ரா. சம்பந்தன் காலமானார்: இலங்கைத் தமிழர் விவகாரத்தில் நீண்ட காலம் பணியாற்றியவர்

சம்பந்தன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வந்தார் ரா.சம்பந்தன்
  • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

முப்பதைந்து ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கைத் தமிழர் அரசியலில் முக்கியப் பங்கு வகித்த இலங்கையின் மூத்த அரசியல்வாதியும், இலங்கை தமிழரசு கட்சியின் பெரும் தலைவருமான ரா.சம்பந்தன் காலமானார்.

இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு ஒரு நியாயமான தீர்வைப் பெறுவதற்காக நீண்ட காலம் பணியாற்றியவர் அவர்.

அவருக்கு வயது 91.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய  இங்கே கிளிக் செய்யவும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ரா.சம்பந்தனின் அரசியல் பயணம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த பெருந்தலைவரான ரா.சம்பந்தன், கிழக்கு திரிகோணமலையின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.

பல தசாப்தங்களாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சம்பந்தன், நாடாளுமன்றத்தில் தமிழர் பிரச்சனைகளுக்காக உறுதியான, இடைவிடாத குரலை எழுப்பியவர்.

"ரா. சம்பந்தன் பல வேறுபட்ட அரசியல் சூழ்நிலைகளைத் தாண்டிவந்த மனிதர். அந்தந்த சூழ்நிலைகளுக்கு அரசியல்ரீதியான பொறுப்புகளோடு எதிர்வினை ஆற்றியவர். பல அவமானங்களை எதிர்கொண்டாலும், தமிழர்களின் நலனை மனதில் வைத்து தனது பயணத்தைத் தொடர்ந்தவர். தமிழர்களுக்கு ஏதாவது ஒரு தீர்வு தனது வாழ்நாளிலேயே வரும் என நம்பினார் சம்பந்தன்" என்கிறார் இலங்கை விவகாரங்கள் குறித்து தொடர்ந்து எழுதிவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளரான ஆர்.கே. ராதாகிருஷ்ணன்.

திருகோணமலையை மையமாக வைத்து, 1970ஆம் ஆண்டுவாக்கில் தனது அரசியல் பிரவேசத்தைத் தொடங்கினார் சம்பந்தன். 1977ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், தமிழர் விடுதலை கூட்டணியின் சார்பில், இரா.சம்பந்தன் திருகோணமலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

இந்தக் காலகட்டத்தில்தான் இலங்கையின் தமிழர் அரசியல் வேறொரு பாதைக்குத் திரும்பியிருந்தது. வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட இளைஞர்கள், ஆயுதப் போராட்டத்தை தமிழர் பிரச்சனைக்கு ஒரு தீர்வாக முன்வைத்து செயல்பட ஆரம்பித்திருந்தனர்.

1983ஆம் ஆண்டு நடுப்பகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை அரசியலமைப்பின் ஆறாவது சட்டத் திருத்தம் தனிநாடு கோருவதற்கு எதிராக இருப்பதைக் கண்டித்தும் 1983 கறுப்பு ஜூலை நிகழ்வுகளில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கும், அவர்களது உடைமைகள் சேதமாக்கப்பட்டதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தும் நாடாளுமன்ற அமர்வுகளைப் புறக்கணித்தனர்.

மூன்று மாதங்கள் தொடர்ந்து நாடாளுமன்ற அமர்வுகளில் பங்குபெறாததால், 1983 செப்டம்பரில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார் சம்பந்தன்.

இரா.சம்பந்தன்

பட மூலாதாரம், TNA

தமிழர் பகுதியாக விளங்கிய திருகோணமலை தேர்தல் தொகுதியை மையப்படுத்தி, 1970ஆம் ஆண்டு காலப் பகுதியில் ரா.சம்பந்தன் தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்துள்ளார்.

1977ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், தமிழர் விடுதலை கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தி, ரா.சம்பந்தன் திருகோணமலை தொகுதி தேர்தலில் போட்டியிட்டார்.

இந்த தேர்தலின் ஊடாக இரா.சம்பந்தன், இலங்கை நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்தார்.

இவரது அரசியல் பிரவேசம் இடம்பெற்ற காலப் பகுதியானது, உள்நாட்டு போர் ஆரம்பமான காலப் பகுதி என்பதுடன், பெருமளவான இலங்கை தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட காலப் பகுதியாகவும் அமைந்திருந்தது.

இந்த நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய, ரா.சம்பந்தன் உள்ளிட்ட தமிழர் விடுதலை கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் 1983ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தை புறக்கணித்திருந்தனர்.

தனிநாட்டு கோரிக்கைக்கு இடமளிக்க முடியாது என்ற உள்ளடக்கத்துடனான அரசியலமைப்பு திருத்தத்துக்கு ஆதரவளிக்க முடியாது எனவும், 1983ஆம் ஆண்டு ஆயிரக்கணக்கான தமிழர்கள், படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் நாடாளுமன்ற அமர்வுகளை தமிழர் விடுதலை கூட்டணி புறக்கணித்திருந்தது.

நாடாளுமன்ற அமர்வுகளை தொடர்ந்து மூன்று மாத காலம் புறக்கணித்த காரணத்தை முன்னிலைப்படுத்தி, ரா.சம்பந்தனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி 1983ஆம் ஆண்டு பறிக்கப்பட்டது.

இதையடுத்து, 1989ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலை கூட்டணி தலைமையில் பல தமிழ் கட்சிகளின் ஆதரவுடன் அமைக்கப்பட்ட கூட்டமைப்பு சார்பில் சம்பந்தன், திருகோணமலை தேர்தல் தொகுதியில் போட்டியிட்டார்.

எனினும், அந்த தேர்தலில் அவர் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகவில்லை.

ரா.சம்பந்தன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோட்டாபய ராஜபக்ஷேவுடன் ரா.சம்பந்தன்

இதற்குப் பிறகு தமிழர் விடுதலை கூட்டணி, அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, டெலோ ஆகிய கட்சிகள் கைகோர்த்து 2001ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த கூட்டமைப்பின் தலைவராக ரா.சம்பந்தன் தேர்வு செய்யப்பட்டார்.

இந்தக் கூட்டமைப்பிற்கு தேர்தல்கள் செயலகம் அங்கீகாரம் வழங்காத நிலையில், 2001ஆம் ஆண்டு தேர்தலை தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற பெயரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்கொண்டது. இந்தத் தேர்தலின் மூலம், 18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினரானார் சம்பந்தன்.

இந்த நிலையில், இலங்கை தமிழர்களின் ஒரே அரசியல் பிரதிநிதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஏற்றுக்கொள்ளுமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு கூறியது. ஆனால், இதனை தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரான ஆனந்தசங்கரி ஏற்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 2004ஆ��் ஆண்டு தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னத்தில் போட்டியிட ஆனந்தசங்கரி அனுமதிக்கவில்லை.

இதனால் 2004ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தமிழரசு கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டது. இந்த காலகட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகவும் ரா.சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டார். இதற்குப் பிறகு வந்த அனைத்து நாடாளுமன்றத் தேர்தல்களிலும் சம்பந்தன் வெற்றிபெற்றார்.

மன்மோகன் சிங்குடன் இரா.சம்பந்தன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2012இல் அப்போதைய இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குடன் ரா.சம்பந்தன்

எதிர்கட்சித் தலைவரான ரா.சம்பந்தன்

சுதந்திர இலங்கையின் நாடாளுமன்ற வரலாற்றில் தற்போதுவரை இரண்டு தமிழர்கள் மாத்திரமே எதிர்கட்சித் தலைவர்களாக பதவி வகித்துள்ளனர். 1977ஆம் ஆண்டில் தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவரான அ. அமிர்தலிங்கம், இலங்கையின் முதலாவது தமிழ் எதிர்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

2015ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் இலங்கையின் பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியும் இணைந்து ஆட்சி அமைத்தனர். இதனால், இந்த இரு கட்சிகளுக்கும் அடுத்தபடியாக அதிக இடங்களைப் பெற்ற கட்சியாக இலங்கை தமிழரசு கட்சி விளங்கியது. இந்தக் கட்சிக்கு 16 இடங்கள் கிடைத்திருந்தன. ஆகவே 38 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி, இலங்கையின் தமிழர் தலைவர் ஒருவருக்கு மீண்டும் கிடைத்தது.

ஈழத் தமிழர்களின் அரசியல் தீர்வுக்காக உள்நாட்டில் மாத்திரமன்றி, சர்வதேச நாடுகளுடனும் இணைந்து செயற்பட்ட தலைவர்களில் ரா. சம்பந்தனுக்கு முக்கிய இடம் இருக்கிறது.

"மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலகட்டத்தில் இந்தியாவில் அவருக்கு ஒரு பெரிய மதிப்பு இருந்தது. ஆனால், 2014க்குப் பிறகு இந்தியாவுக்கு இலங்கை பற்றிய அணுகுமுறையே இல்லாத நிலை ஏற்பட்டது. இந்தியா தற்போது மலையக மக்களுக்கு பல உதவிகளைச் செய்துவரும் நிலையில், வடக்கிலும் கிழக்கிலும் உள்ள மக்களைப் பற்றி பெரிதாக யோசிப்பதில்லை என்ற நிலை இருந்தாலும் அதைப் பற்றி அவருக்கு பெரிய புகார்கள் ஏதும் இல்லை. தொடர்ந்து இலங்கை விவகாரத்தில் இந்தியா கவனம் செலுத்தும்படி கோரிவந்தார் அவர்" என்கிறார் ஆர்.கே. ராதாகிருஷ்ணன்.

இலங்கைச் சூழல் குறித்து இந்தியாவுக்கு பல தருணங்களில் சம்பந்தன் கடிதம் எழுதியிருக்கிறார் என்றும், அது தொடர்பாக பதில் ஏதும் வராத போதும் தனது முயற்சிகளை அவர் கைவிடவில்லை என்றும் கூறுகிறார் ஆர்.கே. ராதாகிருஷ்ணன்.

ரா.சம்பந்தன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரணில் விக்கிரமசிங்கவுடன் ரா.சம்பந்தன்

தமிழர்களுக்காக குரல் கொடுத்தவர்

மனித உரிமை மீறல் விவகாரம், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், தமிழர் பகுதிகளில் இடம்பெறும் அத்துமீறிய குடியேற்றம், காணி பிரசினைகள் உள்பட தமிழர்கள் எதிர்நோக்கி வந்த பிரச்னைகளுக்கு குரல் கொடுத்த முக்கிய தலைவராக சம்பந்தன் இருந்தார்.

"அங்கிருக்கும் அரச கட்டமைப்புக்குள் நின்றுகொண்டு என்ன செய்ய முடியுமோ, அதை அவர் செய்திருக்கிறார். இலங்கையில் எல்லாமே ஒரு போராட்டமாகத்தான் இருந்தது. புலிகள் முழுமையாகத் தோற்ற பிறகு, தமிழர் நலன் தொடர்பான சிறிய முன்னேற்றத்திற்குக்கூட பெரிதாகப் போராட வேண்டியிருந்தது. தீர்க்கமான முடிவெடுக்க தயங்குவார் என்ற அவரைப் பற்றிய விமர்சனம் சரியானதல்ல. சம்பந்தனாக இருந்தால்தான் அவரது நிலை புரியும்" என்கிறார் ராதாகிருஷ்ணன்.

ஆனால், மூத்த பத்திரிகையாளரான பகவான் சிங், சம்பந்தன் குறித்த மாறுபட்ட சித்திரத்தை முன்வைக்கிறார்.

"தனது ஆங்கிலப்புலமை, விவாதம் செய்யும் திறம், ஈழம் குறித்த ஆழமான புரிதல் ஆகியவற்றை அவர் முழுமையாகப் பயன்படுத்தியிருந்தால் சிங்கள ஆதிக்கத்திற்கு எதிரான தமிழர் அரசியலில் ஒரு ஒற்றுமையை, ஒருமித்த கருத்தைக் கொண்டுவந்திருக்க முடியும். அமிர்தலிங்கம் கொடூரமாகக் கொல்லப்பட்ட நிலையில், தலைமைப் பதவி இவருக்குக் கிடைத்தது. ஆனால், தமிழ் - சிங்கள அரசியலில் உள்ள மோசமான சக்திகளின் ஆதாயத்திற்காக பேச்சுவார்த்தை நடத்தும் ஒரு நபராக சம்பந்தன் தன்னைக் குறுக்கிக் கொண்டார்" என்கிறார் பகவான் சிங்.

விடுதலைப் புலிகளுக்கான ஆதரவு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரா.சம்பந்தன்

விடுதலைப் புலிகளுக்கான ஆதரவு

2004ஐ ஒட்டிய வருடங்களில் புலிகளுக்கு ஆதரவாக இருந்ததாக இவர் மீது விமர��சனம் வைக்கப்படுவதும் இருக்கிறது.

"ஆனால், புலிகள் வலுவாக இருந்த நிலையில், அதைத் தவிர வேறு எதையும் செய்திருக்க முடியாது. மற்றொரு பக்கம், புலிகள் இவரைக் கண்டுகொள்ளவேயில்லை. இருந்தபோதும் மக்களுக்காக செயல்பட வேண்டுமா அல்லது தனது மான - அவமானம் சார்ந்து செயல்பட வேண்டுமா என்ற நிலையில், மக்களுக்காக செயல்பட்டார் அவர்" என்கிறார் ராதாகிருஷ்ணன்.

தனது மரணத்தின் மூலம் நிரப்ப முடியாத ஒரு வெற்றிடத்தை இலங்கைத் தமிழர் அரசியலில் ஏற்படுத்திச் சென்றிருக்கிறார் சம்பந்தன்.

"ஆனால் அந்த வெற்றிடம் முன்பே ஏற்பட்டுவிட்டது. இவர் மிகவும் உடல் நலம் குன்றியிருந்த மூன்று, நான்கு வருடங்களில் தமிழர் அரசியலே சின்னாபின்னமாகிவிட்டது. தமிழரசுக் கட்சியில் இரண்டாம் கட்டத் தலைவர்களுக்குள் இருந்த போட்டி இதற்கு முக்கியக் காரணம். தற்போது ரா. சம்பந்தன் மரணமடைந்திருக்கும் நிலையில், இதைவிட பெரிய துரதிர்ஷ்டம் இருக்க முடியாது" என்கிறார் ராதாகிருஷ்ணன்.

சம்பந்தன்

பட மூலாதாரம், Getty Images

"உள்நாட்டு யுத்தம் முடிவடைந்ததற்குப் பிறகான தமிழர் அரசியலில் சம்பந்தனுக்கு ஒரு முக்கியப் பங்கு இருந்தது. ஆனால், அது எந்த அளவுக்கு தமிழர்களுக்கு முன்னேற்றத்தைக் கொண்டுவந்தது என்பது ஒரு முக்கியமான கேள்வி. சம்பந்தனைப் பொறுத்தவரை, இலங்கையில் தமிழ் தேசிய அரசியலை ஒன்றிணைக்கக் கூடிய நிலையில் இருந்தார். அவர் இல்லாவிட்டால் தமிழர் அரசியல் சிதறிப் போயிருக்கும். ஆனால், அந்த ஒற்றுமையால் தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார அபிலாஷைகளுக்கு முன்னேற்றம் ஏற்பட்டதா என்பதும் ஒரு கேள்வி.” என்கிறார் இலங்கையைச் சேர்ந்த அரசியல் - பொருளாதார ஆய்வாளரான அகிலன் கதிர்காமர்.

“அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் போன்ற முக்கிய தமிழ் தலைவர்கள் புலிகளால் கொல்லப்பட்ட நிலையில்தான் சம்பந்தன் தலைமைத்துவத்தைப் பெற்றார். அப்போதிருந்தே தமிழர்களின் நாடாளுமன்ற அரசியலுக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டுவிட்டதாகத்தான் சொல்லவேண்டும். யுத்தம் முடிந்த பிறகு அந்தப் பின்னடைவு மேலும் அதிகரித்தது. இங்கிருந்த தலைவர்களால் தமிழ் அரசியலை சரியான வகையில் முன்னெடுத்துச் செல்ல முடியவில்லை. ஆனால், இதனை சம்பந்தன் என்ற தனி நபர் மீது சொல்லப்படும் குறைபாடாக பார்க்கக்கூடாது. இது தமிழ் அரசியலுக்கே இருக்கும் ஒட்டுமொத்த சவாலாகத்தான் பார்க்க வேண்டும்" என்கிறார் அகிலன் கதிர்காமர்.

ரா.சம்பந்தன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2014இல் அப்போதைய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்த ரா.சம்பந்தன்

ரா. சம்பந்தனின் தனிப்பட்ட வாழ்க்கை

ரா.சம்பந்தன் என அனைவராலும் அழைக்கப்பட்ட ராஜவரோதயம் சம்பந்தன், திருகோணமலையில் 1933ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி பிறந்தார்.

யாழ்ப்பாணம் - சம்பத்தரிசியார் கல்லூரி, மொறட்டுவை புனித செபஸ்தியன் கல்லூரி ஆகியவற்றில் படித்த ரா.சம்பந்தன் இலங்கை சட்டக் கல்லூரியில் இணைந்து சட்டம் பயின்று வழக்கறிஞரானார். சம்பந்தனின் மனைவி லீலாவதி. இந்தத் தம்பதிக்கு சஞ்சீவன், செந்தூரன், கிருஷாங்கிணி என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

நீண்ட நாட்களாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சம்பந்தன், நாடாளுமன்றத்திற்குச் செல்வதிலிருந்து விடுப்பு எடுத்திருந்தார். உடல்நலம் மோசமடைந்த நிலையில், கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த ரா.சம்பந்தன், சிகிச்சை பலனின்றி ஜூன் 30ஆம் தேதி இரவில் உயிரிழந்தார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)