இலங்கை: இறுதிக்கட்டப் போரில் பல லட்சம் தமிழர்களின் உயிரை காத்த பாலம் இன்று எப்படி இருக்கிறது?

பல லட்ச தமிழர்களின் உயிரை காப்பாற்றிய வட்டுவாகல் பாலம் - இன்று இப்படி இருக்க காரணம் என்ன?
படக்குறிப்பு, வட்டுவாகல் பாலம்
  • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி, பிபிசி தமிழ்

இலங்கையின் இறுதிக் கட்ட போரின் போது, லட்சக்கணக்கான மக்களின் உயிரை காத்த முல்லைத்தீவு - வட்டுவாகல் பாலம் இன்று உடைந்து வீழும் அபாயத்தில் இருக்கின்றது. இந்த பாலத்தை புனரமைத்து தருமாறு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுக்கின்ற போதிலும், இலங்கை அரசாங்கம் அது தொடர்பில் ஏன் இதுவரை கவனம் செலுத்தவில்லை என்பது குறித்து பிபிசி தமிழ் ஆராய்ந்தது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் 50/1 என இலக்கமிடப்பட்டுள்ள இந்த பாலம் (A035) இலக்க வீதியில் அமைந்துள்ளது. 410 மீட்டர் தூரத்தை கொண்டமைந்துள்ள இந்த பாலத்தை புனரமைப்பதற்காக இதற்கு முன்னர் 4,000 மில்லியன் இலங்கை ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், வட்டுவாகல் பாலத்தின் மதிப்பீடுகள் செய்யப்பட்டுள்ள போதிலும், பாலம் புனரமைக்கப்படாமை குறித்து ஆராயும் விரிவான செய்தி தொகுப்பே இது.

வட்டுவாகல் பாலம்

பல லட்ச தமிழர்களின் உயிரை காப்பாற்றிய வட்டுவாகல் பாலம் - இன்று இப்படி இருக்க காரணம் என்ன?

முல்லைத்தீவு மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய நகரங்களை பிரிக்கும் வகையில் நந்திக்கடல் களப்பு அமைந்துள்ளது.

இந்த நந்திக்கடல் களப்பை ஊடறுத்து, முல்லைத்தீவு நகரையும், புதுகுடியிருப்பு பகுதியையும் இணைக்கும் வகையில் இந்த பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

சுமார் 410 மீட்டர் தூரத்தை கொண்ட இந்த பாலமானது, இறுதிக் கட்ட போரின் போது மிக முக்கியத்துவம் வாய்ந்த இடமாக காணப்பட்டது.

இலங்கையில் நிலைகொண்டிருந்த 30 வருட உள்நாட்டு போர் 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் தேதி மௌனிக்கப்பட்டது.

போரின் இறுதித் தருணத்தின் போது, இலங்கை ராணுவம் இந்த பாலத்திற்கு மறுபுறத்தில், அதாவது முல்லைத்தீவு பக்கத்திலும், விடுதலைப் புலிகள் அமைப்பு பாலத்திற்கு அடுத்த திசையில் அதாவது புதுகுடியிருப்பு பக்கத்திலும் இருந்தவாறே இறுதி போரை எதிர்கொண்டிருந்தனர்.

புதுகுடியிருப்பு திசையில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்ததாக கூறப்படும் முள்ளிவாய்க்கால் பகுதி அமைந்துள்ளது.

புதுகுடியிருப்பு, முள்ளிவாய்க்கால் போன்ற பகுதிகளில் இறுதித் தருணத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்த பொதுமக்கள், இந்த வட்டுவாகல் பாலத்தை தாண்டி முல்லைத்தீவு பகுதியில் நிலைக்கொண்டிருந்த ராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு வருகைத் தந்திருந்தனர்.

ராணுவம் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தாக்குதல்களின் போது, வட்டுவாகல் பாலம் சேதமடைந்தது. அந்த வடுக்களை இன்றும் பாலத்திற்கு அருகில் காண முடிகின்றது.

அத்துடன், சுனாமி அனர்த்தத்தின் போதும் இந்த பாலம் சேதமடைந்ததாக கூறப்படுகின்றது.

குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடல் இந்த பாலத்தை அண்மித்த நந்திக்கடல் பகுதியிலிருந்தே கண்டெடுக்கப்பட்டதாக இலங்கை ராணுவம் அப்போது அறிவித்திருந்தது.

இறுதிப் போரின் போது தமது உயிரை பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் ராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு வருகைத் தர, பல லட்சக்கணக்கான மக்களுக்கு இந்த பாலம் உதவியது என இறுதிக் கட்ட போரை சந்தித்த மக்கள் இன்றும் தெரிவிக்கின்றனர்.

தமது உயிரை பாதுகாத்த இந்த பாலம் இன்று உடையும் தருவாயில் உள்ளமை கவலையளிப்பதாக மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

வட்டுவாகல் பாலம் இப்போது எப்படி உள்ளது?

பல லட்ச தமிழர்களின் உயிரை காப்பாற்றிய வட்டுவாகல் பாலம் - இன்று இப்படி இருக்க காரணம் என்ன?
படக்குறிப்பு, துரைராசா ரவிகரன்

முல்லைத்தீவு பக்கத்தில் பாலம் ஆரம்பமாகும் இடத்தில் ஒரு ராணுவ காவலரண் அமைக்கப்பட்டுள்ளதுடன், புதுகுடியிருப்பு திசையில் பாலம் ஆரம்பமாகும் இடத்தில் கடற்படை முகாமொன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு பாதுகாப்பு தளங்களுக்கும் இடையில் சுமார் 410 மீட்டர் தூரத்தை கொண்ட ஒரு வாகனம் மாத்திரம் செல்லக்கூடிய அளவை கொண்டதாக இந்த பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

பாலத்தின் இருபுறத்திலும் நந்திக்கடல் களப்பு அமைந்துள்ளதுடன், பாதுகாப்பு வேலிகள் இன்றியே பாலம் இன்றும் காணப்படுகின்றது.

பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டுள்ள சிறு எல்லை கற்களும் உடைந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.

பாலத்திற்கு இடையில் பல இடங்களில் வெடிப்புக்களை அவதானிக்க முடிவதுடன், பல இடங்களில் பாலம் பெரியளவில் உடைந்துள்ளதையும் காண முடிகின்றது.

பாலத்தின் இடையில் உடைந்துள்ள ஓரிரு பகுதிகளை வீதி அபிவிருத்தி அதிகார சபை தற்காலிகமாக செப்பனிட்டுள்ளதையும் காண முடிகின்றது. எனினும், இந்த பாலத்தை முழுமையாக புனரமைத்து தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கடைசி போரில் மக்களை காப்பாற்றிய பாலம்

பல லட்ச தமிழர்களின் உயிரை காப்பாற்றிய வட்டுவாகல் பாலம் - இன்று இப்படி இருக்க காரணம் என்ன?
படக்குறிப்பு, செல்லையா யோகேந்திரராசா

பாலம் உடைகின்ற இடங்களை மாத்திரம் தற்காலிகமாக செய்கின்ற போதிலும், அந்த இடங்களும் மீண்டும் உடைவதாக வட்டுவாகல் பகுதியைச் சேர்ந்த செல்லையா யோகேந்திரராசா தெரிவிக்கின்றார்.

''ஒவ்வொரு ஆட்சியில் வருவோரும் ஒவ்வொரு கதையை சொல்கின்றார்கள். நாங்கள் செய்வோம். நாங்கள் செய்வோம் என சொல்லிக் கொண்டு, எங்களை ஏமாற்றிக் கொண்டு தான் இருக்கின்றார்கள். இந்த பாலம் செய்யாததற்கு க���ரணம் அரசாங்கத்தின் பிரச்னை தான்.

இந்த பாலத்தை தனிப்பட்ட நபரினால் செய்ய முடியாது. இதை அரசாங்கத்தினால் தான் செய்ய முடியும். வாகனமொன்று போனால், பாலம் இடிந்து வீழும் அளவில் தான் இருக்கின்றது. பாலம் உடைகின்ற போது, அரசாங்கம் கற்களை கொண்டு கொட்டுகின்றது. அடுத்த மாதம் அந்த இடம் உடைந்திருக்கும். மீண்டும் அதே மாதிரி கல்லைகொண்டு வந்து போடுவார்கள். நாங்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட காலத்திற்கு முன்பிருந்தே இதை தான் செய்கின்றார்கள். " என வட்டுவாகல் பகுதியைச் சேர்ந்த செல்லையா யோகேந்திரராசா பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார்.

கடைசி போரில் மக்களை காப்பாற்றிய பாலம் இது என வட்டுவாகலைச் சேர்ந்த அன்னலிங்கம் நடனலிங்கம் பிபிசி தமிழுக்கு குறிப்பிட்டார்.

''இந்த பாலம் மிக முக்கியமான ஒரு பாலம். கடைசி யுத்தத்திலும் மக்களை காற்றிய பாலம் இது. அப்படியிருக்கையில், இந்த பாலம் உடைந்து உடைந்து போகின்றது. எந்த அரசாங்கத்திற்கு சொன்னாலும், பாலத்தை செய்வதாக இல்லை.

இந்த பாலம் ஒவ்வொரு மாரியிலும் தானாகவே உடைகின்றது. வீதி அபிவிருத்தி அதிகார சபை கற்களை போட்டு நிரப்புகின்றார்கள். அரசாங்கம் செய்து தாறேன் என்று சொன்னாலும், அந்த பேச்சுடனேயே அது முடிந்து விடுகின்றது. கடைசி யுத்தத்தில் அதிக அளவில் பாதிக்கப்பட்ட பாலம் இது.

இரண்டு இடங்களில் கிபீர் குண்டுகள் தாக்குதலில் உடைந்திருந்தது. கிபீர் தாக்குதலில் நான் நிற்கும் இந்த இடம் கூட பாதிக்கப்பட்டது. கிபீர் தாக்குதலில் சேதமடைந்த கற்கள் தான் இந்த இடத்தில் இருக்கின்றன. யுத்தத்தில் பாலம் பாதிக்கப்பட்டது. இப்போதும் பாலம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் புனரமைக்கப்படாமைக்கு அரசாங்கத்தையே குறைகூறுவோம். நிதி இல்லை என்று கூறுகின்றார்கள்" என அன்னலிங்கம் நடனலிங்கம் தெரிவிக்கின்றார்.

வட்டுவாகல் பாலத்தை புனரமைத்துக் கொடுக்கும் எண்ணம் இலங்கை அரசாங்கத்திற்கு கிடையாது என வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவிக்கின்றார்.

பல லட்ச தமிழர்களின் உயிரை காப்பாற்றிய வட்டுவாகல் பாலம் - இன்று இப்படி இருக்க காரணம் என்ன?
படக்குறிப்பு, அன்னலிங்கம் நடனலிங்கம்

''2009ம் ஆண்டு மே 17, 18 ஆகிய நாட்களில் மக்கள் மிகுந்த வேதனையுடன் தங்களுடைய உறவுகளை இழந்த நிலையில், இந்த பாலத்தின் ஊடாக தான் வந்தார்கள் என்பதை அனைவரும் அறிவார்கள். இந்த பாலத்தின் ஊடாக, மூடை முடிச்சுக்களுடன் சைக்கிள்களை உருட்டிக் கொண்டு தங்களுடைய பிள்ளைகளை தோள் மீது சுமந்துக்கொண்டு வருவது மிகுந்த வேதனையான காட்சியாக தான் இருந்தது.

இந்த பாலம் மறக்க முடியாது. இப்படியான பாலத்தை சரி செய்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்களுக்கு இல்லை என்று தான் கூற வேண்டும்." என அவர் குறிப்பிடுகின்றார்.

வட்டுவாகல் பாலத்தை ஏன் புனரமைக்கவில்லை - அரசாங்கத்தின் பதில்

பல லட்ச தமிழர்களின் உயிரை காப்பாற்றிய வட்டுவாகல் பாலம் - இன்று இப்படி இருக்க காரணம் என்ன?

வட்டுவாகல் பாலத்தை புனரமைக்காமல் அரசாங்கம் பின்வாங்கி வருவதாக மக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு தொடர்பில் பிபிசி தமிழ், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான பந்துல குணவர்தனவிடம் வினவியது.

''இலங்கையிலுள்ள அனைத்து வீதிகள் மற்றும் பாலங்கள் வெளிநாட்டு கடன்களின் மூலமே செய்யப்பட்டுள்ளன. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன்களின் மூலமே இலங்கை முழுவதும் வீதிகள் மற்றும் பாலங்கள் நிர்மாணிக்கப்படுகின்றன. இலங்கையில் யார் அரசாங்கத்தை செய்தாலும், கடந்த 4 தசாப்தங்களிலும் அரசாங்கத்தின் செலவீனங்களை ஈடு செய்து கொள்ளும் வகையில், அரசாங்கத்திற்கு போதுமான வருமானம் கிடையாது.

அதனால், இவை அனைத்தும் கடன்களின் மூலமே செய்யப்பட்டுள்ளன. அரச ஊழியர்களின் சம்பள கொடுப்பனவு, ஓய்வூதிய கொடுப்பனவு, நிவாரணங்களை வழங்குதல், கடன்களுக்கான வட்டியை செலுத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது, அரசாங்கத்திற்கு போதுமான கையிருப்பு இருக்காது.

வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளிலுள்ள அனைத்து வீதிகள், பாலங்கள், வேலிகள், மின்சாரம் ஆகியன கடனை பெற்றே அமைக்கப்பட்டுள்ளது பெற்றுக்கொண்ட கடனை நாங்கள் தற்போது செலுத்துவதில்லை. அப்படியென்றால், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட யாரும் எங்களுக்கு பணம் வழங்க மாட்டார்கள். அவ்வாறு கடன் கிடைக்கவில்லை என்றால், பாலங்களை நிர்மாணிக்க முடியாது." என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார்.

''கடனை பெற்றுக்கொண்டு வீதிகள், பாலங்களை நிர்மாணித்திருக்கின்றோம். கடனை செலுத்தி நிறைவு பெறும் போது தான் வீதி அபிவிருத்தி பணிகளை ம��ற்கொள்ள முடியும். அரசாங்கத்திடம் தற்போது பணம் இல்லை. மாத இறுதியில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் செலுத்துவதற்கு மாத்திரமே பணம் உள்ளது.

வேறு வேலைகளை செய்ய பணம் இல்லை. சிறு சிறு வேலைகளை செய்யலாம்;. பாலங்களை நிர்மாணிக்கும் அளவிற்கு இலங்கை அரசாங்கத்திடம் பணம் இல்லை." என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான பந்துல குணவர்தன குறிப்பிடுகின்றார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)