இன்ஸ்டாவில் பங்குச்சந்தை டிரேடிங் கற்றுத் தருவதாகக் கூறி பணம் பறிக்கும் கும்பல் - கண்டறியும் வழிகள்

இன்ஸ்டாவில் பங்குச்சந்தை டிரேடிங் கற்றுத் தருவதாகக் கூறி பணம் பறிக்கும் கும்பல் - கண்டறியும் வழிகள்

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், ச.பிரசாந்த்.
  • பதவி, பிபிசி தமிழுக்காக

‘‘இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு நபர் தொடர்ச்சியாக, டிரேடிங் மூலம் லாபம் பெறுவது போன்றும், லாபம் பெறுவதற்கு தாம் தனியாக ஒரு உத்தி வைத்துள்ளதாகவும் வீடியோக்களை பகிர்ந்து வந்தார். அவரைப் போல் நானும் சம்பாதிக்க ஆசைப்பட்டு, அவர் ஆன்லைனில் எடுத்த கட்டண பயிற்சி வகுப்பில் சேர்ந்தேன்," என்கிறார் பெங்களூருவில் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரியும் ஸ்ரீராம்.

அந்த நபர், ஏழாயிரம் ரூபாயை கட்டணமாகப் பெற்றுக்கொண்டு சில உத்திகளை கற்றுக்கொடுத்ததும், ஸ்ரீராம் அதை இந்திய பங்குச் சந்தையில் பயன்படுத்தி டிரேடிங் செய்ய முயன்றுள்ளார். ஆனால் ஸ்ரீராமுக்கு "இன்ஸ்டாகிராமில் அந்த நபர் கூறியது போல் எதுவும் நடக்கவில்லை, நஷ்டம்தான் ஏற்பட்டது.’’

இந்திய பங்குச்சந்தையில் ஆலோசகராகப் பதிவு செய்யாத நபர்கள் பலரும் இதுபோல் சமூக ஊடகங்கள் வாயிலாக மற்றவர்களுக்கு ஆசை காட்டி பயிற்சி என்ற பெயரில் கட்டணத்தை வசூலிப்பதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

அவர்களின் ஆலோசனைப்படி, பங்குச்சந்தை முதலீடு மற்றும் டிரேடிங் செய்து நஷ்டமடைந்ததால் சிலர் தற்கொலை முடிவுக்கும் தள்ளப்படுவதாகப் புகார்கள் எழுகின்றன. தகுதியற்ற நபர்களின் வலையில் பலரும் சிக்குவது எப்படி? பங்குச்சந்தையில் முறையாக முதலீடு செய்வது எப்படி?

தகுதியற்ற நபர்களின் பங்குச்சந்தை ஆலோசனை

இன்ஸ்டாவில் பங்குச்சந்தை டிரேடிங் கற்றுத் தருவதாகக் கூறி பணம் பறிக்கும் கும்பல் - கண்டறியும் வழிகள்

பட மூலாதாரம், Screenshot

படக்குறிப்பு, டெலிகிராம் பக்கத்தில் டிரேடிங் கால்

இந்திய பங்குச்சந்தையைப் பொருத்தவரை குறுகிய மற்றும் நீண்ட கால நோக்கில் முதலீடு செய்யலாம் அல்லது இன்ட்ரா டே டிரேடிங் என்ற முறையில் பங்குகளை வாங்கிய அன்றே விற்கும் வகையிலும் டிரேடிங் செய்யலாம்.

இந்த பங்குச்சந்தை டிரேடிங்கை லாபகரமாகச் செய்வது எப்படி என கற்றுத் தருவதாகக் கூறி சமூக ஊடகங்களில் கவர்ச்சிகரமாகப் பதிவிட்டுத் தம்மைப் பின்தொடர்பவர்களின் ஆசையைச் சிலர் தூண்டுகின்றனர்.

குறிப்பாக இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற தளங்களில், ‘உங்களிடம் பத்தாயிரம் இருந்தால் போதும், ஷேர் டிரேடிங்கில் தினமும் ஆயிரம் சம்பாதிக்கலாம்’, ‘தினமும் ஒரு மணிநேரம் போதும், உங்கள் பணப் பிரச்னையைத் தீர்க்கலாம்,’ என்பன போன்ற கவர்ச்சிகர வாசகங்களுடன், தாங்கள் குறுகிய காலத்தில் நிறைய சம்பாதிப்பது போன்ற வீடியோக்களை சிலர் பகிர்கின்றனர்.

இன்ஸ்டாவில் பங்குச்சந்தை டிரேடிங் கற்றுத் தருவதாகக் கூறி பணம் பறிக்கும் கும்பல் - கண்டறியும் வழிகள்

பட மூலாதாரம், Getty Images

அவ்வாறான ஒரு நபரிடம்தான் பெங்களூருவை சேர்ந்த ஐ.டி. ஊழியர் ஸ்ரீராம் ஏமாந்துள்ளார். "7 ஆயிரம் ரூபாய் கட்டி பயிற்சியில் சேர்ந்தேன். அவர்கள் சொல்லிக் கொடுத்த உத்திகள் நஷ்டத்தையே தந்தன. மொத்தமாக 40 ஆயிரம் நஷ்டம் ஏற்பட்ட பின்னர் அவர்கள் கற்றுக் கொடுத்த உத்தியைக் கைவிட்டுவிட்டேன்," என்று கவலையுடன் தெரிவித்தார்.

"பயிற்சி என்ற பெயரில் அவர்கள் என்னை ஏமாற்றியுள்ளனர். அதன் பிறகு, கடந்த 3 ஆண்டுகளாக முறையாக பங்குச்சந்தை சான்றிதழ் படிப்புகள் முடித்து டிரேடிங், முதலீடு கற்றுக்கொண்டு எனக்கென தனி உத்தியை உருவாக்கி டிரேடிங் செய்கிறேன். பெரிய அளவில் லாபம் இல்லையென்றாலும், நஷ்டம் இல்லை" என்கிறார் ஸ்ரீராம்.

பங்குச்சந்தையில் ஏற்பட்ட நஷ்டத்தால் தற்கொலைகள்

கடந்த மே 17ஆம் தேதி சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், மூன்றாம் ஆண்டு மாணவர் ராமையா புகாலா (21), விடுதியில் தற்கொலை செய்துகொண்டார். போலீஸ் விசாரணையில், லாபத்தில் பங்கு தருவதாகக் கூறி ரூ.3 லட்சம் சக மாணவர்களிடம் பெற்ற பணத்தில் பங்குச்சந்தையில் டிரேடிங் செய்து அவர் நஷ்டமடைந்தது தெரிய வந்தது.

இதேபோல், 2023 நவம்பர் மாதம், சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த ஐ.டி ஊழியர் புவனேஸ் (21) என்பவர் வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். போலீஸ் விசாரணையில், வங்கியில் 10 லட்சம் ரூபாய் கடன் பெற்று டிரேடிங் செய்து நஷ்டமடைந்ததால் அவர் இந்த விபரீத முடிவுக்கு வந்தது தெரிய வந்தது.

'தொடக்கத்தில் லாபம், பின்னர் ரூ.1.6 லட்சம் நஷ்டம்'

இன்ஸ்டாவில் பங்குச்சந்தை டிரேடிங் கற்றுத் தருவதாகக் கூறி பணம் பறிக்கும் கும்பல் - கண்டறியும் வழிகள்

பட மூலாதாரம், Getty Images

சமூக ஊடகத்தில் வந்த விளம்பரத்தை நம்பி பங்குச்சந்தையில் முதலீடு செய்து தொடக்கத்தில் லாபம் பார்த்தாலும் பின்னர் நஷ்டத்தையே சந்தித்தாகக் கூறுகிறார் கோவையைச் சேர்ந்த மணிகண்டன்.

அவர் தென்னை நார் மற்றும் தேங்காய் சார்ந்த தொழில்கள் செய்து வருகிறார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "என் நண்பர் பங்குச்சந்தை டிரேடிங் மூலம் வருமானம் பெறுவதாக என்னிடம் தெரிவித்தார்."

"நானும் அவருடன் இணைந்து டிரேடிங் செய்யத் துவங்கி பங்குச் சந்தையில் முதலீடு செய்தேன். நாங்கள் பின்தொடர்ந்த டெலிகிராம் பக்கத்தில் வந்த ஆப்ஷன் டிரேடிங் தொடர்பான ஆலோசனைகளைப் பின்பற்றி பங்குச்சந்தையில் முதலீடு செய்தேன்.

இதற்காக மாதம் 4 ஆயிரம் ரூபாய் கட்டணமாகப் பெற்றுக்கொண்டு தினமும் ஆலோசனைகள் கொடுத்தனர். ஆரம்பத்தில் 50 ஆயிரத்தில் துவங்கிய நான் லாபம் கிடைத்ததால் பின்னர் ஒரு லட்சம் ரூபாயை முதலீடு செய்ய ஆரம்பித்தேன்,’’ என்றார் மணிகண்டன்.

ஆனால், பங்குச்சந்தையில் முதலீடு செய்யத் தொடங்கிய முதல் மாதத்தின் இறுதியில் மொத்தமாகப் பார்த்தபோதுதான், லாபத்தை விடவும் நஷ்டம் அதிகமாக இருந்தது மணிகண்டனுக்கு தெரிய வந்தது.

"மொத்தமாக ரூ.1.6 லட்சம் எனக்கு நஷ்டம் ஏற்பட்டிருந்தது. இந்த இழப்பிற்குப் பின் பங்குச்சந்தை குறித்துப் படித்தபோதுதான் இதுபோன்ற முதலீடுகள் ஆபத்தானவை என்பதைத் தெரிந்து கொண்டேன். இதனால், குறைந்த ரிஸ்க் கொண்ட நீண்ட கால முதலீடுகளைத் தற்போது செய்து வருகிறேன்,’’ என்றார்.

'எப்போதும் லாபம் என்பது ஏமாற்று வேலை'

இன்ஸ்டாவில் பங்குச்சந்தை டிரேடிங் கற்றுத் தருவதாகக் கூறி பணம் பறிக்கும் கும்பல் - கண்டறியும் வழிகள்
படக்குறிப்பு, சதீஷ்குமார்

சமூக ஊடகங்களில் ஒருசிலர் கூறுவதைப் போல, பங்குச்சந்தையில் எப்போதும் பெரிய அளவில் லாபம் மட்டுமே கிடைக்கும் என்பது ஏமாற்று வேலை என்கிறார் சென்னையில் உள்ள வாங்க்ரூ (Wonkrew) என்ற நிறுவனத்தின் இயக்குநரும், பங்குச்சந்தை நிபுணருமான சதீஷ்குமார்.

கால்ஸ் மூலம் எல்லாம் தினமும் வருமானம் ஈட்ட முடியாது. இதுதான் எதார்த்தம் எனக் கூறும் அவர், பேராசையுடன் இதுபோன்ற நபர்களை நம்புவதை முதலில் நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்துகிறார்.

ஒருவர் பங்குச்சந்தையில் முதலீடு அல்லது தினசரி டிரேட் செய்ய வேண்டுமெனில் பங்குச்சந்தை குறித்து முறையாகப் படித்து அது சார்ந்த அறிவை வளர்க்க வேண்டும் என்கிறார் சதீஷ்குமார். "தேசிய பங்குச்சந்தை (NSE) அல்லது தேசிய நிதிச்சந்தை நிறுவனம் (NIFM), தேசிய பத்திர சந்தை நிறுவனம் (NISM) ஆகியவை ஆன்லைன் வாயிலாகவே பங்குச்சந்தை தொடர்பான சான்றிதழ் படிப்புகளை வழங்குகின்றன" என்று அவர் கூறினார்.

பங்குச்சந்தை முதலீடுகளை முன்வைத்து ஏமாற்று வேலை நடப்பதாகக் கூறிய அவர், "முறையாகப் படித்து செபி அமைப்பில் பதிவு செய்யாத எந்தவொரு நபர் டிரேடிங் மற்றும் முதலீடு அறிவுரை கொடுத்தாலும், பயிற்சி கொடுத்தாலும் அது முற்றிலும் சட்ட விரோதமானது," என்றார்.

மேலும் இதை எப்படிச் செய்கிறார்கள் என்பதை விளக்கிய சதீஷ்குமார், "ஒவ்வொரு பங்குச்சந்தை தரகரிடமும் சிலர் கூட்டு வைத்து, மக்களை பங்குச்சந்தை டிரேடிங், முதலீடு செய்வதற்கான டிமேட் கணக்கை துவங்க வைக்கின்றனர்.

அவர்களின் பரிந்துரையின் பேரில் டிமேட் கணக்கு துவங்கி டிரேட் செய்தால், நாம் அந்தத் தரகருக்கு (Broker Platform) கட்டும் கட்டணத்தில் ஒரு பங்கு நம்மைக் கணக்கு துவங்க வைத்தவருக்குக் கிடைக்கும். இதுபோன்ற பலரும் சமூக ஊடகங்களில் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் செயல்படுவார்கள். இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது கடினம்,’’ என்று அவர் தெரிவித்தார்.

‘இந்திய பங்குச்சந்தை பல நடவடிக்கைகளை எடுக்கிறது’

இன்ஸ்டாவில் பங்குச்சந்தை டிரேடிங் கற்றுத் தருவதாகக் கூறி பணம் பறிக்கும் கும்பல் - கண்டறியும் வழிகள்
படக்குறிப்பு, பங்குச்சந்தையின் தென் மண்டல முன்னாள் தலைவர் சுதாகர்

அங்கீகரிக்கப்படாத நிதி ஆலோசகர்கள் மீது என்னென்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிபிசி தமிழிடம் பேசிய இந்திய தேசிய பங்குச்சந்தையின் தென் மண்டல முன்னாள் தலைவர் சுதாகர் விளக்கம் தந்தார்.

‘‘தகுதியற்ற நபர்கள் பங்குச்சந்தை அறிவுரை, பயிற்சி கொடுப்பது குறித்து, செபி அமைப்பின் SCORES என்ற இணையதளத்தில் புகார் பதிவிடலாம். புகார் கொடுத்தால், தவறு செய்தோர் மீது சட்ட நடவடிக்கை மட்டுமின்றி கடும் அபராதமும் விதிக்கப்படும். அவர்கள் வாழ்நாள் முழுவதிலும் நிதி சார்ந்த எந்தத் தவறும் செய்ய முடியாத வகையில், செபி அவர்களைத் தொடர்ந்து கண்காணிக்கும்," என்று அவர் கூறினார்.

"உண்மையில் பங்குச்சந்தையில் லாபம், நஷ்டம் என மாறி மாறி வரும். பங்குச்சந்தை தொடர்பான அடிப்படைகள் மற்றும் உத்திகள் தொடர்பாக முறையாகப் படித்த���தான், முதலீடு, டிரேடிங் ஆகியவற்றைச் செய்ய வேண்டும். செபி அமைப்பில் பதிவு செய்த அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களின் முதலீடு, டிரேடு ஆலோசனைகளை நம்பிக்கையாகப் பின்பற்றலாம், அங்கீகரிக்கப்பட்ட ஆலோசகரின் பெயரை செபி இணையதளத்தில் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்" என்றும் அவர் கூறினார்.

அங்கீகரிக்கப்பட்ட ஆலோசகர்களை கண்டுபிடிப்பது எப்படி?

இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகர்கள், பங்குச்சந்தை ஆய்வாளர்களை செபியின் இணையதளத்தில் சென்று அறிந்துகொள்ளலாம். அவர்களின் பெயர், நிறுவனத்தின் பெயர் அல்லது அவர்களின் பதிவு எண் ஆகியவற்றை உள்ளீடு செய்து, அவர் உண்மையான நபரா இல்லை தகுதியற்றவரா என்பதை அறிய முடியும்.

Recognised Intermediaries – SEBI என்ற 'கீ வேர்ட்' மூலம் கூகுளில் தேடியும் இந்த இணையதளத்திற்குச் செல்லலாம்.

இது மட்டுமின்றி இதுவரை எத்தனை நபர்கள் செபியில் முறையாகப் பதிவு செய்துள்ளனர் என்ற தகவல்களும் இந்த இணையதளத்தில் உள்ளன. அதைப் பதிவிறக்கம் செய்தும் மாநிலம் வாரியாக அங்கீகரிக்கப்பட்ட நபர்களைத் தெரிந்து கொள்ளலாம்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)