டி20 உலகக்கோப்பை: சூர்யகுமாரின் கேட்ச் பற்றி தென்னாப்பிரிக்க ஊடகங்கள் கூறுவது என்ன?

டி20 உலகக்கோப்பை: சூர்யகுமாரின் கேட்ச் பற்றி தென்னாப்பிரிக்க ஊடகங்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணி தோல்வியடைந்தது அந்நாட்டு ஊடகங்களில் தொடர்ந்து பேசுபொருளாகி வருகிறது. தென்னாப்பிரிக்காவின் கைகளை விட்டு வெற்றி நழுவிச் சென்றது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்த நிலையில் அணியின் கேப்டன் எய்டன் மார்க்கரம் எதிர்வினையாற்றியுள்ளார்.

சூர்யகுமார் பவுண்டரி எல்லையில் பிடித்த கேட்ச் சமூக ஊடகங்களில் விவாதத்தைக் கிளப்பிய நிலையில், முன்னாள் வீரர் ஷான் பொல்லாக் இதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியைச் சுற்றி என்ன நடக்கிறது? அந்நாட்டு ஊடகங்கள் என்ன சொல்கின்றன?

பிபிசி தமிழ் வாட்ஸ் ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

தென்னாப்பிரிக்கா கோப்பையை வெல்ல முடியாதது ஏன்?

நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பைத் தொடரில், தொடர் தொடங்கியது முதல் தோல்வியே சந்திக்காத தென்னாப்பிரிக்க அணி, இறுதிப்போட்டியில் நல்ல நிலையில் இருந்தபோது இந்தியாவிடம் வெற்றியைப் பறிகொடுத்தது.

டி20 உலகக்கோப்பையை தென்னாப்பிரிக்கா நழுவவிட்டதற்காக எந்த சாக்குப்போக்குகளயும் சொல்ல முடியாது என தென்னாப்பிரிக்காவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஜாஃப்ரி டொயானாவை மேற்கோள்காட்டி சொவீடன் லைவ் (Soweten Live) இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

தென்னாபிரிக்கா வரலாற்றுச் சிறப்புமிக்க கோப்பையை வெல்லவிடாமல் செய்தது இந்தியாவின் ஆட்டத் திறனா அல்லது க்ளாசன் செய்த தவறா, இல்லை ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சா என அந்தச் செய்தி இணையதளம் கேள்வி எழுப்பியுள்ளது.

டேவிட் மில்லரின் கேட்சை பவுண்டரி எல்லையில் சூர்யகுமார் யாதவ் பிடித்தார். அப்போது எல்லைக்கோட்டை சூர்யா தொட்டுவிட்டதாகச் சிலர் கூறுகின்றனர்.

ஆனால் ஆட்டத்தின் திருப்புமுனை அதுவல்ல. மாறாக, ஃபார்ம் அவுட்டில் இருந்த கோலியை தொடக்கத்திலேயே பவுண்டரி விளாச அனுமதித்ததும் தென்னாப்பிரிக்காவின் தோல்விக்கு ஒரு காரணம் என தென்னாப்பிரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாஃப்ரி டொயானாவை மேற்கோள்காட்டி சொவீடன் லைவ் இணையதளம் கூறியுள்ளது.

தென்னாப்பிரிக்காவின் தோல்விக்கான காரணங்கள்

டி20 உலகக்கோப்பை: சூர்யகுமாரின் கேட்ச் பற்றி தென்னாப்பிரிக்க ஊடகங்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images

தென்னாப்பிரிக்கா இறுதிப்போட்டியில் தோற்றதற்கான மூன்று முக்கியக் காரணங்களை தி சௌத் ஆப்ரிக்கன் என்ற இணையதளமும் பட்டியலிட்டுள்ளது.

டேவிட் மில்லரும், க்ளாசனும் களத்தில் நின்றவரை, தென்னாப்பிரிக்காவின் கை ஓங்கியிருந்தது. க்ளாசன் ஆட்டமிழந்தது, தென்னாப்பிரிக்காவின் வேகத்தைக் குறைத்துவிட்டது. இருந்தாலும் மில்லர் இருந்த வரை, தென்னாப்பிரிக்கா வெல்வதற்கான வாய்ப்பு இருந்தது என தி சௌத் ஆப்ரிக்கன் இணையதளம் குறிப்பிட்டுள்ளது.

“பும்ராவின் பந்துவீச்சை எதிர்கொள்ளவே முடியவில்லை. அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த க்ளாசனால்கூட பும்ரா ஓவரில் பவுண்டரி விளாச முடியவில்லை. நன்றாக ஆடிக்கொண்டிருந்த மில்லரும் பும்ரா பந்தில் சிங்கிள் எடுத்து, புதிதாகக் களமிறங்கிய மார்க்கோ யான்சனுக்கு ஸ்டிரைக்கை வழங்கினார். பும்ராவின் பந்துவீச்சை அவரால் எதிர்கொள்ள முடியாமல் ஆட்டமிழக்க நேர்ந்தது” என தி சௌத் ஆப்ரிக்கன் இணையதளம் எழுதியுள்ளது.

இதேபோல, மில்லரின் கேட்சும் அதைத்தொடர்ந்து எஞ்சிய 5 பந்துகளில் வெற்றிக்காகப் போராடிய கேசவ் மகராஜ், ககிசோ ரபாடாவின் விக்கெட்டுகளும் தென்னாப்பிரிக்காவுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்துவிட்டதாக தி சௌத் ஆப்ரிக்கன் இணையதளம் கூறியுள்ளது.

சூர்யகுமாரின் கேட்ச் பற்றிய விவாதம்

டி20 உலகக்கோப்பை: சூர்யகுமாரின் கேட்ச் பற்றி தென்னாப்பிரிக்க ஊடகங்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images

மில்லரின் கேட்ச்சை பவுண்டரி லைனில் சூர்யகுமார் பிடித்தபோது அவரது கால் லேசாக பவுண்டரி லைனில் பட்டதாக சமூக ஊடகங்களில் விவாதம் எழுந்த நிலையில், தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஷான் பொல்லாக், “அந்த கேட்ச்சில் எந்தத் தவறும் இல்லை. குஷன் லேசாக நகர்ந்தது. ஆனால் அது ஆட்டத்தின் ஒரு பகுதிதான். சூர்யகுமார் குஷன் மீது ஏறவில்லை” எனக் கூறினார்.

தென்னாப்பிரிக்காவின் தோல்வி குறித்துக் கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில், கேப்டன் எய்டன் மார்க்ரம் அதற்கு எதிர்வினையாற்றியுள்ளார்.

இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள தென்னாப்பிரிக்க செய்தி இணையதளமான டைம்ஸ் லைவ், “விமர்சனங்கள் வலிக்கிறது. ஆனால் தற்போது வலிப்பதும் நல்லதுதான். அடுத்த முறை இதுபோன்ற தருணத்தில் இந்த வலி நிச்சயம் தாக்கம் செலுத்தும்” என எய்டன் மார்க்ரம் கூறியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

டி20 உலகக்கோப்பை: சூர்யகுமாரின் கேட்ச் பற்றி தென்னாப்பிரிக்க ஊடகங்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images

“முப்பது பந்துகளில் 30 ரன்கள் தேவை என்ற நிலையில் இருக்கும்போது ஒரு அணி தோற்பது முதல்முறை அல்ல. இந்தியா சிறப்பாகப் பந்துவீசியது, ஃபீல்டிங் செய்தது. இக்கட்டான தருணத்தில் இருந்து வலிமையான நிலைக்கு இந்தியா திரும்பியது. குறிப்பாக கடைசி ஓவர்களில் இந்தியா நேர்த்தியாகப் பந்துவீசியது.

பாலுக்கு ஒரு ரன் என்ற நிலையில் இருந்து ஓவருக்கு 10 ரன்கள் என சூழல் மாறியது. இந்திய அணி தங்கள் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தியது” என எய்டன் மார்க்ரம் தெரிவித்துள்ளார்.

டேவிட் மில்லர் ஓய்வு பெறுகிறாரா?

இதுதவிர, டி20 உலகக்கோப்பை தோல்வியோடு, தென்னாப்பிரிக்காவின் நட்சத்திர வீரர் டேவிட் மில்லரும் ஓய்வு பெற்றுவிட்டதாகத் தகவல் வெளியானது. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த டேவிட் மில்லர் இனிதான் எனது சிறந்த ஆட்டத்தைக் காணப் போகிறீர்கள் எனத் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். தென்னாப்பிரிக்காவுக்காக தொடர்ந்து விளையாடுவேன் என்றும் டேவிட் மில்லர் கூறியுள்ளார்.

பிபிசி தமிழ் வாட்ஸ் ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)