‘அவன் என் பேரன்’ - முதுமலை முகாமில் இறந்த குட்டி யானையை நினைத்து நெகிழும் பாகன்

யானைகள், முதுமலை புலிகள் காப்பகம்
படக்குறிப்பு, 24 மணி நேரத்தில், 12-14 முறை 15 லிட்டர் வரையில் குட்டி யானைகள் பால் குடிக்கும்
  • எழுதியவர், ச.பிரசாந்த்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

கோவை மண்டலத்தில் தாயை இழந்த மூன்று குட்டி யானைகளை, முகாமில் வைத்து தாய் போல அரவணைத்து வனத்துறையினர் வளர்த்து வந்தனர்.

இருப்பினும் வயிற்றுப்புண் காரணமாக அவற்றில் ஒரு குட்டி யானை மரணித்துள்ளது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தின் தெப்பக்காடு பகுதியில், தமிழ்நாடு வனத்துறையினர் 1927-ஆம் ஆண்டு முதல் யானைகள் முகாம் நடத்தி வருகின்றனர். இது ஆசியாவின் பழமையான யானைகள் முகாம்களில் ஒன்று.

ஜூன் 9-ஆம் தேதி கோவை மாவட்டம் மருதமலை அருகே, தாயை விட்டுப்பிரிந்த பிறந்த 5 மாதங்களேயான குட்டியானையை மீட்ட வனத்துறையினர், தெப்பக்காடு யானைகள் முகாமில் வைத்து பராமரித்து வந்தனர். அதேபோல், மார்ச் மாதம் கோவையில் தாயை இழந்த நான்கு மாதங்களான ஒரு குட்டி யானை, ஈரோடு சத்தியமங்கலம் பண்ணாரி வனப்பகுதியில் தாய் யானையை இழந்த நான்கு மாதங்களான ஒரு குட்டியை மீட்டு பராமரித்து வருகின்றனர்.

ஒரு பெண் குட்டி யானை, இரண்டு ஆண் குட்டி யானைகள் என மூன்று குட்டிகளை பராமரித்து வந்த நிலையில், கோவை மருதமலை பகுதியில் மீட்கப்பட்ட குட்டியானை நேற்று (ஜூன் 28) இரவு உடல்நலக்குறைவு காரணமாக இறந்துள்ளது. இன்று காலை உடற்கூராய்வு செய்த மருத்துவக்குழு, குட்டியின் வயிற்றில் ஏற்பட்ட புண் காரணமாக மரணித்ததை உறுதிப்படுத்தினர்.

மூன்று குட்டியானைகளையும், ஆறு பாகன்கள் தாய் போல் அரவணைத்து வளர்த்து வந்தனர்.

பாகன்கள் எப்படி குட்டி யானைகளை வளர்க்கிறார்கள்? என்பதை அறிய, தெப்பக்காடு முகாமில் ஜூன் 17-ஆம் தேதி பிபிசி குழு கள ஆய்வு மேற்கொண்டது. ஒரு நாள் முழுதும் அங்கிருந்து பார்வையிட்டது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

யானைகள், முதுமலை புலிகள் காப்பகம்
படக்குறிப்பு, குட்டி யானைகள் விளையாடுவதற்கு ஒதுக்கப்பட்ட பகுதி

குறும்பு செய்யும் குட்டிக்களிறுகள்

அன்று காலையில் நாம் முகாமை அடைந்த போது, பிரத்தியேக மரக்கூண்டில் (கிரால்) இருந்து குட்டி யானைகளை பாகன்கள் வெளியே அழைத்து வந்தனர். புள்வெளியைக் கண்டதும், சிறு குழந்தை போல் குறும்புத்தனத்துடன் அங்குமிங்கும் ஓடி விளையாடின.

அதன்பின், பாகன்கள் யானைக்குட்டிகளை வழக்கமான நடைபயிற்சிக்கு ஆயத்தமாக்கினர்.

யானைக்கு முன்னால் சற்று தொலைவு ஓடிச் சென்ற பாகன்கள், யானையுடன் பேசுவதற்கான தங்கள் மொழியில் ‘வடுதா... வடுதா...’ (வா என அர்த்தம்) என அழைத்தனர். குட்டிக்குப் பின்னால் சென்ற மற்றொரு பாகன் ‘ஹட் படியே’ (போ) என சப்தமிட்டபடி அதன்கூடவே ஓடினார்.

குட்டி யானைகள் விளையாடுவதற்கு ஒதுக்கப்பட்ட பகுதியில், களிறுகள் பிளிறிக்கொண்டு விளையாடின. அன்று மற்ற இரு குட்டிகளும் அதிக நேரம் விளையாடிய நிலையில், வயிற்றுப்போக்கு காரணமாக மருதமலையில் மீட்கப்பட்ட குட்டி யானை சற்று சோர்வாகவே காணப்பட்டது.

அது குறித்து நாம் வினவியபோது, மீட்கப்பட்ட நாளில் இருந்தே குட்டி உடல்நிலை சரியில்லை எனவும், சிகிச்சை கொடுத்து வருவதாகவும் பாகன்கள் தெரிவித்திருந்தனர்.

இந்தக்குட்டியை தவிர்த்து மற்ற இரு குட்டிகள் மகிழ்ச்சியாக சுட்டித்தனம் செய்து விளையாடி களைத்திருந்தன.

யானைகள், முதுமலை புலிகள் காப்பகம்

பின், சற்று நேரம் மரங்களின் நிழலில் பாகன்களுடன் விளையாடி ஓய்வெடுத்தன. பாகன்கள் அவற்றை சூடான நீரில் தனித்தனியாக குளிப்பாட்டினர்.

தண்ணீர் உடலில் பட்டதும் ஒரு குட்டி முரண்டு பிடித்த நிலையில், ‘பரியா சய், சய்...’ (அமைதியாக இரு) என சப்தமிட்டதும் சற்று அமைதியான யானைக்குட்டி குளித்து முடித்தது. யானைகளை துணியைக் கொண்டு சுத்தம் செய்து விட்டு, கிரால் அருகே அழைத்துச் சென்றனர்.

யானைகள், முதுமலை புலிகள் காப்பகம்
படக்குறிப்பு, முகாம் மருத்துவக்குழுவைச் சேர்ந்த வனக்கால்நடை மருத்துவர் கலைவாணன்

‘சளம்பறா... சளம்பறா... வைத்ரிடி’

அங்கு, ‘டேய்... சளம்பறா, சளம்பறா’ (சாப்பிடு) என, யானையின் உடலை தடவிக்கொடுத்து பாகன்கள் பால் கொடுத்தனர். பால் குடித்ததும் யானைக்குட்டிகள் தூக்குவதற்கு தயாராகியது. மூன்று தனி அறைகளுடன் உருவாக்கப்பட்டிருந்த கிராலில் மூன்று யானைகளும் பாகன்களுடன் உறங்கச்சென்றன.

கிராலினுள் நாம் பார்த்த போது, ‘வைத்ரிடி’ (தூங்கு) என மெதுவாக சப்தமிட்டு யானையை பாகன்கள் தட்டிக்கொடுக்க, தாயிடம் குழந்தை உறங்குவது போல், குட்டிக்களிறுகள் பாகன்களின் மீது தும்பிக்கையை போட்டும், கால்களை போட்டும் உறங்கின.

பால் குடித்தால் 2 மணி நேரத்திற்கு மேல் குட்டிகள் உறங்கும் என பாகன்கள் தெரிவித்ததால், யானைகளுக்கு வழங்கப்படும் உணவு, பராமரிப்பு முறை குறித்து மருத்துவக்குழுவிடம் வினவினோம்.

நம்மிடம் பேசிய யானைகள் முகாம் மருத்துவக்குழுவைச் சேர்ந்த வனக்கால்நடை மருத்துவர் கலைவாணன், குட்டியானைகள் கைக்குழந்தைகளைப் போன்றவை. ஒரு தாய் தன் குழந்தையை வளர்ப்பது போன்று தான் வனத்துறையும் வளர்த்து வருவதாகத் தெரிவித்தார்.

அதை விவரித்த அவர், “மற்ற விலங்குகளைக் காட்டிலும், மனிதர்களைப் போன்ற துக்கம், பாசம் அதிகம் கொண்டது யானை, குரங்கு தான். யானைகளுக்கு பொதுவாகவே தாய் பாசம் மற்றும் குழந்தை பாசம் மிகவும் அதிகம். தாயை இ���ந்து மன ரீதியில் பாதித்து, உணவு கிடைக்காமல் இருக்கும் குட்டி யானையை இங்கு வளர்ப்பது மிகவும் சவாலானது. உணவு கொடுப்பதை விட, உளவியல் ரீதியில் அவற்றுக்கு ஆதரவு கொடுத்து வளர்ப்பது தான் முக்கியம்,” என்றார் கலைவாணன்.

இதற்காக ஒவ்வொரு குட்டிக்கும் மிகவும் அன்புள்ளம் கொண்ட இரண்டு பாகன்கள் நியமித்து வளர்ப்பதாக அவர் தெரிவித்தார்.

யானைகள், முதுமலை புலிகள் காப்பகம்

குட்டி யானைகளுக்கு பிரத்யேகப் பால்

குட்டி யானை வளர்ப்பு குறித்து, நம்மிடம் விரிவாக விவரித்தார் கலைவாணன்.

“குட்டி யானையை அதன் தாய் யானையும் அதன் கூட்டமும், மழை, வெயில் படாமல், குளிரில் நடுங்கவிடாமல் மிகப்பாதுகாப்பாக வளர்க்கும். அதேபோன்று குட்டிகளை வளர்க்க பிரத்தியேக மரக்கூண்டு தயாரித்துள்ளோம். இதில், அதிக வெப்பம், குளிர் வராமல் தடுத்து சீதோஷ்ணத்தை வனத்தை போலவே மிக கவனமாக பராமரிக்கிறோம்,” என்றார்.

24 மணி நேரத்தில், 12-14 முறை 15 லிட்டர் வரையில் குட்டி யானைகள் பால் குடிக்கும் என்கிறார் மருத்துவர் கலைவாணன்.

பால் தயாரிப்பை விவரித்த அவர், “குட்டி யானை முதல் ஆறு மாதங்கள் வெறும் பால் மட்டுமே குடிக்கும். ஆறு மாதம் முதல் ஓராண்டு வரையில், எளிதாக ஜீரணம் ஆக பெரிய யானைகள் வெளியிடும் எச்சத்தில் நொதித்தவற்றை தான் சாப்பிடும். அதன்பின் தான், தும்பிக்கையை பயன்படுத்தத்துவங்கி மெல்ல புற்கள் சாப்பிடும்,” எனத் தெரிவித்தார்.

யானைகளுக்கென தனி பால் பொடி இல்லாததால், நாம் குழந்தைகளுக்கு வழங்கும் பால் பொடியில், யானைகளின் தாய் பாலில் உள்ள சத்துக்கள் அளவிற்கான சத்துக்களைச் சேர்த்துச் சூடாக்கி, பிரத்தியேகமாக பால் தயாரித்து வழங்குகிறோம் என்கிறார் மருத்துவர் கலைவாணன்.

மேலும், ஒரு முறை தயாரிக்கும் பால் மீண்டும் பயன்படுத்த முடியாது எனவும், 24 மணி நேரமும் பாகன்கள் புதிதாகப் பால் சூடாக்கி வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

“யானையின் நடவடிக்கை, உடல் எடை, பால் குடிக்கும் அளவைப் பொறுத்து அவற்றுக்கு தனிக்கவனம், மருத்துகள் வழங்கி, ஒரு குழந்தையைப்போல வளர்க்கிறோம்,” என, குட்டி யானை வளர்ப்பின் தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

யானைகள், முதுமலை புலிகள் காப்பகம்
படக்குறிப்பு, பாகன் மணிகண்டன்

'குட்டி யானைக்கு நாங்க தான் உலகம்'

மருத்துவரிடம் நாம் பேசிக்கொண்டிருந்த போது இரு யானைகள் தூங்கி எழுந்து, வெளியே வந்து மீண்டும் விளையாடத் துவங்கின. நாமும் அங்கு சென்று பாகன்களிடம் பேசினோம்.

நம்மிடம் பேசிய இளம் பாகன் மணிகண்டன், “எனக்கு 21 வயதாகிறது, சிறு வயதிலிருந்தே யானை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளேன். பெரிய யானைகளைப் பார்த்து வந்த எனக்கும் என் நண்பருக்கும், திடீரென குட்டி யானை கொடுக்கப்பட்டதும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம். ஒரு சில நாட்களிலேயே அவன் (குட்டி யானை) மிகவும் சுட்டிப்பையன் என்பதை உணர்ந்து கொண்டோம். தினமும் அவனுடன் விளையாடி மகிழ்ந்து வளர்த்து வருகிறோம்,” என்றார்.

“எனக்கு இரண்டு தம்பிகள் உள்ளனர். மூன்றாவது தம்பியாக நான் அவனை வளர்த்தாலும், எங்கள் இருவரையும் அவன் தாயாகத்தான் நினைத்து வளர்கிறான். அவனுக்கு தாய், அண்ணன், தம்மி என எல்லாம் நாங்கள் தான், அவன் உலகமே நாங்க தான்,” என்கிறார் மணிகண்டன்.

“தினமும் மருத்துவக்குழு யானைகளை பரிசோதிக்கும், மாதம் ஒரு முறை எடை கணக்கிடப்படும், 24 மணி நேரத்தில் யானைக்கு எந்த பாதிப்பு வந்தாலும் இங்கு பணியில் இருக்கும் மருத்துவர்கள் பார்த்துக்கொள்வார்கள்,’’ எனவும் மணிகண்டன் தெரிவிக்கிறார்.

சிறியதாக வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் கூட மருத்துவக்குழுவுக்கு தகவல் தெரிவித்து விடுவோம், அவர்கள் சொல்லும் அறிவுரைப்படி உணவு, மருந்து கொடுப்போம் என்றார் மணிகண்டன்.

யானைகள், முதுமலை புலிகள் காப்பகம்
படக்குறிப்பு, பாகன் ராமன்

‘இறந்த குட்டி யானை என்னோட பேரன்’

தற்போது இறந்திருக்கும் குட்டி யானையை வளர்த்து வந்த பாகன் ராமன், அன்று நாம் கள ஆய்வு செய்த போது நம்மிடம் பேசியபோது, “எனக்கு 54 வயதாகிறது. சிறு வயதிலிருந்தே பாகனாக உள்ளேன். தற்போது, கோவையில் மீட்கப்பட்ட 5 மாத குட்டி யானையை வளர்த்து வருகிறேன். எனக்கு மகன், மகள், பேரன்கள் உள்ளனர்,” என்றார்.

“ஒவ்வொரு யானையையும் என் மகன், மகள் போன்று தான் வளர்த்து வந்துள்ளேன். தற்போது, வந்துள்ள குட்டியை என் பேரக்குட்டி போல வளர்த்து வருகிறேன்,” என மகிழ்ச்சியுடன் நம்மிடம் தெரிவித்திருந்தார்.

மேலும், “2–3 மணி நேரம் உறங்கும், 24 மணி நேரமும் எப்போது பால் வேண்டுமென்றாலும் என்னைத்தொட்டு அழைக்கும். அவனுக்குக் காலை மற்றும் மாலையில் விளையாட வைப்பது, இரு முறை குளிப்பாட்டுவது, நடை பயிற்சி, யானைகளுக்காக நாங்கள் உருவாக்கியுள்ள கட்டளை மொழிகள் குறித்தான பயிற்சி கொடுத்து வளர்த்து வருகிறோம். யானையுடனே நாங்களும் ஓய்வெடுப்போம்,” எனக்கூறியிருந்தார்.

குட்டி யானை இறந்தது குறித்து நாம் பாகன் ராமனிடம் பேச முயற்சித்த போது, அவர் வளர்த்து வந்த குட்டி இறந்ததால் அவர் கடும் வருத்தத்தில் உள்ளதாக சக பாகன்கள் நம்மிடம் தெரிவித்ததால், அவரிடம் நாம் பேசமுடியவில்லை.

யானைகள், முதுமலை புலிகள் காப்பகம்
படக்குறிப்பு, மீட்கப்பட்ட 12 குட்டிகளில் தற்போது மரணித்ததுடன் சேர்த்து மொத்தம் 3 யானைக்குட்டிகள் மரணித்துள்ளன

யானைகள் முகாமில் இதுவரை 63 குட்டி யானைகள்

தற்போது வந்துள்ள 3 குட்டி யானைகளுடன் சேர்த்து தெப்பக்காடு முகாமில் 63 குட்டி யானைகளை வளர்த்துள்ளதாக வனத்துறை நம்மிடம் தெரிவித்துள்ளது. மேலும், முதுமலை தெப்பக்காடு முகாம் ஆசியாவின் பழமையான யானைகள் முகாம் எனவும் தெரிவித்துள்ளது.

வனத்துறை பிபிசி தமிழிடம் வழங்கியுள்ள அறிக்கையின் விபரங்கள்:

தெப்பக்காடு முகாம் துவங்கிய ஆண்டு 1927

2023 வரையில் வளர்க்கப்பட்ட பெரிய யானைகள் எண்ணிக்கை 85

முகாம் யானைகள் மூலம் பிறந்த குட்டி யானைகள் எண்ணிக்கை 51

தாயைப்பிரிந்த நிலையில் மீட்கப்பட்ட குட்டி யானைகள் 12 (தற்போதைய மூன்று யானைகளுடன் சேர்த்து)

மீட்கப்பட்ட 12 குட்டிகளில் தற்போது மரணித்ததுடன் சேர்த்து மொத்தம் 3 யானைக்குட்டிகள் மரணித்துள்ளன.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்  (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)