சிங்கப்பூரில் சேரும் மொத்த கழிவில் 11 விழுக்காடு உணவு விரயமாவதாக தேசிய சுற்றுப்புற வாரியத்தின் 2022ஆம் ஆண்டு புள்ளிவிவரம் சுட்டுகிறது.

வீணாகும் உணவைப் பயனாக்கும் தொண்டு

விரயத்தைக் குறைத்து, வீணாகும் பொருள்களை முடிந்தவரையில் பயன்படுத்துவதற்கு ஊக்குவிக்க தேசியச் சுற்றுப்புற வாரியம் ‘சே யெஸ் டு வேஸ்ட் லெஸ்’ எனும் இயக்கத்தைத் தொடங்கியுள்ளது. கடந்த மே மாதத்தில் 140க்கும் மேற்பட்ட பங்காளிகள் இந்த இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாள்களில் கடைகள் மூடுவதற்குள் லிட்டில் இந்தியாவுக்கு விரைகிறது ஒரு தொண்டூழியர் குழு.

அட்டைப் பெட்டிகளைத் தூக்கிக்கொண்டு அவர்கள் வரும்போதே அக்கம் பக்கத்திலுள்ள கடைக்காரர்கள் அவர்களை அடையாளம் கண்டுவிடுவார்கள்.

இரவு ஒன்பது மணி அளவில், முஸ்தபா சென்டருக்கு அருகே உள்ள லெம்பு சாலையில் இருக்கும் ‘பங்ளா ஸ்குவேர்’ பரபரப்பாகிவிடும்.

கடைக்காரர்கள் சமைக்கக் கூடிய நிலையில் இருக்கும் விற்கப்படாத காய்கறிகள், உணவுப் பொருள்களை அந்தப் பெட்டிகளில் நிரப்புவார்கள். சில கடைக்காரர்கள் பெட்டிகளோடு பொருள்களைக்கொண்டு வந்து வைப்பார்கள்.

சில கடைகளுக்கு மொத்த வியாபாரிகள் அதிக காய்கறிகளை அளிக்கும்போது விற்க முடியாமல் மீந்து போகும், நல்ல நிலையில் உள்ள காய்கறிகளையும் கொண்டு வந்து கொடுப்பார்கள்.

‘லிட்டில் இந்தியா வெஜி கலெக்‌ஷன்’ எனும் தொண்டூழிய குழுவில் சேர்ந்த உறுப்பினர்கள், பெட்டிகளில் இருக்கும் காய்கள், பழங்களுடன் சில நேரங்களில் உணவுப் பொருள்களையும் மேலும் தரம் பிரிப்பார்கள்.

கழிக்கப்படும் காய்கறிகளைச் சேகரிக்கும் தொண்டூழியர்கள். படம்: த. கவி

பின்னர் அவற்றை, ஒவ்வொரு குடியிருப்புப் பேட்டையிலும் சமூக மன்றங்களால் வைக்கப்பட்டிருக்கும் “இலவச காய்கறி விநியோக” குளிர்பதனப் பெட்டியில் வைப்பார்கள். காய்கறிகளை ஒவ்வொரு பகுதிக்கும் எடுத்துச்செல்ல மேலும் சில தொண்டூழியர்கள் உதவுகின்றனர்.

குளிர்பதனப் பெட்டிகளிலிருந்து தேவைப்படும் காய்கறிகளை குடியிருப்பாளர்கள் இலவசமாக எடுத்துக்கொள்ளலாம்.

தொண்டூழியர்களும் விரயமாகும் இப்பொருள்களில் இருந்து தங்களுக்குத் தேவையானவற்றை எடுத்துக்கொள்வார்கள்.

தொண்டூழியக் குழுக்களின்
பங்களிப்பு

காய்கறிகளைச் சேகரிக்கும் தீபா. படம்: த. கவி

கழிக்கப்படும் காய்கறிகளைச் சேகரித்து தேவைப்படுவோருக்கு வழங்கும் தொண்டு புரிபவர்களில் 41 வயது திருவாட்டி தீபா மணியமும் ஒருவர்.

கடந்த ஐந்தாண்டுகளாக இந்தத் தொண்டூழியத்தில் ஈடுபட்டு வரும் இவர், புதிய நண்பர்களைச் சந்திக்கவே இதில் சேர்ந்தார். ஆனால், இந்தத் தொண்டூழியத்தின் உன்னத நோக்கம் அவரைத் தொடர்ந்து சேவையாற்றத் தூண்டியது.

கடந்த 2019ல் ஆட்குறைப்பு காரணமாக முழு நேரப் பணியை இழந்தபின் சிக்கனமாக செலவுசெய்யத் தொடங்கியதை நினைவுகூர்ந்த திருவாட்டி தீபா, சேகரிக்கப்படும் காய்கறிகள் வசதி குறைந்த குடும்பங்களுக்கு உதவும் என்ற எண்ணம் மகிழ்ச்சி தருவதாகச் சொன்னார். ஒருகாலத்தில் தனது நிலையும் அப்படி இருந்ததை யோசிக்க வைக்கும் என்றார் அவர்.

காய்கறிகளைப் பிரித்து எடுத்தும் தீபாவும் சக தொண்டூழியரும். படம்: த. கவி

லிட்டில் இந்தியா கடைகள்

உணவு விரயத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளில் லிட்டில் இந்தியாவில் உள்ள சில கடைகள் கடந்த சில ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றன.

பெரும்பாலும் காய்கறி, இறைச்சி வகைகள்தான் அதிகம் விரயமாகின்றன. காய்கறிகள் விரைவில் அழுகி விடுவதாலும் மீன், இறைச்சி வகைகள் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு கெட்டுப்போய் விடுவதாலும் அந்த விரயத்தைக் குறைக்க லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் முயற்சி எடுத்து வருகின்றனர்.

தேக்கா ஈரச் சந்தையில் இருக்கும் இறைச்சிக் கடை. Tamil Murasu

அன்றாடத் தேவைக்கு ஏற்பவே கோழிகளுக்குத் தருவிப்பு ஆணை (ஆர்டர்) வழங்குகிறது டோலா கோழிக் கடை. அப்படியும் கோழி மீந்துபோனால், கிருமித் தொற்றைத் தடுக்க அதை வீசி விடுவதாக கடையின் உரிமையாளர் ஷேக் அப்துல்லா, 53, சொன்னார்.

கலந்தர் மொஹிதீன் இறைச்சிக் கடையில் அன்றாடம் கிட்டத்தட்ட 90 விழுக்காடு விற்பனையாகி விடுகிறது. மீதமிருப்பதை உணவகங்களுக்குக் கொடுத்து விடுகிறார்கள். தங்கள் கடையில் புதிய இறைச்சி வகைகளை மட்டுமே விற்பதாக கடை ஊழியர் முகம்மது அலி, 34, கூறினார்.

இதுவரையில் விற்கப்படாத மீன்களை குப்பைத் தொட்டியில் போட்டுவிடும் பிகே ஃபிஷ் சப்ளையர் மீன் கடையின் உரிமையாளர் ஹரிகிருஷ்ணன் உமா, 49, நண்பரின் பரிந்துரைப்படி அவற்றை முதியோர் இல்லங்களுக்கு வழங்க முடிவெடுத்துள்ளார்.

அழுகும் நிலையில், ஆனால் உண்ணக் கூடியதாக இருக்கும் காய்கறிகளைத் தொண்டூழியர்களிடம் கொடுப்பதாகக் கூறினார் சென்னை டிரேடிங் காய்கறிக் கடையின் ஊழியர் பாலாஜி, 40.

ஒரு நாளில் கிட்டத்தட்ட $100 மதிப்புள்ள காய்கறிகள் வீணாவதாகக் குறிப்பிட்டார் கேவிஆர்எஸ் சூப்பர்மார்ட் கடையின் மேலாளர் சின்னத்துரை, 29.

“இரண்டு கூடைகள் நிரம்பும் அளவுக்குக் காய்கறிகள் அன்றாடம் விற்காமல் உள்ளன. அவற்றை காலையில் கடைக்கு வெளியே வைத்துவிடுவோம். முதியவர்களில் சிலர் எடுத்துக்கொள்வார்கள். அழுகியவற்றை வீசி விடுவோம். காய்கறியின் நிறம் கொஞ்சம் மாறியிருந்தாலும் வாடிக்கையாளர்கள் வாங்கமாட்டார்கள்,” என்று கூறினார் திரு சின்னத்துரை.

அவரை, கத்திரிக்காய் போன்றவை அதிகம் விற்காமல் இருக்கும் என்று குறிப்பிட்ட சாய் சண்முகா மினிமார்ட் ஊழியர் வெங்கடாச்சலம் சக்திவேல், 63, காய்கறி விரயம் முன்பில்லாத அளவுக்கு குறைந்துள்ளது என்றும் சொன்னார்.

ஓரளவு நல்ல நிலையில் இருக்கும் காய்கறிகளை அட்டைப் பெட்டிக்குள் வைத்து இரவில் கடைக்கு முன்வைத்து விடுகின்றனர் இக்கடை ஊழியர்கள். தேவைப்படுவோர் எடுத்துகொள்வார்கள்.

காய்கறி திரட்டுவதில் ஈடுபடும் தொண்டூழியர்கள். படம்: த. கவி

தேவைப்படுவோருக்கு உதவிக்கரம்

சிங்கப்பூரில் 2022ல் மொத்தம் 813,000 டன் உணவு விரயம் ஆனது. அதில் 18 விழுக்காடு மட்டுமே மறுபயனீடு செய்யப்பட்டுள்ளது.

‘தி ஃபுட் பேங்க் சிங்கப்பூர்’ எனும் லாப நோக்கமற்ற அமைப்பு நான்காண்டுகளுக்கு முன்பு வெளியிட்ட ஆய்வின்���டி, அதில் பங்கேற்ற 1,200 குடும்பங்களில் 10.4 விழுக்காட்டினர் 12 மாதங்களில் ஒருமுறையாவது உணவு பாதுகாப்பின்மையை எதிர்நோக்கியதாகத் தெரியவந்தது.

அந்தக் குடும்பங்கள் சத்துள்ள, தேவையான உணவைப் பெற இயலாமல் உள்ளனர். இதுபோன்ற குடும்பங்களுக்கு தொண்டூழியக் குழுக்கள் திரட்டிய காய்கறிகளை வழங்கி வருகின்றனர்.

கடைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட காய்கறிகளை குடியிருப்புப் பேட்டையில் பெற்றுக்கொள்ளும் பொது மக்கள். படம்: த. கவி

சில குடியிருப்புப் பேட்டைகளில் வாரத்தில் ஒருநாள் காய்கறி விநியோகிக்கப்படும். அதில் திரட்டப்பட்ட காய்கறிகளை பெற்றுக்கொள்ள குடியிருப்பாளர்கள் நீண்ட வரிசைகளில் நின்று இலவசமாக காய்கறிகளை எடுத்துக்கொள்வர். அதில் மீதமாகும் காய்கறிகள் குளிர்பதனப் பெட்டியில் வைக்கப்படும்.

பீஷான் வட்டாரத்தில் பிற்பகல் நான்கு மணிக்குத் தொடங்கும் காய்கறி விநியோகத்திற்கு குடியிருப்பாளர்கள் மதியம் இரண்டு மணியிலிருந்தே நீண்ட வரிசையில் நிற்கத் தொடங்கி விடுவதாகக் குறிப்பிட்டார் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அங்கு தொண்டூழியம் புரிந்து வரும் மரியா ஸ்டெல்லா, 69.

அ��்தக் காய்கறிகளை பெரும்பாலும் ஒருநாளுக்குள் உட்கொள்ள வேண்டும். சில நேரங்களில் காய்கறிகள் புதிதாக இல்லை என்று குடியிருப்பாளர்கள் குறைபடுவதுண்டு. அப்போது, அவை உண்ணக் கூடியவைதான் என்று ஸ்டெல்லா புரிய வைப்பார்.

தொண்டூழியர் மரியா ஸ்டெல்லா. படம்: த. கவி

காய்கறிகளைச் சமைக்கும் முறை குறித்துக் கேட்கும் குடியிருப்பாளர்களுக்கு சமையல் குறிப்புகளையும் தந்து உதவுகிறார் இவர்.

குடியிருப்பாளர்களுக்கு காய்கறிகள் பற்றி விளக்கும் ஸ்டெல்லா. படம்: த. கவி

சீனர்கள் பாகற்காய், சுரைக்காய், வெண்டைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றை எடுப்பார்கள். சில இந்தியக் குடும்பங்களில் பணிபுரியும் பணிப்பெண்கள் சீனக் காய்கறிகளை தேர்ந்தெடுப்பார்கள் என்று ஸ்டெல்லா கூறினார்.

குடியிருப்பாளர்களுக்கு விநியோகித்த பிறகு மீதமுள்ளதை தொண்டூழியர்கள் தங்களுக்குள் பகிர்ந்துகொள்வதும் உண்டு. எனினும் முடிந்தவரையில் எல்லாவற்றையும் குடியிருப்பாளர்களுக்கே வழங்கிவிடுவதாக ஸ்டெல்லா தெரிவித்தார்.

“இந்தக் காய்கறிகளை வீட்டில் சமைத்து உண்ணும்போது வீட்டிலுள்ள இளம் பிள்ளைகளும் உணவு விரயத்தை பற்றித் தெரிந்துகொள்வார்கள். கழிக்கப்பட்ட காய்கறிகளாக இருந்தாலும் உணவு விரயத்தை மட்டுப்படுத்த இதுபோன்ற வழிகள் உள்ளன என்பதை பிள்ளைகள் அறிந்துகொள்ள முடியும்,” என்று ஸ்டெல்லா தெரிவித்தார்.

கீரை, காய்கறிகளைத் தரம் பிரித்து வைக்கும் திருவாட்டி ஸ்டெல்லா. படம்: த. கவி

கடந்த ஓராண்டாக இலவச காய்கறிகளைப் பெற்றுச்செல்லும் பணிப்பெண் நிர்மலா தேவி, 44, இதன்மூலம் செலவை மிச்சப்படுத்த முடிவதாகக் குறிப்பிட்டார்.

அக்காய்கறிகள் சமைக்கும் நிலையிலேயே இருப்பதாகக் கூறிய அவர், அவற்றைக் கொண்டு குழம்பு, கூட்டு என பல உணவு வகைகளை சமைப்பதாகச் சொன்னார். சமைக்கத் தெரியாத காய்களை அண்டை வீட்டாருக்கு அவர் கொடுத்து விடுவார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!