என்றும், எப்படி குழந்தையை வளர்க்கப் போகிறேன் எனத் தெரியவில்லை என்றும் கூறியிருக்கிறாள்,” என்கிறார்.

ஃபக்ரா பிரசவத்திற்கு முன்பு குழந்தைக்கான உடைகள் மற்றும் மற்ற பொருட்களையும் எடுத்து வைத்தார். பிரசவத்திற்காக மருத்துவமனைக்குச் சென்றபோது, அவர் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்ததாக கூறுகிறார்.

அவரது தாய் ஃபௌசியா ஆஸிம் தாஹிர் கூறுகையில், “ஃபக்ரா கோமாவுக்கு சென்றபோது, அவள் யாருக்காகவோ காத்திருந்தது போன்று நாங்கள் உணர்ந்தோம். அவளுடைய மகள் இறந்தது கூட அவளுக்குத் தெரியாது. அவள் அந்தச் சமயத்தில் என்ன நினைத்தாள் எனத் தெரியவில்லை. அவள் மனதில் என்ன ஓடிக்கொண்டிருந்தது எனத் தெரியவில்லை. மருத்துவமனை படுக்கையில் படுத்துக்கொண்டிருந்தபோது அவள் என்ன நினைப்பாள் என எண்ணி நான் வருத்தம் அடைந்திருக்கிறேன்,” என்றார்.

ஃபௌசியா மேலும் கூறுகையில், ஃபக்ராவின் கணவர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடும் தன் மனைவியை சில நாட்கள் வந்து பார்த்ததாகவும் பின்னர் வருவதை நிறுத்திவிட்டதாகவும் கூறினார்.

அவர் கூறுகையில், “அவருடைய கணவருக்கு இளம் வயது. அவர் தன்னுடைய எதிர்காலம் குறித்து நினைத்திருக்கலாம்,” என்றார்.

ஃபக்ராவின் மரணம் குறித்த செய்தியறிந்து அவருடைய கணவர் எதுவும் கூறாதது ஃபக்ராவின் பெற்றோருக்கு வருத்தத்தை அளித்துள்ளது.

“ஃபக்ராவின் இறப்புக்குப் பின்னர் அவர் பேசியிருந்தால் எங்களுக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருந்திருக்கும்,” என்கிறார் ஃபௌசியா.

ஃபக்ராவின் குடும்பத்தினர் ஆண்டுதோறும் அவருடைய பிறந்தநாள், திருமணம் அல்லது எந்த மகிழ்ச்சிகரமான நிகழ்வாக இருந்தாலும் மருத்துவமனையில் நீண்ட நேரம் இருந்து கொண்டாடுவர், என ஃபௌசியா கூறுகிறார்.

‘ஃபக்ரா சிரிப்பது போன்று இருந்தது’

தன் மகள் கோமாவில் இருந்தாலும் அவர் மூச்சுவிட்டுக் கொண்டிருந்ததை எண்ணி ஆசுவாசம் அடைந்ததாக அவருடைய தாய் ஃபௌசியா ஆஸிம் தாஹிர் கூறுகிறார்.

“நான் காலையில் அவளை நெருங்கிச் சென்று, அவளுடைய முகம் மற்றும் கண்களைப் பார்ப்பேன். அவள் என்னைப் பார்ப்பது போன்று இருக்கும். நெருங்கிப் பார்த்தால், அவளுடைய மகிழ்ச்சியை என்னால் உணர முடியும்,” என்கிறார்.

கோமாவின் ஆரம்பத்தில் ஃபக்ராவுக்குப் பல பிரச்னைகள் இருந்ததாக ஃபௌசியா கூறுகிறார். அவருடைய நோயெதிர்ப்பு மண்டலம் முழுமையாக பாதிக்கப்பட்டது. சிலமுறை அவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டது.

“அவருக்குத் தொற்று ஏற்படும் போது அவருடைய வலியை என்னால் உணர முடிந்தது,” என்கிறார்.

“ஆரம்பத்தில் ஃபக்ரா நலமுடன் திரும்ப நான் கடவுளைப் பிரார்த்திப்பேன். தொற்று காரணமாக அவருடைய உடல்நிலை மோசமான போது, அவருடைய வேதனையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என அல்லாவிடம் வேண்டினேன்,” என ஃபௌசியா கூறுகிறார்.

காஸி இஸ்மாயில் தாஹிர் கூறுகையில், “எல்லா மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும் அலட்சியமாக இருந்தனர் என நாங்கள் கூறவில்லை. ஆனால், மருத்துவத் துறையில் அலட்சியம் மற்றும் தவறுகளுக்கு இடமிருக்கக் கூடாது என்பது அனைவருக்கும் நினைவிருக்க வேண்டும்,” என்றார்.

அவர் கூறுகையில், “நாடு முழுவதிலும் உள்ள மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும் எங்களின் 15 ஆண்டுகாலக் கதையைக் கேட்க விரும்புகிறோம். எனவே, இதனால், யாரும் நாங்கள் அனுபவித்த வலி மற்றும் கஷ்டத்தை வருங்காலத்தில் அனுபவிக்க வேண்டியிருக்காது என்று நம்புகிறோம்,” என்றார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)