ஜப்பான்: 16,500 மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டாயக் கருத்தடை செய்த அரசு - நீதிக்காக போராடும் மக்கள்

2018இல் ஆர்ப்பாட்டக்காரர்கள் அணிவகுத்துச் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜப்பானில் கட்டாயக் கருத்தடையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக 2018இல் ஆர்ப்பாட்டக்காரர்கள் அணிவகுத்துச் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.
  • எழுதியவர், கெல்லி என்ஜி
  • பதவி, பிபிசி நியூஸ்

ஜப்பான் நாட்டில் 1950கள் மற்றும் 1990களுக்கு இடைப்பட்ட காலத்தில் 16,500 மாற்றுத் திறனாளிகளுக்கு வலுக்கட்டாயமாக கருத்தடை செய்யப்பட்டது. இதற்குக் காரணம் அப்போது ஜப்பானில் அமலில் இருந்த யூஜெனிக்ஸ் (Eugenics) சட்டம்.

இந்தச் சட்டமும், அதன் மூலம் நடத்தப்பட்ட கட்டாயக் கருத்தடைகளும் அரசமைப்பிற்கு எதிரானது என்று ஜப்பான் உச்சநீதிமன்றம் புதன்கிழமையன்று (03.07.2024) தீர்ப்பளித்துள்ளது.

மேல்முறையீட்டில் விசாரிக்கப்பட்ட 5 வழக்குகளில் தொடர்புடைய பாதிக்கப்பட்ட 11 பேருக்கு அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அரசு தங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும், முறையான நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென்றும் பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டவர்கள் கோரி வந்தனர். அவர்களின் நீதிக்கான போராட்டம் இந்த முக்கிய தீர்ப்பின் மூலம் முடிவுக்கு வந்துள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய  இங்கே கிளிக் செய்யவும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

வழக்கின் பின்னணி என்ன?

பல ஆண்டு சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, 2019ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. அப்போது பாதிக்கப்பட்டவர்களில் சிலர் மட்டுமே உயிரோடு இருந்தனர். அவர்களில் சிலர் அதிக இழப்பீட்டுக்காகத் தொடர்ந்து போராடினர்.

நீதிமன்றத்தில் தொடரப்பட்ட நான்கு வழக்குகளில், கீழ் நீதிமன்றங்களின் இழப்பீடு உத்தரவுகளை எதிர்த்து ஜப்பானின் மத்திய அரசு மேல்முறையீடு செய்தது.

ஐந்தாவது வழக்கில், இரண்டு பெண் வாதிகள் தங்கள் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக மேல்முறையீடு செய்தனர்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய சட்டத்தின் கீழ் (1948ஆம் ஆண்டு இயற்றப்பட்டது), சுமார் 25,000 பேருக்கு கருத்தடை செய்யப்பட்டது. அவர்களில் பலருக்கு பரம்பரை குறைபாடுகள் இருந்தன. அவர்கள் குறைபாடுகள் கொண்ட குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதைத் தடுக்க அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில் 16,500 கருத்தடை அறுவை சிகிச்சைகள், வலுக்கட்டாயமாக செய்யப்பட்டதாக ஜப்பான் அரசாங்கம் ஒப்புக்கொண்டது.

மற்ற 8,500 பேர் இந்த நடைமுறைகளுக்கு சம்மதித்ததாக அதிகாரிகள் கூறினாலும், அந்த நேரத்தில் அவர்கள் எதிர்கொண்ட அழுத்தத்தின் காரணமாக அவர்கள் அறுவை சிகிச்சைக்கு 'உண்மையிலேயே கட்டாயப்படுத்தப்பட்டதாக' வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியிடப்பட்ட ஜப்பான் நாடாளுமன்ற அறிக்கையின்படி, ஒன்பது வயதுடையவர்கள்கூட யூஜெனிக்ஸ் சட்டத்தால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்தச் சட்டம் 1996இல் ரத்து செய்யப்பட்டது.

நிதி இழப்பீடு என்பது மட்டுமே போதுமா?

பாதிக்கப்பட்டவர்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கட்டாயக் கருத்தடையால் பாதிக்கப்பட்டவர்கள்

புதன்கிழமையன்று, கட்டாயக் கருத்தடை வழக்குகளில் இழப்பீடு கோரிக்கைகளுக்கு 20 ஆண்டு வரம்புச் சட்டத்தைப் பயன்படுத்த முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

வரம்புச் சட்டம் (Statute of limitations) என்பது சட்டமன்ற அமைப்பால் நிறுவப்பட்ட ஒரு சட்டம். இது ஒரு நிகழ்வுக்குப் பிறகு சட்ட நடைமுறைகள் தொடங்கப்படக்கூடிய அதிகபட்ச நேரத்தைக் குறிப்பிடுகிறது. சிவில் சட்ட அமைப்புகளில், இந்த ஒழுங்குமுறை ஒரு பரிந்துரைக்கப்பட்ட காலம் எனக் குறிப்பிடப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்களில் சிலர், குறிப்பாக என்ன நடந்தது என்பதே தெரியாதவர்கள், தங்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைதான் செய்யப்பட்டது என்பதைப் பின்னர் அறிந்துகொண்டு, சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் தொடங்கியதால் கால தாமதம் ஆகிவிட்டதாக வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

கட்டாயக் கருத்தடைகள், 1960கள் மற்றும் 1970களில் மிகவும் பரவலாக இருந்தது. போருக்குப் பிந்தைய காலத்தில் குழந்தை பிறப்பு விகிதம் அதிகரித்தபோது, வலுக்கட்டாயமாக கருத்தடைகள் மேற்கொள்ளப்பட்டன.

அவ்வாறு கட்டாயக் கருத்தடைக்கு உள்ளாக்கப்பட்டவர்களில் பலருக்கு உடல் மற்றும் அறிவுசார் குறைபாடுகள், மனநலப் பிரச்னைகள் அல்லது தொழுநோய் போன்ற நாள்பட்ட நோய்கள் இருந்தன. அவர்கள் குழந்தை பெற்றுக்கொண்டால், அந்தக் குழந்தைகளுக்கும் அவர்களைப் போன்றே குறைபாடுகள் இருக்கும் எனச் சொல்லப்பட்டதால் இந்தக் கட்டாயக் கருத்தடைக்கு மேற்கொள்ளப்பட்டன.

பேரணியாகச் சென்ற சமூக ஆர்வலர்கள் மற்றும் வழக்கறிஞர்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக ஜப்பான் உச்சநீதிமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்ற சமூக ஆர்வலர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் (ஜூலை 3, 2024)

கடந்த 1953ஆம் ஆண்டு ஜப்பான் அரசாங்க அறிவிப்பின்படி, இந்த கட்டாயக் கருத்தடை நடவடிக்கைகளுக்கு ஒருவரை உடல்ரீதியாகக் கட்டுப்படுத்தவும், மயக்க மருந்து பயன்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டது. ஒருவரை ஏமாற்றிக்கூட கருத்தடை செய்வதற்கு அனுமதி இருந்தது.

"இந்தத் தருணத்திலிருந்து, அரசாங்கம் முக்கியமான முடிவை எடுக்க வேண்டும் மற்றும் முழு அளவிலான தீர்மானத்தை நோக்கி முழு வேகத்தில் முன்னேற வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்," என்று இரண்டு வாதிகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் யுடகா யோஷியாமா கூறினார்.

ஜப்பான் இன்றுவரை பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ஏற்பட்ட பயங்கரமான விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் இருப்பதாகவும், அரசின் கண்கள் அவர்களின் கஷ்டத்தைப் பார்க்க மறுப்பதாகவும் அவர் கூறினார்.

அரசாங்கத்தின் மீது வழக்கு தொடுத்த பாதிக்கப்பட்டவர்களில் பலர் உரிய இழப்பீடு கிடைக்காமலே உயிரிழந்து விட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தப் பிரச்னையுடன் தொடர்புடைய வழக்கு ஒன்றில், 2019இல் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் கீழ், உயிரோடு இருந்த பாதிக்கப்பட்டவர்களில் ஒவ்வொருவரும் 3.2 மில்லியன் யென் (இந்திய மதிப்பில் 16.52 லட்சம்) பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

சுமார் 1,300 பேர் இந்த இழப்பீடு கோரி விண்ணப்பித்துள்ளதாகவும், இதுவரை 1,100 பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் பாதிக்கப்பட்ட சிலருக்கு, நிதி இழப்பீடு என்பது மட்டுமே போதுமானது இல்லை.

'நாங்களும் மனிதர்கள்தான்'

கட்டாயக் கருத்தடையால் பாதிக்கப்பட்டவர்கள்

பட மூலாதாரம், Getty Images

"நான் ஒருபோதும் தாயாக முடியாது என்பதை உணர்ந்தபோது, ​​என் இதயம் நொறுங்கிப் போனது," என்கிறார் யூமி சுஸுகி. இவருக்கு பிறப்பிலேயே பெருமூளை வாதம் இருந்தது. 12 வயதில் தனக்கு வலுக்கட்டாயமாகக் கருத்தடை செய்யப்பட்டதாக, 2021இல் பிபிசிக்கு அளித்த பேட்டியில் யூமி சுஸுகி கூறியிருந்தார்.

இப்போது யூமி சுஸுகிக்கு 68 வயதாகிறது. புதன்கிழமை ஜப்பான் உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட வழக்குகளின் 11 வாதிகளில் யூமி சுஸுகியும் ஒருவர்.

"சிறு வயதில் இருந்தே பல பாகுபாடுகளை நான் எதிர்கொண்டுள்ளேன். ஆனால் இந்தக் கட்டாயக் கருத்தடை என்பது மிகவும் பயங்கரமானது. என் இதயமே அப்போது நொறுங்கிவிட்டது."

"எனக்கு நீங்கள் கொடுக்கும் பணம் வேண்டாம். எங்களுக்கு நடத்தப்பட்ட இந்த அநீதி குறித்து மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இதுபோல மீண்டும் யாருக்கும், எப்போதும் நடக்கக்கூடாது. மாற்றுத் திறனாளிகளையும் சமமாக நடத்த வேண்டும். நாங்கள் ஒன்றும் ஆடு, மாடுகளோ அல்லது பொருட்களோ அல்ல. நாங்களும் மனிதர்கள்தான்" என்கிறார் யூமி சுஸுகி.

பிபி

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)