ராகுல் டிராவிட்: கேப்டனாகத் தோற்ற அதே மண்ணில் பயிற்சியாளர் ஆகி சாதித்த கதை

‘சரிந்த அதே மண்ணில்’ சாதித்த டிராவிட் : வீரராக, பயிற்சியாளராக பயணித்த கதை

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், க. போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

“மேற்கிந்தியத்தீவுகளில் உள்ள ஸ்லோ விக்கெட் எங்களுக்குச் சாதகமாக இருக்கும் என நினைத்தேன். ஆனால், வங்கதேசத்துக்கு எதிரான எங்களின் தோல்வி நம்பிக்கையை உடைத்தது. முதல் சுற்றிலேயே இந்திய அணி வெளியேறியது. என் கிரிக்கெட் வாழ்க்கையில் அதைத்தான் மிகப்பெரிய வேதனையாக உணர்ந்தேன். ஒருவேளை சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தால், எங்களின் நம்பிக்கை வளர்ந்திருக்கும். உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர் எங்களுக்கு அடுத்தவாய்ப்பை வழங்கவில்லை, அடுத்த ஒரு மாதம் தாயகத்துக்கு திரும்பி மற்ற அணிகள் விளையாடும் கிரிக்கெட்டை பார்க்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. நேர்மையாகக் கூறினால் என்னால் என்னையே பார்க்க முடியவில்லை.”

2007-ஆம் ஆண்டு மேற்கிந்தியத்தீவுகளில் நடந்த உலகக் கோப்பையில் இந்திய அணி முதல் சுற்றோடு வெளியேறியபின், ராகுல் டிராவிட்டின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வரத் தொடங்கியது. அந்தத் தொடரில் ஏற்பட்ட காயம் குறித்து டிராவிட் இ.எஸ்.பி.என் தளத்தில் எழுதிய கட்டுரையில் இதைத் தெரிவித்திருந்தார்.

தலைகுனிவோடு வெளியேறிய இந்திய அணியை 17 ஆண்டுகளுக்குப்பின் அதே மண்ணில், டி20 சாம்பியனாக்கித் தலைநிமிர வைத்துள்ளார் பயிற்சியாளர் 'தி கிரேட் வால்' ராகுல் டிராவிட்.

ராகுல் டிராவிட் களத்தில் இருந்தாலே, அவரை ஆட்டமிழக்கச் செய்வது கடினம் என்று எதிரணி பந்துவீச்சாளர்கள் புலம்பிய காலம் இருந்தது. இ��்திய அணியில் ஒரு வீரராக தனது முழு பங்களிப்பைச் செய்த ராகுல் டிராவிட், இந்திய அணிக்குக் கேப்டனாகப் பொறுப்பேற்றபோது அவரால் வெற்றி பெறமுடியவில்லை.

‘சரிந்த அதே மண்ணில்’ சாதித்த டிராவிட் : வீரராக, பயிற்சியாளராக பயணித்த கதை

பட மூலாதாரம், Getty Images

டிராவிட்டின் கேப்டன்சி தோல்வி

ராகுல் டிராவிட் கேப்டனாக இருந்த 2003 முதல் 2007-ஆம் ஆண்டுவரை எதிர்பார்த்த அளவுக்கு இந்திய அணியைச் சிறப்பாக வழிநடத்த முடியவில்லை. 25 டெஸ்ட் போட்டிகளில் 8 வெற்றிகளையும், 79 ஒருநாள் போட்டிகளில் 49 வெற்றிகளையும் மட்டுமே பெற முடிந்தது.

அதிலும் 2007-ஆம் ஆண்டு மேற்கிந்தியத்தீவுகளில் நடந்த உலகக் கோப்பையில் முதல் சுற்றிலேயே கேப்டன் ராகுல் டிராவிட் தலைமையில் இந்திய அணி வெளியேறியது.

இதன்பின் டிராவிட்டின் கேப்டன்ஷி, அவரின் பேட்டிங் திறமை மீது பி.சி.சி.ஐ நிர்வாகத்துக்கு சந்தேகம் எழுந்தது. அவரைச் சிறிது சிறிதாக ஒரம் கட்டிய பி.சி.சி.ஐ, ஸ்ட்ரைக் ரேட் குறைவாக இருக்கிறது என்ற காரணத்தைக் கூறி 2009-ஆம் ஆண்டு ஒருநாள் அணியிலிருந்து டிராவிட்டை நீக்கியது.

'ரோஷக்காரர்' டிராவிட்

‘சரிந்த அதே மண்ணில்’ சாதித்த டிராவிட் : வீரராக, பயிற்சியாளராக பயணித்த கதை

பட மூலாதாரம், Getty Images

ஆனால் அதன்பின் 2011-ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு மீண்டும் டிராவிட் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால், யாரும் எதிர்பாரா வகையில் இந்தத் தொடரில் விளையாடும்போதே டிராவிட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதிகாரபூர்வ ஓய்வுக்காக ஒரு தொடரை நடத்துகிறோம் என பி.சி.சி.ஐ நிர்வாகம் தெரிவித்தும் அதை மறுத்துவிட்ட டிராவிட், அந்தத் தொடர் முடிந்த உடனே ஓய்வுபெற்றார். இங்கிலாந்தின் கார்டிப் நகரில் 2011-ஆம் ஆண்டு, செப்டம்பர் 16-ஆம் தேதி நடந்த கடைசி ஒருநாள் ஆட்டத்தில் 79 பந்துகளில் 69 ரன்கள் சேர்த்து டிராவிட் ஆட்டமிழந்தார். அதோடு ஒருநாள் போட்டியிலிருந்து டிராவிட் ஓய்வு பெற்றார்.

எந்த பி.சி.சி.ஐ நிர்வாகம் டிராவிட்டின் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக இருக்கிறது என்று குற்றம்சாட்டி அணியிலிருந்து அவரை நீக்கியதோ அதே நிர்வாகம் அவரை மீண்டும் ஒருநாள் தொடருக்கு தேர்ந்தெடுத்தபோது டிராவிட் தொடர்ந்து விளையாட விரும்பாமல் ஓய்வு பெற்றார். 2012-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியத் தொடருடன் டெஸ்ட் மற்றும் உள்நாட்டுப் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக டிராவிட் அறிவித்தார்.

இந்திய வீரராக வெற்றி

டிராவிட் 164 டெஸ்ட் போட்டிகளில் 13,288 ரன்களும், 344 ஒருநாள் போட்டிகளில் 10,899 ரன்களும் சேர்த்துள்ளார். டெஸ்ட் போட்டியில் 52 சராசரியும், ஒருநாள் போட்டியில் 39 சராசரியும் வைத்துள்ள டிராவிட், டெஸ்டில் 36 சதங்கள், 63 அரைசதங்களை விளாசியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் 12 சதங்களும் 83 அரைசதங்களும் அடித்துள்ளார். ஒரு வீரராக பரிணமிக்க, சாதிக்க முடிந்த டிராவிட்டால் கேப்டனாக ஜொலிக்க முடியவில்லை.

‘சரிந்த அதே மண்ணில்’ சாதித்த டிராவிட் : வீரராக, பயிற்சியாளராக பயணித்த கதை

பட மூலாதாரம், Getty Images

வரலாற்றுச் சாதனை

டிராவிட் கேப்டன்சியில் முதல்முறையாக மேற்கிந்தியத்தீவுகளில் இந்திய அணி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது. 1971-ஆம் ஆண்டுக்குப்பின் இந்திய அணியால் டெஸ்ட் தொடரை மேற்கிந்தியத்தீவுகளில் வெல்ல முடியாமல் இருந்தநிலையில் 2006-ஆம் ஆண்டு 1-0 என்ற டெஸ்ட் தொடரை வென்று டிராவிட் தலைமையில் இந்திய அணி வரலாறு படைத்தது. டிராவிட் தலைமையில் ஒருமுறைகூட ஐ.சி.சி சார்பில் நடத்தப்பட்ட போட்டியில் கோப்பையை வென்றதில்லை.

இந்தத் தொடரிலிருந்து டிராவிட் கிரிக்கெட் வாழ்க்கையின் அஸ்தமனம் தொடங்கியது. இந்திய அணியிலிருந்து படிப்படியாக ஓரம் கட்டப்பட்டு அடுத்த 4 ஆண்டுகளில் கிரிக்கெட்டிலிருந்து முற்றிலுமாக டிராவிட் ஓய்வு பெற்றார்.

பயிற்சியாளர் அவதாரம்

2015-ஆம் ஆண்டு, இந்தியாவின் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்கு பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார். பயிற்சியாளராக முதல் ஆண்டிலேயே வெற்றி பெற்ற டிராவிட் 2016-ஆம் ஆண்டில் நடந்த உலகக் கோப்பையில் 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியை இறுதிப்போட்டிவரை கொண்டு சென்றார்.

அதன்பின் பயிற்சியாளர் பணியை விரும்பிச் செய்த டிராவிட், 2018-ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் பிரித்வி ஷா தலைமையிலான 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியை சாம்பியன் பட்டம் வெல்ல வைத்தார். இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வென்று 4-வது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

டிராவிட்டின் பட்டறை

‘சரிந்த அதே மண்ணில்’ சாதித்த டிராவிட் : வீரராக, பயிற்சியாளராக பயணித்த கதை

பட மூலாதாரம், Getty Images

டிராவிட் தனது பயிற்சிப்பட்டறையில் அர்ஷ்தீப் சிங், ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர், ரிங்கு சிங், இஷான் கிஷன், சுப்மான் கில் என ஏராளமான வீரர்களை உருவாக்கி இந்திய அணிக்கு வழங்கும் சிற்பியாக செயல்பட்டார்.

அதன்பின், 2019-ஆம் ஆண்டு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடெமயின் (என்.சி.ஏ) தலைவராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார். இந்த தேசிய கிரிக்கெட் அகாடெமிதான் இந்திய அணிக்குத் தேவையான வீரர்களை உருவாக்கிக் கொடுக்கும் பட்டறையாகும்.

வேகப்பந்துவீச்சாளர், சுழற்பந்துவீச்சாளர், பேட்டர், ஆல்ரவுண்டர் என வகைவகையான வீரர்களை உருவாக்கி, இந்திய அணிக்கு அனுப்பியவர் டிராவிட்தான்.

இந்திய அணிக்கு வலிமை சேர்த்தவர்

இந்திய அணியின் பெஞ்ச் பலம் தொடர்ந்து அதிகரித்து, பலதிறமையான பேட்டர்கள், பந்துவீச்சாளர்ள் உருவாகியகாலம் ராகுல் டிராவிட், என்.சி.ஏ தலைவராக இருந்தபோதுதான். இந்திய அணயின் பெஞ்ச் பலத்தைப் பார்த்து ஒருமுறை பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல்ஹக், “இந்திய அணிக்கு ஏராளமான வீரர்கள் உருவாக்கி ஒருவர் வழங்கி வருகிறார். அதனால்தான் இந்திய அணியின் பெஞ்ச் பலம் அதிகரித்துள்ளது. அவர் வேறுயாருமல்ல ராகுல்திராவிட்தான்,” எனப் பெருமையாகக் குறிப்பிட்டிருந்தார்.

என்.சி.ஏ தலைவராக ராகுல் டிராவிட் பொறுப்பேற்றபின் வீரர்களுக்குப் பயிற்சி அளிப்பது, மேற்பார்வையிடுவது, உடற்தகுதியைக் கண்காணிப்பது, ஊக்கப்படுத்துவது, வழிநடத்துவது, பயிற்சியாளர்களுக்கு ஊக்கமளிப்பது, வழிகாட்டுவது எனப் பல பணிகளைச் சிறப்பாகச் செய்தார். இந்திய சீனியர் அணியின் உடற்தகுதி சர்வதேச அளவில் சிறப்பாக இருக்க என்.சி.ஏ முக்கியக் காரணமாகவும், டிராவிட்டின் நிர்வாகமும் காரணமாக இருந்தது.

சீனியர் அணிக்குப் பயிற்சியாளர்

இந்திய அணிக்குப் பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் பயிற்சிக் காலம் முடிந்தபின், 2021-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய சீனியர் அணியின் பயிற்சியாளராக டிராவிட் நியமிக்கப்பட்டார். முதலில் இரண்டு ஆண்டுகளுக்குப் பயிற்சியாளராக டிராவிட் நியமிக்கப்பட்டார். நியூசிலாந்து தொடருக்கு முதன்முதலில் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பொறுப்பேற்றார்.

டிராவிட்டின் பயிற்சியில் இந்திய அணி 56 ஒருநாள் போட்டிகளில் 41 ஆட்டங்களில் வென்றது, 69 டி20 போட்டிகளில் 48 போட்டிகளில் வெற்றி பெற்றது. 5 டெஸ்ட் தொடர்களை வென்று, ஒரு டெஸ்ட் தொடரை இழந்தது, 2 தொடர்களை இந்திய அணி சமன் செய்தது. குறிப்பாக 2023 ஆசியக் கோப்பையை இந்திய அணி வென்றது.

‘சரிந்த அதே மண்ணில்’ சாதித்த டிராவிட் : வீரராக, பயிற்சியாளராக பயணித்த கதை

பட மூலாதாரம், Getty Images

இறுதிப்போட்டிகளில் தோல்வி

2023 ஐசிசி உலகக் கோப்பை வரை பயிற்சியாளராக டிராவிட் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்தியாவில் நடந்த உலகக் கோப்பைத் தொடரில் தோல்வி அடையாமல் இறுதிப்போட்டிவரை இந்திய அணி முன்னேறியது. இந்திய அணி கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டநிலையில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்து அதிர்ச்சியளித்தது. இதையடுத்து, 2024 டி20 உலகக் கோப்பை வரை பி.சி.சி.ஐ டிராவிட்டின் ஒப்பந்தத்தை நீட்டிக்க கேட்டுக்கொண்டது.

டிராவிட் காலம் பொற்காலம்

‘சரிந்த அதே மண்ணில்’ சாதித்த டிராவிட் : வீரராக, பயிற்சியாளராக பயணித்த கதை

பட மூலாதாரம், Getty Images

இதையடுத்து, 2024 டி20 உலகக் கோப்பை வரை பயிற்சியாளராக இந்திய அணிக்குச் செயல்பட்டடிராவிட், இறுதியாக மேற்கிந்தியத்தீவுகளில் நடந்த உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணியை 17 ஆண்டுகளுக்குப்பின் 2வது முறையாக டி20 சாம்பியனாக்கினார், 11 ஆண்டுகளுக்குப்பின் ���சிசி சார்பில் நடக்கும் போட்டித் தொடரில் கோப்பையை வெல்ல வைத்தார்.

2023-ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் தோல்வி, 2022 டி20 உலகக் கோப்பையில் அரையிறுதி, டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இறுதிப் போட்டியில் தோல்வி ஆகியவற்றை மட்டும் விலக்கிவைத்து டிராவிட்டின் பயிற்சியைப் பார்த்தால் இந்திய அணிக்கு பொற்காலம்தான்.

ராகுல் டிராவிட் பயிற்சியில்தான் இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. விராட் கோலியிடமிருந்து கேப்டன் பொறுப்பு ரோஹித் சர்மாவுக்கு மாறியது. ஹர்திக் பாண்டியா, சுப்மான் கில் கேப்டன்பதவிக்கு தயார் செய்யப்பட்டனர். பல இளம் வீரர்கள் பரிசோதனை முயற்சியாக உள்நாட்டு தொடர்களில் விளையாட வைக்கப்பட்டு திறமை கண்டறியப்பட்டது.

இந்திய அணிக்கு தலைமை ஏற்று, முதல்சுற்றோடு தலைகுணிந்து எந்த மண்ணில் ராகுல் டிராவிட் வெளியேறினாரோ அதை கரீபியன் மண்ணில், இன்று இந்திய அணிக்கு டி20 சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று கொடுத்து தலைநிமிரச் செய்துவிட்டார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)